நமது நாட்டில், மெய்வழிச் சாலை என்ற ஊர் இருக்கின்றது. சொர்க்கத்திற்குப்
போகும் பாதை என்பார்கள். சில ஆவிகளைக் கைக்குள் வைத்துக் கொண்டு
செயல்படுவார்கள். தொப்பி வைத்துக் கொண்டிருப்பார்கள்.
இறந்தவர்களின் உடலை அங்கே கொண்டு சென்றால், அவருடைய குரு வந்து பார்ப்பார்.
இறந்த உடலை எழுப்புவார். அந்தச் சரீரமும், உயிர் வந்தது போன்று எழும்.
உடலெல்லாம் வேர்க்கும். குரு அதனிடத்தில் உனக்கு என்ன வேண்டும்? என்று
கேட்பார்.
நான் சொர்க்கத்திற்குப் போக வேண்டும் என்று அந்தச்
சரீரமும் பேசும். அதன்பின், குரு இதை நீ சொல், நீ நேராகச்
சொர்க்கத்திற்குப் போகலாம் என்பார். குரு சொன்னது போன்று, சொன்னவுடனே, அந்த
உடலிலுள்ள ஆவி வெளியேறிவிடும். இந்த உடலிலுள்ள ஆன்மா சொர்க்கத்திற்குப்
போய்விட்டது என்பார்கள். இப்படி இன்னொரு ஆவி நிலைகளை ஏற்கச் சொல்லிச்
செயல்படுத்தும் நிலைகள் சில இடங்களில் நடைபெறுகின்றது.
இது
போன்றே காசிக் கங்கைக் கரைப் பக்கம் “அகோரிகள்” என்று சொல்லி, கடவுளை
அடையும் மார்க்கம் என்ற நிலையில், தொழுது கொண்டிருப்பார்கள். இவர்கள்
சுடுகாட்டிற்குப் போய், பிணத்தைக் கொடு என்பார்கள்.
உடனே
கொடுத்துவிட வேண்டும். இல்லையென்றால், கை, கால் வராமல் செய்துவிடுவார்கள்.
இதற்குப் பயந்தே, பிணத்தை இவர்கள் கேட்டால் உடனே கொடுத்துவிடுவார்கள்.
அந்த அகோரிகள் அந்தப் பிணத்தின் மீது சூடத்தை வைத்துப் பற்ற வைப்பார்கள்.
உடனே அந்தச் சரீரம் நகரும். நுகர்ந்தபின், அந்த உடலிலுள்ள நரமாமிசம் என்று
அனைத்தையும் சாப்பிடுகின்றான். இதை யாம் சுமார் 30 வருடங்களுக்கு முன்
சொன்னோம் யாரும் நம்பவில்லை.
பிற்பாடு, பத்திரிக்கையில்
போட்டோ வந்தவுடன், எம்மிடம் நம் அன்பர் ஒருவர் காண்பித்தார். அந்தச்
சாமியார்களின் கூட்டத்தில் ஒரு அங்கத்தினராக ,கோவா பிரதேசத்தின் கவர்னருடைய
மகனும் இருந்தார்.
இதுபோன்று, உலகில் தெய்வங்களின்
பெயர்களைச் சொல்லி, ஆண்டவனின் பெயர்களைச் சொல்லி, மனிதனை மதமாக, இனமாக,
ஜாதியாகப் பிரித்து, மதத்தின் உணர்வுகளை மனிதனுக்குள் சேர்த்து, மதத்திற்கு
மதம், இனத்திற்கு இனம் போர் செய்து, வெறிகொண்டு வெளிப்படுத்திய உணர்வுகளை
அவரவர்கள் இந்த மந்திர ஜெபம் செய்து, முறைப்படுத்திக் கைவல்யம்
செய்கின்றார்கள் இதற்கென்று அதர்வண வேதம் ஒன்று உண்டு.
ஆவிகளைக் கைப்பற்றி, வலுவேற்றி, பில்லி, சூனியம் என்று ஏவலுக்குப்
பயன்படுத்தி, இதுதான் கடவுள் என்று சொல்லுவார்கள். இதே போன்றுதான்,
கிறிஸ்தவ மதத்திலும், “இயேசு வருகின்றார்” என்று உபதேசங்களைச் சொல்லிக்
கொண்டிருக்கும் பொழுது, “கர்த்தர் வந்துவிட்டார், உடலில் இறங்கிவிட்டார்,
உங்கள் உடலிலுள்ள நோய்களைத் தீர்க்க வந்துவிட்ட்டார்” என்று சொல்வார்கள்.
இது இங்கு மட்டுமல்ல. நீக்ரோ நாடுகளிலும், பிற நாடுகளிலும் கூட்டங்களைக்
கூட்டி அருளாடுவதைப் பார்க்கலாம். இது போன்று, கர்த்தரே வந்து
அருளாடுகிறார், பிணிகளைப் போக்குகின்றார் என்ற உணர்வுகளை வைத்து,
ஆட்டங்களும் பாட்டங்களும் செய்கிறார்கள்.
ஆனால், இதனின் உண்மை என்னவென்றால், இன்னொரு ஆவியின் நிலைகளைக் கைவல்யப்படுத்தி, இது போன்ற நிலைகளைச் செயல்படுத்துகிறார்கள்.
அங்கே மேடை மேல் ஏறியவுடன், “இங்கே வாப்பா... உனக்கென்ன? என்று
கேட்பார்கள். எனக்கு இத்தனை வருடமாக நோய் இருக்கின்றது என்றால், “கர்த்தரே,
நீர் இந்த மக்களைக் காப்பாற்ற வேண்டும்” என்று அவர் சொல்வார்.
மீண்டும், “நீ கர்த்தரே என்று சொல்” என்று சொல்வார். அவர் சொன்னது போன்று
சொன்னவுடனே, “நீ... நட.,” என்பார். “ஆஹா!... நான் இத்தனை நாள் நடக்காமல்
இருந்தேன், இப்பொழுது கை கால் வந்துவிட்டது” என்று நடப்பார். ஆனால்,
வீட்டிற்குப் போனதும் முடங்கிவிடுவார்.
யாம் முதலில்
சொல்லியது போன்று, இவர்கள் ஆவியின் நிலைகளைச் செய்வதும், மனித குணத்தை
இழக்கச் செய்து, மதத்தின் அடிப்படையில் மதத்தைப் பெருக்கும் நிலை
வருகின்றது.
அன்று அரசர்கள் போர் செய்யும் பொழுது, ஒரு
இடத்தைக் கைப்பற்றினால், உடனே அங்கே ஒரு ஸ்தலபுராணத்தை அமைத்து, ஆலயங்களை
உருவாக்கி, மந்திரங்களைச் சொல்லி, அதை மக்களின் மனதில் பதியச் செய்து, அதன்
வழியில் மக்களை வசப்படுத்தினார்கள்.
நம் இந்தியாவிலிருந்து
படையெடுத்துச் சென்றவர்கள், இந்தோனேசியா சென்று, அங்கு இராமாயணம் போன்ற
காவியங்களைப் பரப்பி, அங்கு சிலைகளைச் செய்து ஆலயம் அமைத்தனர்.
தமிழ்நாட்டில், வட இந்தியர்களும் ஆந்திராவிலிருந்து நாயுடு
வம்சத்தவர்களும், பாண்டியர் இராஜ்ஜியத்தை எடுத்துக் கொண்டாலும், அவர்வர்
போர் முறைகளில் பல மதம், இனம் பிரிக்கப்பட்டு, இந்த அரசர்கள் உருவாக்கிய
முறைப்படித்தான் உலகமெங்கும் உள்ளது.
இதன் வழிப்படி, இன்று
உலகமெங்கும் மதத்திற்கு மதம் இனத்திற்கு இனம் என்று போர் செய்து
கொண்டிருக்கின்றது. ஆனால், இந்தச் சமயங்களில், குருக்களும், கடவுள்களும்
எங்கே போனார்கள்? என்பது தெரியாது. ஒரு தெய்வத்தை வணங்குபவர்களே, அதற்குள்
அடித்துக் கொண்டிருப்பார்கள்.
மக்கள் ஒருவருக்கொருவர் மத இன
பேதம் கொண்டு, அடித்துக் கொண்டு கொன்று குவித்துக் கொண்டிருக்கின்றோம்.
கடவுள் நம்மைக் காக்கின்றார் என்று எண்ணுகின்றோம். ஆனால், மனிதர்கள்
ஒருவருக்கொருவர் அடித்துக் கொள்ளும் பொழுது, கடவுள் எங்கு ஒளிந்து
கொள்கின்றார் என்று தெரியவில்லை.
இதே போன்று, இன்று
ராமராஜ்யம் அமைக்கப் போகிறோம் என்று சொல்கின்றனர். ஆனால் முகமதியர் அன்று
படையெடுத்து வரும்பொழுது இராமனையோ, ஆலயத்தையோ காக்க முடியவில்லை. அழித்து
விட்டனர்.
காசி விசுவநாதான் சொர்க்கத்தைக் காட்டுவான் என்று
வணங்கினார்கள். ஆனால், முகமதியர் படையெடுத்து வந்து லிங்கத்தை உடைத்துக்
கிணற்றில் போட்டுவிட்டனர். காக்கமுடியவில்லை.
இப்பொழுது,
அயோத்தியில் ஒரு மசூதியை இடித்தார்கள். அப்போது மசூதியில் இருந்த கடவுளும்,
மசூதியை இடிபடாமல் காக்க முடியவில்லை. ஆக மனிதருக்குள் மனிதர்தான் போர்
செய்கின்றனரே தவிர, கடவுள் என்ற ஒருவர் நேரில் வந்து போர் செய்யும்படிச்
சொன்னதில்லை.
இப்படி மனிதன் போர் முறை கொண்டு, "என் கடவுள்,
உன் கடவுள்" என்று உருவாக்கி, இவர்கள் அமைத்த ஆலயங்களை அவர்கள் அழிப்பதும்,
அவர்கள் அமைத்த ஆலயங்களை இவர்கள் அழிப்பதும் போன்ற நிலைகளில் நாம்தான்
கடவுளைக் காப்பவர்களாக இருக்கின்றோமே தவிர, கடவுள் நம்மைக் காப்பதாகத்
தெரியவில்லை.
கர்த்தர், நடக்க முடியாதவர்களை நடக்க வைக்கிறார்
என்று சொல்கின்றார்கள். ஆனால், அவர்களும் மருத்துவமனை வைத்து நடத்தத்தான்
செய்கிறார்கள். மதம் விட்டு மதம் மாறியபின், வாருங்கள், தட்டுங்கள்,
திறக்கப்படும் என்ற நிலையைத்தான் காண்பிக்கின்றார்கள்.
மனிதருக்குத் துன்பம் என்று ஒன்று வரும் பொழுது, அவருக்குத் துன்பம் "இங்கே
சென்றால் தீராதா? அங்கே சென்றால் தீராதா?" என்று தேடி அலைந்து
திரிகின்றனர். இதன் தொடர் கொண்டு, இனபேதம், மனபேதம் என்ற நிலைகளில்
போர்முறையைக் காட்டி அவர்களை அடிமைப்படுத்தினார்கள் அரசர்கள்.
அரசர்களைப் போன்று, இன்று கட்சிகளில் பேதங்களைக் காண்பித்து, ஒருவரை
ஒருவர் தாக்கிக் கொள்ளும் நிலை உள்ளது. நாட்டைக் காக்கக் கட்சிகள்
உருவானது. ஆனால், அரசியல் வாழ்க்கையில் ஒருவரை ஒருவர் பழிதீர்க்கும் நிலை
வளர்ந்து கொண்டிருக்கின்றது.
ஒரு குடும்பத்தில்
ஒருவருக்கொருவர் பற்றுடன் பாசத்துடன் இருப்பார்கள். ஆனால், அரசியல்
வகையில், ஆளுக்கொரு கட்சியைப் பின்பற்றி, இதனால், சகோதரன் பகைமையாகி
விட்டான், மைத்துனன் பகைமையாகி விட்டான், என்ற நிலையில் குரோதம் வளர்ந்து,
எதிரியானவனை வீழ்த்த எண்ணும் பொழுது, எதிரி சிக்கவில்லை என்றால்,
எதிரியினுடைய அப்பாவி உறவினர்களை வீழ்த்தும் நிலை இருக்கின்றது. இப்படி
ஒருவருக்கொருவர் தவறு செய்து வாழும் நிலை உள்ளது.
ஊருக்கு ஒரு
காவல் தெய்வம் மாரியம்மன், காளியம்மன் என்று வைத்து, நம்ம்மைக் காக்கும்
என்ற நிலையில், விழாக்கோலம் பூண்டு கொண்டாடப்படும் பொழுது, இதில் இரண்டு
பிரிவு, மூன்று பிரிவு ஆகிவிட்டால், இந்தத் தெய்வம் எங்கள் தெருப்பக்கம்
வரக்கூடாது, என்று போர் முரசு கொட்டுகின்றனர்.
நாம் தெய்வத்தை
வணங்கும் பொழுது கூட, தெய்வம் என்று பார்க்காது, போர் முறைகளைப் பூண்டு,
தெய்வ நிலைகளை மறந்து, அசுர குணங்களைத்தான் வளர்க்கின்றோம். தெய்வத்தின்
பேரைச் சொல்லி, ஒருவரை ஒருவர் தாக்கிக் கொல்லும் நிலைதான் இருக்கின்றது.
கிராமங்களிலும் காளியம்மனோ, மாரியம்மனோ வணங்கும் பொழுது, பகைமையுணர்ச்சியாகிச் சண்டையிட்டுக் கொள்ளும் நிலைகள்தான் இருக்கின்றது.
சற்றுச் சிந்தித்துப் பாருங்கள். நாம் எத்தனை தெய்வங்களைக் கும்பிட்டாலும் அவைகள் நம்மைக் காக்க வருவதில்லை.