நீங்கள் ஏதேனும் வேலையாக, வீட்டிலிருந்து வெளியே செல்கின்றீர்கள், அல்லது ஒரு தொழிலைத் தொடங்குகின்றீர்கள் என்றால், அது சமயம்,
அகஸ்திய மாமகரிஷிகளையும்,
அவர் துருவ மகரிஷியான நிலையையும்,
துருவ நட்சத்திரமான நிலையையும்,
இந்த மூன்று நிலைகளையும் ஏங்கி எண்ணுங்கள்.
“அதனின் உணர்வுகளை நாங்கள் பெறவேண்டும்’
என்று எண்ணியபின், உங்கள் தொழிலைச் செய்யத் தொடங்குங்கள்.
இந்த முறையில், உங்களில் நீங்கள் பதிவு செய்யும் ஞானவித்துக்கள், உங்கள் உடலில் உள்ள இரத்தங்களில் கருவாக வளர்ச்சி பெற்று, நீங்கள் உங்களில் எண்ணிப் பதிவு செய்ததைப் பெறக்கூடிய தகுதியான நிலைகளை, அந்த உணர்வின் அணுக்களை, உங்கள் இரத்த நாளங்களில் பெருக்குகின்றது. முதலில் கரு முட்டையாகின்றது. பின், அதனின் உணர்வின் தன்மையை எண்ண, எண்ண, அவைகள் அணுக்களாக வளர்ச்சியடைகின்றது.
உதாரணமாக, ஒரு கோழி முட்டையிட்டு அதை அடைகாத்து, அதன் உணர்வின் தன்மை கொண்டு அங்கே வெப்பமாக்குகின்றது. அதன்பின், அந்த அணுவின் தன்மை, வெப்பத்தின் துடிப்பு கொண்டு, கருவின் துணை கொண்டு, குஞ்சாக விளைகின்றது.
குஞ்சாக வெளிவந்த பின், தாய்க் கோழி எதைத் தன் உணவாக எடுத்துக் கொண்டதோ, அதே உணவைக் குஞ்சும் தன் உணவாக, உட்கொள்ளத் தொடங்குகின்றது.
இதைப் போன்று, யாம் இப்பொழுது உங்களுக்குள், உபதேசத்தால் நுகரச் செய்த உணர்வுகள் அனைத்தும், உங்களிடத்தில் கருவாக உருவாகின்றது. அதனின் உணர்வுகளை நீங்கள் மீண்டும், மீண்டும், உங்களில் நினைவுபடுத்தும் பொழுது, உங்களிடத்தில் அந்த உணர்வின் அணுக் கருமுட்டைகள் வளர்ச்சி பெறுகின்றது.
நீங்கள், இதே எண்ணத்தைத் திரும்பத் திரும்ப எண்ணும் பொழுது, அது உங்களுக்குள் அடைகாக்கப்படுவது போன்றதாகி விடுகின்றது.
கோழி, தான் இரை தேடுவதற்கு வெகு தூரம் சென்றிருந்தாலும், தன் குஞ்சின் நினைவு கொண்டு, தான் முட்டையிட்ட அதே இடத்திற்கு வந்து, அடைகாப்பதைப் போன்று, நீங்கள் எந்த தொழிலுக்குப் போவதாக இருந்தாலும், மகரிஷிகளின் அருள் உணர்வை உங்களுக்குள் விளையச் செய்து, அடிக்கடி இந்த நிலைகளை எடுத்து பழகிக் கொண்டால், நீங்கள் வளர்த்துக் கொண்ட இந்த உணர்வுகள், உங்களுக்குள் அடிக்கடி நினைவு படுத்தி அந்த சக்தியை நீங்கள் உங்களுக்குள் வளர்க்கும் திறனும், அடைகாப்பது போன்று மகரிஷிகளின் அருள் சக்தியும், விளைகின்றது.
கோழி தான் இரை தேடும் பொழுது, தன் குஞ்சுகளைக் கூவி அழைத்து, தன் குஞ்சுகளுக்கு இரை கொடுப்பதைப் போன்று, நமக்குள் அருள் சக்தியின் உணர்வுகள் அணுக் கருவாகிவிட்டால், இதனின் உணரச்சியின் கிளர்ச்சிகள் நமது இரத்த நாளங்களில் கிளம்பும் பொழுது,
நமது உயிர் அந்த உணர்வுகளை இயக்கி,
காற்றில் கலந்துள்ள, அருள்மகரிஷிகளின் அருள் உணர்வுகளைக்
கண்கள் வழியும்,
காதுகள் வழியும்,
உடல் வழியும்,
நாம் சுவாசிக்கும் அந்த உணர்வு வழியும்
நமக்குள் சுவாசித்து, நமது உடலுக்குள் பரவச் செய்து, அந்த ஒளியான அணுக்களாக உருவாக்குகின்றது.
நாம் அருள் மகரிஷிகள் காண்பித்த அருள் வழியில் நடந்தால், அது நமக்குள் வளர்ச்சி பெற்று, பின், நம்முடைய நினைவாற்றல், மாமகரிஷி அகஸ்தியன் சென்ற பாதையில் செல்லும்.
நமது வாழ்க்கையில் எத்தகைய விருப்பு, வெறுப்புகளை நுகர்கின்றோமோ, அது நமக்குள் கருவாகி விடுகின்றது. உதாரணத்திற்கு, நாம் ஒன்றுமே செய்யவேண்டாம். ஒருவர் தாக்கப்படுவதை உற்று நோக்கி, அதனின் அச்ச உணர்வை நாம் நுகர்ந்துவிட்டால், அந்த அச்சத்தின் உணர்வுகள் நமது உடலில், ஊழ்வினை என்ற வித்தாகப் பதிவாகிவிடுகின்றது.
நாம் நுகர்ந்தறிந்த உணர்வுகள், நமது இரத்த நாளங்களில் கருவாக உருப் பெற்றுவிடுகின்றது. இப்படி பதிவாகி, பதிவானதை மீண்டும் நினைவுபடுத்தினால், அதனின் உணர்வுகளை நாம் நுகரும் சக்தி பெறுகின்றோம். அப்படி நுகரும் சக்தி பெற்றபின், அந்த உணர்வுகளை, நமது உயிர் உடல் முழுவதும் சுழலச் செய்கின்றது.
அந்த உணர்வுகள் நமது இரத்த நாளங்களில் கலக்கப்படும்பொழுது, அணுக்கருக்களின் தன்மையினை அடைகின்றது. நமது உடலில் கருவான அணுக்களுக்கு, வீரியம் ஊட்டுகின்றது.
வேதனைப்படுவோருடைய நிலைகளை நமக்குள் பதிவாக்கிவிட்டால்,
முதலில் சில காலம் தெரியாது.
இந்த அச்சுறுத்தும் உணர்வுகள்
நமக்குள் முதலில் நுகர்ந்து,
அடைகாப்பது போன்று, அந்த அணுக்கருக்கள் வளர்ந்துவிட்டால்.
குஞ்சு தன் இரைக்காக கத்தும் பொழுது,
தாய் கோழி கூற்று பரப்பி,
தன் குஞ்சுக்கு இரை கொடுப்பது போன்று
நமது உயிர், உணர்வின் ஒலி அலைகளை எழுப்பி,
நமது சிறுமூளை பாகத்திற்கு எட்டச் செய்கின்றது.
பின், அந்த உணர்வின் தன்மை கொண்டு,
கண்களுக்கும், செவிகளுக்கும், மூக்கிற்கும்,
உடலுக்கும் கிளர்ச்சிகளை உந்தி
அதன்வழி சுவாசிக்கச் செய்து,
அதனின் எண்ணத்தை நமக்குள் பெறச் செய்து,
நமது இரத்த நாளங்களில் கலக்கச் செய்து,
நமது உடலில் உள்ள அணுக்கருக்களுக்கு, ஆகாரத்தைக் கொடுத்து உதவுகின்றது.
இப்பொழுது, நாம் அருள் மகரிஷிகளின் அருளுணர்வுகளை நமக்குள் பெறவேண்டும், என்ற உணர்வினை, நமது இரத்த நாளங்களில் அணுக்கருவாக உருவாக்கி, காலையில், நாம் தொழிலுக்கு செல்லும் பொழுதோ, தொழில் ஆரம்பிக்கும் பொழுதோ, இந்த உணர்வினை அடிக்கடி கூட்டினோம் என்றால், அதை அடைகாத்தது போன்றதாகின்றது.
அவ்வாறு அடைகாத்து, அந்த உணர்வின் தன்மை குஞ்சாகப்படும் பொழுது, நம்மையறியாமலே நமக்குள் அந்த எண்ணங்கள் வரும்.
இதனின் உணர்வுகளை நமக்குள் வளர்த்துவிட்டால்.
நாம் எண்ணுவதற்கு முன்பே,
அந்த உணர்வைக் கூட்டி,
நமக்குள் மகரிஷிகளின் அருள் உணர்வுகளை,
அந்த எண்ணங்களைத் தோற்றுவிக்கும்.
மகரிஷிகளின் அருள் உணர்வுகளைப் பெறவேண்டும் என்று எண்ண, எண்ண, அதனின் உணர்வுகள் நமக்குள் விளைகின்றது. அடைகாப்பது போன்று காத்து, (திரும்பத் திரும்ப நுகர்ந்த உணர்வுகள்) அந்த கருக்கள் நமக்குள் விளைந்து கொண்டேயிருக்கும்.
ஏனென்றால், நாம் நுகரும் உணர்வுகளெல்லாம், நம்முள் குஞ்சுகள் ஆனாலும், அடுத்தடுத்து நாம் தியானத்தில் எடுக்கும் பொழுது, இவைகளெல்லாம் கருக்களாகின்றன. பின், நினைவாக்கப்படும் பொழுது, அது வளர்ச்சி அடைந்து கொண்டே, இருக்கும்.
இப்படி நமது வாழ்க்கையில்,
ஒவ்வொரு நொடியிலும்,
ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும்,
ஒவ்வொரு குணத்திலும்,
ஒவ்வொரு உணர்விலும்,
அந்த மகரிஷிகளின் அருள் உணர்வுகளை, இணைத்துக் கொண்டே வரவேண்டும்.
அந்த மகரிஷிகள் தங்களுக்குள் வளர்த்துக் கொண்ட, அந்த விண்ணின் ஆற்றல் மிக்க சக்திகளை, அவர்கள் எவ்வாறு உயிருடன் ஒன்றிய உணர்வுகளை, ஒளியின் சுடராக மாற்றி, இன்று சப்தரிஷி மண்டலத்தில் இணைந்து, வாழ்ந்து வளர்ந்து கொண்டிருக்கின்றார்களோ, அந்த அரும் பெரும் சக்திகளை, நமக்குள் அணுக்கருக்களாக மாற்றிக் கொண்டே இருக்க வேண்டும். அதற்குத்தான் இதை உபதேசிப்பது, அந்த நிலைகளை அனைவரும் அடைவதற்கு, எமது அருள் ஆசிகள்.
(மே 1998)
உதாரணமாக, நாம் ஒருமுறை “திடுக்” என்று பயந்துவிட்டால், அதனின் உணர்வின் கரு நம்முள் உருவாகிவிடும். மீண்டும் நினைவு கொண்டால், அது உணர்வின் அணுவாக, நமது இரத்த நாளங்களில் விளைந்து, நமது உடல் முழுவதும் சுழலப்படும் பொழுது, உடலில் அந்த அணுக்கள் இணைந்து குஞ்சாகப் பெருகி விட்டால், நம்மையறியாமலேயே “திடுக் திடுக்” என அஞ்சும் உணர்வு வரும். இதை நீங்கள் அறிய முடியும்.
இவைகளெல்லாம், யாம் உங்களுக்கு நினைவு படுத்துவதற்கு காரணம், நாம் நமது வாழ்க்கையில் இத்தகைய அஞ்சும் உணர்வோ, வெறுக்கும் உணர்வோ, தொழில் நஷ்டமோ, இவைகளை எண்ணி நுகரும் பொழுது, நாம் நுகர்ந்தது அனைத்தும் நம் உடலில் இரத்த நாளங்களாக, கருவாக உருவாகிவிடுகின்றது.
“நஷ்டமாகிவிட்டது, நஷ்டமாகிவிட்டது” என்று திரும்பத் திரும்ப எண்ணினால், அது அடைகாத்தது போன்று ஆகிவிடுகின்றது. அது உடலில் குஞ்சாக விளைந்து விட்டபின், இவர்களிடம் போய்
நீங்கள் நல்லது எது சொன்னாலும்,
“எனக்கு நஷ்டம், நஷ்டம்” என்றுதான்
சொல்லிக் கொண்டிருப்பார்கள். “நஷ்டத்திலிருந்து மீளவேண்டும்” என்ற எண்ணங்களே இவர்களுக்கு வராது. ஏனென்றால், எடுத்துக் கொண்ட உணர்வுகள்தான் பேச வைக்கின்றது.
கடல்வாழ் மீன்கள் எங்காவது ஒரு துளி இரத்தத்தினுடைய மணத்தை நுகர்ந்துவிட்டால் போதும், விரைந்து அந்த இடத்திற்கு வந்துவிடும். தொலைவில் இருக்கக்கூடிய மீன்களை, அருகே வரச்செய்து பிடிக்க விரும்பினால், தூண்டிலில் இரையை வைத்துச் சிறிது ஒலி எழுப்பினால், தொலைவில் இருக்கும் மீன்கள், தூண்டில் இருக்கும் பக்கம் வந்துவிடும்.
இதைப் போன்று,
நமது உடலிலுள்ள உணர்வின் அணுக்கள்,
உணர்ச்சிகளை எதன்வழி தூண்டுகிறதென்றால்,
நமது இரத்த நாளங்களின் வழிதான்.
இராமயாணக் காவியத்தில், இராமன், குகனை நண்பனாக ஆக்கிக் கொண்டான் என்று உரைத்திருப்பார்கள். அதில், குகன் ஆற்றில் படகையோட்டி வாழ்க்கை நடத்தி வருபவன் என்றும் உரைத்திருப்பபார்கள்.
ஆக, நமது உடலில் உள்ள இரத்த நாளங்களை ஆறாகவும்,
நம் எண்ணங்களால் உருவாக்கிய, உணர்வுகள் எதுவோ,
அவைகள், நமது இரத்த நாளங்களில் சுழன்று வருவதை
உணர்த்துவதற்குத்தான் இராமயாணத்தில்,
இராமனின் நண்பன் குகன் என்று உரைத்தார்கள்.
ஆக, நமது இரத்த நாளங்களில் நட்பு உள்ள உணர்வுகளாக, நமக்குள் சேர்த்துவிட்டால், நமக்குள் வெறுப்பை உண்டாக்கும், நோய்களை உண்டாக்கும் உணர்வுகளை, நாம் ஒவ்வொன்றாகச் சமப்படுத்திவிடலாம் என்பதை உணர்த்துவதற்குத்தான், இவ்வாறு காவியங்களைப் படைத்தார்கள்.
இப்பொழுது, நாம் எண்ணும் எண்ணங்களில் பகைமை உணர்வை கலந்து, அதன்வழி செல்லபடும் பொழுது, நமது உடலில் நல்ல அணுக்களை உருவாக்கியவைகளுக்குப் பகையாகி, அவைகளுக்கு நல்ல உணர்வுகள் கிடைக்காவிடாமல் தடைப்படுத்துகின்றது. தீய உணர்வின் அணுக்கள், நல்லுணர்வின் அணுக்களை விழுங்க எண்ணும்.
ஏனென்றால், அவைகளுக்கு வரும் நல்லுணர்வுகளைத் தடைப்படுத்தும் பொழுது, நல்ல அணுக்கள் மடியும். இதனை உணர்த்துவதற்குத்தான், முதலில் குகன் என்ற நிலையை உருவாக்கினார்கள்.
இதில், இராமன், குகனை நட்பாக்கினான் என்று, அதாவது, நமக்குள் இருக்கும் இரத்த நாளங்களில், அருள் மகரிஷிகளின் உணர்வை கருவாக்கி, உருவின் தன்மை பெறச் செய்து, உயர்ந்த அந்த மகரிஷிகளின் அருள் உணர்வுகளை, நமக்குள் அணுக்களாக விளையச் செய்தால், அது உடலில் பதிந்திருக்கும் பகைமையுணர்வுகளை நீக்கி, மகரிஷிகளின் அருள் வட்டத்திற்கு அழைத்து செல்லும்.
ஆக, இன்று அழியா ஒளிச் சரீரமாக வாழ்ந்து வளர்ந்து கொண்டிருக்கும், மகாஞானிகளின் அருளுணர்வின் ஒளியலைகளை நமக்குள் பெருக்கி, நம்மை அருள்வழியில் அது அழைத்துச் செல்லும்.
(ஜூலை 1998)
மனிதராகப் பிறந்த நாம், இன்று எவ்வாறு வாழ்ந்து கொண்டிருக்கின்றோம்? என்று சற்றுச் சிந்தித்துப் பாருங்கள். பெரும்பாலான குடும்பங்களைப் பார்த்தோமென்றால், மருமகளிடம் கடுமையாகப் பேசுபவர்கள் நிறையப் பேர் இருக்கின்றார்கள், அல்லது மருமகள், மாமியாரிடம் கடுமையாகப் பேசும் நிலை இருக்கின்றது.
இந்த உணர்வுகளெல்லாம் எப்படி வளர்ந்தது என்பது பற்றி, ஏற்கனவே, “உயிரே கடவுள்” எனும் தனிப் புத்தகத்தில் ஏழுதியுள்ளோம்.
இன்று குடும்பங்களில், சிறுசிறு சர்ச்சைகள் இருந்து கொண்டிருக்கின்றன. இவைகளெல்லாம் எதனால் வருகிறதென்றால், மருமகளாக வருபவள் 50 பவுனுடன் வரவேண்டும் என்று நினைக்கின்றார்கள்.
ஆனால், தன் மகளைக் கலயாணம் செய்து கொடுக்கும் பொழுது, 10 பவுனைக் குறைத்துவிடலாமா, அல்லது 20 பவுனைக் குறைத்துவிடலாமா, என்று நினைக்கின்றார்கள்.
மருமகள் வந்தால், இத்தனை பவுன் வேண்டும் என்று கேட்கின்றோம். ஆனால், இதனின் உணர்வுகளை நமக்குள் வளர்த்துக் கொண்டால், அந்த ஆசையின் எண்ணங்கள்தான் வருகின்றதே தவிர, மனிதரைத் தெளிவாக்கும் நிலைகள் வருகின்றதா? என்றால், இல்லை. ஆகவே, இத்தகைய உணர்வின் தன்மைகளை வளர்த்துக் கொண்டால், நமது உயிர், அதனின் அணுக்கருக்களைத்தான் நமக்குள் உருவாக்கும்.
நியாயம், தர்மம் அனைத்தும் பேசுவார்கள். ஆனால், மகனுக்கு மனைவியாக வருபவள், இவ்வளவு கொண்டு வந்தால் நன்றாக இருக்கும், என்று ஏராளமாக எண்ணிக் கொண்டிருப்பார்கள். மகனைப் பார்த்து, “ஏன்டா ராஜா, உன்னுடைய மனைவி இவ்வளவு தானே கொண்டு வந்தாள்” என்று விஷத்தை ஊட்டுவார்கள்.
ஆனால், விஷத்தின் தன்மை கொண்டு, நான்கு தரம் சொன்னால் வெறுப்பாகும். அந்த வெறுப்பின் தன்மை கொண்டு, தனது அம்மாவின் மனதை அடக்க, “ஒரு பத்தாயிரம் வாங்கி வந்துவிடு” என்று கூறுவார்கள். ஆனால், அங்கே உள்ள கஷ்டம் இவர்களுக்குத் தெரியாது.
இப்படி வேதனைப்படுத்தி வாங்கிய காசை, இவர்கள் அனுபவிக்க முடியாது. எதற்குச் செல்வழிப்பார்கள் என்றால், இவர்களுக்குள் வேதனைப்படுத்தியதின் உணர்வால் விளைந்த நோயை, நீக்கச் செலவழிப்பார்கள். யார், யாரோ, தின்பதற்குக் கொடுத்துவிட்டு வருவார்கள். இவர்களுக்கு எதற்காவது உதவுகிறதா என்றால், இல்லை. நரகவேதனை மட்டும்தான் மிச்சமாகும்.
சற்றுச் சிந்தித்துப் பாருங்கள். மற்ற மிருகங்கள், தான் வாழப் பிறரிடம் பணம் கேட்கின்றதா? இல்லை. மனிதராகப் பிறந்த நாம் மட்டும், பணம், பொருள் வேண்டும் என்று பிறரை வேதனைப்படுத்துகின்றோம்.
நம்முள், மனமொத்த உயர்ந்த நற்குணங்களைப் பெறும்பொழுது, அது நமக்குள் மகிழ்ச்சியை உருவாக்குகின்றது, தொழில் எண்ணங்களைப் பெருக்கச் செய்கின்றது. இதன் வழி கொண்டு செல்வத்தை ஈட்டுவோர் எவரோ, அவரே மனிதராக முடியும்.
ஆனால், பொருள் எளிதாக வருகிறதென்று, பிறரை வேதனைப்படுத்தி, பொருள் சம்பாதிக்க எண்ணினால், அவர்கள் நொந்திடும் உணர்வுகள் இங்கே வந்து விடுகின்றது, இது போன்ற தீய நிலைகளிலிருந்து, மனிதர், தாம் விடுபடும் எண்ணம் பெறவேண்டும்.
“எத்தனை பவுன் போட்டீர்கள்? எத்தனை பவுன் வாங்கினீர்கள்?” என்று யாம் கூடச் சிலரிடம் கேட்போம். எதற்காகக் கேட்போம் என்றால், இவர்கள் இவ்வளவு பவுன் வேண்டும் என்று, மற்றவர்களிடம் கேட்டார்களா, இல்லையா, என்பதைத் தெரிந்து கொள்வதற்காகக் கேட்போம்.
அப்படி இவர்களைக் கேட்கும்பொழுது, “என்னவோ போட்டார்கள், எங்களுக்கு ஒன்றும் தெரியாது, எங்களிடம் ஒன்றும் இல்லை, பத்து பவுன்தான் போட்டார்கள்” என்று கூறினால், இவர்கள் நகையைப் பற்றிக் கேட்டிருப்பார்கள் என்று, யாம் அறிந்து கொள்வோம். இவர்கள் எம்மிடம் சிக்கிக் கொள்வார்கள். ஏனென்றால், இவர்களுடைய உணர்வைச் சோதிக்க, இதையெல்லாம் யாம் கேட்போம்.
ஏனென்றால், மனிதர்களான நமக்குப் பணம் தேவையில்லை,
உயர்ந்த மனம் தேவை.
இரு மனமும் உயர்ந்த நிலை கொண்டு, என் கணவர்
மகரிஷிகளின் அருள் சக்தி பெறவேண்டும்.
அவர் பார்ப்பதெல்லாம் நலம் பெறவேண்டும்,
அவர் அருள் ஞானம் பெறவேண்டும்.
செய்யும் தொழில் எல்லாம் உயர்வாக வேண்டும்,
அவரை அனைவரும் போற்றவேண்டும்,
என்று, மனைவி தன் மனதை உயர்த்தினால், அங்கே செல்வம் கொட்டும்.
செல்வத்தின் பெயரில், இன்னும் ஏன் பணம் கொண்டு வரவில்லை? என்று பிறரை வேதனைப்படுத்தி, செல்வத்தைக் கொண்டு வந்தால், அங்கே சிரமம் வரும். பிறகு கொண்டு வந்ததெல்லாம், அடகு வைத்துச் சாப்பிட வேண்டிய நிலை வரும்.
வேதனைப்படுத்திக் கொண்டு வந்த பணம் தங்காது. அதன்பின், இதனின் வேதனையின் உணர்வுகளைச் சுவாசித்து, நம்மையறியாது, நமக்குள் தண்டனை கொடுக்கும் உணர்வுகளைச் சுவாசிக்கின்றோம். நாம் எண்ணியது எதுவோ, அதுவாக, நம் உணர்வின் தன்மை அங்கே உருவாக்கிவிடும்.
வேதனை என்ற உணர்வை நுகர்ந்தால், உதாரணமாக, நாம் மனைவியை அடித்து, உதைத்து, “உன் தாய் தந்தையிடம் போய்ப் பணம் வாங்கி வா” என்று சொன்னால், அதற்கு மனைவி. “ஐயோ” என்று அழுது கொண்டிருக்கும்.
“எப்படியாவது கொண்டுவா” என்று துன்புறுத்துவோம், அல்லது மாமியார் இதைச் செய்வார். அதை ரசித்தால், உடல் முழுவதும் வேதனைகளை உருவாக்கும் அணு செல்கள், நிச்சயம் உருவாகும். இதிலிருந்து யாரும் தப்பமுடியாது.
அப்படி, வேதனைகளை உருவாக்கும் அணுக்கருக்களாக உடலில் உருவாகிவிட்டால், கொஞ்ச நாளில் நோய் வரும். அதன்பின், இந்த டாக்டரிடம் போனேன், இந்த நகையை அடமானம் வைத்தேன், அந்த நகையை அடமானம் வைத்தேன் என்ற நிலை வரும் பொழுது, வெறுப்பின் உணர்வுகள் தோன்றும், தொழிலும் குன்றும், மனவேதனையும் கூடும்.
இதுபோன்று, பிறரை வேதனைப்படுத்திப் பணம், பொருள், கேட்டு வாங்கிய குடும்பங்களின் நிலையை, நீங்கள் காணலாம். பணம் வந்தால், பின்னால் நோயும் வரும். உடலில் நோய் வந்தால், நரக வேதனையைத் தான் உடலில் வளர்க்கும் நிலை வரும்.
இந்த மனித உடலில் விஷத்தன்மை கூடிய பிறகு, உடலை விட்டு வெளியே செல்லும் உயிரான்மா, அடுத்து விஷம் கொண்ட கீழான பிறவிகளுக்கே சென்று சேரும்.
இதைத்தான் கீதை, “நீ எதை எண்ணுகின்றாயோ, அதுவாகின்றாய்” என்று நமது வாழ்க்கையின் ரகசியத்தை, ஒரு சொல்லுக்குள் அடக்குகின்றது, உணர்த்துகின்றது.
மனிதர்களான நாம், நம்மையறியாது நமக்குள் வந்து சேரும், தீமைகளை அகற்றிடும் அல்லது மாற்றிடும் நிலைகள் பெறவேண்டும். ஆறாவது அறிவின் துணை கொண்டு, கார்த்திகேயா என்ற நிலை பெறவேண்டும்.
தீமைகளை அகற்றுவதற்கு, அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளையும் பேரொளியையும் நாம் நுகரவேண்டும். அவ்வாறு, அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை நுகரவேண்டும் என்றால், அதனின் உணர்வின் வலுவின் தன்மையை, நமக்குள் பதிவாக்குதல் வேண்டும்.
இன்று, பிரபஞ்சமே தூய்மையற்ற நிலையில், நஞ்சின் தன்மை பெருகியதாக உள்ளது. நஞ்சின் தன்மைகளை அகற்றி, ஒளியின் சுடராக மாற்றி, இந்த பிரபஞ்சத்தில் பரவிக் கொண்டிருக்கும் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை, நாம் அனனைவரும் நமக்குள் பெருக்குதல் வேண்டும். இதுதான் தியானம்.
நமது இரத்த நாளங்களில் கலந்துள்ள விஷத்தன்மைகளை அகற்றி, ஒவ்வொரு நொடியிலேயும், நம்முள் துருவ மகரிஷிகளின் அருள் சக்திகளைச் சேர்க்கவேண்டும்.
நம் குடும்பத்தில் உள்ளவர்கள், நம்மைச் சார்ந்தோர், நாம் அன்றாடம் சந்திக்கும் அனைவரும், அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியைப் பெறவேண்டும், என்று நாம் தியானிக்க வேண்டும். இதைத் தலையாயக் கடமையாகச் செய்யவேண்டும்.
இவ்வாறு நாம் செய்துவர, அனைவரும் வாழ்க்கையில் உடல் நலம், மன பலம் பெற்று, நோய் நீக்கிடும் அருள் சக்தி பெற்று, செல்வம் செல்வாக்கு பெற்று, மகிழ்ந்து வாழ்ந்திடும் அருள் சக்தி பெற்று, அந்தத் துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்தில் இணைந்து, மகிழ்ந்து மகிழ்ந்து வாழ்ந்திட முடியும். உயிருடன் ஒன்றிய உணர்வுகளை, ஒளியின் சுடராக மாற்றிட முடியும்.