Pages

முடி வளரும் விதம்

முடி வளர்ச்சிக்கு காரணம் ஆண் ஹார்மோன்களான ஆன்ட்ரோஜென் டெஸ்டோஸ்டெரோன் மற்றும் டைஹைட்ரோடெஸ்டோஸ் ஸ்டெரோன் ஆகும். ஆண் ஹார்மோன்களுக்கும் பெண்களின் கூந்தல் வளர்ச்சிக்கும் என்ன சம்மந்தம் என்று நீங்கள் கேட்கலாம். இந்த ஹார்மோன்கள் ஆண்கள், பெண்கள் இருவரிடத்திலும் உள்ளவை. அளவு தான் மாறுபடும்.
முடி வளர்ச்சி தொடர்ச்சியாக இருக்காது. ஒரு குறிப்பிட்ட மாதிரியாகத் தான் வளரும். முடி உறைகள் வரிசையாக முடியை உண்டாக்கும். வளர்ச்சி ஒரு சுழற்ச்சியாக நடைபெறும்.
மூன்று கட்டங்களாக முடி வளர்ச்சி நடக்கும். இவை முறையே வளர்பருவம் அனாஜென், ஓய்வுப் பருவம் டெலோஜென், முடி இறக்கும் பருவம் கெட்டாஜென், என்று மாறி, மாறி நடந்து வரும்.
முடிவளர் பருவத்தில் தலைமுடி 2 லிருந்து 6 அல்லது 8 வருடங்கள் வளரும். புருவங்களும், கண், இமை முடிகளும் 1 லிருந்து 6 மாதங்களில் வளர்ந்து விடும். ஒரு நாளில் 0.3 முதல் 0.5 மி.மீ. நீளத்திற்கு முடி வளரும் மாதத்தில் 1.25 செ.மீ. முதல் 2.5 செ.மீ. வரை வளரும்.
அடுத்த பருவம் ஓய்வெடுத்து கொள்ளுதல். இதற்கு பிறகு மூன்றாவது கட்டத்தில் முடிகள் உதிர ஆரம்பிக்கும். ஒரு நாளில் 100 தலைமுடிகள் ஓய்வின் முடிவை அடைந்து உதிர்ந்து விடும். உதிர்ந்த மயிர்க்கால்களில் மறுபடியும் முடி தோன்றி வளரும். ஓய்வுப் பருவம் தொடங்கு முன், மயிர்கால்களுக்கு இரத்த ‘சப்ளை’ நின்று விடும். முடி சுருங்கி, 5-6 வாரத்தில் உதிர்ந்து விடும்.
இந்த சுழற்சி இயல்பாக நடப்பது ஹார்மோன்களின் கையில் இருக்கிறது. சரியான அளவில் ஹார்மோன்கள் சுரந்தால், முடி செழித்து, ஆரோக்கியமாக வளரும்.
நம் தலை முடியில் 90 சதவிகிதம் வளர்பருவத்திலும், 10 சதவிகிதம் உதிரும் பருவத்திலும் இருக்கும். எனவே தினசரி 10-20 முடிகள் உதிர்ந்து கொண்டிருக்கும்.
ஆண்களும், பெண்களும் பருவமடையும் காலத்தில், பிறப்புறுப்புக்கள் மற்றும் அக்குளில் கருமையாக முடி வளரும். ஆண்களுக்கு முகத்தில், மார்பில் முடி வளர ஆரம்பிக்கும். ஆண் பெண் இரு பாலருக்கும், பிறப்புறுப்புக்கள் மற்றும் அக்குளில் முடி வளர காரணம் டெஸ்டோஸ்டிரோன். ஆண்களுக்கு முகத்தில், மற்றும் தாடி வளர காரணம் டைஹைட்ரோடெஸ்டோஸ்டிரோன்.
தலை முடியைப்பற்றிய சில விவரங்கள்
முடிவளர்ச்சி ஒரு சுழற்சியாக நடக்கிறது. ஒவ்வொரு சுழற்சியிலும் முடியின் உறையில் வளர்ச்சி ஏற்படும் நிலை, வளர்ச்சி நின்று ஒய்வெடுக்கும் நிலை, முடி இறக்கும் நிலை என்று மூன்று நிலைகள் நடந்து கொண்டிருக்கும். வளரும் நிலையின் கால அளவு தான் ஒருவரின் தலைமுடி நீளத்தை நிர்ணயிக்கிறது. முடி தொடர்ந்து வளர்ந்து கொண்டே இருக்காது. 5 முதல் 6 மாதம் ஒய்வில் இருக்கும்.
ஒரு மாதத்தின் தலைமுடி 1.25 – 2.5 செ.மீ. வளரும். தலையில் இருக்கும் முடியின் ஆயுள் காலம் அதிகபட்சமாக 94 வாரங்கள்.
வெயிற்காலத்தில் முடிவளர்ச்சி அதிகமிருக்கும்.
ஆரோக்கிய உணவு, முடிக்கும் ஆரோக்கியத்தை தரும். வயது, ஆரோக்கியம், சூழ்நிலை இவைகள் முடிவளர்ச்சியை பாதிப்பவை.
ஆண்களை விட பெண்களுக்குத்தான் கூந்தல் அதிகம் வளரும். கூந்தலை வெட்டாமலேயே விட்டால் 23 லிருந்து 28 அங்குலம் வளரும்.
பெண்களுக்கு கூந்தல் 16 வயதிலிருந்து 25 வயது வரை மிக வேகமாக வளரும்.

முடியின் அமைப்பு

தலைமுடி டெர்மிஸ் பகுதியின் அடித்தளத்தில் ஃபோலிக்குகளில் இருந்து வளர்கிறது. முடி உறைகள் உடலெங்கும் சருமத்தில் இருப்பவை. விதிவிலக்கு உதடு, உள்ளங்கை, உள்ளங்கால். இந்த இடங்களில் முடி வளராது. நீங்கள் ஒரு முடியை வேருடன் எடுத்துப் பாருங்கள். தலை அல்லது உடல் சருமத்தின் மேலே கண்ணுக்கு தெரியும் பாகத்தை தண்டு என்பார்கள். இறந்த புரதம் – கேராடின் மற்றும் திசுக்களால் ஆனது முடித்தண்டு, இறந்த செல்களால் ஆனதால், முடியை வெட்டும் போது நமக்கு வலிப்பதில்லை. முடி கீழ்க்கண்ட மூன்று அடுக்குகள் உள்ளது.

குயூடிகில் – இதை மைக்ரோஸ் கோப்பில் பார்த்தால். செதில் செதிலாக தெரியும். குயூடிகில் முடியின் வெளிப்புற அடுக்கு. அதாவது முடியை சுற்றிக் கொண்டிருக்கும் முதல் அடுக்கு. இது தான் முடிக்கு பளபளப்பை கொடுக்கிறது.
கார்டெக்ஸ் மத்திய அடுக்கு- நார்களை பின்னியது போல் இருக்கும். கார்டெக்ஸ் முடிக்கு பலத்தையும், மீள்திறன் சக்தியையும் மற்றும் நிறத்தையும் அளிக்கிறது.
மெடூலா – நடுப்பகுதி (மையப் பகுதி)- இது வெற்றிடமாக இருக்கும்.
மேற்சொன்ன மூன்று பகுதிகளும் நம் கண்ணில் தென்படும், இனி தோல் அடியுள்ள முடியின் பாகங்களை பார்ப்போம்.
முடிஉறை அல்லது பை
இங்கு தான் முடி பிறக்கிறது, வாழ்கிறது பிறகு இறக்கிறது. முடி உறையில் அடிப்பகுதியின் வேரில் பேபில்லாவில் ரத்த நாளங்கள் இருக்கின்றன. அதனால் இங்கிருந்து முடிக்கு, தேவையான ஊட்டச்சத்துக்கள், ஹார்மோன்கள் கிடைக்கின்றன. முடியின் வேர் பாதிக்கப்பட்டால் முடிவளர்ச்சி நின்று விடும். மறுபடியும் வளராது. முடி உறையின் இயக்கம், அளவு இவை தான் ஒருவருக்கு முடி எப்படி இருக்க வேண்டும், எவ்வளவு நீளம் வளரும் என்பதையெல்லாம் முடிவு செய்கிறது.
ஃபோலிக்கில் செபாசியஸ் சுரப்பி எனப்படும் சுரப்பி, சேபம் என்ற எண்ணையை சுரக்கிறது. இவை முடிக்கு பளபளப்பையும் நெகிழ்வு தன்மையையும் கொடுக்கிறது. பருவ காலத்தில் இந்த சுரப்பியின் இயக்கம், உச்சகட்டமாக இருக்கும். வயதாகும் போது இதன் உற்பத்தி குறையும். சீபம் பாக்டீரியா, ஃபங்கஸ் இவைகளை எதிர்க்கும். இந்த சீபம், சுரப்பியிலிருந்து, ஒரு நாளம் வழியே முடிவேர்க்காலில், ஃபோலிக்கினை சென்று அடைகிறது. நாம் தலை வாரும் போது சீபம் எண்ணை உற்பத்தி ஊக்குவிக்கப்படுகிறது. தலைமுடிக்கு எண்ணைப் பசையை கொடுத்து, தலை முழுவதும் பரவுகிறது.
பெரிய, ஆழமான முடி உறைகள், கரடு முரடான முடியை தோற்றுவிக்கின்றன. சிறிய உறைகள் மிருதுவான ரோமத்தையும், ‘வளைந்த’ ஃபோலிக்குகள், சுருட்டை முடியையும் உருவாக்குகின்றன.
உடலில் எண்ணைப்பசை
முன்பு சொன்னபடி, முடிக்கும், உடல் தோலுக்கும் எண்ணையை தக்க வைப்பது செபாசியஸ் எண்ணை சுரப்பிகள் தான். இது தரும் சீபம் எண்ணையால் தான் சருமம் எண்ணை பசையுடன், பளபளவென்று இருக்கிறது. சீபம் இல்லாவிட்டால் தோல் பாளம் பாளமாக வெடித்து விடும். செபாசியஸ் சுரப்பிகளுக்கு, சீபத்தை அனுப்ப நாளங்களோ, குழாய்களோ இல்லை. இந்த சுரப்பியின் நுண்ணிய செல்களே உடைந்து கெட்டியான கொழுப்பாக, முடிவேர்களின் வழியே தோலின் மேற்புறத்தை வந்தடைகின்றன. உடலின் சில பாகங்களில் அதிகமாகவும் சில பாகங்களில் குறைவாகவும் செபாசியஸ் சுரப்பிகள் காணப்படும்.
கூந்தலின் வளர்ச்சிக்கும், பராமரிப்புக்கும், இந்த எண்ணை சுரப்பி சரிவர இயங்குவது முக்கியமானது.
தலைமுடியின் உபயோகங்கள்
முடி, அதுவும் தலைமுடி நமது தோற்றத்திற்கு பொலிவு தருவது. கருகருவென மிளிரும் தலைமுடி ஆரோக்கியத்தின் அறிகுறி.
தலைமுடி, வெய்யில், வெப்பம், இவைகள் மூளையை தாக்காமல் காக்கிறது.
சுற்றுச் சூழல் பாதிப்பிலிருந்தும் உடலை முடி காக்கிறது.
மூக்கிலுள்ள முடிகள் தூசி, கிருமிகளை தடுத்து நிறுத்துகின்றன.
உடலுள்ள முடிகள் உடலை குளிர்ச்சியாக வைத்துக் கொள்ள உதவுகின்றன.
முடி பாலுணர்வையும் தூண்டக்கூடியது. மார்பில் முடி செறிந்த ஆணை, பல பெண்கள் விரும்புகிறார்கள். உடலின் மர்மப் பிரதேசங்களில் வளரும் முடி கூட மனோரீதியாக பாலுணர்வை தூண்டும் என்கின்றனர் தோல் வைத்திய நிபுணர்கள்.
முடியைப் பற்றி சில தகவல்கள்
ஒரு சராசரி மனிதரின் தலையில் சுமார் ஒரு லட்சத்து இருபதாயிரம் முடிகள் வரை இருக்கும்.
தலைமுடி ஒரு மாதத்திற்கு 11/4 செ.மீ. நீளம் வரை வளரும்.
மொத்தமாக மனிதனின் உடல் முழுவதும் 50 லட்சம் முடிக்கால்கள் உள்ளன.
ஒரு நாளில் 50-150 முடிகள் உதிர்கின்றன.
ரோமத்தின் உயிரில்லா பாகம். தோலின் மேலும், உயிருள்ள பாகம் தோலின் கீழேயும் காணப்படும்.
கெராடின்
கெராடின் சுறுசுறுப்பு இல்லாத அதிக செயல்பாடுகளில்லாத ஒரு நார் புரதம்.
தலைமுடியில் 97% கெராடின் தான். இது நகத்திலும் காணப்படும்.
கெராடினில் இருப்பது கந்தகம்.
தலைமுடி பிறந்து, வளர்ந்து, மறையும் வரையில் ஏற்படும் மாற்றங்களின் முடிவுப்பொருள்.
முடி உற்பத்தியில் கெராடினின் செயல்பாடு – முடி செல்கள் தங்களின் மைய உட்கருவை இழந்து விடுகின்றன. இழந்த உட்கருவுக்கு பதிலாக, கெராடின் செல்களை ஆகிரமித்து விடும். செல்கள் மேலே வரும் போது இந்த செயல்பாடு நடக்கும். இதை கெராடிஸை சேஸன் என்பார்கள்.
முடியின் வண்ணங்கள்
நமது முடியில் உள்ள கெரோடினுக்கு கறுப்பு நிறத்தை கொடுப்பது மெலானின் என்ற வர்ணம் கொடுக்கும் பொருள். தோலின் டெர்மிஸ் பகுதியில் பிரத்யேக செல்களில் இருக்கும். வெய்யில் தோலில்பட்டால் மெலானின் உற்பத்தி அதிகமாகிறது. இதனால் சருமம் வெய்யிலில் கறுத்து விடும். மெலானின் உள்ள செல்கள் மெலானோசைட்ஸ் எனப்படும். வயதாகும் போது மெலானின் உற்பத்தி குறைந்து கொண்டே போகும். இதனால் முடியில் கறுப்பு நிறம் குறைந்து, முடி நரைத்து வெள்ளையாகிறது.

கூந்தலின் வகைகள்

முகத்தை போலவே கூந்தல்களுக்கும் தனித்தன்மை உண்டு. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வகையான முடி அமைப்பு இருக்கும். அடிப்படையாக, முடியை மூன்று வகைகளாக சொல்லாம்.

எண்ணைப்பசை மிகுந்த கூந்தல்
வறண்ட கூந்தல்
சாதாரண கூந்தல்
எண்ணைப் பசை உள்ள கூந்தல்
எண்ணை சுரப்பியான செபாசியஸ் சுரப்பி, சேபம் எண்ணையை அதிகம் சுரப்பதால் கூந்தலின் எண்ணை அதிகமாகும். எண்ணைப்பசை அதிகமானால் மயிர்க்கால்கள் அடைத்துக் கொள்ளும். தலையில் அழுக்கு சேரும்.
இந்த வகை பெண்களுக்கு, தலையில் மட்டுமல்ல, முகத்திலும் அதிக எண்ணை இருக்கும். தலைமுடி 1 லட்சத்து 20 ஆயிரம் இருக்கும் என்று சொன்னோம். எண்ணை பசை கூந்தல் உள்ளவர்களுக்கு 1 லட்சத்து நாற்பதாயிரம் எண்ணை சுரப்பிகள் இருக்கும். எண்ணை அதிகம் சுரக்க காரணங்கள், பிறவி உடல் வாகு, ஹார்மோன்கள், சூடு, ஈரப்பதம் ஆகியவை காரணமாகலாம்.
உலர்ந்த முடி
எண்ணை சுரப்பி போதிய அளவு சுரக்காததால், கூந்தல் வறண்டு விடும். எண்ணை போஷாக்கில்லாததால் முடி பலவீனம் அடைந்து, உலர்ந்து உடையும்.
சாதாரண முடி
எண்ணை சுரப்பி சரியான அளவில் சுரந்தால், கூந்தல் ஆரோக்கியமாக வளரும். முடிப்பிரச்சனைகள் தோன்றாது.
ஆயுர்வேதத்தின் படி முடி வகைகள்
ஆயுர்வேதம் தனது அடிப்படை கோட்பாடான வாத, பித்த, கப தோஷங்களால் மனிதர்களை மூன்று பிரக்ருதிகளாக பிரிக்கிறது. அந்தந்த பிரகிருதிகளுக்கு ஏற்ப தலைமுடி இருக்கும்.
வாத பிரகிருதிகளுக்கு
உடல் முடி கறுப்பாக, அடர்த்தியாக, சுருண்டு மென்மையாக இருக்கும். உடல் முடி ஒன்று குறைவாக இருக்கும். இல்லை எதிர்மாறாக அதிகமிருக்கும்.
தலைமுடி கறுப்பாக, கரடு முரடாக, சிடுக்கோடு இருக்கும். முடி வறண்டு இருக்கும்.
பித்த பிரகிருதிகளுக்கு
உடல் முடி இலேசாக, மிருதுவாக அழகாக இருக்கும்.
தலைமுடி எண்ணை பசையுடன் இருக்கும். சீக்கிரமாக நரைத்து விடும்.
வழுக்கை சீக்கிரமாக ஏற்படலாம்.
கபப் பிரகிருதிகளுக்கு
உடல் முடி அளவோடு இருக்கும்.
தலைமுடி, எண்ணைபசை சிறிதளவே இருந்தாலும், பளபளப்பாக அலை அலையாக இருக்கும். அடர்த்தியாக கருமையாக இருக்கும்.
உங்கள் கூந்தல் எந்த டைப் என்று அறிய
ஷாம்பூ போட்டு தலைமுடியை அலசின மறுநாள், ஒரு டிஷ்யூ பேப்பரை எடுத்து தலை நடுவிலும், காதுகளின் பின்புறமும் அழுத்தி எடுக்கவும். டிஷ்யூ பேப்பரை வைத்து தேய்க்க வேண்டாம். அழுத்தி எடுக்கவும். டிஷ்யூ பேப்பரில் எண்ணெய் தெரிந்தால் உங்களின் கூந்தல் எண்ணெய்ப்பசை அதிகமுள்ள கூந்தல். தவிர உங்கள் சர்மம் ‘நார்மலாக’ இருந்தால் உங்கள் கூந்தலும் நார்மலாக இருக்கும். சர்மத்தில் குறிப்பாக முகத்தில், எண்ணெய் பசையாக இருப்பவர்களுக்கு, கூந்தலும் எண்ணெய்ப்பசை அதிகமானதாக இருக்கும். உலர்ந்த சருமம் உள்ளவர்களின் கூந்தலும் உலர்ந்திருக்கும்.
மனித இனத்திற்கேற்ப மாறுபடும் முடி
மனிதரின் இனம், வசிக்கும் பிரதேசங்கள் இவைகளால் முடி வகைகள் மாறுபடும். கறுப்பின நீக்ரோக்கள் முடி, கம்பிச்சுருள் போல சுருண்டு, சுருட்டையாக இருக்கும். ஆசிய இனத்தவர்களுக்கு முடி நீளமாக இருக்கும். மங்கோலிய இனத்தவர்க்கு முடி முரட்டுத்தனமாக இருக்கும். ஐரோப்பிய நாட்டவருக்கு முடி மிருதுவாக, பழுப்பு – வெள்ளை நிறமாக இருக்கும். இவர்களுக்கு மெலானின் குறைவாக இருப்பதால், முடி சீக்கிரம் நரைத்து விடும்.
ஆயுர்வேதமும் முடியும்
ஆயுர்வேதத்தின் படி முடி ஒரு எலும்பின் திசு. அஸ்தி – தாதுவின் மலம் கழிவுப் பொருள். எலும்பு கால்சியத்தால் ஆனதால், முடிக்கும் கால்சியம் தேவையென ஆயுர்வேத மருத்துவர்கள் கருதுகின்றனர். கால்சியம் மட்டுமல்ல, இரும்புச்சத்தும் சேர்ந்தால், முடி ஆரோக்கியமாக இருக்கும் என்பது இவர்களின் கருத்தாகும். சரகசம்ஹிதை, எலும்பு திசு குறைவினால், இளநரை, முடி உதிர்தல் இவை ஏற்படுகிறது என்கிறது.
முடி மற்றும் நகங்கள் பஞ்ச பூதங்களில் ஒன்றான ப்ருத்வியால் ஆனவை. ஜல பூதம் இன்மையால் இவை கடினமாகின்றன என்பதும் ஆயுர்வேத கருத்து.
சரகசம்ஹிதை மட்டுமல்ல, சுஸ்ருதரும் 44 வகை ரோகங்களை குறிப்பிடுகிறார். அதில் பொடுகு, முடி உதிர்தல், நரை – இவைகள் சேர்க்கப்பட்டிருக்கின்றன.
பல வித முடிப்பிரச்சனைகள் ஆயுர்வேதத்தில் அலசப்பட்டிருக்கின்றன. ஆயுர்வேதத்தை அணுகினால், முடி பாதிப்புகளுக்கு பாதுகாப்பான தீர்வுகள் கிடைக்கும்.
உங்கள் கூந்தல் எந்த வகையைச் சேர்ந்தது என்று அறிய ஆயுர்வேத மருத்துவரை அணுகவும். வரும் அத்யாயங்களில் ஆயுர்வேத சிகிச்சை முறைகள் விவரிக்கப்படும்.