Pages

நரசிம்ம அவதாரம்





1. இந்திரலோகத்தில் இரண்யன் புகுந்து, நல்ல செயல்களைச் செய்ய விடாது தடைப்படுத்துகின்றான்
நாம் ஞானியின் உணர்வை எடுத்து, நமது உடலுக்குள் செலுத்தப்படும் பொழுதுதான், நரசிம்ம அவதாரம். வாசற்படியில் அமர்ந்து, இரண்யனை மடிமீது வைத்துப் பிளந்ததாக, நரசிம்ம அவதாரக் கதைகள் உண்டு.


விஷ்ணுவிடம் ஈரேழு உலகத்திலும் எதிரியும் இல்லை, இறப்புமில்லை என்ற வரம் வாங்கிக்கொண்டான் இரண்யன். என்ற அசுரன் என்று, கதைகளில் சொல்லியுள்ளார்கள். ஒரு மனிதனின் வேதனைப்பட்ட உணர்வுகள், அந்த உடலுக்குள் சென்று, மற்ற நல்ல உணர்வைச் செயலற்றதாக்கி விடுகின்றது. இதை இரண்யன் என்று பெயர் வைத்தார்கள்.


இவ்வாறு, உடலிலிருந்து வெளிப்பட்ட இந்த உணர்வுகள் சூரியனின் காந்த சக்தியால் கவரப்படும் பொழுது, அந்த நஞ்சான செயல்களைச் செயல்படுத்தும் அணுவாக மாறுகின்றது. ஒருவர் வேதனைப்படுகிறார் என்னும் பொழுது, அசுரச் செயல்களைச் செய்து கொண்டிருக்கும், அந்த உணர்வலைகள் வெளிவருவதை, இந்தச் சூரியனின் காந்த சக்தி கவர்ந்தாலும்,
நாம் கண் கொண்டு பார்க்கும் பொழுது, “ருக்மணி”,
அவர்படும் வேதனை என்ற துயரத்தைக் காட்டினாலும்,
“சத்தியபாமா” அங்கே வேதனைப்படுகின்றார் என்ற உணர்வைக் கவர்ந்து
அந்த உணர்வு நமக்கு ஆத்மாவாக மாறிவிடுகின்றது.


ஆத்மாவாக மாறியபின்தான், நமது உயிருக்குள் பட்டு, அந்த உணர்வின் தன்மை இயக்குகின்றது. உயிருக்குள் இயக்கும் வெப்பம்தான் விஷ்ணு. நாம் வேதனைப்பட்ட உணர்வின் தன்மையை, நாம் கண் கொண்டு பார்த்து ஆன்மாவாக மாறி,
உயிருக்குள் பட்டு இயக்குவதை,
“விஷ்ணு வரம் கொடுத்துவிடுகிறான்” என்று கூறியுள்ளார்கள்.


உடலான “இந்திரலோகத்தில்” பல சிருஷ்டிகளும் நடக்கின்றது. அதனதன் உணர்வுகள் எடுத்துக் கொண்ட நிலைகளுக்கொப்ப, நமக்குள் அதனின் தன்மைகள் உருவாகிவிடுகின்றது. இந்த உடலான இந்திரலோகத்தில், ஒவ்வொரு உணர்வும் அதனின் நிலைகளில் இயங்குவதை, “தேவாதி தேவர்கள்” என்றனர்.


நமக்குள் உள்ள உணர்வின் தன்மை, பல நல்ல செயல்கள் செய்யும் இந்த நிலைகளில், வேதனையான அசுரச் சக்திகள் புகுந்தவுடனே, நமக்குள் நல்ல செயல்கள் நடைபெறுவதைத் தடைப்படுத்தி விடுகின்றது. இவ்வாறு, வேதனையான உணர்வு ஆகியவுடனே, உற்பத்தி செய்யும் இந்திரலோகத்தில், அது உருவாகும் நிலைகளில் அசுர சக்தி புகுந்து,


“எங்கள் நல்ல குணங்களைச் செயலாக்க முடியவில்லை” என்று சிவனிடம் முறையிடுகின்றன, தேவாதி தேவர்களான நல்லுணர்வுகள்.


2. விஷ்ணு, பிரம்மா, சிவன் இவர்களின் செயல்கள்
இவ்வாறு முறையிடும் பொழுது,
“விஷ்ணு வரம் கொடுத்து விட்டான்,
வருவதை அணைக்கத்தான் எனக்கு தெரியும்.
அசுரனை அழித்திடும் நிலை எனக்கில்லை” என்று
உடலான “சிவன்” சொல்லுகின்றான் என்றும் தெளிவாகச் சொல்லியுள்ளனர் ஞானிகள்.


அடுத்தப்படியாக, விஷ்ணுவிடமே கேட்கலாம். நாம் அனைவரும் போகலாம் என்று சிவன் சொல்லுகின்றான். உடலுக்குள் இருக்கும் வேதனைப்படும் உணர்வுகள் அனைத்தும், சிவனான உடலிலிருந்து, நினைவான எண்ணங்களைக் கொண்டு, நாம் மீண்டும் தன் உயிரை எண்ணிக் கேட்கப்படும் பொழுது, அந்த உயிரான விஷ்ணு, எனக்கு வரம் கொடுக்கத்தான் தெரியும். இவை அனைத்தும் பிரம்மா அல்லவா உருவாக்குகின்றான். அவனிடம் கேட்போம், என்று கூறி விஷ்ணுவும் வருகின்றான்.


ஆக இணையும் சந்தர்ப்பம், எதை இணைக்கின்றோமோ, அந்த உணர்வின் சந்தர்ப்பம் இணையும் பொழுது, அது (பிரணவமாகி) ஜீவன் ஆகி, அந்த அணுவின் சக்தி சக்தியாகி, உடலுக்குள் சிவமாக மாறி விடுகின்றது.


ஆனால் பிரம்மாவைக் கேட்டாலோ,
“எனக்கு உற்பத்தி தான் செய்யத் தெரியுமே தவிர,
அழிக்கத் தெரியாது” என்று கைவிரித்து விடுகின்றான். அங்கே தெளிவாக எடுத்துக் காட்டப்பட்டது.


எந்தக் கண்ணால் நாம் கண்டுணர்ந்தோமோ, அதனைக் கொண்டே,
இவையனைத்தும் கண்ணுக்கே தெரியும்.
கண்ணனுக்குத் தான் தெரியும், என்று இந்திரலோகத்தில் உள்ள அனைவருமே கண்ணனைத் தேடுகின்றனர்.


3. கண்னன் காட்டும் திருட்டுவழி
நாம் எதனைச் சிந்திக்கின்றோமோ, அதுவாகி
அந்த சிந்தனைக்குரிய நிலைக்கு வழிகாட்டுவான் “கண்ணன்”.
இந்த உடலுக்குள் நின்று, இவையனைத்தையும் தெளிவாகத் தெரிந்து கொள்வதற்காக, எவ்வளவு பெரிய காப்பியங்களை எளிதான நிலையில், நாம் வளர்ந்த நிலையும், வளர்ந்திட்ட நிலையும், நாம் செல்லும் மார்க்கங்களையும், தெளிவுற எடுத்துரைத்தார் வியாசக பகவான். அம்மகரிஷியை நாம் மறந்துள்ளோம். அக்காப்பியங்களையும் நம்முடைய நிலைகளுக்கே மாற்றி கொண்டோம்.


அம்மகரிஷி காட்டிய அறநெறிகளில், நம் மனித வாழ்க்கை -- கடைசி நிலை.
அவர் காட்டிய, ”கல்கியின் அவதாரத்தை நாம் அடைய
முடியும்” என்ற தன்னம்பிக்கை கொண்டு
இந்த உடலே குப்பையானாலும்,
இந்த குப்பைக்குள் உணர்வின் தன்மை மணியாக்கி,
குப்பைகளை வயலில் போடும்போது,
அதனின் சத்து மணியாவதைப் போல,
பல உணர்வின் தன்மை நம் உடலுக்குள் வந்தாலும்,
நமது உடலுக்குள் வைரத்தைப் போல,
அதை மணியாக்க வேண்டும்.


அந்த ஞானிகள் காட்டிய அருள்நெறிப்படி இதற்கு என்ன செய்வது? என்ற உபாயத்தைக் “கண்ணாகிய கண்ணன்” காட்டுகின்றான்.


”நீ பிரம்மா ஆகின்றாய். நீ உற்பத்தி செய்வதையே தடைப்படுத்தி விட்டால், தொல்லையில்லையே,


விஷ்ணு, நீ, வரம் இல்லை என்று சொல்லிவிட்டால் உற்பத்தியாகாதே.


சிவன், நீ ஏற்றுக் கொள்ளவில்லை என்றால் இது ஒன்றும் ஆகாதே”
என்று கண்ணன் கேட்கின்றான்.


பிரம்மா, “இதுதான் நடக்காது, எனக்கு உற்பத்தி செய்யத்தான் தெரியும்” என்க,
விஷ்ணு, “எனக்கு வரம் கொடுக்கத்தான் தெரியும்” என்க,
சிவன், “எனக்கு அணைத்துக் கொள்ளத்தான் தெரியும்” என்க
அவரவர் தொழிலை அவரவர்கள் செய்கின்றனர்.


இவையனைத்தும், இவ்வாறு உணர்வின் செயலாக இருந்தாலும்,
கண், வழிகாட்டினாலும்,
உயிர், தன் உணர்வின் தன்மையை இயக்கிக் காட்டினாலும்,
அந்த உணர்வின் தன்மையை,
உயிர் நமக்குள் ஜீவன் பெறச் செய்தாலும்,
உடலின் தன்மை, தனக்குள் இணைத்துச் செயலாக்கினாலும்,
இவை அனைத்துக்கும் மூலமாக, நாம் முன் சேர்த்துக் கொண்ட வினைகளுக்கு நாயகனாக, இன்று ஆறாவது அறிவு இருக்கின்றது.


இந்த ஆறாவது அறிவு கொண்டு, நாம் முன்பு சேர்த்துக்கொண்ட வினைகளுக்குச் சக்தியாக, இந்த மனித உடல் அமைந்து இருக்கின்றது, என்ற இப்பொருளின் தன்மையுணர்ந்து, அதனின் ஆற்றலைப் பருகிடும் நிலையாக, மெய்ஞானிகள் தெளிவுற எடுத்துக் கூறியுள்ளார்கள்.


அங்கே கண்ணன் கேட்கின்றான். “நீங்கள் அனைவரும் இதைச் செய்ய முடியவில்லையா” என்று கேட்டுவிட்டு, சிறிது நேரம் சிந்திக்கின்றான். நான் சொல்வதைக் கேளுங்கள், என்கிறான்.
“அதோ வருகிறான் நாரதன்”,
அவன் ரிஷியின் மகன்
அந்த ரிஷி தனக்கென்று தவம் இருந்து,
தன் உணர்வை வளர்த்துக் கொண்டவர்.
நஞ்சான உணர்வை வென்று, தன் உணர்வை ஒளியாக மாற்றியவர்.
அவனுடைய மகன் நாரதன் வருகின்றான்.
அவனைக் கேட்டு அறிவோம் என்கிறான், கண்ணன்.


“நாம் பட்ட துயரம் போதாதா, நாரதன் வந்தால் நமக்குள் கலகத்தை மூட்டி விடுவான்” என்று அனைவரும் அஞ்சுகின்றனர்.


இந்த உயிரின் தன்மை பேரண்டத்தின் நிலைகளை உருவாக்கி, அந்த உணர்வின் சக்தியை, தனக்குள் உருவாக்கி, துருவம் சென்று அடைந்தவர் “துருவ மகரிஷி”, இந்த உலகில் வாழ்ந்து, நஞ்சினை அடக்கி, உணர்வினை ஒளியாக்கி, இன்றும்
அவரிடமிருந்து வந்து கொண்டிருக்கும்,
அந்த ஒளிச்சுடராக மாற்றும் அந்த உணர்வின் அலையை
சூரியனின் காந்த சக்தி கவர்ந்து, இங்கே வருகின்றது. அதைத் தான் நாரதன் என்று பெயர் வைத்தார்கள்.


அவனிடம் கேட்டால், அவன் அனைத்தும் ரிஷியின் மகன் ஆனதால், அவன் தீமைகள் அனைத்தையும் போக்கும் வழி காட்டுவான். ஆக நஞ்சினை நீக்கிவிட்டு. உணர்வின் தன்மை ஒளியாக மாற்றியதை, நாரதன் என்று வைத்து, நாம் அறிந்துக்கொள்ளும் வண்ணம், தெளிவாக எடுத்து உரைத்துள்ளார்கள் மகாஞானிகள்.


கண்ணன் காட்டிய நெறிகள் கொண்டு, இந்த மண்ணுலகில் நஞ்சின் தன்மையை அடக்கிய, உணர்வின் தன்மையை ஒளியாக மாற்றிய, அந்தத் துருவ மகரிஷியின் அருளைப் பெறவேண்டும் என்று நம் நினைவினை, இந்தக் கண் அதை ஏற்கச் சொல்லுகின்றான்.


“அந்தத் துருவ மகரிஷிகளின் அருள் சக்தியைப் பெறவேண்டும் ஈஸ்வரா”,
நமது உயிர் நமக்குள் அகக் கண்ணாக இருந்து,
நாம் எண்ணியதை நமக்குள் அறியச் செய்கின்றது.
புறக்கண், பிற நிலைகளில் நடக்கும் இந்த உணர்வை நுகர்ந்து,
அந்த ஈசனான உயிருடன் காட்டப்படும் பொழுதுதான்,
அந்த அகம், உயிர் உள் நின்று,
கண்ணனாக இருந்து, நம் உடலுக்குள் தெரிய வைக்கின்றது.


உள் உணர்வை அறிய வைக்கும் உயிராகவும்,
புறக்கண் மற்றக்தை இழுத்துக் கவர்ந்து
இயக்கச் சக்தியாக, நாம் அறிந்திடும் நிலையாகவும்,
அவன் நெற்றிக் கண்ணைத் திறந்தால்,
சுட்டுப் பொசுக்கி விடுவான்
என்ற நிலை போல, அந்தக் கண்ணன் நாரதனிடம் கேட்டு, சரி என்கிற பொழுது, அந்தச் சக்தியை நாம் நுகரவேண்டும் என்று, தெளிவுற எடுத்துக் காட்டுகின்றான்.


அந்தச் சப்தரிஷி மண்டலமும், துருவ நட்சத்திரமும், இந்த மனிதனாக வாழ்ந்தவன், தான் நஞ்சை வென்று, உணர்வை ஒளியாக மாற்றி, ஒளியின் சரீரமாக உயிருடன் ஒன்றி, “சப்தரிஷி” – ஏழாவது அறிவாக அறிந்திடும் நிலையாகப் பொருள் கண்டு, பொருள் உணர்ந்து செயல்படும் திறன் பெற்றவன், அந்த நிலையைத் தெளிவாகக் காட்டினார்கள்.


அந்த உணர்வின் தன்மையைத்தான் நாம் நுகர்வதற்கு,
“அந்தத் துருவ மகரிஷிகளின் அருள் சக்தியை நாங்கள் பெறவேண்டும்,
இது எங்கள் உடல் முழுவதும் படரவேண்டும்,
எங்கள் ஜீவாத்மா ஜீவ அணுக்கள் பெறவேண்டும்”
என்ற நிலை, கண்ணன் காட்டும் திருட்டு வழி.


4. இரண்யவதம்
கண்ணன், கருவுக்குள் உள்ள குழந்தைக்கும் உபதேசித்தான் என்ற கதையும் உண்டு. நம் உடலுக்குள் ஒவ்வொரு அணுவும் கருவாக இருக்கின்றது. நாம் பிறர் திட்டுவதைக் கேட்டு உணர்வதை, கருவுக்குள் இருக்கும் இந்த உணர்வே, அவன் ஏசுகின்றான் என்று கண் எடுத்து உபதேசிக்கின்றது.


இதே கண்கள், அந்த அருள் ஞானி, இந்த நஞ்சினை வென்றவன் என்ற இந்த எண்ணத்தை எடுக்கப்படும் பொழுது, “அந்த மகரிஷிகளின் அருள் ஒளியைப் பெறவேண்டும் ஈஸ்வரா” என்று, கண்ணின் நினைவலையை உயிருடன் ஒன்றி, அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெறவேண்டும் என்ற ஏக்க உணர்வை, நினைவினை உயிருடன் ஒன்ற வேண்டும்.


அவ்வாறு, ஒன்றப்படும் பொழுது, உயிரின் இயக்கம் நமக்குள் சக்தியாக உணர்த்தும் நிலையும், அந்த உணர்வின் தொடர்பு கொண்டு, விண்ணை நோக்கி ஏகி, மகரிஷிகளின் அருள் சக்தியை நாங்கள் பெறவேண்டும் என்ற ஏக்க உணர்வுடன், எங்கள் உடல் முழுவதும் படர்ந்து, எங்கள் ஜீவான்மாக்கள் ஜீவ அணுக்கள் பெறவேண்டும், என்ற நினைவின் ஆற்றலை உட்செலுத்தும் பொழுது, பிராணயாமம். அந்த உணர்வின் சக்தி, நமது உடலுக்குள் ஜீவனாகின்றது.


நாம் துயரப்படுவோரைக் கண்டு, அந்த வேதனையை உணர்ந்தாலும், அந்த உணர்வின் தன்மை, நாம் பிறர் பட்ட துயரத்தை எண்ணிப் பார்க்கும் பொழுது, நம் ஆன்மாவாகி, நமக்குள் உள்ள ஆறாவது அறிவை இயங்கவிடாது அது செயல்படுத்தும்.


இதை மாற்றுவதற்கு, அந்த மகரிஷிகளின் அருள் சக்தியை நாங்கள் பெறவேண்டும், எங்கள் உடல் முழுவதும் படர்ந்து, எங்கள் ஜீவான்மாக்கள் ஜீவ அணுக்கள் பெறவேண்டும் என்ற உணர்வினை உடலுக்குள் செலுத்தும் பொழுது,
அந்த அருள் ஞானியின் உணர்வுகள் அங்கே செயல்பட்டு,
எப்படி சூறைக் காற்று வரும் பொழுது,
விஷத்தின் தன்மையை அங்கு ஈர்க்கின்றதோ,
இதைப் போல,
விஷத்தை நீக்கிவிட்ட, அந்த விஷத்தை அடக்கிவிட்ட
அந்த அருள் ஞானியின் உணர்வின் தன்மையை,
நமக்குள் வேதனையை அடக்க உள்ளே செலுத்தப்படும் பொழுது,
உடலிலிருந்து வெளிப்படும் மணம், மாற்றம் பெறுகின்றது.


நமக்கு முன், நாம் வேதனைபட்ட உணர்வை எடுத்துக் கொண்டிருக்கின்றோம் அல்லவா.
அந்த வேதனையான உணர்வே இரண்யன்.
வாசல்படி என்பது மூக்கு. இங்கே அமர்ந்துள்ளான் நாராயணன்.
ஆக, நாராயணன் என்பது சூரியன்.
இங்கே நமக்குள் நரநாராயணனாக, வாசல்படி மீது அமர்ந்து,
மடிமீது வைத்து இரண்யனைப் (நஞ்சினை – தீமைகளை) பிளந்து,
ஒளியின் சுடராக தனக்குள் செயலாக்குகின்றான்.


5. பிரகலாதன்
ஆறாவது அறிவின் துணைக் கொண்டு, மகரிஷிகளின் உணர்வுகளை எவ்வாறு எடுக்க வேண்டும்? என்று பிரகலாதன் கதையைக் காட்டி, நமக்குத் தெளிவான நிலைகளில் கூறியுள்ளார்கள் ஞானிகள்.


பிரகலாதன் என்றால், நமது ஒவ்வொரு எண்ணங்களும் நமக்குள் பிறக்காமல் பிறப்பது. நாம் எதை எண்ணுகின்றோமோ, அதையெல்லாம், பெறாமல் பெறும் அந்த உணர்வின் சக்தியாக, நமக்குள் இயக்கியது. பிரகலாதன் என்பதின் பொருள் இதுதான்.


நாம் எண்ணிய உணர்வு நமக்குள் வரும் பொழுது, அந்தக் கதையைக் காட்டி, இந்த உண்மையின் ஒளிச்சுடராக, அவன் எண்ணிய நிலைகள் கொண்டு அதுவே காட்டுகின்றான்.


பிரகலாதன் என்ன சொல்லுகின்றான்? “ஹரிவோம் நமோ நாராயணா”,
இந்த சூரியனின் இயக்கமாக,
அந்த உணர்வின் சக்தி நமக்காக,
நமக்குள் இருந்து, ஒளியாக அறிந்திடும் செயலாக
நமக்குள் நின்று, அந்த ”நாராயணன்” இயக்குகின்றான்.


“ஹரிவோம்” எனக்குள் நின்று ஜீவனாக அந்த நாராயணன் இயக்குகின்றான். “நமோ” நமது சரீரத்தை இயக்கிக் கொண்டிருக்கின்றான், என்று பொருள்பட அன்று வியாசகர் தெளிவாக எடுத்துரைத்துள்ளார்.


அந்த அருள் ஞானியின் உணர்வு இங்கே இருக்கின்றது. அருள் ஞானியின் உணர்வை எப்படிக் கவர வேண்டும்? என்று நமது குருநாதர் சொன்னார். அவர் காட்டிய வழியில் அது உங்களுக்குக் கிடைக்க வேண்டும்.
அந்த அறிந்திடும் சக்தி உங்களுக்குள் ஊழ்வினையாகப் பதிவாகி, அந்த உணர்வின் தன்மை கொண்டு ஏங்குவீர்கள் என்றால், உங்களுக்குள் அனைத்து இருளையும் நீக்கி, ஒளியின் சிகரமாக வாழ முடியும் என்று இதை உபதேசித்தது.


மெய்ஞானிகளின் அருள் ஒளி பெறவேண்டும், என்று ஏங்கி தியானிக்கும் அனைவரும் எல்லா மகரிஷிகளின் அருள் சக்தி பெற, எமது அருளாசிகள்.