யாம் ஒரு முறை, குருதேவர் ஆணைப்படி, இமயமலைக்குச்
சென்றோம். அப்பொழுது,
உடலில் கோவணம் மட்டுமே அணிந்திருந்தோம். வேறு எந்தத்
துணியும் எம்மிடம் இல்லை.
அங்கே நிலவும் குளிரில், குருதேவர் அருளிக் கொடுத்த உணர்வுகளை, யாம் நுகர்ந்து கொண்டிருந்ததால், எம் உடலில்
வெப்பம் உருவாகி, குளிர் எதுவும் தாக்காத வண்ணம், அங்கே நடந்து சென்று
கொண்டிருந்தோம்.
அந்த பனிமலைப் பகுதியில், நடந்து சென்று
கொண்டிருந்த பொழுது, யாம் ஒரு இடத்தைக் கடந்திருப்போம். சற்று
நேரத்தில், கால் வைத்து
நடந்த பகுதி, இடிந்து
தகர்ந்து விழுந்தது. தகர்ந்து விழுந்த இடத்தைப் பார்த்தால், பெரிய பாதாளமே
அங்கே இருந்தது.
அதைப் பார்த்தவுடன், எமது சிந்தனைகள் எங்கே
சென்றதென்றால், எமது குழந்தைகள், எமது குடும்பம் எவ்வாறு இருக்கின்றதோ?, யாம் மீண்டும்
அவர்களைச் சந்திக்க முடியுமா? அல்லது இங்கேயே விழுந்து இறந்துவிடுவோமா? இந்த பாதாளத்தில்
விழுந்திருந்தால்,
என்ன ஆகியிருக்கும்? என்றுதான் எமது சிந்தனைகள் சென்றன. உடல் மீது தான், ஆசை தோன்றியது. குரு கொடுத்த உணர்வுகளை, அந்த நேரத்தில்
மறந்துவிட்டோம்.
இதனால் எமது உடலில் குளிரெடுத்தது. இதயம், “பட பட” எனத் துடித்து, இரைச்சலாகி, சற்று நேரத்தில் “இறந்தே விடுவோம்” என்ற நிலை, எம்மிடத்தில்
உருவானது. அப்பொழுது குருதேவர், எமக்கு முன்னால் உதயமானர்.
மனமே இனியாகிலும் மயங்காதே,
பொல்லா மானிட வாழ்க்கையில் தயங்காதே.
பொன்னடி பொருளும் பூமியில் சுகமோ?
மின்னலைப் போல மறைவதைப் பாராய்.
நேற்று இருந்தார் இன்று இருப்பது நிஜமோ?
நிலையில்லா இவ்வுலகம் உனக்குச் சதமா?
மனமே இனியாகிலும் மயங்காதே
பொல்லா மானிட வாழ்க்கையில் தயங்காதே.
என்ற இந்த பாடலைப் பாடிக் காண்பித்து, சோதனையான
சமயத்தில், “இப்படி
ஆகின்றதே” என்று
வருந்தி, “உன்
குழந்தைகளையும் மற்றவர்களையும் எண்ணி, படபடப்பாகி மயங்குகின்றாய்.
ஆனால், சற்று நேரத்திற்கு முன் உனது உயிர்
போயிருந்தால், இந்தப் பொன்னடி பொருளை எங்கே காணப்
போகின்றாய்?” என்று கேட்கிறார் குருதேவர்.
ஆகவே, ஆசையின் உணர்வை விடுத்து, அருள் ஒளியின்
உணர்வை எடுத்து, “அந்தக் குழந்தைகள் அருள் ஞானம் பெறவேண்டும், இருளை அகற்றி மெய்ப்பொருள் காணவேண்டும், அவர்கள் வாழ்க்கை
நலம் பெறவேண்டும்”, என்ற உணர்வினை எடுத்தால், அவர்களை வாழ வைக்கலாம்.
நமக்குள் அருள் உணர்வைக் காக்கலாம் என்றார், குருதேவர்.
மனிதருக்கு, “வாழ வைக்க
வேண்டும்” என்ற
எண்ணம்தான் வரவேண்டுமே தவிர, “இப்படி ஆகி
விட்டதே” என்று
எண்ணக் கூடாது.
ஏனென்றால், இப்படி ஆகி விட்டதே என்று வேதனையின் தன்மையை
எடுக்கப்படும் பொழுதுதான், விஷத்தின் தன்மையைக் கவர நேருகின்றது. அதனால், மனிதரின் செயலாக்கத்தின் தன்மை குறைகின்றது.
இதுபோன்று யாம் செல்லும் பாதையில், சில விபத்துக்கள்
நேரிடும் பொழுதெல்லாம்,
எமக்குக் குடும்பத்தின் ஞாபகம் வரும். அப்பொழுது, இதிலிருந்து எப்படி காத்துக் கொள்வது என்று,
நினைவுபடுத்திக் கொண்டே இருப்பார், குருநாதர்.
ஆகவே, குரு காண்பித்த அருள்வழியில், நாம் அனைவரும், “நம் உடல் நமக்கு
சொந்தமில்லை” என்று உணர வேண்டும். உயிருடன் ஒன்றும் உணர்வை, அருள் ஒளியின்
உணர்வாக இணைத்துச்
சொந்தமாக்குதல் வேண்டும்
.மகரிஷிகளின் அருளைப் பற்றுடன் பற்றுதல் வேண்டும்.
நமது வாழ்க்கையில் வரும் தீமைகளை, பற்றற்றதாக மாற்றுதல்
வேண்டும்.
இதுபோன்று, குருநாதர் ஒவ்வொரு சமயத்திலும், “மனிதர் தாம், சந்தர்ப்பத்தால் அறியாது வரும், தீமைகளில் சிக்கிக் கொள்வதை
உணர்த்தி, மனிதர் தாம் எவ்வாறு தீமைகளிலிருந்து மீள்வது?” எனும் நிலையை, அனுபவரீதியாக எமக்கு உணர்த்தினார்.