Pages

நீரிழிவும் செக்ஸ் குறைபாடும்

நாள்பட்ட நீரிழிவு நோயால் ஏற்படக்கூடியது நரம்புத்தளர்ச்சி. நீரிழிவு உடையவர்கள் அனைவருக்குமே, நரம்புத்தளர்ச்சி தலைதூக்க ஆரம்பிக்கும். நீரிழிவு நோயால் முதலில் பாதிக்கப்படுவது நரம்பு மண்டலம். எனவே நீரிழிவு உடையவர்களுக்கு அதுவும் குறிப்பாக நரம்புத்தளர்ச்சி ஏற்படும். அதனால் ஆண்மைக்குறைவு ஏற்படும். நீரிழிவு உடையவர்களுக்கு ஆண்மைக் குறைவு ஏற்படுமென்றாலும் சர்க்கரையின் அளவை கட்டுப்பாட்டிற்குள் வைத்துக் கொள்ளாவிட்டால் முழு அளவில் ஆண்மைக்குறைவு ஏற்பட்டு விடும்.

ஆண்மைக்குறைவு
ஆண்களில் பாலுறவின் போது நரம்புகளின் செயல்பாடு மிகவும் முக்கியமானது. பாலுறவின்போது நுகர்தல் (வாசனையை உணரும் திறன்) மற்றும் உணர்தல் (தொடுவதை உணரும் திறன்) ஆகிய இரண்டும் தான் பாலுறவின் செயல்பாட்டிற்கு தூண்டுதலாக அமைகின்றன. இதனை சிறப்பாக செய்பவை சிறிய நுண்ணிய நரம்புகள் தான். பெண்கள் மாதவிலக்கின் போது பாலுறவில் அதிக நாட்டம் கொள்வதும் இந்த நுகரும் திறன் அதிகரிப்பதும் தான் காரணம் என ஆராய்ச்சிகளில் கண்டறியப்பட்டுள்ளன.
பார்வை நரம்புகளும் பெரிய அளவில் பாலுணர்ச்சியை தூண்டக்கூடியவை. பார்வை நரம்புகள் செயல்பாட்டால் தான் எதிர் பாலினரைக் கண்டவுடன் பாலுணர்வு அதிகமாகின்றது. இரவு தூங்கும் பொழுது கனவில் பாலுறவு கொள்வது போலக் கனவு வருவதும் இந்த பார்வை நரம்புகளின் செயல்பாட்டால் தான்.
தொடு உணர்வு தான் ஆணுறுப்பிற்கு விரைப்பைத் தருகிறது. ஆணுறுப்பின் முன்புறமுள்ள டார்சஸ் நரம்புகள் அதிக தொடு உணர்வு கொண்டவை. எனவே தான் ஆணுறுப்பைப் பிறர் தொட்டவுடன் விரைப்பு ஏற்படுகின்றது.
ஆணுறுப்புக்கு விரைப்புத் தன்மை ஏற்படுவதற்கு அதிக இரத்த ஒட்டம் தேவைப்படுகிறது. விரைப்பு ஏற்படும் பொழுது இரத்த நாளங்கள் விரிவடைகின்றன. இயல்பாக இருக்கும் பொழுது சிறியதாக இயல்பாக இருக்கின்றன. நீரிழிவு நோய் ஏற்படும் பொழுது இந்த இரத்த நாளங்கள் செயல்பாட்டை இழக்கின்றன. இதனால் சரியாக இரத்த நாளங்கள் உறுப்பினுள் இரத்தத்தை தேக்கிட சிரமப்படுகின்றன. மொத்த உடலின் இரத்த ஒட்டமும் சீராக இயங்கிட முடியாததால் தண்டுவடம் பாதிப்படைகிறது. இதனால் ஆண் உறுப்பு விரைப்படைவது தடைபடுகிறது.
மன இறுக்கம் தோன்றி பாலுறவு வேட்கையைத் தடை செய்து விடுகிறது. இவ்வாறு பல விஷயங்கள் நீரிழிவு நோயாளியின் ஆணுறுப்பு விரைப்படைவதைத் தடை செய்கின்றன.
சர்க்கரை நோய் கட்டுப்பாட்டில் இருந்தாலும் மற்ற சில விஷயங்கள் விரைப்படைவது தடைபடுகின்றது. அவை நோய்க்கிருமிகள், அதிக கொழுப்புச் சத்து (கொலஸ்ட்ரால்) உயர் இரத்த அழுத்தம், பிற மருந்து மாத்திரைகள் ஒவ்வாமை அல்லது அழற்சி, தைராய்டு, டென்ஷன், மனஅழுத்தம், சுரப்பிக் கோளாறுகள், வயது, எடை, உடல் பருமன், உடல் உழைப்பின்மை. இவை அனைத்துடனும் சர்க்கரை நோய் அல்லது சர்க்கரையின் அளவு அதிகரிப்பதால் ஆண்மைக்குறைவு ஏற்படுகின்றது.
பெண்மைக்குறைவு
பெண்களில் தசைகளை இயக்கும் நரம்புகள் அனைத்தும் பெண்ணின் சிறுநீரகம், கீழ்முதுகு, இடுப்புப்பகுதி, கருவுறுப்பு மற்றும் சிறுநீர்ப்பை ஆகியவற்றில் உள்ளன. பெண்களில் கீழ்முதுகு மற்றும் இடுப்பு பகுதியில் உள்ள நரம்புகள் பெண் உறுப்பிற்கு இரத்தம் செலுத்துகின்றன. இவை மிகவும் நுண்ணிய நரம்புகள் ஆகும். இவை எளிதில் சேதமடையக் கூடியவை. இந்த நரம்புகள் அனைத்தும் நுண்ணிய கிளை நரம்புகளாகும். இவை தான் பெண்ணுறுப்பின் செயல்பாட்டை – அதாவது சுருங்குவது விரிவது போன்ற செயல்பாடுகளை செய்கின்றன. இத்தகைய நரம்புகள் நுண்ணிய நரம்புகளாகவும், ஒப்பற்ற செயல்திறன் கொண்டவையாகவும் இருப்பதனால் எளிதாக பாதிக்கப்பட்டு செயல்பாடுகளில் சிக்கல் ஏற்படுகின்றது.
சர்க்கரை நோயின் போது நரம்புகளால் பெரிதும் பாதிக்கப்படுவதால் தொடு உணர்வு மற்றும் நரம்புகளின் செயல்பாட்டுக் கட்டளைகள் தடைபடுகின்றன. இதனால் உணர்ச்சி ஊட்டப்படுவதும், கருவுறுப்புகளில் செயல்பாடும் தடைபடுகிறது. இத்தகைய பெண்ணுறுப்பு விரிவடையாத நிலையில் உடல் உறவு கொள்வது வலியையும், வேதனையும் கொடுக்கும்.
ஆண் ஆனாலும், பெண் ஆனாலும் சர்க்கரை வியாதியால் ஏற்படும் பிரச்சனைகள் பெரிதும் நரம்பு மண்டலத்தை பாதிக்கின்றன. ஆண்களில் ஆண்மைக்குறைவு ஏற்படுவது சர்க்கரை வியாதி உடையவர்களுக்கு அதிகமாக ஏற்படுகின்றது. சாதாரண ஆணை விட பத்து பதினைந்து ஆண்டுகள் முன்னதாகவே நீரிழிவு உடையவர்களுக்கு ஆண்மைக்குறைவு ஏற்படுகின்றது.
ஆண்மைக்குறைவு ஏற்படாமல் தவிர்க்கவும், குறைபாடு இருப்பின் அவை அதிகரிக்காமல் தடுக்கவும், முன்னெச்சரிக்கை அவசியம். தக்க நடவடிக்கைகள் மேற்கொண்டு வாழ்க்கை முறையை மாற்றி அமைத்துக் கொள்வது அவசியம். மாற்றத்தை ஏற்படுத்தி இரத்தத்தின் சர்க்கரை அளவை கட்டுப்பாட்டுக்குள் வைத்துக் கொள்வது அவசியம்.
கட்டுப்பாடான வாழ்க்கை, போஷாக்கான அதே சமயம் சர்க்கரை அளவை அதிகரிக்காத உணவு முறை, உடற்பயிற்சி, தக்க இடைவெளியில் பரிசோதித்துக் கொள்வது, தகுந்த மருத்துவ ஆலோசனை, மருத்துவம், இரத்த அழுத்தம் இருப்பின் அதனையும் கட்டுப்பாட்டிற்குள் வைப்பது போன்றவை அத்தியாவசியத் தேவை.
ஆண்மைக்குறைவு ஏற்பட்டாலும் சர்க்கரை அளவு கட்டுப்பாட்டிற்குள் இல்லாது போனாலும் தக்க மருத்துவரை நாடி தகுந்த மருத்துவம் செய்து கொண்டால் நீரிழிவுடன் வாழலாம்.
இயற்கை முறையிலும் மூலிகை முறை மருத்துவத்திலும் இவற்றிற்கு இன்றியமையாத எண்ணற்ற வழி முறைகளும் மூலிகைகளும் உள்ளன. அவற்றை காலம் தாழ்த்தாமல் தக்க சமயத்தில் கலந்து ஆலோசித்து உபயோகித்து நீரிழிவுடன் வாழப் பழகிக் கொள்ள வேண்டும்.