குருநாதர் எம்மைக் காட்டிற்குள் அழைத்து சென்று, உணர்த்திய அனுபவங்கள் (3)
1. புலனறிவால் நுகரும் ஆற்றல் பெற்ற புலஸ்தியர்
“புலஸ்தியரைப் பற்றி மட்டும் சொல்லி வந்தீர்கள். அவர்கள் குடும்பம் பற்றிச் சொல்லவில்லையே” என்று குருதேவரிடம் கேட்டேன்.
அதற்கு குருதேவர் சொன்னார், “பல இலட்சம் ஆண்டுகளுக்கு முன்னால், மிருகங்களுடன் மிருகங்களாக வாழ்ந்து வந்த மலைவாழ் மனிதர்களில், புலனறிவால், தாவர இனங்களின் ரகசியங்களை அறிந்த ஒருவர், தான் அறிந்து கொண்ட மூலிகையை,
மலைவாழ் மக்களுக்கு நோய்களைப் போக்க,
நோய்க்குத் தக்க மூலிகைகளை நுகர்ந்தறிந்து,
மூலிகைகளைப் பறித்து வந்து,
நோய்களை நீக்கிக் குணப்படுத்தி வந்தார்.
இவ்வாறு அவர்கள் வாழ்க்கையில், மனிதர்கள் உடலில் நோய்கள் எப்படி உருவானது என்று, அந்த மனிதர்களின் புலன்களின் இயக்கத்தை நுகர்ந்து அறிகின்றார்.
அவ்வாறு, தான் அறிந்த நோய்களின் உணர்வுக்கொப்ப நோயை நீக்க, மூலிகைகளின் உணர்வுகளைத் தன் புலனறிவால் அறிந்து, மூலிகைகளை நோயாளிக்குக் கொடுத்து நோய்களைக் குணப்படுத்தி வந்தார். அந்த மனிதனைத்தான், “புலஸ்தியர்” என்று, காரணப் பெயர் வைத்தார்கள் அக்கால மக்கள்.
இன்று, நம் நாட்டில் நாடி துடிப்பைப் பார்த்து, துடிப்புக்கு ஏற்ப நோயை அறிந்து, மருந்தைக் கொடுத்து நோயைக் குணப்படுத்துவதை “வைத்தியர்” என்று அழைக்கின்றனர் என்றார் குருதேவர்.
அந்த வைத்தியர் குடும்பத்தில், யாராவது ஒருவர் தன் மகன்களில் ஒருவர், தன் தந்தையின் வைத்தியத்தைச் செய்ய ஆர்வம் காட்டுகின்றார். தந்தையின் வைத்திய முறைகளை வைத்து, வைத்தியத்தைச் செய்து வருகின்றார்.
இவர் பிள்ளைகளில் ஒருவரும், தன் தந்தையின் வைத்தியத்தைச் செய்து வருகிறார் என்றால், இப்படி அவர்கள் வம்சத்தில் வைத்தியங்கள் செய்து வரும் குடும்பங்களை, பரம்பரை வைத்தியர்கள் என்று, இன்றும் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.
இதைப்போன்றுதான், புலஸ்தியர் குடும்பத்தில் தன் மக்களில் ஒருவர்தான், தன் தந்தையின் வழியில் புலனறிவால் நோய்களை அறிந்து, மூலிகைகளின் உனர்வுகளை அறிந்து, மூலிகைகளால் நோய்களை நீக்கி, குணப்படுத்திவந்த குடும்பத்தைத்தான் புலஸ்தியர் வம்சம் என்றும், இப்படி பரம்பரையாகப் புலனறிவால் அறிந்து, நோய்களை நீக்கிக் குணப்படுத்தி வந்த குடும்பங்கள்தான், “புலஸ்தியர் வம்சம்” என்று, விளக்கமாகச் சொன்னார் குருதேவர்.
2. புலஸ்தியர் பயன்படுத்திய விஷ முறிவு வேர்கள்
தன் புலனறிவால் அறிந்த, விஷத்தை முறித்திடும் வேர்களையும், மூலிகைகளையும், மின்னலின் வீரியத்தைத் தனித்திடும் வேர்களையும், தன் அனுபவத்தால் அறிந்ததினால், அவர்கள் தங்கியுள்ள குகையில் ஏற்கனவே கூறியபடி, வேர்களையும், மூலிகைகளையும் முன் வாசலில் கட்டி வைத்து இருப்பதினால், விஷ வண்டுகளோ, விஷப் பாம்பு இனங்களோ, மிருக இனங்களோ, யானைகளோ இவர்கள் இருக்கும் குகை பக்கம் வராது விலகிச் சென்று விடுகின்றன. அதனால் புலஸ்தியர் குடும்பத்தினர், பயமின்றி தூங்கிவிடுவார்கள்.
இவ்வாறு புலஸ்தியர் வம்சத்தில், பரம்பரையாக நுகர்ந்தறியும் சக்தி பெற்றார்கள். அதனால்தான், இந்தப் பரம்பரையில் கணவன் மனைவியும் சேர்ந்து, ஒருவருக்கொருவர் புலனால் அறிந்ததை, தன் மனைவிக்குச் சொல்லியும், ஒருவருக்கு ஒருவர், மூலிகைகளின், வேர்களின் ரகசியங்களை அறியும் சக்தியை வளர்த்துக் கொண்டு, குகைகளில் வாழ்ந்து வந்தார்கள், “புலஸ்தியர் குடும்பம்” என்று, விளக்கமாகக் குருதேவர் சொன்னார்.
தங்களைப் பாதுகாத்துக் கொள்ள, விஷ முறிவு வேர்களைத் தன் அனுபவத்தால் அறிந்து உணர்ந்ததை, தாங்கள் தங்கியிருக்கும் குகையின் முகப்பில் கட்டி வைத்து விடுகின்றார். தன் கையிலும், தன் மனைவி கையிலும் கட்டிக் கொள்கின்றனர்.
அந்த வேர்களின் மணத்தால், விஷப் பாம்பினங்களோ, விஷப் பூச்சி இனங்களோ, அவர்கள் தங்கியிருக்கும் குகை பக்கம் வராது விலகிச் செல்கின்றன.
பலருக்கு பலவித நோய்களைக் குணபடுத்தி வாழ்ந்து வந்தாலும், பலவிதமான விஷப்பாம்பினங்கள் தன்னைத் தீண்டிவிட்டால், மரணம் அடைய நேரிடுமே என்று சிந்திக்கத் தொடங்கினார். அதன்வழியில், புலனறிவால் விஷத்தை முறித்திடும் தாவர இனங்களின் வேர்களை, அறிந்திடும் சக்தி பெற்றார் புலஸ்தியர்.
இவ்வாறு, விஷத்தை முறித்திடும் தாவர இனங்களின் வேர்களை, தன் அனுபவத்தால் அறிந்து கொண்டதை, தன் இனமக்களுக்கு விஷத்தால் தீண்டப்பட்டவருக்கு, இந்த வேர்களை மருந்தாகக் கொடுத்து, குணப்படுத்தி வந்தார் புலஸ்தியர்.
இதைப் போன்றே, புலி, கரடி, யானை, செந்நாய், ஓநாய், நரிகள் போன்ற இனங்கள், தங்களைத் தாக்கிக் கொன்று விடாது தங்களைப் பாதுகாத்துக் கொள்ள, புலி மிரட்டி, கரடி மிரட்டி, செந்நாய் மிரட்டி, ஓநாய் மிரட்டி, நரி மிரட்டி என்று தங்கள் அனுபவத்தால் மூலிகைகளின் வேர்களைக் கண்டறிந்து, தங்கள் கைகளிலும், கழுத்திலும், இடுப்புகளிலும் கட்டிக் கொண்டு, குகைகளில் வாழ்ந்து வந்தார்கள்.
தங்கள் உணவுக்காகக் காடுகளில் தேடிச் செல்லும்போது, பயமின்றி தங்கள் உணவைச் சேமித்துக் கொண்டும், விலங்கினங்களை வேட்டையாடி, தங்கள் உணவுக்காகப் பயன்படுத்திக் கொண்டார்கள்.
3. மின்னலின் வீரியத்தைத் தணிக்கும் வேர்கள்
மழை காலங்களில் மின்னல் அதிகமாக வருவதால், மின்னல்கள் மரங்களில் மோதும்போது, மரங்கள் கருகி விடுகின்றன. பாறைகளில் மோதும்போது, பாறைகளில் வெடிப்பு ஏற்படுகின்றது.
கண்களால் பார்த்தால் கண்கள் கூசுகின்றது. கண்களில் உள்ள கருமணிகளில் மின்னலின் கதிர்வீச்சு பட்டால், கருமணிகள் பார்வை இழந்து விடுகின்றன என்று உணர்ந்தார், புலஸ்தியர்.
மின்னலின் கதிர் வீச்சிலிருந்து தன்னைப் பாதுகாத்துக் கொள்ள, மூலிகைகளைக் கண்டறிந்து, மூலிகைகளின் வேர்களைப் பறித்து வந்து, தன் கழுத்திலும், தன் மனைவியின் கழுத்திலும் கட்டிக் கொண்டார்.
இவ்வாறு, தங்கள் கழுத்தில் வேரைக் கட்டிக் கொண்டதால்,
கண்கள் கூசவில்லை.
மின் கதிர்கள் தங்களைத் தாக்காது,
தங்கள் அருகில் வந்தால் பலவீனமடைவதை,
அவர்களால் உணர முடிகின்றது.
மின்னலின் இயக்கங்களைப் பற்றிய உண்மைகளை, அறியும் ஆற்றல்கள் அவர்கள் பெறும் நிலை ஏற்படுகின்றது என்பதை, அனுபவப்பூர்வமாகவும், காட்சியாகவும், காண்பிக்கின்றார் குருதேவர்.