இராமாயணக் காவியத்தில், இராமேஸ்வரத்தில், இராமன் ஆஞ்சனேயனை அழைத்து, “பூஜை நேரம் வந்துவிட்டது. காலை 4.00 மணிக்கு பூஜை செய்ய வேண்டும், அருளுணர்வைப் பெறவேண்டும், பருக வேண்டும், லிங்கத்தை எடுத்துவா” என்று இராமன் ஆஞ்சனேயனுக்கு கட்டளையிடுகின்றார்.
ஆனால், அந்த உணர்வின் எண்ணங்கள் வருவது கால தாமதமாகின்றது. ஆகவே, இராமர் அங்கே இருக்கும் மணலையே கூட்டிச் சேர்த்து சிவலிங்கமாக அமைத்து பூஜிக்கின்றார், என்று இந்த உணர்வின் தன்மையை அங்கே தெளிவாகக் காண்பிக்கின்றார்கள். அதனால்தான் “இராமலிங்கம்” என்று காரணப்பெயர் வைத்தார்கள்.
காலை 4.00 மணியிலிருந்து விண்ணிலிருந்து, துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும், நம் பூமியின் துருவப் பகுதி வழியாக வந்து, நமக்கு முன் படர்ந்து கொண்டிருக்கின்றது.
அந்த நேரத்தில், நாம் நம்முடைய மனதைக் குவித்து, உயிரோடு ஒன்றி (இராமலிங்கம்), துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை நம் உடலை உருவாக்கிய ஒவ்வொரு அணுவிலும் சேர்க்க வேண்டும் என்பதைத்தான் காவியத்தில் உணர்த்தப்பட்டுள்ளது.
அதை மனிதர்கள் யாரும் கவரவில்லையென்றால், 6.00 மணிக்கு மேல் சூரியன் அதைக் கவர்ந்து, கடல் பகுதியில் சேர்த்துவிடும்.
“ஆஞ்சனேயன்” என்பது வாயுபுத்திரன். இப்பொழுது யாம் சொல்லும் உணர்வுகள் அனைத்தும் சூரியனால் கவரப்பட்டு, வாயுவாக மாறுகின்றது. யாம் சொல்லும் உணர்வுகள், சீதாலக்ஷ்மியாக மாறுகின்றது. இந்த உணர்வின் தன்மையை, நீங்கள் உங்களுக்குள் நுகரப்படும் பொழுது, உங்களுடைய சரீரத்திற்குள் சென்று, அதனின் உணர்ச்சிகளை ஊட்டுகின்றது.
அதனால்தான், இராமனின் பக்தன் ஆஞ்சனேயன் என்றும், இராமன் இடும் கட்டளை அனைத்தையும் முழுமையாகச் செயல்படுத்துவான் என்றும், நாம் நுகரும் உணர்வுகள் அதனின் எண்ணங்களை, உணர்ச்சிகளைத் தூண்டி, அதன் உணர்வுக்கொப்ப நமது உடலை எப்படி இயக்குகின்றது என்பதனையும், இராமாயணக் காவியம் கூறுகின்றது.
“தனுஷ்கோடி” என்று காரணப்பெயரை வைத்து, இராமன் அங்கே மணலை கூட்டி, லிங்கத்தை அமைத்து பூஜித்தார், என்று காவியம் கூறுகின்றது. தனுஷ்கோடி என்றால் கடைசி நிலை, மனிதன் முழுமையடையும் தன்மை பெற்றநிலை என்பதற்காக வேண்டி, தனுஷ்கோடிக்கு இராமன் வந்து, எல்லாவற்றையும் கூட்டி அமைத்து வளர்த்தார் என்று காண்பிக்கின்றார்கள்.
பல கோடிச் சரீரங்களைக் கடந்து, கடைசி நிலை பெற்றது தனுசுகோடி. உயிரின் தன்மை கொண்டு, விஷ்ணுவின் தனுசைப் பெற்றவர்களின், உணர்வு எதுவோ, அதன் நிலை கொண்டு உயிர் இயக்குகின்றது,
அதன் வழி உணர்வுகள் அனைத்தும் இயக்க நிலை கொண்டு, எண்ணங்கள் கொண்டு, உயிருடன் ஒன்றி ஒளியின் சரீரமானது, துருவ நட்சத்திரம்.
இவைகளை எல்லாம், யாம் உங்களுக்கு எதற்காகச் சொல்கின்றோம் என்றால், நாம் “தனுஷ்கோடி” என்னும் கடைசி நிலையில் இருக்கின்றோம். எல்லாவற்றையும் வென்றிடும் நிலையில் இருக்கிறோம்.
ஆகவே, நம்முடைய எண்ணங்கள் அனைத்தும் எதனில் இருக்க வேண்டும்? என்பதை நாம் உணரவேண்டும். துருவ நட்சத்திரத்தின் உணர்வை, கோடிக்கரை எனும் இவ்வுடலான நிலையிலிருந்து நாம் எடுத்து, நம்முள் சேர்த்து, பிறவியில்லா நிலை என்ற நிலையினை, நாம் அடைதல் வேண்டும்.

(அக்டோபர் 1999)
பரசுராமனுக்கும், சீதாரமனுக்கும் போர் நடந்து கொண்டே இருக்கும் என இராமாயணக் காவியம் கூறுகின்றது. ஏனென்றால், “சிவ தனுசு” எனும் பொழுது, உடல் என்ற நிலைகளில் உருவான உணர்வின் தன்மை கொண்டு, இந்த உடலில், வாழ்க்கையில் வரும் தீமைகளிலிருந்து காக்கவே உடலின் உணர்வுகள் வருகின்றது,
ஆனால், “விஷ்ணுதனுசு” எனும் பொழுது, தீமைகளை அகற்றி, ஒளி என்ற உணர்வைக் கொண்டு வருகின்றது. நாம் துருவ நட்சத்திரத்தின் உணர்வை நுகருகின்ற பொழுது, துருவ நட்சத்திரத்தின் உணர்வுகள், நமக்குள் "விஷ்ணு தனுசு" ஆகின்றது.
அதாவது, துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளை நாம் நுகரப்படும் பொழுது, துருவ நட்சத்திரத்தின் உணர்வுகள் நமது உடலில் இருக்கும் உணர்வுகளை ஊடுருவுகின்ற பொழுதுதான், விஷ்ணு தனுசிற்கும், சிவ தனுசிற்கும் போர் முறை வருகின்றது. ஏனென்றால்,
சீதா என்றால் சுவை கொண்டது,
மகிழ்ச்சி கொண்டது,
மகிழ்ந்து வாழக்கூடியது,
மகிழ்வான செயல்களைச் செய்வது.
மகிழ்ச்சி என்ற உணர்வுகள் நமக்குள் வரும் பொழுது, மகிழ்ச்சியூட்டும் சக்தி பெற்றது. நமக்குள் சமப்படுத்தும் உணர்வுகள் இருப்பினும், எந்தெந்த குணங்களை நமக்குள் பெற்றோமோ, அதைத்தான் நமக்குள் சமப்படுத்திக் கொண்டிருக்கும்.
உதாரணமாக, நாம் கோபப்படுகின்றோம் என்றால், அந்தக் கோபமான நிலைகளை எடுத்துத்தான் நம்மைப் பாதுகாத்துக் கொள்ள இந்த “சிவ தனுசு” உதவும்.
நாம் ஒருவர் மேல் வெறுப்பு கொண்டிருப்போமானால், “இரு உன்னை நான் பார்க்கிறேன்” எனும் எண்ணம்தான், நமக்கு வரும். இது, பரசுராமன் கையிலுள்ள சமப்படுத்தும் உணர்வு பெற்ற, நம் உடலில் வளர்த்துக் கொண்ட “சிவ தனுசு”.
இப்படி நாம் கோபப்படும் பொழுதோ, சஞ்சலப்படும் பொழுதோ பிறருடைய நிலைகளால், நம்மில் உருவான தனுசை எடுத்துதான், பயன்படுத்துகின்றோம். நாம், “தேடிச் சேர்த்த செல்வத்தைப் பாதுகாக்க வேண்டும்” என்று சிவ தனுசைத்தான் பயன்படுத்துகின்றோம்.
உதாரணமாக, நம் குழந்தை மேல் எந்த அளவு பாசம் கொண்டோமோ, அதற்கொப்பதான், அவனைப் பாதுகாக்க வேண்டும் என்ற நிலை வருகின்றது. ஆனால், அவன் செய்யும் தவறினை நாம் காண்பதில்லை. அவன் செய்யும் குற்றங்களை புரிந்து கொள்வதில்லை. என் பிள்ளை என்ற நிலையில், இந்த உடலில் எதை வளர்த்துக் கொண்டோமோ, அதனின் உணர்வை பாய்ச்சித்தான், அவனைக் காக்கும் நிலைக்கு வருகின்றோம்.
இதில், நாம் வேதனையின் உணர்வை நுகர்கின்ற பொழுது நமது உயிர் “விஷ்ணு” வரம் கொடுத்துவிடுகின்றார். பின், நுகர்ந்த உணர்வுகள் உடலுக்குள் வருகின்றது. நுகர்ந்த உணர்வுகள் இரத்தத்தில் கலக்கப்படும் பொழுது, உயிர், நுகர்ந்த உணர்வின் தன்மையை அணுக்கருவாக உருவாக்குகின்றது. அதே சமயத்தில், உணர்வின் கரு நமது இரத்த நாளங்களில் கலக்கப்படும் பொழுது, இந்திரியமாக மாறுகின்றது. இதற்குத்தான், இந்திரலோகம் என்று காரணப்பெயர் வைத்தார்கள், ஞானிகள்.
இரத்த நாளங்களில் சேமிக்கப்பட்ட அணுக்கரு, நமது உடலில் சுழன்று கொண்டேயிருக்கும். குறிப்பிட்ட காலப் பருவம் வரும் பொழுதுதான், அணுக்கரு வெடிக்கின்றது. அப்படி வெடித்தபின், அதன் உணர்வின் தன்மை எதுவோ, அதற்கொப்ப அணுத்தன்மை வெளிப்படுகின்றது.
ஆனால், இப்படி உருவான அணு இவ்வுடலில் சேர்ந்து இயக்கத் தொடங்கி விடுகின்றது. அப்பொழுது, உடலில் உருவான இவ்வணு தன் இனத்தை பெருக்கத் தொடங்கிவிடுகின்றது.
ஒரு வித்தை நிலத்தில் ஊன்றினால், அந்த வித்து, எந்த இன செடியின் வித்தோ, அதே இனச் செடியைத்தான் உருவாக்குகின்றது. அதே இன வித்தைத்தான் உருவாக்குகின்றது.
ஆகையினால், ஒரு உணர்வின் தன்மையினை உடலாக்கப்படும் பொழுது என்ன செய்கின்றது? உடலாகும் பொழுது சிவமாகின்றது. உணர்வின் தன்மை சொல்லாக வரப்படும் பொழுது, சிவ தனுசு என்ற நிலை வருகின்றது.
ஒருவர் தவறு செய்கின்றார் என்ற உணர்வை, நாம் நுகர்ந்தோம் என்றால், அவருடைய உடலில் விளைந்த உணர்வுகள், நமக்குள் வரப்படும் பொழுது, இதற்கும், நமது உடலிலுள்ள நல்ல குணங்களுக்கும், போர் என்ற நிலை நமது உடலில் நடைபெறுகின்றது.
அது சமயம், நாம் கோபத்தின் தன்மை கொண்டு தனுசைப் பாய்ச்சினோம் என்றால், அதனின் உணர்வின் கூட்டமைப்பு, தன்னில் ஒரு படையே உருவாக்குகின்றது.
சிறுகச் சிறுக கோபத்தின் உணர்வுகள் வளரப்படும் பொழுது, கோபம் அதிகமாகி, கோபக்காரர் என்ன செய்கிறார் என்றால், தன்னைக் காத்துக் கொள்வதற்கு “இரு உன்னை நான் பார்த்துக் கொள்கிறேன்” என்ற கோப உணர்வு கொண்டு, பிறிதொருவரை தாக்கிக் கொல்கின்றார். கோபம் உள்ளவர், சிவ தனுசை தனக்குள் எடுத்துக் கொண்டு, கோப உணர்வுகளை தமக்குள் எடுத்துச் சமப்படுத்துகின்றார்.
இதே போன்று, வேதனை என்ற நிலை வரும் பொழுது, வேதனை உணர்வுகளைத் தனக்குள் எடுத்துச் சமப்படுத்துகின்றார். “பரசுராம்”, நாம் சுவாசித்த உணர்வுகள் எந்த குணமோ, அதைச் சமப்படுத்தும் எண்ணங்கள்தான் வருகின்றது.
உதாரணமாக, ஒவ்வொரு உயிரினமும் தன்னைப் பாதுகாத்துக் கொள்ள விழைகின்றது. இவை எல்லாம் சிவ தனுசு. இதைப் போன்று, மனிதரிடத்தில் எனும் பொழுது, மனிதர், தாம் எதை முன்னிலையில் வைத்துள்ளாரோ, அது சிவ தனுசு. அதாவது, உடலை பாதுகாத்துக் கொள்ளும் நிலை வருவதுதான், சிவ தனுசு.
உயிர் என்ற ஒளியின் தன்மையை, என்றும் ஒளியாக வைத்து, இருள் சூழாத நிலையில் இருப்பதுதான் "விஷ்ணு தனுசு".
மனித வாழ்க்கையில் கணவனும், மனைவியும், வசிஷ்டரும் அருந்ததியும் போன்று வாழ்ந்து, நளாயினியைப் போன்று கணவனும் மனைவியும், ஒருவரை ஒருவர் மதித்து நடந்து, சாவித்திரியைப் போன்று இரு மனமும் ஒன்றி, இரு உயிரும் ஒன்றி, இரு உணர்வும் ஒன்றி, உணர்வினை ஒளியாக மாற்றிச் சிருஷ்டித்துக் கொண்ட நிலை ரிஷி, அதுதான் துருவ நட்சத்திரம்.
துருவ நட்சத்திரத்திலிருந்து வெளிப்படும் உணர்வின் சத்தை, சூரியனின் காந்த புலனறிவு கவர்ந்து, புவிக்கு வருகின்றது. ஆகவே, இதனை, “ரிஷியின் மகன் நாரதன்” என்றும் “நாராயணனின் அபிமான புத்திரன்” என்றும் காவியங்களில் குறிப்பிட்டனர்.
துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியின் உணர்வினை நாம் நுகர்ந்தோம் என்றால்,
“நாரதன் என்னும் உணர்வுகள்”,
உயிரான விஷ்ணுவிடமும் செல்கின்றது.
மற்றும் உடல் பாகங்கள் அனைத்திற்கும் சென்று, பகைமை உணர்ச்சிகளை மாற்றுவதற்கான நிலை எதுவோ, அதைச் சொல்லி, பகைமையை தணிக்கச் செய்கின்றது. உண்மையை விளங்கச் செய்கின்றது, இந்த நாரதர் என்னும் உணர்வுகள்.
எனவே, நாம் துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளைத் திரும்பத் திரும்ப, நுகர்ந்தால் அதன் உணர்வுகள் நம் உடலுக்குள் வந்து, பகைமை உணர்ச்சிகள் நமக்குள் எப்படி இயக்குகின்றதென்ற நிலையை நமக்குள் தெளிவாக்கி, நம்மை வழிப்படுத்தும். ஆகவேதான், ரிஷியின் மகன் நாரதன் என்றும், நாராயணனின் அபிமானப் புத்திரன் என்றும், நாரதர் நன்மைகள்தான் செய்வார் என்றும், காவியங்களில் காண்பித்தார்கள் ஞானிகள்.
நமது உயிரால் உருவாக்கப்பட்ட உணர்வுகள் “விஷ்ணு தனுசு”, உயிருடன் ஒன்றி ஒளியாக இருக்கின்றது. ஒளியின் உணர்வுகளை நாம் நுகர்ந்தோம் என்றால், “சீதா” மகிழ்ச்சியான உணர்வை நமக்குள் ஊட்டும். ஒளி என்ற உணர்வை ஊட்டும் நாரதன், தீமைகளை நீக்கி, சமப்படுத்தும் நிலைகளை உருவாக்கி, உணர்வின் நிலையைத் தெளிவாக்குவார், என்பதுதான் பொருள்.
ஆகவே, அரும்பெரும் ஞானிகள் காண்பித்து, உணர்த்திய உண்மைகளை தம்முள் உணர்ந்து, அதன்வழி இயங்கி, ஒளி என்ற உணர்வைக் கொண்டு வரும், விஷ்ணு தனுசினைக் கைக்கொண்டு, தம்முள் பகைமை உணர்வுகளை அகற்றி, மகிழ்ச்சி தரும் உணர்வை தம்முள் வளர்த்து வரும் அன்பர்கள் அனைவரும், உடல் நலம், உடல் பலம், மன நலம், மன பலம், மன வளம், செல்வம், செல்வாக்கு பெற்று, பேரின்பப் பெருவாழ்வாக வாழ்ந்து வளர்ந்திட எமது அருள் ஆசிகள்.