உயிரே கடவுள் – மெய்ஞான மாத இதழ்
(மார்ச் 1999)
ஒரு நோயாளி, தன் நோய் தீர வேண்டும் என்றால், மருத்துவர் தரும் மருந்தைக் கட்டாயமாகச் சாப்பிட்டுத்தான் ஆகவேண்டும். இதே போன்று, நம்முள் அறியாது சேர்ந்த நஞ்சான உணர்வுக்ளை நீக்க வேண்டுமென்றால், நமக்குள் கட்டாயப்படுத்தித்தான் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியைப் பெருகச் செய்ய வேண்டும்.
நமது குருநாதர், தம் உணர்வின் தன்மை கொண்டு, அகண்ட அண்டத்தையும், அகஸ்தியர் கண்டுணர்ந்த உணர்வையும் அறிந்துணர்ந்தார். தமக்குள் பெற்ற பேரருளின் உணர்வுகளை,
எமக்குள் யாம் எவ்வாறு பெறவேண்டும்
எனும் வழிமுறைகளைக் காண்பித்து,
உணர்வின் உணர்ச்சிகளை எமக்குள் தூண்டச் செய்து,
செவி வழி ஓதி, உணர்வுகளை அறியும்படி
நுகர்ந்தறியும் ஆற்றலைக் கொடுத்தார்.
நுகரும்போது, உடல் உணர்ச்சி கொண்டு அறிவதும்,
உணர்வின் தன்மை கூறும்போது, காட்சியாகத் தெரிவதும்
போன்ற நிலைகள் கொண்டு, எம்மை அறியச் செய்தார், அறிந்தோம்.
அதனின் உணர்வுகளை, உங்களுக்குள்ளும் யாம் பதிவாக்குகின்றோம். இதனை உங்களுக்குள் ஏங்கிப் பெறும் நிலை வரும்பொழுது, அதற்குத் தக்கவாறு, உங்களில் உருப்பெறும் தன்மை வருகின்றது. உணர்வுகளை உங்களில் குவிக்கப்படும் பொழுது, அது காட்சியாகவும் உங்களுக்குத் தெரியும். கண் திறந்திருந்தாலும் சரி, கண் மூடியிருந்தாலும் சரி, உணர்வின் அலைகளாக மாறும் தன்மை வரும்.
தெளிந்த மனம் கொண்டு கண்களை மூடித் தியானித்தால், உணர்வின் தன்மை புற நிலைகளை அடக்கி, அருள் ஒளி என்ற உணர்வின் தன்மையைப் பெருக்கி, நமக்குள் உணர்வின் தன்மைகள் காட்சியாகத் தெரியும். ஆகவே, நீங்களும் இதைப் பெறவேண்டும்.
குருநாதர் தம்முள் பெற்றார். தாம் பெற்றதை, யாம் பெறும் நிலையாக, எமக்கு உபதேசித்தார். அவர் தந்தருளிய அருள் உணர்வுகளை, எமக்குள் பதிவாக்கினோம். பதிவின் நிலைகள் கொண்டு, அறிவாக இயக்கினோம். அருள் உணர்வின் ஆற்றலை, எமக்குள் உருவாக்கினோம். இவையனைத்தும், நீங்கள் பெறவேண்டும் என்று உங்களிடத்தில் பதிவாக்குகின்றோம்.
ஏனென்றால், ஒரு வித்து ஒருவருக்குப் பசி தீர்க்காது. நீங்கள் பெற்ற அருள் உணர்வின் சத்தை மற்றவர்களிடத்திலும் படரச் செய்யும் உணர்வை, நீங்கள் உங்களிடத்தில் வளர்த்துக் கொண்டால், நாம் அனைவரும் ஒன்றென இணைந்துவிடலாம்.
சிறு துளி என்ற நிலை வரப்படும் பொழுது, அதன் தன்மை புவியில் தங்கி விடுகின்றது. சிறு துளிகள் இணைந்து, பெருவெள்ளமாக வரப்படும் பொழுது, பலவற்றிற்கும் பயன்படுவது போன்று,
நாம் சிறுதுளியாக இருப்பினும்,
பலரிடத்தில் அருளுணர்வுகளை வளர்த்து
அனைவரும் ஒன்றென இணைக்கப்படும் பொழுது,
அரும்பெரும் சக்திகளை நாமும் பெறலாம்,
வரும் தீமைகள் அனைத்தையும், நீக்கவும் செய்யலாம்.
அருள் ஒளியின் உணர்வுகளை, நமக்குள் பெருக்கவும் முடியும்.
இவ்வருள் ஞானவழி கொண்டு, பலரிடத்திலும், நஞ்சினை வென்ற அருள் மகரிஷிகளின் அருள் உணர்வுகளைப் பதியச் செய்து, அனைவரையும் கூட்டமைப்பாக ஒன்றிணைத்து அருள் உணர்வின் அலைகளை பரவச் செய்யும் அன்பர்கள், தம் இருளை அகற்றி, மெய்பொருள் காண்பதற்கும், அவ்வன்பர்களின் உடல் முழுவதும் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி படர்ந்து, அவர்களுள் அறியாது சேர்ந்த நஞ்சுகள் அகன்று, அறியாது சேர்ந்த இருள்கள் நீங்கி, அருள் ஒளியின் உணர்வுகள் பெருகவும், பெருவீடு பெருநிலை பெறும் நிலையாக, பேரின்பப் பெரு வாழ்வாக வாழ்ந்து வளர்ந்திடவும், எமது அருள் ஆசிகள்.
(ஏப்ரல் 1999)
ஆறறிவு கொண்ட மனிதரான நாம், பலவிதமான உடல் உறுப்புகளைக் கொண்ட உயிரினங்களை உருவாக்குகின்றோம். விஞ்ஞான அறிவால், இதை நாம் அறிந்துகொண்டோம். இப்படி அறிந்துகொண்ட உணர்விலிருந்து, நாம் என்ன செய்யவேண்டும்? நமக்குள் எப்படிச் சமைத்தல் வேண்டும்?
ஒருவர் நமக்குத் தீமை செய்தார், என்று அறிகின்றோம். ஆனால், அந்தத் தீமையின் உணர்வு, நமக்குள் வளராது தடைப்படுத்துதல் வேண்டும்.
அவ்வாறு தடைப்படுத்த வேண்டுமென்றால், “ஈஸ்வரா” என்று உயிரை எண்ணி, “துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாம் பெறவேண்டும்” என்று எண்ணி ஏங்கி, தீய உணர்வினை நமக்குள் வராது தடைப்படுத்தி, அருள் உணர்வினைச் சேர்க்கப்படும் பொழுது, தீய உணர்வுகளின் வீரியத்தைக் குறைக்கின்றது.
உதாரணமாக, மிளகாய் தனித்துக் காரமாகத்தான் இருக்கும். ஆனால், மற்ற பொருள்களுடன் இணைக்கப்படும் பொழுது, சுவையாக மாறுகின்றது.
ஒருவர் “தவறு செய்கிறார்” என்று நாம் அறியும் பொழுது,
நாம் அருள் ஒளியின் உணர்வினை நுகர்ந்து,
“அவருடைய அறியாமை நீங்கவேண்டும்,
அருள்ஞானம் அவரில் பெறவேண்டும்,
அருள்சக்தி அவர் பெறவேண்டும்,
தெளிந்த மனம் அவர் பெறவேண்டும்” என்று எண்ண வேண்டும்.
இதனால், அவருடைய உணர்வுகள் நமக்குள் வந்தாலும், அவரை இயக்கும் தீய உணர்வுகள், நமக்குள் விளையாது.
அவர் தவறு செய்கிறார் என்று நாம் அறிந்தாலும், அவர் வேகத்துடிப்பாக இருக்கும் பொழுது, நன்மை தரும் சொல்களை நாம் சொன்னால், அவர் கேட்கமாட்டார்.
சில நிமிடங்களுக்குப் பிறகு, அதாவது சாந்தமாக இருக்கப்படும் பொழுது, “நீங்கள் இப்படிச் செய்தால், உங்களுக்கு நன்மை” என்று நாம் சொல்லும் பொழுது, அவர் ஏற்றுக் கொள்ளும் பருவம் வருகின்றது. அப்போது, நாம் சொல்லும் சொல்லின் உணர்வுகள், அவரிடத்தில் உருவாகும் தன்மை வருகின்றது.
எண்ணெய் நன்றாக கொதிக்கும் முன், வடை தட்டி, எண்ணெயில் போட்டால் என்னவாகும்? வடை சீராக வேகாது. எண்ணெயை அதிகமாக விழுங்கும். பின், அது சூடேறச் சூடேற, வடையில் சுவையும் மாறிவிடும். ஆனால், எண்ணெய் அதிகமாகக் கொதித்து, அதில் வடையைத் தட்டிப் போட்டால், வடையின் மேல்பாகம் கருகிவிடும். உள் பாகம் மாவாக இருக்கும்.
சமப்படுத்தும், பக்குவப்படுத்தும் உணர்வின் தன்மை கொண்டுதான், பதார்த்தங்களை உருவாக்கவேண்டும். இதைப் போன்றுதான், நமது வாழ்க்கையில், குழந்தை ஒன்று தவறு செய்யும் பொழுது, தருணம் பார்த்துத்தான் நல் உணர்வின் தன்மையைக் குழந்தைக்குச் சொல்ல வேண்டும்.
ஏற்றுக் கொள்ளும் பருவம் வரும் பொழுதுதான், நல் உணர்வுகளை ஊட்டவேண்டும். ஏற்றுக் கொள்ளும் பருவம் இல்லை என்றால், சொல்லிய நல் உணர்வுகள் அங்கே விளையாது. நல் உணர்வின் தன்மை விளையும் பருவம், அங்கே இழக்கப்படுகின்றது. ஆனால், தவறைச் சுட்டிக் காட்டி
நல் உணர்வை ஊட்டத் தவறினால்
வெறுப்பின் உணர்வே வரும்.
வெறுப்பின் நிலை வளர்ந்துவிட்டால்,
ஏற்றுக் கொள்ளும் பண்பே வராது.
ஆகவே, நாம் இதுபோன்ற நிலைகளை அறிந்து, எதனை, எவ்வாறு, எதன் வழியில், நாம் உருவாக்கவேண்டும்? என்ற நிலையில் “நாம் பக்குவப்படுத்தும் நிலையில்” சமப்படுத்துதல் வேண்டும்.
ஒவ்வொரு நிமிடமும் மனதைச் சமப்படுத்தினால்,
பக்குவப்படுத்தும் பண்பும் வருகின்றது.
அருள் ஞானத்தின் உணர்வுகள் நமக்குள் விளைந்தால்,
நம் வாழ்க்கையில் வரும் விஷத் தன்மைகளை,
கார உணர்ச்சிகளை, அடக்கும் தன்மை வருகின்றது.
இப்படி அடக்கும் தன்மை வந்தால்,
சிந்திக்கும் தன்மை வருகின்றது.
சிந்திக்கும் தன்மை வந்தால்,
நம் செயல் சீராக அமைய, இது உதவும்.
நாம், நமது வாழ்க்கையில், துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியின் உணர்வைப் உருவாக்கி, பேரின்பப் பெருவாழ்க்கை என்ற நிலையை, நமக்குள் உருவாக்குதல் வேண்டும்.
இதுதான் “தைப் பொங்கல்” என்பது. நமக்குள் அருள் உணர்வை பொங்கச் செய்ய வேண்டும்.
சூரியன் இந்த பிரபஞ்சத்தைப் பொங்கச் செய்கின்றது. அதாவது, இந்த பிரபஞ்சத்தில், ஒவ்வொன்றின் இயக்கத்திற்கு என்னென்னெ தேவையோ, அவைகளையெல்லாம் கொடுக்கின்றது.
சூரியன், இந்தப் பிரபஞ்சத்தை ஒளியாக்குகின்றது. இதைப் போன்று, மனிதர்கள் தம்முள் அருள் ஞானத்தைச் செலுத்தி, தம்முள் உள்ள இருளின் தன்மையை நீக்குதல் வேண்டும்.
நமது உயிர், மற்ற அணுக்களின் தன்மையை, அதன் அறிவாக இயங்கச் செய்கின்றது. துருவ நட்சத்திரம், இருளை வென்று, ஒளியின் உணர்வாக உருவானது.
இந்த உணர்வின் தன்மையை நமக்குள் செலுத்தி, நம் உடலில் தெரிந்தோ, தெரியாதோ சில அணுக்களின் தன்மை உருவானால், அந்த அணுக்கள் வீரிய உணர்வு பெறவேண்டுமென்று எண்ணத்தைச் செலுத்தினால் அது வீரியத் தன்மை பெறும்.
மனிதர்கள் நாம் விஞ்ஞான அறிவு கொண்டு, மருந்துகளைத் தயாரித்து, நம் உடலில் செலுத்தி, இரத்த நாளங்களில் கலக்கச் செய்து, மற்ற பாகங்களில் இணைத்து, நல்ல அணுக்களை உருவாக்குகின்றோம்.
இது போன்றுதான், நாம் நுகரும் உணர்வுகள் உயிரில் மோதுகின்றது. நமது சிரசுபாகம் “ஈஸ்வரலோகம்”.
உயிர், உயர்ந்த குணத்தை உருவாக்கி, அணுவின் கருவாக நமது இரத்த நாளங்களில் சேர்க்கின்றது. ‘இந்திரலோகமாக” மாறுகின்றது.
இதனின் உணர்வின் தன்மை இரத்த நாளங்களில் கலந்து, உடல் உறுப்புகளுடன் இணைக்கப்படும் பொழுது, “பிரம்மலோகமாக” மாறுகின்றது. எக்குணத்தின் தன்மை பெற்றோமோ, அந்த உணர்வின் இயக்கமாக நம்முள் இயக்கத் தொடங்கிவிடுகின்றது.
ஆகவே, அருள்ஞானிகள் காண்பித்த அருள்வழியில், தாம் தமது வாழ்க்கையில், தெளிந்த மனதையும், உயர்ந்த உணர்வுகளையும் தமக்குள் உருவாக்கி, பேரின்பப் பெருவாழ்வாக வாழவேண்டும் என்ற எண்ணத்துடன், அருள் ஞானிகளின் உணர்வுகளை தம்முள் பெருக்கும் அன்பர்கள் அனைவரும், தம்முள் அறியாது சேர்த்த இருளை அகற்றி, அருள் ஒளியின் உணர்வுகளைத் தம்முள் சேர்த்து, தீமைகளை அடக்கும் நிலையாக, பேரின்பப் பெருவாழ்வாக வாழ்ந்து வளர்ந்திட, எமது அருள் ஆசிகள்.
உதாரணமாக, ஒருவர் சாக்கடையில் விழுந்துவிட்டால், அவரை அங்கேயிருந்து மீட்க நினைக்கின்றோம். அவரைk கை கொடுத்துத் தூக்குகின்றோம். அவரும் நம்மைக் கட்டித் தாவி மேலே வருகின்றார். இதனால், நம் மீதும் அசுத்தம் ஆகிவிடுகின்றது. உடனே, அசுத்தத்தை நீரால் நீக்குகின்றோம். இது புறத்தால் நிகழ்வது. ஆனால், பிறிதொருவரின் வேதனையின் உணர்வை நாம் நுகரும் பொழுது, நம் அகத்திற்குள் வந்த, அந்த அசுத்தத்தை நீக்க வேண்டுமல்லவா?
யாம் அருள் வாக்கினை வழங்குகின்றோம். எம்மை நீங்கள் பார்க்கின்றீர்கள். யாம் பேசும் உணர்வுகளை நீங்கள் நுகர்ந்தபின், அது உங்களுடைய உயிரினில்பட்டு, இதனின் உணர்வை அறிய நேருகின்றது. இதை உங்களால் பார்க்க முடிகின்றதா? இல்லை, ஆனால், உணர முடிகின்றது.
நீங்கள் எம்மைப் பார்க்கின்றீர்கள், நீங்கள் “எதைப் பெறவேண்டும்” என்று எண்ணி ஏங்குகின்றீர்களோ, அந்த உயர்ந்த எண்ணங்களை எண்ணும்பொழுது, அதனின் உணர்வின் தன்மை உங்களுக்குள் இயக்குகின்றது.
அப்படி இயக்கப்படும்பொழுது, உங்களுக்குள் அறிய முடியாத சில சலனங்கள் ஏற்பட்டு, அது எப்படி நம்மை இயக்குகிறதென்று, அறியும் பருவம் வருகின்றது.
அறியும் பருவம் வந்தாலும், நீங்கள் அதை அடக்க வேண்டுமென்ற உணர்ச்சிகளைத் தூண்டுகின்றது. அப்போது, தம்முள் அடக்கவேண்டும், தீமைகள் தம்முள் வராது தடுக்கவேண்டும், என்ற உணர்வுகள் உங்களிடத்தில் வருகின்றது.
அருள் ஞானியின் அருள் உணர்வுகள், வலிமை கொண்டது. அதே சமயத்தில், வேதனையின் உணர்வுகளும் வலிமை கொண்டது.
ஆனால், அருள் ஞானியின் உணர்வுகள், சிந்தனையைத் தூண்டும். வேதனை உணர்வுகள் சிந்தனையை, இழக்கச் செய்யும்.
“நல்ல மனிதராக இருந்தார், இன்று அவருடைய நிலை, அவருடைய குடும்பத்தினர்களே அவரை எதிர்க்கும் நிலை ஆகிவிட்டதே” என்று உங்களிடத்தில் சிந்தனையின் தன்மை மாற்றப்பட்டு, வேதனை பற்றிய சிந்தனையை உங்களிடத்தில் வளர்க்கச் செய்கின்றது. ஆகவே, அவரிடத்தில் இருந்த, அந்த வேதனையின் வலு உங்களிடத்தில் வளர்கின்றது.
தீமைகளின் உணர்வை, அடக்கும் ஆற்றல் கொண்டது துருவ நட்சத்திரம். அதன் உணர்வை எடுத்து, உங்களுக்கு உபதேசிக்கும் பொழுது, தீமைகளை அடக்கும் ஆற்றல் உங்களிடத்தில் வலிமை பெறுகின்றது.
தீமை என்று ஒன்றை. அறியும் பொழுது, தீமையிலிருந்து விடுபடும் நிலையை நாம் பெறவேண்டும்.
தீமையிலிருந்து விடுவிக்கும் உணர்வுகள் எது? விடுபட்டவர் யார்? துருவ நட்சத்திரம். துருவ நட்சத்திரத்திலிருந்து வெளிப்படும் உணர்வுகளை, நமக்குள் கவரும் பொழுது, அது நம்முள் உள்ள தீமைகளை ஒடுக்குகின்றது, தீமைகள் வராது காக்கின்றது.
புழுவிலிருந்து மனிதராகும் வரையிலும், மனிதராக ஆனபின்னும், ஒவ்வொரு சரீரத்திலும், தீமைகளை நீக்கிடும் ஆற்றல் பெற்றது, கண்கள். கண்களின் உணர்வின் தன்மை கொண்டு, தீமைகளை அகற்றிய ஆற்றல் பெற்றது, துருவ நட்சத்திரம்.
துருவ நட்சத்திரத்தின் அருளுணர்வின் தன்மையை, நாம் நுகர்ந்தால், ஞானிகள் அறிந்த உணர்வின் அறிவு, நமக்குள் விளைகின்றது, பகைமை உணர்வுகளை நீக்குகின்றது. தீமைகள் வராது காக்கின்றது.
ஆகவே, நாம் எதைச் செய்யவேண்டும்? ஒருவர் வேதனைப்படுகின்றார், கஷ்டப்படுகின்றார் என்றால், நாம் வேதனையை நீக்கிடும் நிலையை பெறவேண்டும்.
உதாரணமாக, ஒருவர் சாக்கடையில் விழுந்துவிட்டால், அவருக்குக் கை கொடுத்து, அரவணைத்து, சாக்கடையிலிருந்து மீட்கிறோம். பின், அவரைக் குளிக்கச் செய்கின்றோம். நாமும் குளித்துக் கொள்கின்றோம்.
இதைப் போன்று, வேதனையின் உணர்வினை நாம் நுகர்ந்தால், முதலில் நம்முள் சுத்தப்படுத்திக் கொள்ள வேண்டும். பின், மகரிஷிகளின் அருள் உணர்வுகளை, அவர் பெறவேண்டும், வேதனைகள் அவரிடத்திலிருந்து நீங்கவேண்டும், என்று எண்ணுதல் வேண்டும்.
இதனின் உணர்வின் தன்மையினை நமக்குள் வளர்த்துக் கொண்டால், அருள் உணர்வின் ஆற்றல் நம்மிடையே பெருகும் நிலை வருகின்றது.
இதனைப் பின்பற்றி வரும் அனைத்து அன்பர்களும், மகரிஷிகளின் அருள் சக்தி பெற்று, சர்வ தீமைகளில் இருந்தும் விடுபட்டு, மன பலம் பெற்று, உடல் நலம் பெற்று, செல்வம், செல்வாக்கு பெற்று, வாழ்க்கையில் எல்லா நலமும் வளமும் பெற்றிட எமது அருள் ஆசிகள்.
(மே 1999)
மனதைச் சமப்படுத்தப் பக்குவம் தேவை
பக்குவம் பெறுவதற்கு அருள் ஞானம் தேவை
அருள் ஞானம் இருந்தால் தீமைகளை அடக்க முடியும்
தீமைகளை அடக்கினால் சிந்தனைத் திறனைப் பெறமுடியும்
சிந்தனைத் திறனைப் பெற்றால்,
செயல் திறனை பெருக்க முடியும்.
(ஜூன் 1999)
மின்னலைக் கண்டு, லேசரைப் படைத்தவர் விஞ்ஞானி. மின்னலை நுகர்ந்து, தன்னுள் ஒளியைப் பெருக்கியவர் அகஸ்தியர். அகஸ்தியரின் அருளைப் பெற்று, நம்மிடம் உள்ள இன்னலைத் துடைப்போம்.
உதாரணமாக, ஆசிரியர் கற்றுத் தரும் பாடங்களை
மாணவன், தான் கூர்மையாக உற்றுப் பார்த்து
தனக்குள் பதிவாக்கி,
ஆசிரியர் மேல் பற்று கொண்ட
உணர்வின் தன்மையையும்,
மாணவன் தனக்குள் பதிவாக்கினால்,
ஆசிரியர் தமக்குள் கற்றுணர்ந்த
உணர்வின் தன்மைகள், மாணவனிடத்தில் பரவி,
அந்த உணர்வே ஆசிரியராக இருந்து,
இது இவ்வாறு, இது இந்த நிலை, என்பது போன்ற
சிந்திக்கும் திறனும், செயலும்
அதற்குண்டான உணர்வும் வரும்.
இப்படி, ஒருவர் கற்றுத் தரும் போதனையை, கூர்மையாகக் கவனித்து, அதன் உணர்வின் தன்மையை, எவர் தமக்குள் பதிவு செய்கின்றனரோ, அதன் வழி அவருக்குள் இயக்கமாகின்றது. இதைத்தான், குரு எமக்குக் காண்பித்து, எம்முள் பதிவாக்கினார்.
உலக நிலையை அறியச் செய்திடும் ஆசிரியர், என்ற நிலையில், எமது குருவின் உணர்வின் தன்மையை, எமக்குள் பதிவு செய்து கொண்டபின், உலகின் தன்மையையும், கடந்த காலத்தில் மனிதர்கள் எவ்வாறு வாழ்ந்தார்கள் என்றும், எமக்கு உணர்த்தினார் குரு.
இப்படி, இதன்வழி கொண்டு எண்ணும் பொழுது, அவர் கற்றுணர்ந்த உணர்வின் இயக்கங்கள், எம்மைச் சிந்திக்கச் செய்யும் நிலையாகவும், அதன் வழி கொண்டு, வாழ்க்கை அமைத்திடும் நிலையும் வருகின்றது.
இப்பொழுது, யாம் உபதேசிக்கும் உணர்வுகளை நீங்கள் உங்களுக்குள் பதிவாக்கி, பதிவாக்கியதை மீண்டும் நினைவு கொண்டால், தீமையிலிருந்து விடுபடும் உணர்வின் அணுக்கள் உங்களுள் உருவாகி, நீங்களும் இதை நுகர்ந்தறிந்து, தீமையிலிருந்து விடுபடும் மனிதனாகின்றீர்கள்.
ஒருவன் என்னை ஏசுகின்றான், எனக்குத் தொல்லை கொடுக்கின்றான், என்ற உணர்வின் தன்மையைப் பதிவாக்கிக் கொண்டு, தீமை செய்தவனை எண்ணும் பொழுது, மீண்டும் நமக்குள் தீமையின் உணர்வுகள் வளர்ந்து, நம்மிடத்தில், கை கால் குடைச்சலாகி, சிந்திக்கும் தன்மை இழந்து, கோப உணர்வுகள் வருகின்றது.
சிந்திக்கும் தன்மையை இழக்கப்படும் பொழுது, செயலின் தன்மை குறைகின்றது. நமது செயல் நற்பலன் தரவில்லையென்றால், உணர்ச்சியின் தன்மை கூடுகின்றது. கொதிப்பின் தன்மை ஏற்படுகின்றது. கொதிப்பின் உணர்வுகள் நமக்குள் வளர்ந்து, நமது நல்ல அணுக்களை செயலற்றதாக மாற்றுகின்றது. இதுவே நமக்குள் வளர்ந்து, கடும் நோயாகவும் மாறுகின்றது. ஆக, இதுவும் ஆசிரியராக வருகின்றது, குருவாக வருகின்றது.
ஆகவே, எதனின் தன்மையை நம்முள் பதிவாக்குகின்றோமோ, அதன் வலிமை கொண்டு நம்மை இயக்கிவிடும். இதை வென்றவர், துருவ மகரிஷி. அவர் கண்டுணர்ந்த உணர்வை, நமது குரு கற்றுணர்ந்தார். குரு ஊட்டிய உணர்வினை, யாமும் நுகர்ந்தோம், கண்டறிந்தோம்.
சாதாரணமாக, மனிதர் பாம்பினைக் கண்டால் அஞ்சுகின்றார். ஆனால், பாம்பு பிடிப்பதில் தெளிந்த மனிதன் ஒருவன், ஒரு பாம்பை பிடிக்கச் சென்றால், பாம்பு அவனைக் கண்டு அஞ்சுகின்றது. அவன் கையில் ஒரு குச்சி மட்டுமே இருக்கும். பாம்பைக் கண்டு நாம் பயப்பட்டோம் என்றால், பாம்பு இந்த உணர்வை நுகர்ந்து, “சிர்” என்று சீறித் தாக்கும், பயந்த மனிதன் தாக்குகின்றான் என்று உணர்கின்றது.
தெளிந்த மனிதன் வலிமை கண்டு, “இவன் தாக்குவான்” என்று பாம்பு அஞ்சி ஓடுகின்றது. ஆனால், பயந்தவன் தாக்கும் பொழுது, பாம்பும் அஞ்சி இவனை தாக்குகின்றது.
வலிமையுள்ளதை நுகர்ந்துணரும் சக்தி, பிற உயிரினங்களுக்கு உண்டு. மனிதருக்கும் இந்த அறிவு இருப்பினும், இந்த அறிவை சீராகப் பயன்படுத்துவதில்லை. ஆதலால், நாம் அறியும் தன்மை இழந்திருக்கின்றோம்.
பாம்பு பிடிப்பதில் தெளிந்த மனிதன், இந்தப் புற்றுக்குள் பாம்பு இருக்கிறது என்று அறிகின்றான். இவனின் மணத்தை நுகரும் பாம்பு, புற்றுக்குள் அஞ்சி ஒடுங்குகின்றது. இவன் தூண்டும்போது வெளிவரும் பாம்பு, இவனைத் தாக்குவதில்லை, அஞ்சி ஓடுகின்றது.
ஆனால், இவன் பாம்பை எளிதில் பிடித்து, கவட்டையில் போட்டு, பாம்பு உயிருடன் இருக்கும் பொழுதே, பாம்பின் தோலை உரிக்கின்றான். இத்தகைய உணர்வுகள் பாம்பு பிடிப்பவனிடத்தில் இருப்பதால், அவனிடமிருந்து வெளிப்படும் மணத்தை, பாம்பினம் காண்கிறது. ஆகவே, அவனைக் கண்டு அஞ்சி ஓடுகின்றது. சாதாரண மனிதனைக் கண்டால், சீறி தாக்குகின்றது, எதிர்த்து நிற்கின்றது.
இதைப் போன்றுதான், வாழ்க்கையில் பகைமை என்ற உணர்வுகள், எத்தனையோ நம்மிடத்தில் வருகின்றது. நாம் அன்பும், பண்பும், பரிவும் கொண்டு, பிறருடைய கஷ்டங்களை, நோய்களை கேட்டறிந்து உபகாரம் செய்தாலும், நாம் கேட்டறிந்த உணர்வுகள் “ஓம் நமசிவாய” என்று நம் உடலாக மாற்றுகின்றது. அதுவே வினையாகின்றது, வினைக்கு நாயகனாக அதன் வலுவைக் காண்பிக்கத் தொடங்கிவிடுகின்றது. ஆகவே, இதுபோன்ற தீமைகளிலிருந்து எங்ஙனம் நாம் விடுபட வேண்டும்? என்பதைச் சிந்திக்க வேண்டும்.
ஒரு இயந்திரத்தை உருவாக்கும் இஞ்சினியர், அந்த இயந்திரத்தில், எங்கெங்கே அழுத்தம் அதிகமாக இருக்கும், எங்கெங்கே வலிமை தேவை என்பதைக் கணக்கிட்டு, உலோகத் தன்மையின் வலிமையையும், இயந்திரத்தில் ஏற்படும் உராய்வையும் கணக்கிட்டு, இயந்திரத்தை உருவாக்குகின்றார்.
ஆனால், இயந்திரத்தைச் சோதித்து பார்க்கும் பொழுது, உலோகக் கலவையில் வலு சிறிது குறைவாக இருக்கும் பொழுது, இயந்திரம் நொறுங்கி விடுகின்றது.
பின், எதனால் இப்படி நேர்ந்ததென்று சிந்திக்கின்றார். சிந்தித்து, இயந்திரத்திற்குண்டான வலிமையைக் கூட்டுகின்றார். இதனைத் தொடர்ந்து, சரியான ஒரு இயந்திரத்தை உருவாக்குகின்றார்.
இதைப் போன்று தான், ஞானத்தின் நிலைகள். தீமை என்று ஒன்று வரும் பொழுது, நாம் அருள்ஞானிகளின் உணர்வை, நம்முள் பதிவாக்கினால், உடனே சிந்தனை தூண்டப்பட்டு, தீமைகளை அகற்றும் தன்மை நம்மிடத்தில் உருவாகின்றது.
அருள் ஞானிகளின் உணர்வுகளை நாம் நுகரப்படும் பொழுது, அது, நம்முள் விஷத்தின் தன்மையை அடக்கி, நம்மிடத்தில், சிந்திக்கக்கூடிய மனவலிமையைக் கூட்டுகின்றது.
இத்தகைய ஆற்றலை நீங்கள் பெற்றால்தான், உங்களுடைய வாழ்க்கையில் வரும் தீமைகளை அகற்ற முடியும். உங்கள் வாழ்க்கையைச் சீராக்க முடியும். பேரருள் பேரொளி பெறும் நிலையாக, தனக்குள் அருள் ஒளியின் உணர்வின் தன்மையைக் கூட்டும் பொழுது, அதன் உணர்வின் அலைகளை நீங்கள் பெற்று, இந்த உடலுக்கு பின், பிறவியில்லை என்ற நிலையை, அடைந்திட முடியும்.
இதை உணர்ந்து, ஞானிகள் காண்பித்த அருள் வழியில் அருள் ஞானத்தை வளர்த்து வரும் அன்பர்கள் அனைவரும், தம்முள் நஞ்சினை வென்று, பேரருள் பெற்று, பிறவியில்லா நிலை என்ற அருள் சக்தி பெற்று, பிறவியில்லா நிலை என்ற அருள் வாழ்க்கை வாழ்ந்து, இவ்வாழ்க்கையில் பிறவியில்லாப் பெருநிலையாக வாழ்ந்து வளர்ந்திட, எமது அருள் ஆசிகள்.
(ஜூலை 1999)
ஆற்றில் நீர் அதிகமாக இருக்கும் பொழுது, நீரோட்டம் அதிகமாக இருக்கும், மாறாக, நீர் குறைவாக இருக்கும் பொழுது, நீரோட்ட வேகம் குறைவாக இருக்கும். இது போன்று, அருள் ஞானிகளின் அருள் உணர்வுகள் நம்முள் பெருகப் பெருக, நம்முடைய செயலாக்கத் திறனும், பெருகி வரும்.
மனிதராக உள்ள நாம், இந்த வாழ்க்கையில், கோபமான உணர்வுகளையே நம்முள் அதிகமாகச் சேர்த்துக் கொண்டிருப்போம் என்றால், நமது அடுத்த சரீரம், புலியின் ரூபமாகத்தான் அமையும் என்பதை, இராமாயணத்தில் காண்பித்தார்கள்.
அதாவது இராவணன், தான் மூன்று லோகத்தையும் அடக்கவேண்டும், தன் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரவேண்டும் என்று, அதற்கான ஆற்றலைப் பெறுவதற்காக வேண்டி, விஷ்ணுவை நோக்கிக் கடுந்தவம் இருந்தான், என்று இராமாயணக் காவியம் கூறுகின்றது.
இந்திரலோகம் என்பது, இன்பம் நிறைந்ததாக இருக்கும் லோகம். ஆனால், இராவணன், அரக்கத்தன்மை கொண்டு, தான் அனைத்தையும் அடக்கவேண்டும் என்று, இந்த உயிரை வைத்துத்தான் எண்ணுகின்றான்.
விஷ்ணுவை நோக்கி, இராவணன் தவம் இருந்தான் என்றார்கள். விஷ்ணு என்பது யார்? விஷ்ணு என்பது நமது உயிர். இந்த உடலில், அனைத்தையும் மகிழ்ச்சியாக இருக்கச் செய்வது, ஆறாவது அறிவு. இதனைத்தான், கன்னியர்கள் இந்திரலோகத்தை மகிழ்ச்சி நிறைந்திருக்கும்படி வைத்திருந்தார்கள், என்றனர் ஞானிகள்.
“மகிழ்ச்சி நிறைந்திருக்கும் இந்திரலோகத்தை அடக்கவேண்டும், தனக்குக் கீழ் கொண்டு வரவேண்டும், என்று எண்ணிய இராவணன் கடுந்தவம் மேற்கொண்டான் என்றும், தனக்குக் கீழ்படியாதவர்களைக் கொல்லவேண்டும் என்றும் எண்ணினான்” என்று காவியத்தில் கூறினார்கள்.
நாம், பிறிதொருவரிடம் உள்ள தீய குணங்கள் அகலவேண்டும், என்று எண்ணினால் நல்லது. ஆனால், தீய குணம் கொண்டவர்களை, அழித்துவிட வேண்டும் என்று எண்ணினால், நமக்குள் கொல்லும் உணர்வுகள்தான் விளையும்.
இதைத்தான், இராமாயணத்தில் தசரதச் சக்கரவர்த்தி, பத்தாவது நிலையை அடையக் கூடிய உயிரும், உயிரால் நுகரப்பட்ட உணர்வுக்கொப்ப உடலும், உடலின் தன்மை பெற்றபின், உடலை வளர்க்க உணர்வுகள் என்ன செய்கின்றது? என்றும், நல்ல நிலைகள் பெறவேண்டும் என்ற எண்ணத்தால் வளர்ந்த இராமனும், இராமனிடத்தில் நன்மையை நாடும் உணர்வுகள் எப்படி இயங்குகின்றதென்ற நிலையை, ஞானிகள் காட்டியுள்ளனர்,
அதே சமயத்தில், இராவணனிடத்தில் அசுர குணங்கள் எப்படி இயங்குகிறது என்பதையும், மனிதர்கள் பத்தாவது நிலையை அடைவதற்கு, தடைகள் எப்படி வருகின்றது என்பதையும், இராமாயணத்தில் தெளிவாகக் கொடுத்திருக்கிறார்கள்.
இராவணன், பிரம்மாவை நோக்கித் தவம் இருந்தான். பிரம்மாவும் இராவணனுக்கு வரம் கொடுத்தார். பிரம்மா, விஷ்ணுவின் மகனல்லவா. ஆகவே, பிரம்மாவும், இராவணனின் தவத்திற்கேற்ப “நீ அனுபவி” என்று வரம் கொடுத்துவிடுகின்றார். இராவணனும் தன் தவத்திற்கேற்ப, இந்திரலோகத்தைக் கைவல்யப்படுத்தினான்.
உதாரணமாக, நாம் பிறிதொருவரைக் “கொல்ல வேண்டும், கொல்ல வேண்டும்” என்று எண்ணினால், இந்த உணர்வின் தன்மையை உயிரான ஈசன், நமக்குள் இந்திரலோகமாக மாற்றி விடுகின்றது. “கொல்ல வேண்டும்” என்ற உணர்வு நமக்குள் வந்தவுடனே என்னவாகிறதென்றால், இந்திர லோகத்தில், கொல்லக்கூடிய உணர்வின் தன்மை கொண்டு, அணுவாக மாறுகின்றது, இது பிரம்மா.
கொல்லக்கூடிய உணர்வின் தன்மை கொண்டு விளைந்த அணு, நம்முள், தீமைகளை வளர்த்திடும் சக்தி பெறுகின்றது. நாம் மனிதராக இருக்கக்கூடிய நிலைகளில், மனிதராக உருவாக்கிய நல்ல குணங்களை மாற்றும் தன்மை வந்து, எமலோகமாக மாறுகின்ற பொழுது, மனிதர்கள் என்ன செய்கின்றனரென்றால், சீதா எனும் மகிழ்வான உணர்வைச் சிறைப்பிடித்து விடுகின்றனர்.
அதாவது, மகிழ்ச்சியான உணர்வு வெளியே வராதபடி அடக்கப்படுகின்றது. இதை மாற்ற வேண்டுமல்லவா? அதைத் தான்,
இராமாயணத்தில்,
உயிரின் இயக்கத்தையும், உடலின் ஆக்கத்தையும்,
பின் விளைவுகள் என்ன?
என்பதையும் தெளிவுபட எழுதினார்கள்.
“சீதாராமா” எனும் பொழுது, எந்த குணத்தின் சத்தை எடுக்கின்றோமோ, அதன் உணர்ச்சியின் எண்ணங்களை இயக்கும், அதனின் உணர்வுகள் உணர்ச்சிகளைத் தூண்டும். உணர்வுக்கொப்ப, உடலின் அமைப்பு வரும், என்னும் நிலையை, தெளிவாக இராமாயணத்தில் கொடுத்துள்ளார்கள்.
ஆகவே, நாம் தீமையான நிலைகளைக் காணும் பொழுது, அதிலிருந்து மீண்டிடும் நிலையாக, துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை நமக்குள் சேர்த்திடல் வேண்டும். நமது உயிரை ஈசன் என்று மதித்திடல் வேண்டும்.
ஈசன் வீற்றிருக்கும், இந்த உடலை ஆலயமாக மதித்து, துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை, இந்த உடல் முழுவதும் படரச் செய்து, பரிசுத்தமாக்க வேண்டும். நம்மை மனிதனாக உருவாக்கிய, நல்ல குணங்களைக் காத்திடல் வேண்டும், என்பதைத்தான் சாஸ்திரங்கள் தெளிவாக்குகின்றன.
இராமாயணம் நமக்குக் கிடைத்த, அரும்பெரும் பொக்கிஷம். யாம் இப்பொழுது உரைத்ததன் தொடர் கொண்டு, இராமாயணத்தை நீங்கள் அனைவரும் படிப்பீர்களென்றால், இராமாயணக் காவியத்தின் அர்த்தங்களைத் தெளிவாக அறியமுடியும்.
அதன் வழியில், மகரிஷிகளின் அருள் உணர்வுகளை நீங்கள் அனைவரும் பெற்று, உங்கள் வாழ்க்கையில் அறியாது வரும், சர்வத் தீமைகளிலிருந்து விடுபடும் அருள் சக்தி நீங்கள் பெற்று, மகரிஷிகளின் அருள் வட்டத்தில் மகிழ்ந்து மகிழ்ந்து வாழ்ந்திட, எமது அருள் ஆசிகள்.