Pages

கல்யாணமானவரே சௌக்கியமா

திருமணமான புதிதில் சில பெண்களுக்கு ஒரு வகையான பாதிப்பு ஏற்படக் கூடும். இப்படி ஏற்படும் அந்த பாதிப்பை பார்த்து வாழ்க்கையின் சந்தோஷப் புத்தகத்தை முதன் முதலாக படிக்க ஆரம்பித்திருக்கிற புதுமணத் தம்பதிகள் மிகவும் குழம்பிப் போய் விடுவார்கள். கணவன், ‘என்ன இது திடீர்னு இப்படி ஒரு பிரச்சனை என்று சொல்கிறாளே’ என்று யோசித்து மனம் குழம்புவான். மனைவியோ, ‘இத்தனை நாளாக இல்லாமல் இப்படி ஒரு பிரச்சனை திருமணத்துக்கு பின்னர் தனது பிறப்பு உறுப்பில் வந்திருக்கிறது என்றால்… அது கணவன் மூலம் தான் தனக்கு வந்திருக்கும்’ என்று அதிரடியாக ஒரு முடிவுக்கு வந்திருப்பாள்.
இவ்வாறாக சில புதுமணத் தம்பதிகளை பாதிக்கும் பிரச்சனைக்கு ‘ஹனிமூன் சிஸ்டைட்டிஸ்’ என்று பெயராகும். இந்த பாதிப்பு திருமணமான புதிதில் சில பெண்களின் பிறப்பு உறுப்பை இ.கோலி என்ற கிருமி தாக்குவதால் ஏற்படும். இன்னும் சில பெண்களுக்கு ஹனிமூன் சிஸ்டைட்டிஸ் பாதிப்பானது…. திருமணமான பின்பு கணவனுடன் உடல் உறவில் முதன் முதலாக ஈடுபடும் போது, கணவனின் ஆணுறுப்பு மனைவியின் பிறப்புறுப்பில் உண்டாக்கும் கடுமையான உராய்வின் காரணமாகவும் உண்டாகலாம்.
பிறப்புறுப்பை சுத்தமாக, சுகாதாரமாக வைத்துக் கொள்ளாத பெண்கள்… முதன் முதலில் கணவனுடன் உடல் உறவில் ஈடுபடும் போது இந்த ஹனிமூன் சிஸ்டைட்டிஸ் பிரச்சனையை சந்திக்க நேரலாம். பிறப்புறுப்பை சுத்தமாக, சுகாதாரமாக வைத்துக் கொள்ளாத பெண்களின் பிறப்புறுப்பின் மேல்பகுதியில் கிருமிகள் வாடகை தராமல் குடியிருக்கும். இப்படியானவர்கள் முதன் முதலாக கணவனுடன் உடலுறவில் ஈடுபடும் போது, அங்கு குடியிருந்த கிருமிகள், சிறுநீர்ப் பைக்குள் சென்று விடும். இந்த கிருமி பெரும்பாலும் இ.கோலி (Escherichia coli) எனப்படும் பாக்டீரியாவாகும். அப்புறமென்ன ஹனிமூன் சிஸ்டைட்டிஸ் தான். திருமணமான புதிதில் சில தம்பதிகள் இந்த பாதிப்புக்கு உள்ளாவதால் தான் இதற்கு ஹனிமூன் சிஸ்டைட்டிஸ் என்று நாமம் சூட்டப்பட்டுள்ளது.
இந்த ஹனிமூன் சிஸ்டைட்டிஸ் காரணமாக பெண்களுக்கு அடிவயிற்றை பிசைவது போன்று வலிக்கும். சிறுநீர் கழித்து விட்டு வந்த அடுத்த நிமிடமே மறுபடியும் சிறுநீர் கழிக்க வேண்டும் போல் தோன்றும். உடல் உறவில் ஈடுபடும் போது மிகுந்த வலியில் பெண் துடிப்பாள்.
எல்லா பெண்களுக்கும் இந்த பாதிப்பு வரும் என்று எல்லா பெண்களும் மூக்கைச் சிந்த வேண்டாம். இது போன்ற பிரச்சனை வராமல் தப்பித்துக் கொள்ள வேண்டுமென்று நீங்கள் நினைக்கிறீர்களா? கணவன் மனைவி இருவரும் பிறப்புறுப்பைச் எப்போதும் சுத்தமாகவும் சுகாதாரமாகவும் வைத்துக் கொள்ளுங்கள் அது போதும். கணவனுக்கு ஒரு ப்ளீஸிங் அட்வைஸ்: ‘கிணத்து வெள்ளத்தை ஆற்று வெள்ளம் அடித்துக் கொண்டு போய் விடாது. ஆகவே நண்பரே… அவசரப் படேல்.
இந்த சிஸ்டைடீஸ் ஒரு சிறுநீர் மண்டல தொற்றுக்களில் ஒன்று எச்.கோலி தவிர இதர நுண்ணுயிர்களாலும் ஏற்படும். சிஸ்டைடீஸ் தவிர பெண்களுக்கு காண்டிடா மற்றும் ட்ரைகோமோனியாசிஸ் என்ற தொற்றுக்களும் ஏற்படும். கான்டிடா (Candida) எனும் ஃபங்கஸ் கான்டிடாஸிஸையும், ப்ரோடசோவா (Protozoa) பிரிவை சேர்ந்த ட்ரைகோமனஸ், ட்ரைகோமோனிஸ் வஜினைட்டிஸ்ஸையும் உண்டாக்கும். இந்த மூன்று தொற்றுகளால் கிட்டதட்ட ஒரே மாதிரியான உபாதைகளை உண்டாக்கும். உடலுறவு இந்த தொற்றுநோய்கள் தாக்கும் காரணங்களுள் ஒன்று. தேநிலவு மகிழ்ச்சியை கொடுக்கும் இவை வராமலிருக்க, வந்த பின் காக்க சில வழிமுறைகள்
1. நிறைய தண்ணீர் குடிக்கவும்
2. உடலுறவுக்கு முன் பிறப்புறுப்புகளை சுத்தமாக வைத்திருக்கவும்.
3. உடலுறவுக்கு முன்பும் பின்பும் சிறுநீர் கழிக்கவும். இதனால் தொற்றும் கிருமிகள் வெளியே வர வாய்ப்புண்டு
4. இளநீர், பார்லி தண்ணீர், ஆரஞ்ச், சாத்துக்குடி ஜுஸ் இவற்றை குடிக்க வேண்டும்.
5. பருத்தி உள்ளாடைகளை பயன்படுத்தவும்.
6. குளியல் ‘டப்’ (Bath tub) பில் குளிக்காமல் ‘ஷவரில்’ குளிக்கவும்.
7. முடிந்த மட்டும் தயிர் சாப்பிடவும். இதில் உள்ள லாக்டோ பாசிலஸ் அசிடோபைலஸ், அமிலத் தன்மையால் பாக்டீரியாவை அழிக்கும்.
8. நெல்லிக்காய், வெல்லம் இவற்றை 6 கிராம் அளவில் தினமும் உட்கொள்ளலாம்.
9. நீங்கள் தேநிலவு சென்றிருக்கும் இடத்தில் கிடைத்தால் இவற்றை உட்கொள்ளவும். முள்ளங்கி சாறு 25 மி.லி. அல்லது ஒரு கப் வெந்நீரில் 1/2 எலுமிச்சம் பழச்சாற்றையும், ஒரு மேஜைக்கரண்டி தேனையும் சேர்த்து குடிக்கவும்.
இந்த தொற்று வியாதிகள் ஆண்களை விட பெண்களை 50 மடங்கு அதிகம் தாக்கும். காரணம் பெண்களின் சிறுநீர் தாரை (Urethra) குறைந்த நீளமுடையது (3.5 செ.மீ.) ஆனால் ஆணின் சிறுநீர் தாரை 20 செ.மீ. ஆண்களில் 20 செ.மீ. நீட்ட தாரையை நுண்ணுயிர்கள் / கிருமிகள் கடப்பதற்கு நேரமாகும். அதற்குள் சிறுநீரால் அவை வெளியே தள்ளப்படலாம்.
உடல் உறவில் ஈடுபடும் போது மென்மையாகவே செயல்படு மனமே… என்று விரைந்து பறக்கும் உங்கள் மனப் பறவைக்கு உத்தரவு போடுங்கள். செக்ஸ் செயல்பாடு என்பது பரபரவென்று தூள் கிளப்பும் கபடி விளையாட்டுமல்ல; சென்டிமீட்டர் சென்டிமீட்டராய் யோசித்து யோசித்து விளையாடும் செஸ் விளயாட்டுமல்ல; மென்மையாகவும் அதே நேரத்தில் தேவையான வேகத்தையும் கூட்டிக் கொள்கிற மெத்தை வித்தை.
இந்த ஹனிமூன் சிஸ்டைட்டிஸ் பாதிப்பு வந்தால் பெண்கள் நிறைய தண்ணீர் குடித்து வருவதுடன் சாத்துக்குடி, ஆரஞ்சு போன்றவற்றினைச் சாப்பிட்டு வந்தாலே போதும். பத்து பதினைந்து நாட்களில் தானாகவே குணமாகி விடும். பிரச்சனை சரியாகாமல் தொடர் கதையாகிக் கொண்டு போனால் உடனடியாக மருத்துவ ஆலோசனை பெற வேண்டும்.