Pages

குரு உபதேசிப்பதை புரியக்கூடிய முறை


1. குரு உபதேசிப்பதை புரியக்கூடிய முறை
நாம் தெரிந்து கொள்வதற்காக, ஞானிகள் தத்துவ நிலைகளில் இதனைத் தெளிவாக்கி உள்ளனர். ஞானிகள் சொன்னதை நாம் தெரிந்து கொள்ளவேண்டும். சாமி என்னவோ சொல்கின்றார், நமக்குப் புரியவில்லை என்று சொன்னால், நமக்குப் புரியாமலே போய்விடும்.


இதை, நாம் புரியும் சக்தி பெறவேண்டும் என்று ஏங்கிப் பெற்றால், இந்த உணர்வுகள் மீண்டும் உங்கள் நினைவிற்கு வரப்படும் பொழுது, அதனின் உண்மையை, அறியும் ஆற்றல் பெறுவீர்கள்.


ஞானிகள் உணர்த்திய அருள்வழி கொண்டு, நாம் மனிதனாகப் பிறந்த வழியைத் தெரிந்து கொண்டால், இந்த மனித வாழ்க்கையில்
எதைச் சேர்க்கவெண்டும்?
எதை வளர்க்க வேண்டும்?
எதைச் சுவாசிக்க வேண்டும்?
எதை கணங்களுக்கு அதிபதியாக்க வேண்டும்?
என்ற உணர்வுகளை உங்களில் பெற முடியும்.


இந்த மனித வாழ்க்கையில், ஒவ்வொரு நொடிப் பொழுதும் அந்த துருவ நட்சத்திரத்தின் பேரருளை பேரொளியை நமக்குள் பெற்று, மகிழ்ந்து வாழ்ந்து, முழுமை பெற்று, நம்மைச் சார்ந்தவர்களையும் மகிழ்ந்து வாழச் செய்து, மகரிஷிகள் சென்றடைந்த அந்த சப்தரிஷி மண்டலத்தை, நாம் அனைவரும் அடையலாம். மனிதனாகப் பிறந்ததின் பலனை ஒவ்வொருவரும் அடைய முடியும்.


யாம், நிறைய அருள் உபதேசங்களை உங்களுக்குக் கொடுத்திருக்கின்றோம். அருள் உணர்வுகளை, எப்படி உங்களிடத்தில் இயக்கமாக்க வேண்டும்? எப்படித் தீமைகளைத் தடுக்க வேண்டும்? என்று யாம் அடிக்கடி உங்களுக்கு உபதேசித்திருக்கின்றோம்.


“சாமி சொன்னார்கள், மறந்துவிட்டது” என்று இருக்கக்கூடாது. அருள் உணர்வுகளை, உங்களுக்குள் “ஆழமாகப் பதிவு” செய்து கொள்ள வேண்டும்.



இந்த விளக்கங்களை நாம் தெரிந்து கொண்டால், ஒவ்வொரு நிமிடமும் தீமைகள் வராதபடி தடுக்கலாம்.


2. குரு உபதேசிக்கும் உண்மைகளை, நமக்குள் பதிவாக்க வேண்டிய முறை
உதாரணமாக, ஆசிரியர் கற்றுத் தரும் பாடங்களை
மாணவன், தான் கூர்மையாக உற்றுப் பார்த்து
தனக்குள் பதிவாக்கி,
ஆசிரியர் மேல் பற்று கொண்ட
உணர்வின் தன்மையையும்,
மாணவன் தனக்குள் பதிவாக்கினால்,
ஆசிரியர் தமக்குள் கற்றுணர்ந்த உணர்வின் தன்மைகள்,
மாணவனிடத்தில் பரவி,
அந்த உணர்வே ஆசிரியராக இருந்து,
இது இவ்வாறு, இது இந்த நிலை, என்பது போன்ற
சிந்திக்கும் திறனும், செயலும்
அதற்குண்டான உணர்வும் வரும்.


இப்படி, ஒருவர் கற்றுத் தரும் போதனையை, கூர்மையாகக் கவனித்து, அதன் உணர்வின் தன்மையை, எவர் தமக்குள் பதிவு செய்கின்றனரோ, அதன் வழி அவருக்குள் இயக்கமாகின்றது. இதைத்தான், குரு எமக்குக் காண்பித்து, எம்முள் பதிவாக்கினார்.


உலக நிலையை அறியச் செய்திடும் ஆசிரியர், என்ற நிலையில், எமது குருவின் உணர்வின் தன்மையை, எமக்குள் பதிவு செய்து கொண்டபின், உலகின் தன்மையையும், கடந்த காலத்தில் மனிதர்கள் எவ்வாறு வாழ்ந்தார்கள் என்றும், எமக்கு உணர்த்தினார் குரு.


இப்படி, இதன்வழி கொண்டு எண்ணும் பொழுது, அவர் கற்றுணர்ந்த உணர்வின் இயக்கங்கள், எம்மைச் சிந்திக்கச் செய்யும் நிலையாகவும், அதன் வழி கொண்டு, வாழ்க்கை அமைத்திடும் நிலையும் வருகின்றது.


இப்பொழுது, யாம் உபதேசிக்கும் உணர்வுகளை நீங்கள் உங்களுக்குள் பதிவாக்கி, பதிவாக்கியதை மீண்டும் நினைவு கொண்டால், தீமையிலிருந்து விடுபடும் உணர்வின் அணுக்கள் உங்களுள் உருவாகி, நீங்களும் இதை நுகர்ந்தறிந்து, தீமையிலிருந்து விடுபடும் மனிதனாகின்றீர்கள்.


ஒருவன் என்னை ஏசுகின்றான், எனக்குத் தொல்லை கொடுக்கின்றான், என்ற உணர்வின் தன்மையைப் பதிவாக்கிக் கொண்டு, தீமை செய்தவனை எண்ணும் பொழுது, மீண்டும் நமக்குள் தீமையின் உணர்வுகள் வளர்ந்து, நம்மிடத்தில், கை கால் குடைச்சலாகி, சிந்திக்கும் தன்மை இழந்து, கோப உணர்வுகள் வருகின்றது.


சிந்திக்கும் தன்மையை இழக்கப்படும் பொழுது, செயலின் தன்மை குறைகின்றது. நமது செயல் நற்பலன் தரவில்லையென்றால், உணர்ச்சியின் தன்மை கூடுகின்றது. கொதிப்பின் தன்மை ஏற்படுகின்றது.


கொதிப்பின் உணர்வுகள் நமக்குள் வளர்ந்து, நமது நல்ல அணுக்களை செயலற்றதாக மாற்றுகின்றது. இதுவே நமக்குள் வளர்ந்து, கடும் நோயாகவும் மாறுகின்றது. ஆக, இதுவும் ஆசிரியராக வருகின்றது, குருவாக வருகின்றது.


ஆகவே, எதனின் தன்மையை நம்முள் பதிவாக்குகின்றோமோ, அதன் வலிமை கொண்டு நம்மை இயக்கிவிடும். இதை வென்றவர், துருவ மகரிஷி. அவர் கண்டுணர்ந்த உணர்வை, நமது குரு கற்றுணர்ந்தார். குரு ஊட்டிய உணர்வினை, யாமும் நுகர்ந்தோம், கண்டறிந்தோம்.


குருநாதர் உபதேசித்த அந்தப் பேருண்மைகளை நீங்கள் அனைவரும் பெற வேண்டும் என்றுதான், யாம் இதை உபதேசிக்கின்றோம்



3. குரு உபதேச நூல்களைப் படிக்கும் முறை
வக்கீல்கள் எல்லாம் படித்துவிடுவார்கள். சட்டத்தைப் படிப்பார்கள். ஆனால், அவரிடம் ஏராளமான நூல்கள் இருக்கும். காலநிலை வரும் பொழுது, அதனுடைய உணர்வுக்கொப்ப, படித்துக் கொண்டே இருப்பார்கள்.


குருநாதர் கொடுத்த நூல்களைப் படித்து கொள்ளுங்கள். அதை படிக்கப்படும் பொழுது, நினைவாற்றலைக் கூட்டிப் பகைமைகளைப் புகவிடாது, உங்களின் வலிமை கொண்டு, பகைமைகளை மாற்றியமைத்து விடலாம்.


ஆகவே, நூல்களைப் படித்துவிட்டோம், தெரிந்து கொண்டோம் என்பதைக் காட்டிலும், “அந்தந்தக் காலங்களில்” புத்தகங்களைத் திரும்பத் திரும்பப் படிக்க வேண்டும்.


நாம் அனைவருமே, என்றும் பேரருளுடன் ஒன்றி வாழ்தல் வேண்டும். எனவே, துரிதநிலை கொண்டு, உங்களை உருவாக்க வேண்டுமென்றுதான், இதைச் செய்வது.


நீங்கள் உருவானால், அனைவரையும் காக்கும் நிலை வருகின்றது. ஒரு அரிசியைச் சமைத்து, பசியைப் போக்க முடியாது. அரிசியின் பக்குவத்தை உங்களுக்குள் ஊட்டி, நாமெல்லாம் கூட்டினால், அந்த அரிசி கூடுகின்றது. அது சமைத்துச் சாப்பிட உதவுகின்றது.


ஒரு நெல்லை வைத்து, பல நெல் என்று சொல்லிக் கொண்டு சமைக்கலாம் என்றால் அது முடியாது. ஒரு நெல்லைப் பல நெல்லாக உருவாக்குதல் வேண்டும். அதனைப் பெறச் செய்ய, குரு அருள் உங்களுக்குள் உறுதுணையாக இருக்கின்றது.


உங்கள் உயிரான ஈசனையும் நேசியுங்கள். உங்கள் உயர்ந்த குணங்களை, உங்களுக்குள் எடுக்கும் பொழுது, உங்கள் உயிரான குரு மெச்சுகின்றது. அதே சமயத்தில், உயர்ந்த குணங்களை எண்ணும் பொழுது, அதுவே குருவாக இருந்து, நம்மை நல்வழிப்படுத்துகின்றது.


எதனையுமே தெளிவாக்கிய, அருள் ஞானிகளின் உணர்வை, நமக்குள் அந்த உணர்வின் தன்மையாக்கப்படும் பொழுது, அது நினைவு வரும் பொழுது, “அது குருவாகி” நம்மைத் தெளிவாக்கும் தன்மை பெறுகின்றது.


சாமி நன்றாகப் பேசுகின்றார்.
எங்கள் சாமிக்கு எல்லாம் தெரியும்
என்று சொல்லி விட்டுவிடக் கூடாது.


யாம் எல்லாம் தெரிந்து கொள்ளவில்லை.
எல்லாவற்றையும் தெரிந்து கொள்ளும் ஆர்வத்திலேதான்,
யாம் இருக்கின்றோம்.


நீங்கள் அனைவரும்,இந்த வாழ்க்கையில் எல்லாவற்றையும் தெரிந்து கொள்ளவேண்டும் என்ற ஆர்வத்திலேதான், யாம் இருக்கின்றோம்.



அந்த ஆசையின் நிமித்தமே, காலத்தையும் அறிந்து, அந்தப் பருவம் கண்டு, உங்களுக்குள் பதிவாக்குகின்றோம்.




ஆகவே, இதைப் போன்று நீங்கள் உங்கள் குடும்பத்திலும், இந்தப் பதிவினை ஏற்படுத்துங்கள். மனிதனின் உணர்வுக்கும், பற்றுடன் வாழும் பண்பினை வளர்த்துக் கொள்ளுங்கள்.




உபதேசிக்கும் சொற்களை, ஏற்கும் பருவம் நமக்கு வரவேண்டும். முதலில் கடினமாக இருக்கும். கால நிலைகளுக்கொப்பச் சொல்லிவிட்டால், சிறிது சிந்திக்கச் செய்யும், “கேட்க வேண்டும்” என்ற உணர்வுகளை ஊட்டும்.




ஆகையால், நாம் ஒவ்வொருவரும் உயிரை ஈசனாக மதித்தல் வேண்டும். உடலை, அவன் வீற்றிருக்கும் ஆலயமாக மதித்து, அதைப் பரிசுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். அதற்கு

உங்கள் ஆன்மாவைச் சுத்தப்படுத்த, தபோவனத்தில் வெளியிடப்பட்டுள்ள, அருள்ஞானப் புத்தகங்களை, தனித்த நிலைகளில் படியுங்கள்.
கூட்டமைப்புடன் இருந்து,
அந்த அலைகளைப் பாய்ச்சுங்கள்.
அந்த ஆன்மாக்களைச் சுத்தப்படுத்த, உணர்வுடன் எண்ணுங்கள்.


ஆன்ம நேயத்தை, நமக்குள் உருவாக்குதல் வேண்டும். குடும்பத்திற்குள், இணைந்து வாழும்நிலைகளை உருவாக்குதல் வேண்டும். இதுதான், மனித நேயம் என்பது.


உங்களுடைய செயலாக்கங்களைப் பார்த்து,
நானும் இணைய வேண்டும்,
என்ற உணர்வை ஊட்டி இணைத்தால்,
அது நலம் பெறும்.
ஆகவே, நம்முடைய ஆர்வத்தை, இதிலேதான் கூட்ட வேண்டும். ஆன்ம ஞானத்தைக் கொண்டு, நமக்குள் ஒன்றி வாழும் உணர்வுகள் வரவேண்டும்.


ஒவ்வொருவரும், உணர்ச்சிகளை வெளிப்படுத்துவதைக் காட்டிலும், கேட்போர் உணர்வுகளில், உணர்ச்சிகளை ஊட்டும் உணர்வுகளை, நமக்குள் உருவாக்குதல் வேண்டும்.


நம்முடைய, இயற்கையின் உண்மையின் உணர்வினை அறிய வேண்டும் என்பதற்குத்தான், இந்தநூல்களைக் காலப்பருவம் அறிந்து, அமைதி கொண்ட நேரத்தில் படித்து, சொல்லால் நம் குடும்பத்தினரைக் கேட்க வையுங்கள்.


குழந்தைகளுக்கும், இதைச் சொல்லுங்கள். தாய் தந்தையருக்குப் படிப்பறிவு இல்லை என்றால், படித்துச் சொல்லுங்கள். கேட்க மறுக்கும் பொழுது, படிக்க வேண்டாம். ஏற்புடைய உணர்வு வரும்போது, படிக்க வேண்டும்.


இதன் வழியில்தான், அருள்ஞானத்தை வளர்க்கமுடியும். ஆர்வத்தின் தன்மை கூட்டும் பொழுது, வேகம் கூட்டலாம்.


கண்ணாடி போன்றது ஆத்மா. அதில், எழுத்துக்களைப் பதிக்க வேண்டும் என்றால், சிதையாது பாதுகாக்க வேண்டும். ஆன்மாவிற்குள் அழுத்தமாகி விட்டால், இதன் உணர்வுகள், அழுத்தத்தின் தன்மை அதிகமாகி விட்டால், ஆன்மா சிதைந்து, வெறுப்பின் தன்மை பெருத்து விடும். பதியும் தன்மை இழந்துவிடுகின்றது.


இதையெல்லாம் தெரிந்து, அமைதி கொண்டு அருள்ஞானத்தைப் பெருக்குங்கள். உங்கள் வாழ்க்கையில் உங்கள் அனுபவம் பெரிதாகின்றது அருள் ஞானத்தைப் பெருக்கும் அனுபவமாக மாறுகிண்றது.


அருள் வாழ்க்கை வாழும் தன்மை வருகின்றது, இருள் சூழ்ந்த நிலைகளிலிருந்து, இருளை அகற்றிப் பொருள் காணும் நிலைகளை, நாம் பெறுகின்றோம். குரு வழியில், துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியைப் பெற, நாம் தியானிப்போம்.



4. புத்தகங்களில் மறைந்துள்ள உண்மைகளை நுகரும் முறை
உபதேசத்தைக் கேட்டுணர்ந்த அனைவரும், இதை நீங்கள் ஆழமாகப் பதிவு செய்து, உங்கள் வாழ்க்கையில் வரும் தீமைகளை அகற்றி, அந்த மெய்ஞானியின் உணர்வை உங்களுக்குள் வலுப் பெறச்செய்து, என்றும் அழியாப் பெருவீடு பெருநிலை என்ற ஒளிச்சரீரம் பெறும் நிலையை, நீங்கள் இந்த வாழ்க்கையிலே, இருள் சூழ்ந்த நஞ்சினை நீக்கி, ஒளி பெறும் உணர்வை வளர்க்கும் சக்தியை, நீங்கள் பெற வேண்டும் என்று, இந்த நூல் வடிவில், உங்களுக்கு நினைவு கூறுகின்றோம்.


இதைப் போல, சொல் வாயிலாக யாம் உபதேசித்ததை, எழுத்து வடிவில் வரும்பொழுது, எழுத்து வடிவிலே கொடுத்ததற்கும், சொல் வடிவிற்கும் சில குறைபாடுகள் இருப்பதனால், யாமே இதை எழுத முடியாததனால், நம் தியான வழி அன்பர்களை வைத்து இதை எழுதுவதினால், சிறிது மாற்றங்கள், குறை இருந்தாலும், இதை மீண்டும் நீங்கள் தியானிக்கும் போது, இதனின் உணர்வுகளை நீங்கள் நிறைவு பெறும் சக்தியாகப் பெறுகின்றீர்கள்.


ஆகவே குறையை எண்ணாது,
நீங்கள் மீண்டும், மீண்டும், இந்த நூலைப் படிக்கும் பொழுது,
இதில், இடைவேளையில் விடப்பட்ட சிறு குறையும்,
உங்கள் உணர்வுக்குள் தோன்றி,
அந்த உணர்வை, நிறைவு செய்யும் நிலையை அடைகின்றீர்கள்.


இதை நீங்கள் படிக்கும்போது, எத்தகைய குறை வந்தாலும், மீண்டும் இதைத் திரும்பத் திரும்பப் படிப்பீர்கள் என்றால், அந்த அருள் மகரிஷியின் உணர்வுகள் உங்களுக்குள் விளைந்து, இந்தப் புத்தக ரூபத்தில் வரும்பொழுது, சில குறைபாடுகள் இருந்தாலும், அந்த குறையின் மூலப் பொருளை நீங்கள் அறிந்துணர்ந்து, உண்மையை உங்களுக்குள் தெளிவாகத் தெரிந்து கொள்ளும் நிலை வருகின்றது.


இதைப்போல நீங்கள் படித்துப் பாருங்கள். உங்கள் வாழ்க்கையில், அந்த மகரிஷியின் அருள் சக்தியைச் சேர்த்துப் பாருங்கள். சேர்த்துக் கொள்ளுங்கள்.


இந்த புத்தகத்தில் எழுத்து வடிவிலே சில மாற்றங்கள் இருந்தால், மறைந்திருந்தாலும், தெளிந்திடும் சக்தியாக, உங்களுக்குள் ஏற்படுவதை நீங்கள் பார்க்கலாம்.


ஆகவே, இந்த மனித வாழ்க்கையில் குருநாதர் காட்டிய அருள்வழிப்படி, விண்ணின் ஆற்றல் நீங்கள் பெற்று, இந்த மண்ணின் ஆற்றலுக்குள் இருந்த தீமைகளை அகற்றி, இந்த உணர்வின் சக்தியை ஒளியாக மாற்றி, நீங்கள் விண்ணின் ஆற்றலை உங்களுக்குள் வளர்த்து, என்றும் அழியாத ஒளிச்சரீரமாக, சரீரத்தை மாற்றும் நிலை பெறும் நிலையே, நாம் இப்போது இருக்கும் தியானத்தின் அற வழிகள்.


ஆகவே, ஒவ்வொரு நாளும் இதைத் தெளிவாகத் தெளிந்து, கடைப்பிடித்து, இந்த வாழ்க்கையில் குருநாதர் காட்டிய அருள் வழியில், நீங்கள் மகரிஷிகளின் அருட்சக்தி பெற்று, அதே உணர்வின் சக்தியாக, ஒளியாக மாறும் சக்தி பெற்று, ஆக மகரிஷிகளின் அருள் வட்டத்தில் உங்கள் நினைவலைகள் சென்று, உங்கள் வாழ்க்கையில், அந்த மகரிஷிகளின் அருள் வட்டத்தில், உங்கள் நினைவலைகள் இருக்க வேண்டும் என்று பிரார்த்திக்கின்றோம்.


தபோவனத்தில் வெளியிடப்படும் அனைத்துப் புத்தகங்களையுமே, நீங்கள் படித்துணர்ந்து, மேற்கூறியவாறு சக்தி பெற வேண்டுமென்று, யாம் உங்களைச் சதா பிரார்த்திக்கின்றோம்.




கூட்டு தியானம் இருப்போம்; மகரிஷிகளின் அருள் சக்தி பெறுவோம்; ஆத்ம சுத்தி செய்வோம்; அன்றாட வாழ்க்கையில் ஏற்பட்ட நஞ்சினை வெல்வோம்.


மகரிஷிகளின் அருட் சக்தியால், இம்மனித வாழ்க்கையில் பொருளறிந்து செயல்படும் திறனைப் பெறுவோம். பொன்னான இந்த மனித சரீரத்தில், மகரிஷிகளின் அருள் உணர்வுடன் வாழ்ந்து வளர்வோம்.