இன்று பத்திரிக்கை வாயிலாகப் பார்க்கப்படும்போது, அடிக்கடி நம்மையறியாமலே வேதனையும், துயரமும், பயமும், உங்களுக்குள் வந்து சேர்ந்து கொண்டேதான் இருக்கின்றது. இதை எப்படிப் போக்கிக் கொள்வது? எதாவது வழி இருக்கிறதா?
அதற்குத்தான், அந்த ஞானிகள் சொன்ன உண்மையின் சக்தியை, உங்களுக்குள் உபதேசித்து, கூட்டுத் தியானத்தில் எல்லோருடைய அருள்வாக்கும், யாம் மட்டுமல்ல, உங்கள் அனைவருடைய அருள்வாக்கும் சேர்க்கப்படும்போதுதான், அந்த வலு கூடுகின்றது என்று, நமது குருநாதர் கூறினார்.
‘’உன்னிடம் எவ்வளவு பெரிய சக்தியைக் கொடுத்தாலும், ஒரு விதையைக் கொண்டுபோய் விதைத்து, அது, பலவிதைகளாக விளைந்தால் தான் சாப்பாட்டிற்கு உதவும். இல்லையென்றால், ஒரு விதை ஒன்றுக்குமே உதவாது’’ என்று நமது குருநாதர் எம்மிடம் கூறினார்.
‘’ஒரு நெல்லை வைத்துக்கொண்டு, பசியைப் போக்கிவிடுவேன் என்று சொன்னால் முடியுமோ, முடியாது. ஒரு நெல்லை வைத்துச் சாப்பிட முடியாது. அந்த நெல்லை விளையவைத்து, அது பல நெல்லான பின் தான், சாப்பிடமுடியும்.
அதே மாதிரிதான், உங்களிடமுள்ள துன்பத்தையெல்லாம் போக்க வைக்கிறோம், ‘’நன்றாக இருக்கிறேன், நன்றாக இருக்கிறேன், நன்றாக இருக்கிறேன்’’, என்று நீங்கள் சொல்லவேண்டும்.
அவ்வாறான சொல் வரவேண்டும். உங்கள் பேச்சைப் பார்த்து சந்தோஷப்படுகிறவர்களுக்கெல்லாம், நல்லது விளைய வேண்டும். அப்படித்தான், அங்கே நல்லதை விளைவிக்க முடியும்.
இதைத்தான் நமது குருநாதர் சொன்னார். ஆக, ‘’அவர்கள் நன்றாக இருக்கவேண்டும்’’ என்ற எண்ணத்தை, உனக்குள் வளர்த்து, நல்ல வித்தினை அவர்களுக்குள் பதியச் செய்து, அந்த வித்தினை நீ எப்படி வளர்க்கவேண்டும் என்று குருநாதர் சொன்னார்.
ஆகையினாலேதான், இதைப்போல அந்த உணர்வின் தன்மையை நமக்குள் பெறச் செய்யவேண்டும்.
*அந்த மகரிஷிகளின் அருள் ஒளியை, நீங்கள் பெற வேண்டும். அதன் வழிகளில், உங்களுக்குள் மெய்வழி வளர வேண்டும். உங்கள் பேச்சும், மூச்சும், பிறருக்கு நன்மை பயக்கும் சக்தியாகப் பெற வேண்டும்” என்று, நமது குருநாதர் காட்டியபடி யாம் தியானிக்கின்றோம்.
அவ்வாறு தியானித்து, அந்த சக்தியின் நிலைகளை உங்களுக்கு உபதேசித்து, உங்களுக்கு வித்தாகக் கொடுத்து, அந்த எண்ணத்தை உங்களுக்குள் தூண்டச் செய்யும்போது, நீங்கள் எல்லோ\ரும் பெற வேண்டும் என்று எண்ணும்போது, முதலில் நான் பெறுகின்றேன். நாம் எல்லோரும் சேர்ந்து சொல்லும்போது, அந்த எண்ணத்தின் நிலைகள் அங்கே வளர்கின்றது.
இதுதான், எமது குருநாதர் காட்டிய அந்த நிலை. ஆகவே, இதை நாம் அனைவரும் ஒருங்கிணைந்து செயல்படுவோம். அந்த ஞானியரின் அருள்சக்தியை உங்களுக்குள் கிடைக்கச் செய்வதற்குத் தான், யாம் உங்களுக்கு இதைச் செய்தது.
ஆக, ‘’ஆத்மசுத்தி’’ செய்துகொண்டதின் நிலைகள், நாம் இத்தனை பேரும் சேர்ந்து என்ன செய்திருக்கிறோம். ’’மகரிஷிகளின் அருள் சக்தி அவர்கள் பெற வேண்டும்’’, ‘’தியானத்தில் அமர்ந்திருக்கும் அனைவரும், அவர்களது வாழ்க்கையில் எல்லா நலமும் வளமும் பெற வேண்டும்’’ என்று எல்லோரும் சொல்லும் பொழுது, அனைவருக்கும் அந்த பேராற்றல் எளிதாகக் கிடைக்கின்றது.
இவ்வாறு, எல்லோரும் சேர்ந்து செயல்படும் பொழுது, உலகில் உள்ள மக்கள் அனைவரும், மெய் ஒளி பெறும் சந்தர்ப்பம் உருவாகின்றது. நன்மைகள் பல செய்யத் துணிவோம், எமது அருளாசிகள்.