குருநாதர் எம்மைக் காட்டிற்குள் அழைத்து சென்று, உணர்த்திய அனுபவங்கள் (2)
1. பண்டைய காலத்தில் வாழ்ந்த மலைவாழ் மக்கள்
அன்று இரவு விடியும் தருணம், சுமார் மணி நான்கு இருக்கும். காட்டுச் சேவல்கள் கூவிக் கொண்டு, கரும்மந்திகள் “உர்.. உர்.. என்று ஒருவிதமான சபதத்தை எழுப்பிக் கொண்டு, விடிந்து விட்டதை தங்கள் ஓசை மூலம் தெரிவித்துக் கொள்கின்றன.
பல விதமான பறவைகள், பலவிதமான ஓசைகள் எழுப்பி விடிந்து விட்டதை, மகிழ்ச்சியை வெளிப்படுத்திக் கொள்கின்றன.
இந்த ரம்மியமான நாதங்களை என் காதில் கேட்டு, நானும் மகிழ்ச்சி அடைகிறேன். ஆனந்தப்படுகிறேன். காலை 4 மணி ஆனதால், நான் துருவ தியானத்தில் அமர்ந்து விட்டேன்.
காலை 6 மணி இருக்கும். தியானம் கலைந்து விட்டது. குருதேவர் என்னைப் பார்த்தார். பல இலட்சம் ஆண்டுகளுக்குமுன், மலைவாழ் மக்களான புலஸ்தியர்கள், மலைக் குகைகளை தங்கள் வீடாக அமைத்துக் கொண்டு, தங்கள் உணவுக்காகப் பயன்படுத்தும் காய்கறிகள், கிழங்குகள், தாங்கள் வேட்டை ஆடிய மிருகங்கள், விலங்குகளின் மாமிசங்களை பச்சிலைகளின் சாற்றில் தேய்த்து, உலர வைத்துக் கொள்கிறார்கள்.
மழைக் காலங்களில், தாங்கள் வேட்டையாடப் போக முடியாத காலங்களில், சேமித்து வைத்தவற்றை உணவாக பயன்படுத்திக் கொள்கிறார்கள் என்று சொன்னார் குருநாதர்.
“நானும் நீயும், நேற்று கிழங்கும் தேனும் எடுத்து வந்து. சுட்டு மாவாக்கிச் சாப்பிட்டோம். இப்போது என்ன செய்வது? என்று கேட்டார்.
“நான் நேற்று நீங்கள் காண்பித்த, கிழங்கைத் தோண்டி எடுத்து வருகிறேன்” என்றேன்.
“அன்று எடுத்து வந்த கிழங்கு, இந்த இடத்தில் இல்லை. அந்த இடத்திற்கு நீ சென்று, கிழங்கை எடுத்துவர. இருட்டிவிடும்” என்று சொன்னார்கள்.
நான், வேறு இடங்களில் ஏங்கு இருக்கும் என்று கேட்டேன்?
அதோ, அந்தப் பாத்திரத்தை எடுத்துவா என்றார்.
எடுத்து வந்து கொடுத்தேன். அதில் ஏதோ பச்சிலையைப் போட்டு, ஓர் குச்சியில் கிளரிக் கொண்டிருந்தார். அவை நொங்கு போன்று ஆகிவிட்டது. அதைக் கொஞ்சம் சாப்பிடும்படி சொன்னார். சாப்பிட்டேன். நொங்கு போன்று இருந்தது. ருசியாக, நானும் குருதேவரும் சாப்பிட்டோம். எனக்கு உடல் தெம்பாக இருந்தது.
“இன்று காட்டுக்குள் வெகுதூரம் போக வேண்டும்” என்று சொன்னார்கள்.
நானும், குருதேவரும், காட்டுக்குள் கரடுமுரடான பாதையில் நடந்து சென்றோம். சுமார், 10 கிலோ மீட்டர் தூரம் சென்றிருப்போம். நான் சோர்வடைந்தேன். என்னைப் பார்த்த குருதேவர், இங்கு கொஞ்ச நேரம் ஓய்வு பெறுவோம், என்று சொன்னார்கள்.
அதன்படி, மரத்தடியில் அமர்ந்து ஓய்வு பெற்றோம். சிறிது நேரத்தில், என்னை எழுப்பினார். “உன் உடல் வலி எல்லாம் நீங்கி விட்டதா” என்று கேட்டார்.
நீங்கிவிட்டது என்று சொன்னேன்.
உனக்கும், தாவர இனங்களின் இரகசியத்தைச் சொல்லிக் கொடுத்துள்ளேன். அதன்படி, நோய்களைப் போக்கும் தாவர இனங்களின் உணர்வுகள் எவை என்பதனை, அனுபவ பூர்வமாக அறிந்துக் கொண்டாய் அல்லவா?
இதைப் போன்றே, பழங்கால மலைவாழ் மக்களான புலஸ்தியர் வம்சத்தைச் சார்ந்தவர்கள், (புலன் அறிவால் அறியும் ஆற்றல் உள்ளவர்கள்) தாவர இனங்களின் மருத்துவ குணங்களை, தங்கள் புலன் அறிவால் அறிந்து கொண்டு, நோய்களைப் போக்கும் உணர்வுகள் எவை என்பதனை, அனுபவ பூர்வமாய் அவர்கள் அறிந்தவற்றை, தன் இன மக்களுக்கு நோய்களைப் போக்க மருந்தாக பயன்படுத்தி, நோய்களை நீக்கி வாழ்ந்து வந்தார்கள்.
இப்போது, உன் இடுப்பில் கட்டியுள்ள வேர்கள், மூலிகைகள் ஒவ்வொன்றும், ஒவ்வொரு விதமான வாசனையை வெளிப்படுத்துகிறது.
யானைகள், புலிகள், ஓநாய்கள், நரிகள், செந்நாய்கள், கரடிகள், பன்றிகள், விலங்கினங்கள், விஷ ஜந்துக்கள், பாம்பு இனங்கள், விஷ வண்டுகள், விஷ பூச்சிகள், கொசுக்கள் இவையெல்லாம், உன் இடுப்பில் கட்டியுள்ள வேர்கள் வெளிப்படுத்தும் வாசனைகளால், தங்கள் இரைக்காக நுகர்ந்தறிந்து வரும் உயிரினங்கள் அனைத்தும், உன் அருகில் வந்தால், வேர்களில் இருந்து வரும் வாசனைகளை நுகர்ந்து, சிறிது நேரத்தில் அவைகளுக்கு மயக்கம் வந்துவிடும்
அதனால், அவைகள் உன் அருகில் வராது, விலகிச் சென்றுவிடுகிறது. இந்த வேர்களின் வாசனையால், நீ பாதுகாக்கப் படுகின்றாய்.
இதைப் போன்று, பல இலட்சம் ஆண்டுகளுக்குமுன் காடுகளில், குகைகளில் வாழ்ந்து வந்த புலஸ்தியர்கள், தங்கள் அனுபவத்தால் அறிந்து கொண்ட பல மூலிகைகள், விஷ முறிவு வேர்களை, தாங்கள் தங்கியுள்ள குகைகளின் முகப்பில் பரப்பி வைத்துவிட்டு, தங்கள் உடல்களில் சில மூலிகைகளை அரைத்துப் பூசிக் கொண்டு, பயமின்றித் தூங்கிவிடுவார்கள்.
இந்தக் குகைப்பக்கம், மோப்பத்தால் நுகர்ந்து அறிந்து, தங்கள் இரைக்காக வரும் யானைகள், புலிகள், ஓநாய்கள், செந்நாய்கள், கரடி, விஷ ஜந்துக்கள், பாம்பு இனங்கள், வண்டினங்கள் போன்றவைகள், மூலிகைகளின், வேர்களின் வாசனைகள், குகையிலிருந்து வெளிப்படுவதால், இந்தக் குகைப்பக்கம் வரும் அனைத்து ஜீவ ஜெந்துக்களும், அந்த மணத்தை நுகர்ந்து, குகைக்குள் போகாது விலகிச் செல்கின்றன என்றார், குருதேவர்.
“போகலாம்” என்று சொன்னார் குருதேவர்.
மறுபடியும், கரடு முரடான பாதையில் நடந்து சென்று, மலை உச்சியை அடைந்தோம். இருண்டு விட்டது. எனக்குப் பசி அதிகமாகிவிட்டது. “பசிக்கிறது” என்று சொன்னேன்.
“மூலிகையைக் கொடுத்து, “மென்று முழுங்கித் தண்ணீரைக் குடி, பசி தீர்ந்துவிடும்” என்று சொன்னார்.
பச்சிலையைச் சாப்பிட்டேன். தண்ணீரைக் குடித்தேன் பசி அடங்கிவிட்டது. நடந்து வந்த களைப்பால், தூங்கிவிட்டேன். மறுநாள், காலை நான்கு .மணிக்கு எழுந்து, வழக்கம்போல் துருவ தியானத்தில் அமர்ந்துவிட்டேன்.
2. மலை உச்சியில் நான் அடைந்த பேரானந்த நிலை
காலை ஏழு மணிக்கு, தியானம் கலைந்து, கண்களைத் திறந்து பார்த்தேன். நான் மலை உச்சியில் இருந்து, மற்ற மலைப் பகுதியைப் பார்க்கும் போதுதான், சொர்க்கத்தில் இருப்பதைப் போன்ற உணர்வுகள், என் உள்ளத்தில் பிரதிபலித்தது.
நான் திரும்பிப் பார்த்தேன். குருதேவரை என் அருகில் காணவில்லை. ஏதாவது மூலிகைகள், வேர்களை எடுத்து வருவார் என்று நினைத்துக் கொண்டு, மலைப்பகுதிகளை நான்கு பக்கமும் பார்த்துக் கொண்டு இருந்தேன்.
மரங்களின் அடர்த்தியும், மரங்களின் வனப்பும், பட்சிகள் கூவும் இனிமையான ஓசைகளையும் பார்த்ததும், கேட்கும் பொழுதும், என் மனம் பேரானந்த நிலை அடைந்தது.
சூரியனின் ஒளிக் கதிர்கள், “பளிச்” என்று தெரிந்தது. நாங்கள் அமர்ந்திருந்த இடம், பெரிய பாறை. அகலமாக, நீளமாக இருந்தது. படுக்க வசதியாக இருந்தது. மாலையில், இருட்டில் நாங்கள் இங்கு வந்ததால், வந்த களைப்பும், பசியும் சேர்ந்து இருந்ததால், எதையுமே சரியாகக் கவனிக்கவில்லை. அருகில் உள்ள குட்டையில்தான், தண்ணீர் எடுத்து வந்து குடித்தேன் என்று, விடிந்தபின் தான் எனக்குத் தெரிந்தது.
குருதேவரை எதிர்பார்த்துக் கொண்டிருந்தேன். சுமார் எட்டு மணியளவில், வந்து சேர்ந்தார்கள்.
“இரவில் பயந்தாயா?” என்று கேட்டார்கள்.
“பயப்படவில்லை” என்று சொன்னேன்.
கையில் வைத்திருந்த பையிலிருந்து, நாங்கள் வழக்கம் போல் சுட்டுச் சாப்பிடும் கிழங்கை எடுத்தார். “இதைக் கொண்டு போய், சுட்டு எடுத்துவா” என்று சொன்னார். அதைச் சுட்டு எடுத்து வந்தபின், ஒரு வேரை என்னிடம் கொடுத்து. “இதையும் உன் இடுப்பில் கட்டிக்கொள்” என்று சொன்னார்கள்.
“நீ படுத்து உறங்கிய பாதை, எது தெரியுமா?” என்று கேட்டுவிட்டு, நாங்கள் படுத்து இருந்த பாறையின் கீழே, என்னைக் கூட்டிச் சென்றார். அந்தப் பாறையின் அடியில், ஓர் குகை இருந்தது.
இந்தக் குகையில் இருந்த கரடி, நாம் வருவதற்கு முன் இரை தேடச் சென்றுவிட்டது. நாம் இங்கு வந்ததும், நீ சோர்வடைந்து தூங்கிவிட்டாய். நானும் வெளியிலே சென்றுவிட்டேன். உன் இடுப்பில் கட்டியுள்ள வேரும், மூலிகையும், வெளிப்படுத்திய வாசனையை நுகர்ந்த கரடி, தன் இருப்பிடத்திற்கு வராமல் போய்விட்டது. என்று குருதேவர் சொன்னார்.
3. பிரபஞ்சத்தைப் பற்றிச் சொல்லத் தொடங்கினார் குருநாதர்
வேறு இடங்களுக்குப் போய்ப் பார்ப்போம் என்று, மீண்டும் கரடு முரடான பாதையில் எம்மைக் கூட்டிச் சென்றார். மலை உச்சிக்குச் சென்றோம். மாலை நான்கு மணி ஆகிவிட்டது. கொண்டு சென்ற கிழங்கும், தேனும் சாப்பிட்டோம். சிறிது நேரம் அயர்ந்து படுத்துவிட்டோம்.
மாலை 5 மணிக்கு எழுந்தோம். மலை உச்சியைப் பார்க்கும்படி சொன்னார். மலை உச்சியில் மேகங்களை, மலை எப்படி ஈர்க்கின்றது? ஈர்த்த மேகங்கள் எப்படி நீராக வடித்து, மலைப் பகுதிகளில் நீர் ஊற்றாக வருகின்றது என்பதை, விளக்கிக் கூறினார்.
இரண்டு விதமான வேர்களை, என் கையில் கொடுத்தார்.
அதை வாங்கி, என் கையில் வைத்துக்கொண்டேன்.
அதை நீ தொலைத்து விடுவாய் என்று திரும்ப வாங்கி, என் கையில் கட்டி விட்டார். மின்னலைப் பற்றிய விபரங்களைச் சொல்லத் தொடங்கினார். பிரபஞ்சத்தில் மின்னல்கள் எதனால் உருவாகிறது? நம் பூமியில், மின்னல் எவ்வாறு உருவாகிறது? என்று விளக்கினார்.
ஓர் பிரபஞ்சம் என்பது, நமது சூரியக் குடும்பம். நமது சூரியன் ஈர்ப்பு வட்டத்தில் வாழ்ந்து கொண்டிருக்கும் 27 நட்சத்திரங்களும், பிற மண்டலங்களிலிருந்து வரும், பலவித உணர்வுகளின் சத்துக்களை, அவை ஒவ்வொன்றும் 27 விதமான உணர்வின் சத்துக்களை, அதனதன் உணர்வின் நிலைக்கொப்ப கவர்ந்து, வளரும் சக்தி பெற்றவைகள்.
பிற மண்டலங்களிலிருந்து வரும், எத்தகைய உணர்வின் சத்தைக் கவர்ந்து கார்த்திகை நட்சத்திரமனாதோ, அந்த உணர்வின் சத்துக்களைக் கவர்ந்து, கார்த்திகை நட்சத்திரமாக வளர்ந்து வருகின்றது.
கார்த்திகை நட்சத்திரம், தன்னில் வளர்த்துக் கொண்ட சத்தினை உமிழ்த்திக் கொண்டே இருக்கும். அவ்வாறு உமிழ்த்தும் சத்துக்கள், நம் பிரபஞ்சத்தில் துகள்களாக படர்கின்றது.
மேற்கூறியவாறே, ரேவதி நட்சத்திரம், எந்த வகை உணர்வுகளின் சத்தைக் கவர்ந்து ரேவதி நட்சத்திரமானதோ, அந்த உணர்வுகளின் சத்துக்களைக் கவர்ந்து, ரேவதி நட்சத்திரம் வளர்ந்து வருகின்றது.
ரேவதி நட்சத்திரம், தன்னில் வளர்த்துக் கொண்டேயிருக்கும், இவ்வாறு உமிழ்த்தும் சத்துக்கள், நம் பிரபஞ்சத்தில் துகள்களாகப் படர்கின்றன.
நமது பூமியில், வேப்பமரம் எப்படி தன் கசப்பின் உணர்வின் சத்தைக் கவர்ந்து, வேப்பமரமாக வளர்ந்து வருகின்றதோ, மாமரம் துவர்ப்பின் உணர்வின் சத்தைக் கவர்ந்து, மாமரமாக வளர்ந்து வருகின்றதோ, இது போன்று,
27 நட்சத்திரங்களும் 27 வகையான
உணர்வுகளின் சத்துக்களைக் கவர்ந்து,
அதனதன் சத்தின் வகையின் உணர்வுகளை,
பிற மண்டலங்களிலிருந்து வெளிப்படும் சத்துக்களைக் கவர்ந்து,
தங்களை வளர்த்துக் கொள்கின்றன.
தங்களில் வளர்த்துக்கொண்ட 27 நட்சத்திரங்களும், 27 வகையான உணர்வுகளின் சத்துக்களை, உமிழ்த்திக் கொண்டே இருக்கும். அவ்வாறு உமிழ்த்தும் உணர்வுகளின் சத்துக்கள், நம் பிரபஞ்சத்தில் 27 வகையான துகள்களாகப் படர்கின்றன.
27 நட்சத்திரங்களும், 27 வகை உணர்வின் சத்துக்களை, துகள்களாகப் பிரபஞ்சத்தில் பரவிக் கொண்டிருப்பதை, சூரியன் கவர்ந்து, தன் ஈர்ப்புக்குள் கொண்டு வருகின்றது.
சூரியனின் அருகில் வரும் துகள்களை,
தன்னில் உருவான பாதரசத்தால் மோதி வெப்பமாக்கி,
துகள்களை ஆவியாக மாற்றும்போது,
துகள்களில் உள்ள விஷங்கள், பிரிந்து சென்று விடுகின்றன.
தனக்குகந்த சத்தின் உணர்வுகளைத் தனக்குள் சேர்த்து, பாதரசமாக உருவாக்கிக் கொள்கிறது.
பாதரசத்தால், துகள்கள் மீது மோதியதில், வெப்ப காந்த தூசுகளாக உருவாகி, பிரபஞ்சத்தில் பரவும்போது, துகள்களிலிருந்து பிரிந்து சென்ற விஷமான ஆவியை, தூசியில் உள்ள காந்தம் கவர்ந்து, வெப்பத்துடன் இணைத்துக் கொள்கிறது.
4. ஒவ்வொன்றுக்கும் காரணப் பெயரை வைத்தார் குருதேவர்
இவ்வாறு பிரபஞ்சத்தில், வெப்பம், காந்தம், விஷம் மூன்றும் ஒன்றாக இணைந்து, ஓர் இயக்க அணுவாக உருவாகி, பிரபஞ்சத்தில் பரவுகின்றன. இவ்வாறு உருவான இயக்க அணுவுக்கு, காரணப் பெயர்கள் வைத்தார் குருதேவர்.
ஈர்க்கும் சக்தியான காந்தத்திற்கு, இலட்சுமி என்றும், ஈர்க்கும் சக்தியான, காந்தத்துடன் இணைந்து இருக்கும் வெப்பத்திற்கு, விஷ்ணு என்றும், இலட்சுமியான காந்தம், விஷத்தை ஈர்த்துத் தன்னுடன் இணைத்துக் கொண்டதால், இலட்சுமணன் என்று, காரணப் பெயர்கள் வைத்தார் குருதேவர்.
வெப்பம் விஷத்துடன் சேர்ந்து, இணைந்து, ஈர்க்கும் சக்தியான இலட்சுமி, தன் அருகில் வரும் கசப்பான உணர்வின் சத்தை ஈர்த்து, வெப்பம் விஷத்துடன் இணைத்துக் கொண்டதால், கசப்பின் உணர்வை இயக்கும் அணுவாக உருவாகிறது.
இவ்வாறு கசப்பின் உணர்வின் சத்தைத் தனக்குள் ஈர்த்து, இணைத்துக் கொண்டதால், கசப்பின் உணர்வுகளுக்கு ஏற்ப, அணுவின் உருவத்தைத்தான் “பரபிரம்மம்” என்று காரணப் பெயர் வைக்கின்றார் குருதேவர்.
இவ்வாறு, உருவமாக உருவான அணுவில் இணைந்திருந்த விஷம், தன்னுடன் இணைந்த கசப்பான உணர்வின் சத்தை, கசப்பான மணமாக வெளிப்படுத்தும் அணுவாகின்றது.
இவ்வாறு உருவமாகி, உருவான அணுவில் இருந்து வெளிப்படும் கசப்பான மணத்தை, சரஸ்வதி என்று காரணப்பெயர் வைத்தார்கள் குருதேவர்.
கசப்பான உணர்வின் சத்தைக் கவர்ந்து, ஒரு அணுவான அணு, கசப்பின் உணர்வின் ஞானமாக, கசப்பின் சத்தை வளர்த்திடும் அணுவாக வலுப்பெறுகின்றது. இவ்வாறு ஆன அணுவிற்கு, “காயத்திரி” எனக் காரணப் பெயர் வைத்தார் குருதேவர்.
துவர்ப்பான உணர்வின் சத்தைக் கவர்ந்து, ஓர் அணுவான அணு, துவர்ப்பின் அணுவின் ஞானமாக, துவர்ப்பின் சத்தை வளர்த்திடும் அணுவாக வலுப்பெறுகின்றது. இவ்வாறு ஆன அணுவிற்கு, “காயத்திரி” என்று காரணப் பெயர் வைத்தார் குருநாதர்.
கசப்பான உணர்வின் சத்தை கவர்ந்துக்கொண்ட அணு,
துவர்ப்பான உணர்வின் சத்தைக் கவர்ந்து கொண்ட அணுவை,
தன் அருகில் வராது தடுத்து விடுகின்றது.
இதைப் போன்றே, துவர்ப்பான உணர்வின் சத்தைக் கவர்ந்துக் கொண்ட அணு, கசப்பின் அணுவை தன் அருகில் வராது தடுத்து விடுகின்றது என்று, குருதேவர் விளக்கமாகக் கூறினார்.
5. மின்னல் எப்படித் தோன்றுகிறது?
மேற்கூறியவாறு, பல வகையான சத்தைக் கவர்ந்து கொண்ட, பல வகையான அணுக்களாக, நம் பிரபஞ்சத்தில் உருவாகி பரவிப் படர்ந்து கொண்டே உள்ளது என்றார், குருதேவர். 27 நட்சத்திரங்களும், 27 வகை சத்தின் உணர்வுகளின் துகள்களாக, நம் பரபஞ்சத்தில் பரவிக் கொண்டிருக்கின்றன.
இந்த 27 நட்சத்திரங்களின் துகள்களை,
சூரியன் தன் ஈர்ப்புக்குள் கொண்டுவரும் பாதையில்,
பரணி நட்சத்திரத்தின் துகள்களும்,
அசுவினி நட்சத்திரத்தின் துகள்களும்,
சந்தர்ப்பத்தால் ஒன்றுடன் ஒன்று மோதும் பொழுது மின்னலாக மாறி, தூசிகளாகப் பிரபஞ்சத்தில் பரவுகின்றது என்றார், குருதேவர்.
மேற்கூறிய நட்சத்திரத்தின் தூசுகள் இரண்டும், ஒன்றான தூசுகளாக, பிரபஞ்சத்தில் பரவுகின்றன.
வெப்பம், கந்தம், விஷம், இவை மூன்றும் ஒன்று சேர்ந்து, ஓர் இயக்க அணுவாக பிரபஞ்சத்தில் பரவி இருந்த அணுக்கள், மின்னலிலிருந்து வெளிப்பட்ட தூசுகளைக் கவர்ந்து, அணுக்கள் அதன் இயக்கமாக மாறி விடுகின்றன என்றார் குருதேவர்.
இது போன்று, பிரபஞ்சத்தில்
பற்பல விதமான வண்ணங்கள் கொண்ட அணுக்களும்,
பற்பல விதமான ரூபங்களான அணுக்களும்,
பற்பல விதமான தூசுகளும், துகள்களும்,
பிரபஞ்சத்தில் பரவிக் கொண்டும்,
ஒன்றுடன் ஒன்று மோதிக் கொண்டும்,
அணுக்களாகவும், தூசுகளாகவும் மாறிக் கொண்டே இருக்கின்றன.
இவைகள், நம் பூமியின் அருகில் வரும்போது, நம் பூமி கவர்ந்து, பூமிக்குள் பரவச் செய்கின்றது என்று, குருதேவர் விளக்கமாகச் சொன்னார்.
மேற்கூறியவாறு, நம் பூமியின் ஈர்ப்புக்கு வந்தவைகளில், கார்த்திகை நட்சத்திரம் உமிழ்த்திய துகள்கள், பூமியின் காற்றழுத்த மண்டலத்தில் மோதி மின்னலாகி, தூசுகளாக நம் பூமியில் படருகின்றன.
அதே போன்று, நம் பூமியின் ஈர்ப்புக்குள் வந்தவைகளில், ரேவதி நட்சத்திரம் உமிழ்த்திய துகள்கள், நம் பூமியின் காற்றழுத்த மண்டலத்தில் மோதி மின்னலாகி, தூசுகளாக நம் பூமியில் படர்கிறது.
மின்னும்போது ஒளிவண்ணமாக மாறி, தூசுகளாகப் படருவதை, உன் கையில் கட்டியுள்ள வேர், 27 நட்சத்திரங்களின் விஷத்தன்மைகளைச் சாந்தமாக்கி, மின்னல்கள் தாக்காது உன்னைப் பாதுகாக்கும் என்று, சொல்லி முடித்தார் குருதேவர்.
6. “மின்னலைப் பார்” என்றார் குருதேவர்
மலை உச்சியில் நாங்கள் இருந்ததால், குளிர் அதிகமாக இருந்தது. என்னைப் பார்த்தார். ஒரு வேரைக் கொடுத்தார். வேரை வாயில் ஒதுக்கிக் கொள்ளும்படி சொன்னார்.
நான் வாயில் ஒதுக்கிக் கொண்டேன். சிறிது நேரத்தில், எனது உடலில் சூடு ஏற்பட்டது. எனது மனம் உற்சாகம் ஆனது. அந்த மலை உச்சியில், மூன்று நாள் இருந்தோம். பல உபதேசங்களைச் சொல்லிக் கொண்டே இருந்தார் குருநாதர்.
நாங்கள் மலை உச்சியில் இருந்த இடமோ, மூன்று பேர் படுத்துக் கொள்ளும் அளவிற்கு, சின்ன குகை. அந்தக் குகைக்கு வெளியில் இருந்துதான், வானவியல், உயிரியல், புவியியல், தாவரயியல் பற்றி, விவரங்களைச் சொல்லிக் கொண்டிருப்பார்.
அன்று திடீரென்று மின்னலும், மேகக்கூட்டங்களும் அதிகரித்துக் கொண்டு இருந்தது. “மின்னலைப் பார்” என்றார் குருநாதர்.
பார்த்தேன். என்ன ஆச்சரியம்? கண்ணுக்குக் குளுமையாய் இருந்தது. எப்படி வெல்டிங் வைக்கும்போது, கலர் கண்ணாடி வைத்து பார்க்கும்போது, கண்ணில் எரிச்சல் வருவதில்லையோ, இதைப் போன்று, கண்களுக்குக் குளுமையாய் இருந்தது என்று சொன்னேன் குருதேவரிடம்.
நான் இதற்கு முன்பு, மின்னலைப் பார்க்கச் சொல்லும் பொழுதெல்லாம், என்னிடம் கோபித்துக் கொண்டு, “கண் போய்விட்டால், என் குடும்பத்தை யார் பார்த்துக்கொள்வார்கள்?” என்றெல்லாம் சொன்னாயே, “இப்பொழுது நம்பிக்கை வந்ததா?” என்று கேட்டார் குருதேவர்.
நான் பயத்தால் அவ்வாறு சொன்னேன் என்றேன்.
மலைவாசிகளான புலஸ்தியர்கள், நீ எப்படி என்னைச் சந்திக்கும் சந்தர்ப்பத்தால், மேற்கூறியதெல்லாம் அனுபவப் பூர்வமாக அறிந்து கொண்டாயோ, இதைப்போலத்தான் பற்பல மூலிகைகளின், பற்பல வேர்களின் ரகசியத்தை அறிந்து கொண்டார்கள்.
நான் உன் கையில் கட்டியிருந்த வேரால், உன் உடலே மின்னலின் கதிரியக்கங்கள் உன் அருகில் வரும்போது, உன் கண்களுக்கு குளுமையாக, முழுமையாக உன்னால் பார்க்க முடிந்தது என்று கூறினார் குருதேவர்.
இதைப் போன்று, புலஸ்தியர்கள் வேர்களின் ரகசியத்தை, தங்கள் அனுபவத்தால் அறிந்து கொண்டு, தங்கள் கைகளில் வேர்களைக் கட்டிக் கொண்டு, மின்னலின் இயக்கங்களை அறிந்து கொண்டார்கள். மின்னலின் தாக்குதலில் இருந்து, தங்களைக் காத்துக் கொண்டார்கள் என்றார் குருதேவர்.
புலஸ்தியர்கள், தாங்கள் தங்கியிருக்கும் குகைகளில், தங்கள் அனுபவத்தால் அறிந்து கொண்ட வேர்களையும், மூலிகைகளையும், தங்கியுள்ள குகையின் முகப்பில் கட்டிவைத்து விடுவார்கள். தங்களுக்கு பாதுகாப்பாக, தங்கள் கைகளிலும் கட்டிக் கொள்வார்கள்.
விஷப் பூச்சிகளோ, விஷப் பாம்பினங்களோ, மிருக இனங்களோ, யானைகளோ, புலி, சிங்கம், கரடி போன்ற மிருக இனங்களோ, புலஸ்தியர்கள் இருக்கும் குகை பக்கம் வருவதில்லை.
இடி, மின்னல் போன்றவை, குகையைத் தாக்காது. அதனின் வேகங்கள் தனிந்து விடும். இவ்வாறு, பாதுகாப்பாக வாழ்ந்து வந்தார்கள் புலஸ்தியர்கள், என்றார் குருதேவர்.