Pages

சிந்தித்துச் செயல்படும் அருள்ஞானம்


1 கார்த்திகைத் தீபம்
ஞானிகள் காண்பித்த கார்த்திகைத் தீபத் திருநாளில், நாம் நமது வீட்டு வாசல்படியில் தீபங்களை வைக்கின்றோம். வீட்டிற்குள் இருந்தாலும், புற நிலைகளில் தீபங்களை வைக்கும் பொழுது, அங்கே இருள் விலகி, பொருள் தெரிகின்றது.


இதைப் போன்று, நாம் எப்பொழுதுமே பொருளறிந்து செயல்படும் திறன் பெறவேண்டும், என்னும் உண்மையை உணர்த்துவதற்குத்தான், “கார்த்திகை தீபங்களை” வீட்டு வாசல்படியில் ஏற்றச் செய்தனர், ஞானிகள்.


கார்த்திகைத் தீபம் என்கிறோம். ஏனென்றால், நமது பிரபஞ்சத்தில், கார்த்திகை நட்சத்திரத்திலிருந்து வெளிப்படக்கூடிய உணர்வுகள், எந்தப் பொருளில் கலக்கின்றதோ, அந்தப் பொருளின் தன்மையைப் “பிரகாசிக்கச் செய்யும்” தன்மை கொண்டது.


உதாரணமாக, கசப்பான பொருள் ஒன்று இருக்கிறதென்றால், கசப்பின் தன்மையை, “உணர்ச்சியின் மூலம் வெளிப்படுத்தும் அறிவாக” அங்கு இருக்கும்.


ஆகவே, கார்த்திகை நட்சத்திரம், நமது பிரபஞ்சத்திற்கு ஒரு முக்கியமான நட்சத்திரம். நாம் வெளிச்சத்தை வைத்து, பொருளைக் காண்பதைப் போன்று கார்த்திகை நட்சத்திரத்தின் உணர்வுகள், அதிகமாக எந்தெந்த குணங்களில் கலந்துள்ளதோ, அந்தக் குணத்தின் சிறப்பு மிக்க நிலையை வெளிப்படுத்தும், அறியச் செய்யும் ஆற்றல் மிக்கவராக, அந்த எண்ணங்களைப் பிரதிபலிக்க செய்யும்.


கார்த்திகை மாதத்தில், நமது வீட்டு வாசல்படிகளில் விளக்குகளை ஏற்றி வைக்கிறோமென்றால், அந்தக் கார்த்திகைக்கு என்றில்லாமல், அறிவின் ஒளியின் சுடராக, நாம் பொருளறிந்து செயல்படும் திறன் பெறவேண்டும் என்பதை, நமக்கு நினைவுபடுத்துவதற்காக ஞானிகளால் உருவாக்கப்பட்ட நிலைதான், அது.


நாம் அவசரப்பட்டு, ஒரு தொழில் செய்யவேண்டும், பொருள் சேர்க்க வேண்டும் என்று விரும்புகின்றோம். அந்த ஆசையின் தன்மை நமக்குள் வளர்ந்துவிட்டால், அதையே முழுமூச்சாக செயல்படுத்தத் தொடங்குகின்றோம்.


ஆனால், அந்தச் சந்தர்ப்பத்தில், நாம் அறிவின் தெளிவாகத் தெரிந்து கொள்ளும் ஆற்றலை இழந்து விடுகின்றோம். ஏனெனில், அவசரம் எனும் உணர்வால், நாம் சீராகச் சிந்திக்காது எடுத்த முடிவால், விளைந்த நிலையிது.


உதாரணமாக, நாம் ஒருவரைச் சந்தித்து, வியாபாரத்தைப் பற்றிப் பேசப்போகிறோம் அல்லது அவர் மூலம், வியாபாரம் சம்பந்தமான விஷயங்களைத் தெரிந்து கொள்ளப் போகிறோம் என்று செல்லும் பொழுது, அவருடைய சூழ்நிலை எவ்வாறு? என்று சிந்தித்துப் பார்க்க வேண்டும்.


அவரிடம் பேசும் பொழுது, அவருடைய முகத்தை உற்றுப்பார்த்தால், அவருடைய நிலை தெரியும். அப்பொழுது நமக்குள் இருக்கும் அறிவு என்பது, அவரின் உணர்வின் தன்மைகளை, நமக்குள் தெளிவாக்கும்.


தீபத்தைப் பொருத்தியபின், அதனின் வெளிச்சத்தில் நாம் எப்படிப் பொருள்களைக் காண்கின்றோமோ, அதைப் போன்று, நாம் சிந்திக்கும் அறிவினைப் பயன்படுத்தி, சிறிது நேரம் சிந்தித்து, அவருடைய செயலாக்கங்களை அறிந்து கொண்டபின், நாம் இந்தச் சொற்களைச் சொல்லவேண்டும். அப்பொழுது, அது நமக்கு துணையாக இருக்கும்.


ஆனால் நாம், நம்முடைய காரியத்திற்காக அவரைப் பார்க்கப் போய், அவருடைய சூழ்நிலை தெரியாது, அவசரத்தில் அவரிடம் போய்ப் பேச்சு கொடுக்க ஆரம்பித்தால், அவர் தன் சலிப்பால், சஞ்சலத்தால், நமக்குச் சீரான பதிலைக் கொடுக்க மாட்டார்.


நாம் விரும்பிப் போய் சந்திக்கும் பொழுது, அவர் சரியான பதிலைக் கொடுக்கவில்லை என்றால், அவரைக் குற்றவாளியாகக் கருதுவோம்.


அவர் கர்வம் உள்ளவராக இருக்கிறார், நாம் கேட்டால், பதில் சொல்லமாட்டேனென்கிறார் என்ற உணர்வுகள் வந்து, நம்முடைய அவசரத்திற்கு, அவரைக் குற்றவாளியாக்கும் நினைவினை ஊட்டுகின்றது.


இதற்கு மாறாக, அவர் சந்தோஷமாக இருக்கும் பொழுது, அவரைச் சந்தித்தோம் என்றால், அவர் நம்மை வரவேற்று, அதற்குண்டான சொல்களைச் சொல்லுவார்.


எப்படி நாம் தீபத்தை ஏற்றி, அதனின் வெளிச்சத்தைக் கொண்டு, மற்ற பொருள்களைத் தெரிந்து கொள்கின்றோமோ, அதைப் போன்றுதான், கார்த்திகை நட்சத்திரத்தின் இயல்புகள், உணர்வின் ஒளியலைகள் ஒன்றோடொன்று மோதும் பொழுது, அதன் அறிவின் தன்மை அறிவிக்கும் சக்தி பெற்றது. ஆகவே, நாம் ஒரு முறை, ஒரு காரியத்தைச் சாதிக்க வேண்டும் என்று எண்ணினால், சூழ்நிலைகளுக்கொப்பச் சொற்களைச் சொல்லவேண்டும். அது நமக்கு நல்ல பலனைக் கொடுக்கும்.


நாம் எப்படியும், இன்றைக்கு இந்தக் காரியத்தை முடித்து விடவேண்டும், என்ற அவசர உணர்வுடன் ஒருவரிடம் தொடர்பு கொள்ளப்படும் பொழுது, அவருடைய சூழ்நிலைக்கொப்பதான், நமக்கு பதில் வரும். நமது காரியமும் சித்தியாகாது.


அதே சமயம், நாம் அவரைச் சந்தித்ததால், அவர் மேல் வெறுப்படையும் தன்மையும், அதற்குண்டான சூழ்நிலையும் உருவாகும். அவரைக் குறை கூறும் உணர்வுக்கே, நமது உணர்வு வலு பெறும்.


ஆக, குறையான உணர்வுகளை நாம் நம்முள் பதிவாக்கிவிட்டால், அதன்பின், அவரைச் சந்திக்கும் பொழுது, சூழ்நிலை சமமாக இருந்தாலும் அவரை உற்றுப் பார்த்தாலே, பழைய நினைவுகள் தோன்றி, வெறுப்பின் உணர்வைத் தோற்றுவிக்கும். அப்படிப்பட்ட நிலையில் நம்முடைய சொல், அவரிடம் சீராகப் பேசும் தன்மையை இழந்துவிடுகின்றது.


ஒருவர் மேல், உங்களுக்கு வெறுப்போ அல்லது பயமோ ஏற்பட்டுவிட்டால், நீங்கள், அவரிடம் ஏதாவது ஒன்றைச் சொல்ல வேண்டுமென்றால்கூட, உங்களிடத்தில், ஒருவிதமான பதட்ட நிலைகள் ஏற்படும். இதைப் போன்று, நமது வாழ்க்கையில், நம்மையறியாமலே சில சந்தர்ப்பங்கள், நமது நல்ல குணங்களைப் பாழ்ப்டுத்தும்.


ஆகவே, நாம் தீபத்தின் வெளிச்சத்தில் எப்படி பொருள்களைக் காண்கின்றோமோ, இதைப் போன்று, நாம் ஒவ்வொரு காரியத்திற்குச் சென்றாலும், முதலில் நமக்குள் “அறிவின் ஒளியைப்” பொருத்திக் கொள்ள வேண்டும். “அந்தச் சுடரின், உணர்வின் அலைகளைப் பரப்ப வேண்டும்”.


அவ்வாறு நாம் பரப்பினோம் என்றால், நாம் செல்லக்கூடிய காரியமும் பயன் பெறும். நம்முடைய சொற்களும், கேட்போரின் உணர்வுகளில் தெளிவை ஏற்படுத்தும். இவைகளெல்லாம் நாம் அறிந்து கொள்வதற்குத்தான், “கார்த்திகை தீபத்தை” ஏற்றி வைப்பது.


நமது உணர்வுகள் எப்படி மாறுபடுகிறதென்றால், நாம் ஒருவரைச் சந்தித்துவிட்டுத் திரும்பி வரப்படும் பொழுது, நம்முடைய உணர்வுக்குத் தக்க அவருடைய செயலாக்கங்கள் இல்லையென்றால், அவரைக் குறை கூறும் தன்மைக்கு, வந்துவிடுகின்றோம்.


நாம் ஒருவருடன் பிரியமாக பேசிக் கொண்டிருப்போம். இருந்தாலும், நமக்குள் நம் உணர்வின் துணை கொண்டே, அவரிடம் பேசப்படும் பொழுது, அவருக்குள் பதில் இருக்கலாம். ஆனால் நாம், நம் மனதிற்குள் ஒரு குற்றவாளி என்ற உணர்வைக் கலந்தே நாம் சுவாசிப்போம்.


ஆனால், இந்த எண்ணத்தை அவரிடம் வெளிப்படையாக தெரிவிக்காத நிலைகள் இருப்பினும், இந்த உணர்வுகளை நமது முகமும், கண்களும் காட்டிக் கொடுத்துவிடும்.


ஒருவரை நாம் சந்திக்கும் பொழுது, இத்தகைய உணர்வுகள் இரண்டையும் சுவாசிக்கும் பொழுது, அந்த உணர்வுகள் கண்களின் ஒளி அலைகளாக, பார்க்கும் பார்வையும், அந்தப் பார்வைக்கொப்ப உணர்வும் இணைந்து, சொற்களாக வெளிவரும். ஆகவே, நம்மையறியாமலேயே நம்முடைய நினைவாற்றலை வெளிப்படுத்தும். ஆக, அவர் அன்புடன் பேசினாலும், அதை நாம், நமக்குள் நம்முடைய எண்ணங்களுக்கொப்ப மாற்றி, நாம் அவரைக் குறை கூற வேண்டிவரும்.


இதைப் போன்று, குறை கூறும் உணர்வுகளை வெளிப்படுத்தும் முகத்தையும், சொல்லையும் பார்த்தபின், அவரிடத்திலும் குறையான உணர்வுகள் ஏற்பட்டு, அவருடைய சொல்லும் சீராக இல்லாமல், தடுமாற்றமான நிலைகளில்தான் பதில் வரும்.


இதுதான், கீதையில், “நீ எதை எண்ணுகின்றாயோ அதுவாகின்றாய்” என்ற நிலைகளில் உணர்த்தப்படுகின்றது. நாம் என்ணும் உணர்வுகள், நமது கண்வழி பாய்வதும், உடலிலிருந்து வெளிப்படும் மணமும், இவை இரண்டும் கலந்து, நாம் சொல்லும் உணர்வின் தொனிகளும், ஒலிகளும், வித்தியாசமான நிலைகளில் வெளிவரும். இதுவெல்லாம், நம் அன்றாட வாழ்க்கையில், நடக்கக்கூடிய சம்பவங்கள்.


எனவே, நமக்குள் வரும் தீமைகளில் இருந்து விடுபடும் நிலையாக, வெளிச்சத்தில் பொருள் எப்படி தெரிகின்றதோ, அதைப் போன்று, நமது வாழ்க்கையில் தெரிந்து, தெளிந்து, தெளிவான வாழ்க்கை வாழ்ந்திடுவோம்.


நாம் அனைவரும், நமது குருநாதர் காட்டிய அருள்வழியில், ஆறாவது அறிவைச் சீராக்கும் நிலையாக, ஒளியின் சுடராக இருக்கும் அந்த மகரிஷிகளின் அருள் சக்தியை நமக்குள் பெருக்கி, நம் உணர்வுகள் அனைத்தையும் ஒளியாக மாற்றுவோம்.


மகரிஷிகள் உபதேசித்து உணர்த்திய அருள் நெறிகளை வாழ்க்கையில் கடைப்பிடிப்போம். மகரிஷிகளின் அருள் சக்தியை, நாம் நமக்குள் ஒளியின் சுடராக ஏற்றி, மகிழ்ந்து வாழ்வோம். பொருளறிந்து செயல்படுவோம், சிந்தித்துச் செயல்படுவோம். பேரருளைப் பெறுவோம், பேரொளியாக மாற்றுவோம். நாம் அனைவரும், மகரிஷிகள் சென்ற பாதையில் செல்வோம். இந்த உலகை, “மகரிஷிகளின் உலகமாக” மாற்றுவோம்.