சித்திரை 3, 4 பாதங்கள், சுவாதி, விசாகம் 1, 2, 3 பாதங்கள் வரை
(பெயரின்
முதல் எழுத்துக்கள்: ர, ரி, ரு, ரே, த, தி, து, தே
உள்ளவர்களுக்கும்)
சர்ப்ப கிரகங்களின் வழிபாடு
சந்தோஷம் தரும்!
நல்ல தகவல்களையே நாளும் கேட்க
வேண்டுமென நினைக்கும் துலாம் ராசி நேயர்களே!
பிறக்கும் புத்தாண்டு சர்ப்ப
கிரகங்களின் ஆதிக்கத்தோடு பிறக்கிறதே! சந்தோஷம்
இல்லத்தில் குடிகொள்ள எந்த வழிபாட்டை மேற்கொள்ள வேண்டும் என்ற சிந்தனை, வருடப்பிறப்புக்கு
முன்னதாகவே உங்கள் மனதில் அலைமோதும். வருடத்தொடக்கத்தில்
அஷ்டமத்து குருவின் ஆதிக்கம் இருந்தாலும் ஜூன் மாதத்திற்கு மேல்
சுகங்களும் சந்தோஷங்களும் கூடும். பண வரவும் திருப்தி தரும்.
ஜென்மச்சனி ஒருபுறம்! ஜென்ம
ராகு மற்றொருபுறம்! ஏழில் கேது! எட்டில் குரு!
இத்தனைக்கும் மத்தியில் பிறக்கும் புத்தாண்டை பொன் கொழிக்கும் ஆண்டாக மாற்றிக்கொள்ள விரும்புவோரும், எடுக்கும்
முயற்சிகளில் எளிதில் வெற்றி கிடைக்க
விரும்புவோரும், அந்த நான்கு கிரகங்களுக்கு உரிய
சிறப்பு தலங்களுக்கு நாள், திதி, யோகம்
பார்த்து வழிபாடு செய்தால் நல்ல பலன்கள் உடனடியாக
கிடைக்கும்.
பேச்சாற்றல் மிக்கவர்கள்
நீங்கள். பிறர் உங்களிடம் பழகினால் அவர்கள் உங்களை மறக்க
முடியாத விதத்தில் நடந்து கொள்வீர்கள். நம்பியவர்களுக்கு கை கொடுத்து
உதவும் நல்ல உள்ளம் உங்களுக்கு உண்டு. மற்றவர்களின் துன்பங்களையும்
துயரங்களையும் கண்டு கண்ணீர் வடிப்பதோடு இல்லாமல் காசு, பணமும்
கொடுத்து உதவி செய்வீர்கள்.
உங்கள் ராசியில் உச்சம்
பெற்றிருக்கும் சனியை செவ்வாய் பார்க்கும் பொழுதெல்லாம்
எச்சரிக்கையோடு செயல்பட வேண்டும். எதையும் தானாக முடிவெடுத்து விடக் கூடாது.
உங்கள் சுய ஜாதகத்தில்
இருக்கும் கிரக நிலைகளையும் புத்தாண்டு கிரக நிலைகளையும்
ஒப்பிட்டு பாருங்கள். ஒன்றுடன் ஒன்று இணைந்து செயல்பட்டால் ஒப்பற்ற
வாழ்க்கை அமையும். இல்லையேல் ஒவ்வொரு நாளும் இடையூறுகளை சந்திக்கிற வாய்ப்பே உருவாகும்.
எண்கணித அடிப்படையில்
சுக்ரனுக்குரிய ஆண்டு பிறக்கிறது. உங்களது ராசிநாதன்
சுக்ரன் என்பதால் பெரும்பான்மையான பாதிப்புகள் ஏற்படாது. என்றாலும், பகை
கிரகங்களின் பார்வை படும் நேரத்தில் மட்டும் கொஞ்சம் கூடுதல்
கவனத்துடன் செயல்பட வேண்டியது அவசியமாகும். குரு பெயர்ச்சிக்கு பின்னால் கூடுதல் பலன் உங்களுக்கு கிடைக்கும்.
1–1–2013 முதல் 27–5–2013 வரை
இக்காலத்தில் உங்கள் ராசிக்கு 8–ல் குரு
சஞ்சரிக்கிறார். அதே நேரத்தில் வக்ர
இயக்கத்தில் குரு இருப்பது யோகம் தான். அதன்பார்வை பலம் உங்களுக்கு பக்கபலமாக இருக்க உதவி செய்யும். 6–க்கு அதிபதி
வக்ரம் பெறும்போது, உத்தியோகம், தொழில், ஜீவனம், கடன் சுமை
போன்றவற்றில் இருந்த பாதிப்புகள் அகலும்.
உத்தியோகத்தில் உயர்வு கிடைக்கவில்லையே என்று ஏங்கியவர்களுக்கு எதிர்பாராத விதத்தில் கிடைத்து மகிழ்ச்சி காண்பர்.
வாங்கல்–கொடுக்கல் களை ஒழுங்கு
செய்து கொள்வீர்கள்.
குருவின் பார்வை 2, 4, 12 ஆகிய
இடங்களில் பதிவதால் குடும்பத்தினரின் தேவைகளை
பூர்த்தி செய்வீர்கள். குலதெய்வ வழிபாட்டில் ஆர்வம் கூடும். கடுமையாக
முயன்றும் இதுவரை நடைபெறாத காரியம் இப்பொழுது துரிதமாக நடைபெறும். எதிரிகள் விலகுவர். லாப நோக்கத்தோடு பங்குதாரர்கள்
பழகுவர். திடீர் பயணங்கள் தித்திக்க வைக்கும்.
டி.வி., பிரிட்ஜ், மிக்சி
போன்றவை பழுது பார்த்துக் கொண்டிருக்கலாம். அவற்றை வந்த
விலைக்கு கொடுத்து விட்டு புதிய நூதன பொருட்களை வாங்குவதில் ஆர்வம்
காட்டுவீர்கள். விரயங்கள் ஏற்படும் முன்னதாக பணம் வந்து சேரும். வீடு வாங்க நினைப்பவர்கள் குடும்ப உறுப்பினர்களின்
யாருடைய ஜாதகத்தில் செவ்வாய் பலம் பெற்றிருக்கிறதோ
அவர்களின் பெயரிலேயே வாங்குவது நல்லது.
புத ஆதித்ய யோகம் இருப்பதால்
அந்நிய தேசத்தில் இருந்து அனுகூலச் செய்தி வந்து
சேரும். ஆயினும் நீண்ட தூர பயணங்களை யோசித்து ஏற்றுக் கொள்வது நல்லது. செவ்வாய் உச்சம் என்பதால் நிலபுலன்களின்
சேர்க்கை அதிகரிக்கும். பத்திரபதிவுகளில் கூடுதல் கவனம்
செலுத்துவது நல்லது.
சந்திர மங்கள யோகம் இருப்பதால்
குடும்பத்தில் சுப காரியங்களில் இருந்த தடை அகலும். வருடக்கணக்கில் திருமணம் பேசிப்பேசி விட்டு போனதே என்று
கவலைப்பட்டவர்கள். வருட தொடக்கத்திலேயே வரன்கள் வந்து
அலைமோதுவது கண்டு ஆச்சரியப்படுவீர்கள். பெண்களின்
சுப சடங்குகள் நடைபெறும். தங்களிடம் பணிபுரியும் நபர்களுக்கு நடைபெறும்
திருமணத்திற்கும் கொடுத்து உதவும் சூழ்நிலை உருவாகலாம்.
ஜென்ம சனி, ஜென்ம
ராகுவின் ஆதிக்கம் இருப்பதால் ஒரு சிலருக்கு பிள்ளைகளால்
தொல்லைகள் உருவாகலாம். பிரபலமானவர்களின் ஒத்துழைப்போடு அவற்றை தீர்த்துக் கொள்வீர்கள். தங்கம், வெள்ளி
போன்றவைகள் வாங்கி மகிழும் வாய்ப்பு
கிட்டும். முகம் தெரியாத நபர்களிடம் பழகும் போது முன்னெச்சரிக்கையுடன்
பழகுவது நல்லது.
28–5–2013 முதல் 31–12–2013 வரை
இக்காலத்தில் குரு மிதுன
ராசியில் சஞ்சரிக்கப்போகிறார். அங்கிருந்து கொண்டு
உங்கள் ராசியை பார்க்கிறார். அதுமட்டுமல்ல 3, 5 ஆகிய இடங்களையும் பார்க்கிறார். எனவே முன்னேற்ற பாதையை நோக்கி நீங்கள்
அடியெடுத்து வைக்கப்போகிறீர்கள். முக்கிய திருப்பங்கள் யாவும்
இக்காலத்தில் உருவாகலாம்.
குறிப்பாக எடுக்கும் காரியங்கள்
எளிதில் வெற்றி பெற வேண்டுமானால், குருவின் அருள் பார்வை தான்
தேவை. இந்த குருவின் பார்வை பதியும் இடமெல்லாம் தளர்ச்சி
நீங்கி வளர்ச்சி ஏற்படும். இதுவரை இருந்த துயரங்கள் விலகும். எதிரிகள்
உதிரிகளாகிப் போவர். லாபம் வரவில்லையே என்று கவலைப்பட்டவர்கள் அளவுக்கதிகமாக லாபம் வந்து புதிய தொழில்கள் எதை
செய்யலாம் என்று புன்னகையோடு பேசுவீர்கள். மதிப்பும், மரியாதையும்
உயரும்.
குறிப்பாக ராசியை குரு
பார்க்கும் பொழுது ஆரோக்கியம் சீராகும். பாயிலும், நோயிலும்
படுத்திருந்தவர்கள் பம்பரமாக சுழன்று பணிபுரிவர். தாய்வழி
ஆதரவு பெருகும். தாரத்தால் வருமானம் வந்து சேரும். உடன்பிறப்புகள் உங்கள் குணமறிந்து நடந்து கொள்வர். உற்சாகத்தோடு
பணிபுரிய தொடங்குவீர்கள். விலகிச்சென்ற
சொந்தங்கள் விரும்பி வந்து சேருவது கண்டு ஆச்சரியப்படுவீர்கள்.
நலம் யாவும் வீடு வந்து சேர, குரு கவசம் பாடி குருவை வழிபடுவது நல்லது.
குரு உங்கள் ராசிநாதன்
சுக்ரனுக்கு பகைவனாக இருந்தாலும் கூட பார்வையால் பலன்
கொடுப்பார். உங்கள் ராசிக்கு 5–ம் இடம் புனிதமடைவதால் பூர்வீக சொத்துக்களில் இருந்த வில்லங்கங்கள் அகலும். அதன்
மூலம் ஒரு பெரும் தொகை ஒன்று கிடைத்து அதை கொண்டு ஒரு
புதிய சொத்து வாங்குவீர்கள். வங்கிகளின் ஒத்துழைப்பும், வள்ளல்களின்
ஒத்துழைப்பும் கிடைத்து மகிழும் நேரமிது.
குருவின் வக்ர காலம்!
பகை கிரகம் எந்தெந்த நேரங்களில்
எல்லாம் வக்ரமாக இருக்கிறதோ? அப்பொழுதெல்லாம் நல்ல பலன்கள்
வந்து சேரும். உங்கள் ராசிக்கு 3, 6–க்கு அதிபதி
வக்ரம் பெறும்போது, முன்னேற்ற பாதையில் இருந்த
முட்டுக்கட்டைகள் அகலும். வாழ்க்கை தேவைகள் பூர்த்தியாகும். வளர்ச்சி
கூடும். வழிபாட்டில் கவனம் செலுத்துவீர்கள்.
வாய்தாக்கள் ஓயும். கூட்டு
முயற்சிகளை மாற்றம் செய்ய முன் வருவீர்கள். இழந்த
சொத்துக்களை மீண்டும் பெறுவீர்கள். உத்யோகம், தொழில்
உங்கள் பணியை பாராட்டி விருதுகளும் கிடைக்கலாம். உன்னதமான
வாழ்விற்கு அடித்தளமிட குடும்பத்தில் உள்ளவர்களின்
ஒத்துழைப்பு கிடைக்கும். கடிதம் கனிந்த தகவல்களை
கொண்டு வந்து சேர்க்கும்.
சனி, செவ்வாய்
பார்க்கும் காலம்!
எந்த கிரகத்தை எந்த கிரகம்
பார்த்தால் என்ன பலன் ஏற்படும் என்பதை ஜோதிட சாஸ்திரம்
சொல்கிறது. சில பார்வைகள் நன்மையை கொடுக்கும். சில பார்வைகள் நடப்பதை
நிறுத்தும். எனவே உங்களை பொறுத்தவரை இப்பொழுது கவனமுடன் செயல்பட வேண்டிய நேரம்.
4, 5–க்கு
அதிபதியான சனியை 7,8–க்கு அதிபதியான செவ்வாய்
பார்க்கிறார். இக்காலத்தில் கோபத்தை குறைத்துக்கொண்டு குணத்தோடு
செயல்படுவது தான் நல்லது. தேகத்திலும்
சோம்பல் அதிகரிக்கும். திறமை மிக்கவர்கள் உங்களை விட்டு விலகாமல்
பார்த்துக் கொள்வது நல்லது.
பயணங்களின்போது கவனம் தேவை.
வீடு கட்டும் முயற்சி விறுவிறுப்பாக செல்லலாம்.
ஆனால் வேற்று மனிதர்களின் குழப்படியால் பாதியிலேயே நிற்கலாம். நாடு விட்டு நாடு செல்பவர்கள் யோசித்து செல்வது
நல்லது.
பெண்களுக்கான சிறப்பு பலன்கள்
துலாம் ராசியில் பிறந்த
பெண்களுக்கு வருட தொடக்கத்திலேயே குடும்ப சுமை கூடலாம்.
கூடியிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. திடீர் ஊர் மாற்றம்.
இடமாற்றம் திகைப்படைய வைக்கலாம். கடுமையான முயற்சியில் செய்த காரியம் கை
கூடுவது போல் தோன்றி பிறகு கை நழுவி செல்லலாம். கணவன்–மனைவிக்குள்
கருத்து வேறுபாடு ஏற்படாமல் இருக்க விட்டுக் கொடுத்து செல்வது
நல்லது.
குரு பெயர்ச்சிக்கு பிறகு
சொத்து சேர்க்கையும் சொந்தபந்தங்களின் அரவணைப்பும்
உண்டு. ஜூன் மாதத்திற்கு மேல்
பிள்ளைகளின் கல்யாண கனவுகளை நனவாக்குவீர்கள்.
தாய்வழி தனலாபம் உண்டு. சனி, செவ்வாய் பார்வை காலத்தில் அங்காரக பிரீதியும் சனி பகவான்
வழிபாடும் அவசியம் தேவை.
எல்லாவற்றிற்கும் மேலாக ஜென்ம
ராகு, ஏழில் கேது என்பதால் யோகபலன்
பெற்ற நாளில் சர்ப்பசாந்தியை முறையாக செய்தால் வருடம்
முழுவதும் வசந்தமாக இருக்கும்.

