எமது அருள், குரு அருளால் கிடைத்தது. குரு அருள் பேரருளைக் கவர்ந்து, அவர்
உணர்வு என்னை பக்குவப்படுத்தியது போல், உங்களைப் பக்குவப்படுத்துகின்றேன்.
இதில், எவர் ஒருவர் தொடர்ந்து வருகின்றாரோ, அவர் இவ்வாழ்க்கையைச்
சீர்படுத்தி வாழவும், அடுத்து, சீராக என்றும் பிறவியில்லா நிலைகளை
அடையவும், இது உதவுகின்றது.
குறுகிய காலமே இருக்கும்,
இந்த உடலுக்கு, வலுவைச் சேர்ப்பதைக் காட்டிலும்,
உயிருக்கு, அருள் ஒளி என்ற வலுவை உருவாக்குதல் வேண்டும். இதுதான் வாழ்வின் கடைசி எல்லை.
ஒளியின் உணர்வாக உருவாக்கப்பட்டது உயிர். ஒளியின் உணர்வாக, நம் அணுக்களை,
ஆறாவது அறிவின் துணை கொண்டு, உருவாக்கக் கற்றுக் கொள்வதுதான், பிரம்மாவை
சிறை பிடித்தான் என்பது.
உயிர் நுகர்ந்ததை
உருவாக்குகின்றது. அதே சமயத்தில், அந்த உணர்வுகள் நமக்குள் அணுவாகும்
பொழுது, உயிரைப் போன்றே, உணர்வின் தன்மை ஆக்கப்படும் பொழுது, நல்ல ஒளியின்
உணர்வை உருவாக்குகின்றது. இவையனைத்தையும் ஒன்றாக சேர்த்தால், ஒளியின் தன்மை
கூடுகின்றது.
சற்றுச் சிந்தனை செய்து பாருங்கள்.
வாழ்க்கையில் எல்லாவற்றையும் கடந்து,
இது தவறு, இது கெட்டது, என்று உணர்வினை
நுகர்ந்து, நுகர்ந்து, இதனைக் கலந்து, கலந்து,
இந்த உடலினை உருவாக்கியது உயிர்.
அவனே உருவாக்கினான். ஈசனாக இருந்து, உள் நின்று இயக்கிக் கொண்டு உள்ளான்,
கடவுள் என்ற நிலையில், நாம் எதனை நுகர்ந்தோமோ, அவை, நம் உள்நின்று அதனின்
துணை கொண்டு, அங்கே இயக்குகின்றது.
அவனல்லாது
உணர்வுகள் இயங்குவதில்லை. அவன்தான் உருவாக்குகின்றான். ஆகவே, அமைதி
கொண்டிருக்கும் நேரத்தில், உணர்வின் தன்மையை ஒளியாக்க வேண்டும்.
3. உயிர் தோன்றியபின் என்றுமே அழிவதில்லை
நான் இந்தப் பரமாத்மாவுடன் சேரப் போகின்றேன், என்று எல்லோரும் சொல்வார்கள். யார் இறந்தாலும், பரமாத்மாவில்தான் சேருவோம்.
நமக்குள் உயிராத்மாவாக இருந்து, நமக்குள் ஆண்டவனாக ஆண்டு கொண்டிருக்கும், இந்த உணர்வின் ஒளியுடன், அது ஒளிச்சுடராக,
நமது உடலைத் தீயில் போட்டு கருக்கினாலும்,
நமது உடல் முழுவதும் கருகினாலும்,
தசைகளில் இருந்த உணர்வுகள், கருகிய உணர்வு கொண்டு ஆன்மாவாக மாறுகின்றது. ஆனால், உயிர் கருகுவதில்லை.
அதே போல, அந்த உயிருடன் ஒன்றிய உணர்வின் தன்மை, கருகாநிலை பெற்று, அவனை
ஒன்றி, அவனின் நிலையாக வளரும் நிலைதான், யாம் உபதேசிக்கும் இந்த உணர்வின்
ஆற்றல். அதே நிலையைக் கொண்டு, ஒளியாக மாறுவதுதான் கருகாநிலை. இதை வேகாக்கலை
என்பார்கள்.
வேகாக்கலையைக் கற்றுக் கொண்ட மெய்ஞானிகள்,
இன்றும் விண்ணுலகில்,
எத்தகைய நஞ்சானாலும் ஊடுருவாதபடி,
வைரம் எப்படித் தன் நஞ்சினை அடக்கி,
ஒளியின் சிகரமாக இருளை விலக்கி,
பொருள் காணும் நிலையாகக் காட்டுகிறதோ,
அதைப் போல,
விண்ணுலகிலிருந்து வரும்,
ஆற்றல்மிக்க நஞ்சினைத் தனக்குள் மாற்றி,
ஒளியின் சிகரமாக “என்றும் பதினாறு”
என்ற நிலையை அடைந்து,
மெய்ஞானிகள் வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள்.
அந்த மெய்ஞானிகளின் உணர்வை நாம் பெறுவதற்கு, மெய்ஞானியின் உணர்வாற்றல்
இங்கு உண்டு. அதைப் புராணங்களாகக் காட்டப் பெற்று, அதில் ரிஷிகளாக
வர்ணிக்கப்பட்டு, ரிஷியின் மகன் நாரதன் என்று நமக்கு தெளிவு
படுத்தப்பட்டது. அந்த நாரதன் கலகப் பிரியன்.
நமது மனித
வாழ்க்கையில், நமக்கு வேண்டிய ஆசைகள் கொண்டு; பிறருடைய ஆசைக்கேற்ப, நாம்
செயல்படும் இந்த நிலைகளில் இருந்து, விடுபட வேண்டும்.
4. உயிர் இருக்கும் வரைதான் நமக்கு மரியாதை
மகரிஷிகள் காட்டிய அருள் வழியில், நமக்குள் நம்மை ஆண்டு கொண்டிருப்பவன்
உயிரே. நம்மை ஆள்பவனும் அவனே. நாம் எதையெல்லாம் எண்ணுகின்றோமோ, அவைகளை
நமக்குள் சமைத்துக் கொடுப்பவனும் உயிரே.
உயிரின்
துடிப்பிற்குள் ஏற்படும் வெப்பம்தான், நமது உடலை இயக்குகின்றது. அந்த
வெப்பம் இல்லையென்றால், நமக்குள் இயக்கமில்லை. அந்த வெப்பத்தை விஷ்ணு
என்றும், இயக்கத்தை ஈசன் என்றும் காரணப் பெயரிட்டுக் காட்டினார்கள்
ஞானிகள்.
வெப்பமும், கதிரியக்கமும், ஒன்றுடன் ஒன்று மோதும் பொழுது,
ஒன்று மற்றொன்றை வெல்லப் பார்க்கின்றது.
கதிரியக்கச்சக்தி ஒன்றினுள் ஊடுருவி,
ஒன்றை வெல்லும் சக்தி பெற்றது.
வெப்பமோ, ஒன்றைக் கருக்கும் சக்தி பெற்றது.
கதிரியக்கச் சக்தி வெப்பத்தைத் தாக்கியவுடன், வெப்பம் அதிகமாகின்றது. இதன்
தொடர் கொண்டு, வெப்பத்தின் நிலைகள் கதிரியக்கத்தை அடக்கப் பார்க்கின்றது.
இதன் போர் முறைதான், நமது உயிரின் துடிப்பு.
இவைகளின் போர் முறையினால் தோன்றும் வெப்பம்தான்,
நமக்குள் இருக்கக்கூடிய, காந்த அலைகளை இயக்கி,
கரண்டை (மின் ஆற்றலை) உற்பத்தி செய்கின்றது.
நமது உடலில் உள்ள, ஒவ்வொரு அணுவையும் இயக்குவது,
நமது உயிரின் மின் ஆற்றல்தான்.
உயிரின் துடிப்பால், நாம் சுவாசிக்கும் உணர்வின் சத்து
நமக்குள், துடிப்புள்ள உணர்வின் அணுவாகச் சிருஷ்டிக்கப்படுகின்றது.
ஆகவே, உயிர் பிரம்மமாக இருந்து, நமக்குள் சிருஷ்டிக்கின்றது. நமக்குள்
இருக்கும் உயிரான ஈசன், நாம் நினைத்ததை நமக்குள் சமைத்துவிடும். ஒருவனைக்
கெடுக்க வேண்டுமென்று நினைத்தால், அதை நமது உயிர் நமக்குள் படைத்துவிடும்.
என்னுடைய சொல்லே எனக்கு எதிரியாகிவிடும். மற்றவர்களை எதிரியாக்கிவிடும்.
அதே சமயத்தில், எடுத்துக் கொண்ட உணர்வின் தன்மை உடலுக்குள் நோயாகிவிடும்.
யாரையும் ஏமாற்றலாம், ஆனால், உயிரான ஈசனை, யாரும் ஏமாற்ற முடியாது.
கொடுப்பதை நமது உயிர், நமக்குள் பிரம்மமாக்கிவிடும். ஒரு முறை கெட்டதை
நினைத்துவிட்டால், ஞானிகளின் உணர்வை எடுத்துத்தான் துடைக்க வேண்டும்.
பாலை நாம் குடித்தால், பாலுக்குள் உள்ள சத்து நம் உடல் ஆவதற்கு, 48
நாளாகும். ஆனால், ஒரு துளி விஷம் பட்டவுடன், நம்மை மயங்கச் செய்கின்றது.
ஆக நாம் நாள் முழுக்க நல்லது செய்தாலும், ஒரு சமயம், “இப்படிச் செய்தானே
பாவி” என்று விஷத்தை எண்ணினால், அத்தனையும் போய்விடும். விஷம் கலந்த
நிலைகளில் நல்லதையே செய்தாலும், இப்படிச் செய்தார்களே என்று, இதையேதான் பேச
வேண்டி வரும். நமக்குள் நம்மை அறியாமலே, இப்படி ஆகின்றது.
இவ்வாறு, நம்மை அறியாது நமக்குள் சேரும் அசுத்தத்தைப் போக்க, ஒவ்வொரு
நிமிடமும், மகரிஷிகளின் அருள் சக்தியைப் பெறுவோம். அந்த ஆற்றல்மிக்க
சக்தியைப் பெறுவோம். நம்மை ஆட்டிப் படைக்கும், தீய சக்திகளைப் போக்குவோம்.
ஆகையால், போகமா மகரிஷிகளின் அருள் சக்திகளை நாம் பெறுவோம்.
அந்த மகரிஷிகளின் அருள் ஒளியால், குடும்பத்தில் துன்பங்கள் மாறி, மெய்
ஒளியின் தன்மையைப் பெற்று, நாம் விடக்கூடிய மூச்சலைகள் குடும்பத்தில்
படர்ந்து, குடும்பத்தில் உள்ளோர் அனைவரும் மகிழட்டும். உங்கள் பேச்சும்,
மூச்சும், மற்றோர்களை மகிழச் செய்யட்டும். இதை நீங்கள் செய்யுங்கள்.
ஏனென்றால், மனிதனாகப் பிறப்பது மிகமிக அபூர்வம். கொடுக்கும் ஆற்றலை,
குருநாதருடைய உணர்வுடன் இணைந்து, உங்களுக்குள் பதியச் செய்த, இந்தச்
சந்தர்ப்பத்தை விட்டுவிடாதீர்கள். குருநாதர் காட்டிய அருள் வழிகொண்டு,
மெய்ஞானிகளின் அருள் வித்தைப் பெறும் பாக்கியம் இது.
இந்த வித்திற்குச் சத்தாக, உங்கள் செவிப்புலனால் ஈர்க்கப்பட்டு, உடலான
நிலத்திற்குள் பதிவு செய்து, அதற்கு நீர் ஊற்றவே தியானம். களைகளை
நீக்குவதற்கு ஆத்ம சுத்தி. உங்களை நீங்கள் நம்புங்கள். உங்களுக்குள்
இருக்கக் கூடிய ஆற்றலைப் பேணுங்கள்.
குழந்தையாக
இருந்தாலும், அவமதிக்க வேண்டாம். குழந்தைக்குள் இருக்கும் உயிரும், ஈசனே
உடலின் தன்மை உங்களுக்குள் பிறந்தாலும், உணர்வின் தன்மையை மகிழச் செய்யும்
பொழுது, மகிழ்வு வருகின்றது.
நம் குழந்தைதானே என்று
ஏசினோமென்றால், அங்கிருந்து பதில் அதுதான் வரும். ஓம் நமச்சிவாய, சிவாயநம
ஓம். நாம் எந்த உணர்வின் தன்மையை எடுத்து, நம் உடலுக்குள் சேர்க்கின்றோமோ,
அந்தச் சக்தியின் தன்மை அது செய்கின்றது. இதுதான் மாறி, திட்டியவுடன் பதில்
வருகின்றது.
நமக்குள், ஈசன் இருக்கும் வரைதான் மரியாதை.
நமக்குள் இருக்கும் ஈசனுக்கு,
நாம் செய்ய வேண்டிய மரியாதை என்ன?
நீங்கள் கவனித்துப் பார்க்க வேண்டும்.
துன்பமான நிலைகளைக் கொடுப்பதல்ல மரியாதை.
அப்படித் துன்பங்கள் ஏற்பட்டாலும், அதை நீக்கிக்கொள்ள, ஆத்மசுத்தி என்ற
ஆயுதத்தைப் பயன்படுத்துங்கள். யாம் கொடுக்கும் வாக்கு சாதாரணமானதுதான்.
அலட்சியப்படுத்தி விடாதீர்கள்.