Pages

(அக்டோபர் 2000)

ஒவ்வொரு மனிதரின் வாழ்க்கையிலும், சந்தர்ப்பங்கள் அவர்களை எந்தெந்த நேரத்தில், எது எது இயக்குகின்றது என்பதையும், அவரவர் வாழ எதைச் செய்கின்றனர் என்பதையும், நமது குருநாதர் எமக்கு, தினம், தினம், அனுபவப்பூர்வமாக உணர்த்தினார்.


ஒரு உடலில், ஒரு உணர்வின் தன்மை எப்படிப் பெருகுகின்றது? பெருகியபின், அவ்வுடல் என்ன நிலையாகின்றது? என்பதையெல்லாம் எமக்குத் தெளிவாக உபதேசித்து அருளினார்.


குருநாதர், எமக்கு எழுத்து வடிவில் எதையும் கற்றுக் கொடுக்கவில்லை. ஆனால், அருள் வழியில், எமக்கு கற்றுக் கொடுத்தார்.


பார்த்தால், சின்ன விஷயமாகத் தோன்றும். ஆனால், அதனுள் விஷயம் ஏராளமாக இருக்கும்.


எமது சொந்தக்காரர்கள் எல்லாம், எம்மைப் பார்த்து, பைத்தியத்துடன் சேர்ந்து அலைந்து கொண்டிருக்கின்றேன் என்று எம்மைத் திட்டுவதற்குதான் வந்தார்களே தவிர, குருநாதருக்கும், எமக்கும் இடையே உள்ள, உண்மை நிலை என்ன? என்பதை அறிந்துகொள்ள முன் வரவில்லை.


நண்பர்களாக இருந்தவர்களும், எம்மைப் பைத்தியத்துடன் சேர்ந்து பைத்தியமாகி விட்டார் என்றுதான் பேசினார்கள். ஏன், எமது வீட்டில் சாமி அம்மாவும் அப்படித்தான் பேசினார்கள். வீட்டில் இருந்த மாமா, அத்தை, எமது குழந்தைகள் என்று, அனைவரும் எம்மை அப்படித்தான் நினைத்தார்கள்.


அருள் உணர்வின் தன்மையை, சாமி அம்மாவும் கொஞ்சம், கொஞ்சமாகத் தெரிந்து கொண்டார்கள். ஏனென்றால், நாங்கள் வைத்திருக்கும் விறகுக் கடைக்கு, குருநாதர் வந்து, ஹாயாகப் படுத்துக் கொள்வார்.


சாமி அம்மாவிடம், இவர்களைப் பார், அவர்களைப் பார், என்று தனது உள்ளங்கையைக் காண்பிப்பார். இப்படியெல்லாம் பல நிலைகளை செய்து, உலகம் எப்படி இருக்கிறது என்று உணர்த்தினார்.


பிறகு, “சினிமாத் தியேட்டர்களில் என்ன படங்கள் ஓடுகின்றன?” என்று குருநாதர் கேட்பார். சினிமாத் தியேட்டர்களில் ஓடும் படங்களைச் சொன்னால், “எந்தச் சினிமாப் படம் பார்க்க விரும்புகின்றாய்?, அதை இங்கேயே பார்க்கலாம்” என்று கூறுவார்.


அது எப்படித் தியேட்டரில் ஓடும் சினிமாப் படத்தை இங்கிருந்து பார்க்க முடியும்? என்று யாம் கேட்போம்.


“இப்பொழுது பார் என்று கூறுவார்”. சினிமாப் படம், அது, அப்படியே நாங்கள் நின்ற இடத்தில் இருந்தே பார்க்க முடிந்தது. எமது மகள் மீராவிடம், தியேட்டரில் என்ன படம் ஓடுகின்றது? என்று கேட்பார் குருநாதர். மீராவிடம் கேட்டு, மீரா விரும்பிய படத்தை அங்கே காண்பிப்பார்.


யாம், குருநாதர் எமக்குக் கொடுத்த உணர்வுகளை வரிசைப்படுத்தி, ஒழுங்குபடுத்தி, என்ன தியேட்டரில் என்ன படம் ஓடுகின்றது என்று குழந்தைகளிடம் கேட்டு, அதைப் பாருங்கள் என்று கூறி, யாமும் மற்றவர்களுக்குச் சினிமாப் படம் காண்பிக்க ஆரம்பித்தோம்.


இதனால், எம்மைப் பார்த்தால் போதும், குழந்தைகள் கூட்டம் கூடிவிடும். நைனா., நைனா., என்று குழந்தைகள் எம்மைச் சூழ்ந்து கொள்வார்கள். இந்தந்தச் சினிமாப் படங்களைக் காண்பியுங்கள் என்று கேட்பார்கள். அவர்கள் கேட்ட சினிமாவைக் காண்பித்தால், உடனே குழந்தைகளுக்குக் குஷியாகும்.


அதன் பிறகு, குருநாதர் எம்மைத் திட்டுவார். உன்னைச் சினிமா பார்க்கச் சொன்னேனா?
ஒவ்வொருவரும், சினிமாவில் நடிப்பதைப் போன்று,
வாழ்க்கையில் எப்படி நடிக்கின்றார்கள்?


இதனின் உணர்வு எப்படி வருகின்றது? ஒருவருக்கு நடிப்பு எப்படி வருகின்றது?. ஒரு உணர்வை நுகர்ந்தபின், எப்படி நடிக்கின்றார்கள்? நுகர்ந்த உணர்வின் உணர்ச்சிகள், ஒருவரை எப்படி ஆட்டிப் படைக்கின்றது? என்று இதைத்தான் உன்னைப் பார்க்கச் சொன்னேன் என்றார், குருநாதர்.


ஒருவருடைய உணர்வுக்குத் தக்க, அவருடைய வாழ்க்கையில், வீட்டில் ஒருவருடன் சண்டைக்குச் செல்கின்றார்.
ஒரு பக்கம் அரவணைக்கின்றார்,
மறு பக்கம் வெறுக்கின்றார்.
இதனின் உணர்வுகளைச் சுவாசிக்கின்றார். அதனின் உணர்வுகள், அவருக்குள் எப்படி அங்கே இயங்குகின்றது? என்று உபதேசித்தார்.


நீ குழந்தைகளுக்குச் சினிமாப் படம் காண்பிக்கின்றாய். அதனால் குழந்தைகள் சந்தோஷப்படுகின்றன. ஆனால், பெரியவர்களிடம் சொன்னால், அவர்கள் எதற்கு ஆசைப்படுகிறார்கள்? ஏதாவது, புதையல் கிடைக்குமா? புதையல் இருக்கும் இடம் தெரியுமா? என்று கேட்டு வருகின்றார்கள். புதையல் கிடைத்தால், நான் நன்றாக ஆகிவிடுவேன். குபேரனாக வாழலாம் என்பது, பெரியவர்களுடைய ஆசை.


ஆனால், “அருள் ஞானத்தைப் பெருக்க வேண்டும், இருளைப் போக்க வேண்டும், என்ற நிலைக்குத்தான் "அருள் ஆற்றலை" உனக்குக் கொடுத்தேன்.
நீ மற்றவர்களுடைய ஆசைகளைப் பெருக்கவா போகின்றாய்?” என்று கேட்டார் குருநாதர்.


ஆனால், ஆசையினைப் பெருக்க வேண்டும். எந்த ஆசையினைப் பெருக்க வேண்டும்? அருளை ஆசைபட்டால், இருளைப் போக்கும். உடலின் ஆசையை வளர்த்தால், இருள் சூழும். ஆக,
உயிர் ஆசை,
உடல் ஆசை, என்பதற்கு விளக்கம் கொடுத்தார் குருநாதர்.


ஏனென்றால், விஞ்ஞான அறிவில் எலெக்ட்ரிக், எலெக்ட்ரான் என்ற நிலை வரப்படும் பொழுது, கம்ப்யூடர் போன்ற சாதனங்களை உருவாக்குகின்றனர். கெமிக்கல் கலந்த நிலைகளில், நாம் எப்படி
“சிக்கி முக்கி” கல்லைத் தட்டுகின்ற பொழுது
அதில் உணர்வின் அதிர்வும், ஒளியும் வருவதைப் போன்று
கெமிக்கல் கலந்த பொருள்களில் அதிர்வைக் கொடுத்து,
உணர்வின் ரூபத்தை, விஞ்ஞான அறிவால் காட்டுகின்றனர்.


நாம், கோபம் என்ற நிலையை எடுத்துக் கொண்டபின், கோபத்தின் உணர்வுகள் எலெக்ட்ரானிக், கோப உணர்வின் உணர்ச்சிகள், அழுத்தங்கள் வரப்படும் பொழுது, நமது கண் எப்படிச் சிவக்கின்றது, நரம்புகள் எப்படி முறுக்குகின்றது, எதன் வழி செயல்படுகின்றது> என்று குருநாதர் எமக்கு உணர்த்தினார்.


எலெக்ட்ரிக், எலெக்ட்ரான் என்ற நிலையில் ஒரு பொருளுடன் ஒரு பொருள் கலக்கப்படும் பொழுது, அதனின் கலவையின் நிலைகள் எப்படிச் செயல்படுகின்றன? செடி கொடிகள் எப்படி வளர்கின்றன? எப்படி ரூபம் மாற்றமடைகின்றன? என்பதையெல்லாம் எமக்கு உணர்த்தினார்.


இப்படி, எங்களுக்குள் நடைபெறும் உணர்வுப் பரிமாற்றங்கள், வேறு யாருக்கும் தெரியாது.


அனுபவரீதியாக, ஒவ்வொன்றையும் சினிமாப் படம் போன்று காண்பித்தார். இந்த உண்மையின் இயக்கத்தை, நமது அகத்திற்குள் பதிவு செய்ய வேண்டும் என்ற நிலைகளில், குருநாதர், எமக்கு உபதேசித்த அருள் வழி கொண்டுதான், இப்பொழுது, யாம் உங்களிடத்தில் பதிவு செய்கின்றோம்.
சில நேரங்களில், யாம் உபதேசித்த உண்மையின் நிலைகளை, உங்களுக்குள் பதிவு செய்து கொண்ட உணர்விற்கொப்ப, நுகர்ந்தபின், உணர்வின் அறிவாக, நீங்கள் அறிந்து கொள்ள முடியும்.


எலெக்ட்ரிக் என்ற உணர்வுடன் (உயிருடன்), துருவ நட்சத்திரத்தின் உணர்வை இணைக்கப்படும் பொழுது, உங்களிடத்திலுள்ள கோபத்தையும், உங்கள் மேல், மற்றவருக்குள்ள கோபத்தையும் தடைப்படுத்தி, உங்களுக்குள் நிதானத்தைத் தரும்.


“பதினெட்டாம்படி” என்ற நிலையில், அஷ்டதிக்கிலிருந்தும் வரக்கூடிய நிலைகளைச் சிந்தித்துச் செயல்படுத்தி, தூய உணர்வின் தன்மையை உயர்த்தப்படும் பொழுதுதான், பிறவி இல்லா நிலையை அடைய முடியும்.


இதன் வழி பின்பற்றும் அனைவருக்கும், எமது அருளும் குருநாதரின் அருளும் உறுதுணையாக இருக்கும்.


சூறாவளிக் காற்று ஒன்று வரப்படும் பொழுது, அதில் சிக்கிக் கொண்ட அணுக்கள் ஒன்றுடன் ஒன்று மோதி, மோதலில் தன் நிலையினை இழந்து, மற்றவைகளுடன் இணைத்துக் கொண்டபின், புது வித்தாக மண்ணில் பதிவாகின்றது. பின், தன் உணர்வின் தன்மை கொண்டு, காற்றில் உள்ள தன் சத்தினை எடுத்து வளர்கின்றது.


இதை போன்றுதான், நமது உடலிலும் சூறாவளி போன்று, நமது வேதனையின் உணர்வுகளால், நம் உடலுக்குள் வாயு மண்டலங்களாக மாற்றப்பட்டு, நமது உணர்வின் தன்மை விஷத்தன்மை ஆக்கப்பட்டு, நம்மை, நமது உடலை எத்தனை வேகமாக ஆடச் செய்கின்றது, நமது எண்ணங்கள் எப்படி வேகமாக ஓடுகின்றது.


இவ்வாறு, நாம் சுவாசிக்கும் உணர்விற்கொப்ப, நமது உடலில் அணுக்கள் சேர்ந்து விட்டால், அது ஒடுங்கி என்ன செய்கின்றது என்பதை ஞானிகள் உணர்த்தினார்கள்.


27 நட்சத்திரங்களின் கதிரியக்கங்கள் வான்வீதியில் மோதும் பொழுது, உணர்ச்சிகளின் தன்மை வான்வீதியில், சூறாவளியின் தன்மையாக மாறுகின்றது. அதன் உணர்வின் இயக்கங்களை, நமது பூமி துருவப் பகுதி வழியாகக் கவர்ந்தால், நமது பூமிக்குள் சூறாவளியாக மாறுகின்றது. ஆக, வான்வீதியில் மட்டுமல்ல நமக்குள்ளும் தான்.


இதே போன்று, ஒருவரின் உடலில் ஏற்படும் உணர்வினை நாம் நுகர்ந்தால், நுகர்ந்த உணர்வு நம்மை எப்படி இயக்குகின்றது, என்பதை குருநாதர் தெளிவாக உணர்த்தினார். எமது மகள் மீரா மூலம், எமக்கு புத்திமதி சொல்லுவார். எமது மகள் மீராவிற்கு காட்சி ரூபம் கொடுத்தார்.


இதைப் போன்று, யாம் காட்சி ரூபங்களைக் கொடுத்தால் என்னவானது என்றால், அவரவர் ஆசைக்கு எடுத்துக் கொண்டனர். உண்மையைச் சொன்னால், ஞானத்தைச் சொன்னால், எடுப்பதற்கு ஆளில்லை.


தன்னுடைய ஆசைக்குத்தான், காளியம்மனை வணங்குகின்றார்கள், மாரியம்மனை வணங்குகின்றார்கள், கருப்பணச்சாமியை வணங்குகின்றார்கள்.


கோபத்தின் உணர்வுகளை நமக்குள் பெருக்கப்படும் பொழுது, இரத்தக் கொதிப்பு வருகின்றது. நரம்புகள் வெடிக்கின்றன, சிந்திக்கும் தன்மை வருவதில்லை. பிறிதொரு நிலைகளைத் தாக்கும் உணர்வுகள் வருகின்றன. அவ்வாறு தாக்கும் உணர்வு வந்தால், நமது உடலில் உள்ள நல்ல குணங்களைக் கொன்று குவிக்கின்றது.


ஆக, இதனின் உணர்வுகள் நமது உயிரினில் மோதப்படும் பொழுது, என்னென்ன செய்கின்றது என்பதை அறிந்து, நம்மை நாம் சாந்தப்படுத்தி, தெளிந்து சிந்திக்கும் நிலைக்குத்தான், துருவ நட்சத்திரத்தை எண்ணி தியானிக்கச் சொல்லுவது.


துருவ நட்சத்திரத்தின் உணர்வுகள், நம்மிடத்தில் அறியாது சேர்ந்துள்ள தீய உணர்வுகளை ஒடுக்குகின்றது. துருவ நட்சத்திரம், 27 நட்சத்திரங்களில் உள்ள விஷத் தன்மைகளை ஒளியாக மாற்றுகின்றது.


நாகப்பாம்பு என்ன செய்கின்றது? தன் உடலில் உள்ள விஷத்தை, பிற உயிரினத்தின் மீது பாய்ச்சி, தன் உணர்வின் தன்மையை உணவாக எடுத்துக் கொள்கின்றது. ஆக, மற்ற, பிற ஒவ்வொரு உடலில் உள்ள விஷத்தையும், தன் உடலில் கலக்கின்றது. அப்படிக் கலக்கிய விஷங்கள்தான், நாகரத்தினமாக மாறுகின்றது.


விஷத்தின் உணர்வின் தன்மை உயிருடன் ஒன்றி, உணர்வின் தன்மையாக ஆகின்றது. உணர்வின் தன்மை ஒளியானபின், உயிர் வெளியே போகின்றது. உணர்வின் தன்மை நாகரத்தினமாக மாறுகின்றது.


விஷத்தின் உறைவிடம், உயிருடன் ஒன்றி உணர்வின் தன்மையாகின்றது. ஒளியானபின், உயிர் வெளியே போய்விடுகின்றது. உணர்வின் தன்மை ஒளியானபின், பாம்பின் உயிர் மனிதனுக்குள் சென்று அங்கே தூய்மையாக்கும் உணர்வு பெறுகின்றது. இப்படியும் உயிரணுக்கள் மாறுகின்றது என்று குருநாதர் எமக்கு உணர்த்தினார்.


இயற்கை எப்படி நம்மை இயக்குகின்றது? நாம் எப்படி வாழ வேண்டும்? எதன் வழி வாழவேண்டும்? என்று இவ்வாறு அறிந்து கொண்ட நாம், இனி துருவ நட்சத்திரத்தின் அருள் உணர்வுகளை, ஒவ்வொரு நொடிப் பொழுதும் நமக்குள் சேர்த்து,
உயிருடன் ஒன்றும் உணர்வுகளை,
ஒளியின் தன்மையாக உருவாக்குவோம்.
அழியா ஒளியின் சரீரம் பெறுவோம்.
மகரிஷிகளின் அருள் வட்டத்தில் இணைந்து வாழ்வோம்.




(நவம்பர் 2000)
தாவர இனத்தின் வித்துகளை வேக வைத்து நிலத்தில் போட்டால், அவ்வித்துக்கள் முளைப்பதில்லை. இது போன்றே, தீமை தரும் உணர்வுகளை நாம் அறியாது நுகர நேர்ந்தால், உடனே “துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாம் பெறவேண்டும்“ என்று எண்ணினால், நுகர்ந்த அருள் உணர்வுகள், நம்மில் அறியாது வரும் நஞ்சான உணர்வுகளை ஒடுக்குகின்றது. நஞ்சான உணர்வுகள் நம்முள் விளைவதில்லை.


குமாரபாளையத்தில், சக்திவேல் என்பவர் எம்முடன் இருந்தார். காரணம், சக்திவேலுக்கு ஆஸ்துமா நோய் இருந்தது. அவருக்கு இருந்த ஆஸ்துமா நோயை நீக்கி, குணப்படுத்தினோம். ஆகவே, சக்திவேல், குமாரபாளையத்தில் எப்பொழுதும் எமக்கு உதவியாக இருந்தார். இரவில், யாம் இருந்த இடத்திலேயே தங்கிக் கொள்வார்.


இதனால், சிலர் சக்திவேலின் அம்மாவிடமும் அப்பாவிடமும் போய், “மந்திரவாதி, (அதாவது யாம்) உன் பையனைக் கடத்திக் கொண்டு போய்விடுவான். அந்த சாமியாரிடம் சக்திவேலைச் சேரவிடாதே” என்று கூறிவிட்டார்கள். இதை, சக்திவேலிடமும் அவருடைய அம்மா கூறினார்கள்.


அன்று இரவில், சக்திவேலின் அம்மா படுத்திருக்கும் பொழுது, அன்று முழு நிலா இருந்திருக்கும் போல் தெரிகின்றது. நிலாவிலிருந்து சிவனும், பார்வதியும், முருகனும் இறங்கி வந்து, சக்திவேலின் அம்மாவை, “வா… வா…” என்று கூப்பிட்டிருக்கின்றார்கள். இதனால், பயந்து போன சக்திவேலின் அம்மா இரவு ஒரு மணி இருக்கும், அந்த இரவு நேரத்தில், யாம் இருக்கும் இடம் தேடி, ஓடி வந்தார்கள். அது சமயம், சக்திவேலும் எம்முடன்தான் இருந்தார்.


சிவனும், பார்வதியும், முருகனும், சக்திவேலின் அம்மாவை “வா… வா…” என்று அழைத்தவுடன், சக்திவேலின் அம்மா பயந்து போய், “என்னை விட்டுவிடு, என்னைக் கூப்பிடாதே, எனக்குப் பிள்ளைகுட்டிகள் இருக்கின்றார்கள், நான் தான், அவர்களைக் காப்பாற்ற வேண்டும்” என்று கூறியிருக்கிறார்கள்.


இதை அப்படியே, சக்திவேலின் அம்மா எம்மிடம் கூறினார்கள். ஆனால், இதற்கு முன், சக்திவேலின் அம்மா எம்மைப் படு மோசமாகத் திட்டியிருக்கின்றார்கள்.


இப்படிக் காட்சி கிடைத்தபின், நடு இரவில் எம்மைத் தேடி வந்த சக்திவேலின் அம்மா, “சாமி நாங்கள் தப்புச் செய்யவில்லை, நாங்கள் பிள்ளை குட்டிக்காரர்கள், எங்களைக் காப்பாற்றுங்கள், டேய் சக்திவேலு…. சாமியிடம் எங்களைக் காப்பாற்றச் சொல்லுடா…, என்னை வா… வா…. என்று கூப்பிட்டால், நான் போய்த் தானே ஆகவேண்டும், என்னைக் காப்பாற்றச் சொல்” என்று கூறினார்கள்.


அதன் பிறகு யாம், “ஒன்றுமில்லை, பயப்படத் தேவையில்லை, நீங்கள் நன்றாக இருப்பீர்கள்” என்று சக்திவேலின் அம்மாவை ஆசீர்வதித்தோம்.


இந்தச் சம்பவத்திற்குப் பிறகு, சக்திவேலின் அம்மா எமக்குத் தினமும் உணவு கொண்டு வந்தார்கள். சக்திவேலின் அம்மா சக்திவேலை அழைத்து, “சாமியார்களைத் திட்டாதே, சாமிக்கு உணவு கொண்டுபோய்க் கொடுத்து வா” என்று சக்திவேலிடம் கூறினார்கள்.


ஏனென்றால், அன்று யாம் முழு ஆற்றலுடன் இருந்தோம். இன்றைக்கு உங்களுக்கு ஞானத்தை ஊட்டி, சக்தியைப் பெறச் செய்கின்றோம். அதில்லாமல், உங்களுக்கு நேரடியாக ஆற்றலைக் கொடுத்தால், “இருடா… உன்னைத் தொலைத்துக் கட்டுகிறேன்” என்று மற்றவர்களுக்குச் சவால் விடுவீர்கள்”, வேறு என்ன செய்யப் போகிறீர்கள்?


குருநாதர் எம்மைத் தேடி வந்து கொடுத்தார்.
ஏன் கொடுத்தார்?
மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும்,
எல்லாவற்றையும் தாங்கும் சக்தி பெறவேண்டும் என்று கொடுத்தார்.


ஆகவே, எதையும் தாங்கக் கூடிய சக்தியும், நன்மை செய்வதற்கு, ஆற்றலைப் பயன்படுத்த வேண்டிய நேரத்திற்குப் பயன்படுத்த வேண்டும். அதைத்தான் நாம் இப்பொழுது செய்யவேண்டும்.


நமது உடல் நமக்குச் சொந்தமாகின்றதா? நாம் தேடிய செல்வங்கள் தான், நமக்குச் சொந்தமாகின்றதா? நாம் நல்ல அழகான துணிகளை உடுத்துகின்றோம். சுத்தமாக இருக்க வேண்டும் என்று, முக பவுடர், அது, இது என்று பூசுகின்றோம்.


ஆனால், உடலில் ஒரு நோயிருந்து, அதனால் வேதனையை அனுபவித்துக் கொண்டிருக்கும் பொழுது, ஒருவர் உங்களிடம் வந்து, “பவுடர் பூசிக் கொள்ளுங்கள்” என்று சொன்னால், “என்ன, கிண்டலா செய்கின்றீர்கள், அலங்காரம் செய்து கொள்ளும் நிலையிலா நான் இருக்கிறேன்” என்று கேட்பீர்கள்.


நீங்கள் சந்தோஷமாக இருந்து பாருங்கள். உங்களுடைய முகத்தில் அழகு கூடும். அதே சமயத்தில், நல்ல ஆடம்பர உடையினை உடுத்தி, பவுடர் பூசி அலங்காரப்படுத்தி இருந்த போதிலும், மனது சரியில்லை, வேதனை என்ற நிலையானால், முகம் சுருங்கிவிடும்.


ஆகையால், பார்ப்பவர்கள் என்ன கேட்பார்கள், “என்னங்க, ஏன் ஒரு மாதிரியாக இருக்கிறீர்கள்? ஏதேனும் கவலையா?” என்று கேட்பார்கள். ஆகவே, நம்மை எது செயல்படுத்துகிறது?


அருள் உணர்வை நமக்குள் பெருக்கி, இருளை அகற்றி, மகிழ்ச்சியூட்டும் உணர்வினை நம் உடலுக்குள் செலுத்தி, நமது அங்கங்களைப் பொலிவுறச் செய்யவேண்டும். சாதாரணமாக இருக்கும் பொழுது, எம்மைப் பாருங்கள். எமது முகத்தில் வித்தியாசமாக இருக்கும். அருளைப் பார்க்கும் பொழுது, வித்தியாசமான தோற்றங்கள் வரும்.


இது போன்று, நல் உணர்ச்சிகளால் முகம் விரிவடைவதும், மகிழ்ச்சியாவதும் போன்ற நிலைகள் பெறுகின்றது. உதாரணத்திற்கு, நீங்கள் ஞானத்தை எடுத்துப் பேசிப் பாருங்கள். அந்நேரத்தில், உங்களிடத்தில் மகிழ்ச்சியின் உணர்வு இருக்கும்.


அதே சமயம், ஒருவர் உங்களைத் தேடி வந்து, தம்முடைய கஷ்டத்தையெல்லாம் கூறுவார். நீங்கள் அது சமயம், ஞானத்தின் நிலை கொண்டு அவருக்கு அறிவுரை கூறுவீர்கள்.


ஆனால், இரண்டாவது தரம் தனது கஷ்டத்தைச் சொன்னால், “என்ன…., இது…, இவ்வளவு தூரம் கூறியும் தனது கஷ்டத்தைத் தானே கூறிக் கொண்டிருக்கின்றார்” என்று அப்பொழுதே உங்களுடைய முகம் மாறும்.


ஏனென்றால், அவர் சொன்ன வேதனையின் உணர்வு வலுப் பெறுகின்றது. உங்களுடைய ஞானம் இங்கே அடிபடுகின்றது. உணர்வை மாற்ற முடியவில்லை.
ஆனால், இந்நிலையை மாற்றி உங்களுக்குள் அருள் உணர்வைப் பெறவேண்டும். துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி, அவர் பெறவேண்டும், அவருக்கு, நல்ல காலம் வரவேண்டும், சிந்திக்கும் தன்மை, அவர் பெறவேண்டும், பொருளறிந்து செயல்படும் திறன், அவர் பெறவேண்டும், என்று எண்ணவேண்டும்.

அது சமயம், உங்களுடைய உயிர் என்ன செய்யும்? அருள் உணர்வை எடுத்து, உங்கள் உடலில் உள்ள எல்லா அணுக்களுக்கும் பங்கிட்டு, தெளிந்த ஞானத்தை ஊட்டும் நிலையும், வழியறிந்து செயல்படும் பக்குவத்தையும் உங்களுக்குள் பெறச் செய்கின்றது.




நமக்கு ஆகாதவர் யாராவது இருந்தால், “இவனால் தான் எனக்குத் தலைவலி” என்பார்கள். அவர்கள் வந்தாலே, “ஆகா வந்துவிட்டான், தலைவலியும் வந்துவிட்டது” என்று கூறுவார்கள். “இன்று நல்ல மன நிலையில் இருந்தேன், இவனைப் பார்த்தேன், எல்லாக் காரியமும் கெட்டு விட்டது” என்று கூறுவார்கள். இவை எல்லாம் எதைக் காண்பிக்கின்றது? மனிதரின் வாழ்க்கையில், இது போன்ற நிலைகள் வருகின்றன.




தியான வழியில் உள்ளவர்கள், தலைவலியால் வருத்தப்படுபவர்களுக்கு மகரிஷிகளை எண்ணி, அவர் குணமடைய வேண்டும் என்று சொல்லிப் பாருங்கள். அவருக்குத் தலைவலி நீங்கும். அடுத்து ஒரு முறை, தலைவலி என்று சொல்ல வரும் பொழுது, உங்களை நினைத்து வந்தேன், தலைவலி போய்விட்டது என்று கூறுவார்கள். இதை உங்கள் அனுபவத்தில் பார்க்கலாம்.


ஏனென்றால், உணர்வின் எண்ணம் கொண்டு சுவாசித்த பின், நோய்களை நீக்கும் சக்தி வருகின்றது.
ஆனால், ஒருவர் வந்தாலே,
தனக்குத் தலைவலி வருவதாக எண்ணுபவரின்
உடல் பதட்டமடைகின்றது. தலை சுற்றுகின்றது,
சிந்திக்கும் தன்மையை இழக்கச் செய்கின்றது,
இது எதனால் வருகின்றது?


இது போன்று, ஒருவரை பார்த்தாலே தனக்குத் தலை சுற்றுகின்றது, தலை வலிக்கின்றது எனும் பொழுது, “ஈஸ்வரா..” என்று உயிரை எண்ணி, “துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி அவர் பெறவேண்டும், அவர் நன்மை செயும் நிலை பெற வேண்டும் என்று எண்ணினால், அவருடைய உணர்வுகள் நமக்குள் வருவதில்லை.


இவ்வாறு நமது குருநாதர், எமக்கு அனுபவ ரீதியாக, பல நிலைகளை உணர்த்தினார். நுகர்ந்த உணர்வை, உயிர் இயக்குகின்றது. உயிர் ஈசனாக இருக்கின்றது.


மனிதர், தாம் உயர்ந்த ஞானத்தின் தன்மை பெற்று,
பிறவி இல்லா நிலை பெறுவதற்குதான்,
இத்தனை உபாயங்களையும் கொடுப்பது.
இது அனைத்தும் நீங்கள் பெறுவதற்கு, எமது ஆசிகள்.


மனிதர்கள், விஞ்ஞான அறிவு கொண்டு ஒருவருக்குக் கண் இல்லையென்றால், மாற்றுக் கண்ணைப் பொருத்தி, கண் பார்வை கொடுக்கின்றனர். செவித் தன்மைக்கு, இப்படி ஒரு மாற்று ஏற்பாடு இல்லை என்றாலும், அவர்களுக்கு உணர்வின் உணர்ச்சிகளை, (சைகை மூலம்) தெரியும்படி கொண்டு வருகின்றார்கள். இருதயம் பழுதாகி விட்டால், பழுதான இருதயத்தை அகற்றிவிட்டு, செயற்கை இருதயம் பொருத்துகின்றனர்.


நோயாளியின் உடலிலும், மற்றவர் உடலிலும் உள்ள சில செல்களைக் கழித்து, பழுதான உறுப்பு போன்றே மோல்டு செய்யப்பட்டு, அந்த உணர்விற்குள் சேர்க்கப்ப்பட்டு, அதே போன்ற புது உறுப்புகளை உருவாக்குகின்றனர்.


இந்த உடலுக்கும், மற்ற உடலுக்கும் என்ன இருக்கிறதென்று ஆய்ந்து, உணர்வின் செல்களை உருவாக்கி, உறுப்புகளை எடுத்து இணைக்கின்றனர்.


இப்படி இணைத்தபின், இரத்தத்தில் வருவதைச் சமப்படுத்த வேண்டும். எதிர் நிலையானால், கழன்று கொள்ளுகின்றது. மாற்று இருதயம் பொருத்தினாலும், அல்லது மாற்றுச் சிறுநீரகம் பொருத்தினாலும், இதே தான். இரத்தம் சீராக இருக்க வேண்டும்.


இரத்தத்தை வடிகட்டிச் சுத்தப்படுத்துவதற்காக, சில மருந்துகளை டாக்டர்கள் கொடுப்பார்கள். கொடுக்கப்பட்ட மருந்துகளைச் சாப்பிட்டால்தான், இரத்தத்திற்கும், பொருத்தப்பட்ட உறுப்பிற்கும் பொருந்தி வரும். ஒரு நாளைக்கு மருந்து சாப்பிடவில்லை என்றால், பொருத்தப்பட்ட உறுப்பின் இயக்கம் தோற்றுவிடும்.


ஆகையால், இரண்டையும் சமப்படுத்திச் சீராக இருந்தாலும், ஒருவர் காய்ச்சலுடன் வருகின்றார். அவருடைய காய்ச்சலின் வீரியம் கண்டு, அதன் உணர்வை நுகர்ந்துவிட்டால், உடலில் கிருமிகளாகின்றது. அன்றைக்கு இவர்களுக்கு ஆபத்து. ஆபத்து என்று வந்துவிட்டால், அதற்கென்று மருந்துகளைச் சாப்பிட வேண்டும்.


அது சமயம், சாதாரண டாக்டரிடம் சென்றால், பொருத்தப்பட்ட உறுப்பு கழன்றுவிடும். இப்படியெல்லாம், விஞ்ஞானிகள், அதற்கென்று பருவத்தைச் பார்த்து செயல்படுத்துகின்றனர்.


ஆனால், இப்படி ஒவ்வொன்றையும் பார்த்துப் பார்த்துச் செய்தும், நாம் எத்தனை நாள் வாழுகின்றோம்? சிறிது நாள் தான் வாழுகின்றோம்.


“நமக்கு இப்படி ஆகிவிட்டதே, மருந்தையும் சுவையில்லா உணவையும்தான், சாப்பிட்டு வாழ்கின்றோம்” என்ற வேதனை அதிகமாகின்றது. “மக்கள் எல்லாம் சந்தோஷமாக இருக்கின்றார்கள், நம் காலம் இப்படியாகி விட்டதே” என்று, நாம் நல்லவர்களாக இருந்தாலும், வேதனையின் உணர்வைத்தான் அதிகமாக்க முடிகின்றதே தவிர, மாற முடிகின்றதா?


ஆகவே, நாம் நமது உடலில் இருக்கும் காலத்தில்,
எதைச் சேர்க்க வேண்டும்?
உடல் நலக் குறைவாக இருந்தாலும்,
அருள் உணர்வை பெறவேண்டும்,
உணர்வின் தன்மை ஒளியின் சரீரம் பெறவேண்டும், என்று நம் உணர்வுகளை மாற்றினால், நாம் பிறவியில்லா நிலை அடைகின்றோம். இவையெல்லாம், எமக்குக் குருநாதர் காண்பித்த உணர்வின் உண்மைகள்.


இந்த அருள்ஞானத்தை, குருநாதர் காண்பித்த அருள் வழியில், உங்களுக்குள் பதிவு செய்கின்றோம். அருள்ஞான உணர்வை, உங்களுக்குள் இணைத்துப் பெருக்கும் பொழுது, உங்களுள் தீமைகளை அகற்றும் சக்தி விளைகின்றது.


குமாரபாளையத்தில், நாராயணசாமி என்பவர் இருந்தார். மேனேஜராக வேலை பார்த்துக் கொண்டிருந்தார். அவருடைய மகன் ஆஞ்சனேயர் மடத்தில், டிரைவராக வேலை பார்த்து வந்தார். அவர்களையும், அவர்களது குடும்பத்தினரையும், மாதேஸ்வரன் மலைக்கு யாம் அழைத்துச் சென்றோம்.


நாராயணசாமி மற்றும் அவர்களுடைய பாட்டி, குழந்தைகள் அனைவரையும் அழைத்துச் சென்றோம். போகும் வழியானது யானைக் காடு, குறுக்குப் பாதை என்று யானைக் காட்டின் வழியாக, அவர்களை அழைத்துச் சென்றோம்.


மலைப்பாதையில் சென்று கொண்டிருக்கும் பொழுது, எங்களுக்கு எதிர்த்தால் போன்று ஒரு புதரில், இரண்டு புலிகள் நின்று கொண்டிருந்தன. யாம் அழைத்து வந்தவர்கள், புலிகளைப் பார்க்கவில்லை.


அவர்கள் பார்த்தால், பயந்துவிடுவார்கள் என்று கருதி, யாம் அவர்களுக்கு முன்னால் போய் நின்று கொண்டோம். யாம் அழைத்து வந்தவர்களில், 10 வயது, 12 வயது சிறுவர்களும் இருந்தனர். பின்னால், வயதானவர்கள் வந்து கொண்டிருந்தனர்.


யாம், அவர்கள் புலியைப் பார்க்காதவாறு, மறைந்து நின்று கொண்டு பிரார்த்தனை செய்தோம். எல்லோரையும் பார்த்துக் குறி வைத்துக் கொண்டிருந்த புலிகள், அவைகளுக்கு எதிரான உணர்வுகளைக் கண்டவுடன், இரண்டு புலிகளும் தாண்டிக் குதித்து ஓடின. எதையோ கண்டு பயந்ததைப் போன்று, விருட்டென்று ஓடி மறைந்தன.


புலிகள் ஓடுவதைக் கண்டு, யாம் அழைத்து வந்தவர்கள் வெகுவாகப் பயந்து போனார்கள். அதன் பிறகு, அங்கிருந்து அவர்களை அழைத்துச் சென்றோம். அப்பொழுதெல்லாம், அவர்களுக்குக் காட்சிகள் கிடைக்கும்படிச் செய்தோம்.


மாதேஸ்வரன் மலைக்கு, அவர்களைப் பழக்கத்திற்காகக் கூட்டிச் சென்றோம். இயற்கை எப்படிச் செயல்படுகிறது? என்ற நிலைகளை யாம் அறிவதற்காக வேண்டி, குருநாதர் எம்மை எல்லா இடங்களுக்கும் செல்லச் செய்து, பலரைச் சந்திக்கும்படிச் செய்தார்.


காட்டிற்குள்ளும், மனித வாழ்க்கையிலும் என்ன இருக்கின்றது என்பதை, தெரிந்துதான் சொல்கின்றோம். ஆனால், உங்களுக்கு இதைச் சொல்கின்றோம் என்றால், சாமி, கதை சொல்வதாக எண்ணக் கூடாது.
இயற்கை எப்படி இயங்குகின்றது?
வாழ்க்கையில் வரக்கூடிய நிலைகள் என்ன செய்கின்றது? என்பதை,
குருநாதர் எம்மை அனுபவரீதியாக உணரும்படி செய்தார்.


காட்டிற்குள் சென்றால், மிருகங்கள் கட்டுப்படும். மனிதர்களிடம் பழகும் பொழுது, அவர்களிடம் இருந்து தப்பிப்பதே கடினம் தான்.


அதனால், நாம் இன்று பெரும் காட்டினுள் வாழ்கின்றோம். இங்கே, நமது உணர்வுகள் கொண்டுதான், நாம் எதையும் மாற்றி அமைக்க வேண்டும்.


ஆகையால், ஒருவர் தவறு செய்கிறார் என்று எண்ணும் பொழுது, நமக்குள் தவறின் உணர்வுகளே விளைகின்றது. அகவே, ஒருவரிடம் தவறு என்று உணர்ந்த அடுத்த நிமிடமே,
அவருடைய தவறான உணர்வு நம்மிடம் இல்லாதபடி,
துருவ நட்சத்திரத்தின் உணர்வை எடுத்து,
நமக்குள் சுத்தப்படுத்திக் கொள்ள வேண்டும்.
இதனால், அவருடைய உணர்வு நம்மை தாக்குவதில்லை.


இப்படி, துருவ நட்சத்திரத்தின் உணர்வை தம்முள் பெருக்கி, தீமைகள் வராது காக்கும் நிலையாக, உணர்வை ஒளியாக மாற்றும் நிலையாக, ஞானிகள் காண்பித்த அருள்வழியில் வாழ்ந்து வரும் அன்பர்கள் அனைவரும், தம்முள் அறியாது சேர்ந்த சாப வினைகளை, பாவ வினைகளை, தீய வினைகளை நீக்கி, அருள் ஞானிகளின் அருள் சக்தி பெற்று, உங்களுடைய பார்வையில் மற்றவர்களுடைய தீமைகளை நீக்கிடும், நோய் நீக்கிடும் அருள் சக்தி பெற்று, நீங்கள் இவ்வாழ்க்கையில், பெருவீடு பெரு நிலை பெறும் நிலையாக, பிறவியில்லா நிலையினைப் பெறும் நிலையாக, பேரின்பப் பெருவாழ்வாக வாழ்ந்து வளர்ந்திட, எமது அருள் ஆசிகள்.




(டிசம்பர் 2000)
தசரதச் சக்கரவர்த்தி என்பது எது? பத்தாவது நிலையை அடையக்கூடிய, மனித உடலை உருவாக்கிய உயிருக்குப் பெயர்தான், தசரதச் சக்கரவர்த்தி.


உதாரணமாக, தசரதச் சக்கரவர்த்தி தாம், மூன்று நாட்டையும் கவர்ந்து கொள்ள வேண்டும் என்ற உணர்வைக் கவர்ந்து கொள்கினறார். இந்த சிந்தனை உருவாகின்றது. அதன் வழிப்படி, அவர் திட்டமிடுகின்றார்.


உணர்வின் தன்மையினை, அணுவாகப் பெருக்கிக் கொள்கின்றார். அதன் ஞானம் வருகின்றது. அதன் வழி வியூகத்தை வகுத்து, இந்த நாட்டை, எப்படி ஆட்சி புரிய வேண்டும், என்ற உணர்வின் போர் முறைக்குச் செல்கின்றார்.


எதன் சக்தியைத் தன்னுள் இணைத்துக் கொண்டாரோ, அதன் உணர்வின் தன்மை கொண்டு, தன்னுள் இணைந்த சக்தியை இயக்கச் செய்து, மூன்று நாட்டையும் வெல்கின்றார்.


அப்படி மூன்று நாட்டையும் வென்ற பின்,
வெற்றி பெற்ற உணர்வு தன்னுள் இருப்பதனால்,
நாம் புரிந்து கொள்வதற்காக,
என்னை வெற்றி பெறச் செய்தாய்,
உனக்கு என்ன வரம் வேண்டும்?
இரண்டு வரத்தைக் கேள்,
என்று, தசரதச் சக்கரவர்த்தி தனது மனைவி கைகேயியிடம் கேட்பதாக, இராமாயணக் காவியம் கூறுகின்றது.


என்ன வரம் வேண்டும்? என்று தசரதச் சக்கரவர்த்தி கேட்கும்பொழுது, “நான் சமயம் வரும் பொழுது கேட்கின்றேன்” என்று கைகேயியிடமிருந்து பதில் வருகின்றது. ஒரு வித்தை நிலத்தில் ஊன்றினால், உடனே விளைந்து விடுமா? செடி தோன்றி, வளர்ந்து, பூ பூத்து, அதன்பின் தான் காய் காய்க்கும்.




ஆகவே, தசரதச் சக்கரவர்த்தியின் உடலுக்குள், தான் வெற்றி பெற்றதற்கான உணர்வின் தன்மை வரப்படும் பொழுது, அவருடைய உடலில், இதன் உணர்வின் தன்மை முழுமை அடைகின்றது.


உதாரணமாக நமது உடலில் கோபம் என்ற உணர்வின் தன்மையை உருவாக்கி விட்டால், கார உணர்ச்சி கொண்ட அணுவாக உருவாகின்றது. அணுத் தன்மை அடைந்தபின், அது தன் சக்தியாக இயக்கிக் கொண்டு, தன் இனத்தின் தன்மையைப் பெருக்குகின்றது.


ஒரு வித்தை நிலத்தில் ஊன்றினால், அது செடியாகி, தன் வித்துகளை உருவாக்குகின்றதோ, இதைப் போன்று,
எடுத்துக் கொண்ட உணர்வின் சக்தி கொண்டு,
எண்ணிய உணர்வு, இவருடைய உடலுக்குள் வந்து,
தன் இனமான, குழந்தைகளாக உருவாக்கி விடுகின்றது.


பிறரை, வேதனைப்படுத்தி செயல்பட்டது தான் “கைகேயி”. ஆகவே, பிறரைத் துன்புறுத்தும் உணர்வின் தன்மை வரப்படும் பொழுது, நாளடைவில் அதன் உணர்வின் எண்ணங்கள் அதிகரித்து, அதிகரித்துத் தன் உணர்வின் தன்மை வலுவாகின்றது.


இராமனுக்குப் பட்டாபிஷேகம் செய்யும் தருணம் வருகின்றது. எல்லோரும் அதற்கான காரியங்களைச் செயல்படுத்துகின்றனர். ஆனால், கைகேயி இராமனுக்கு பட்டம் சூட்டிவிட்டால், தான் வேலைக்காரியாகி விடுவேன் என்று எண்ணுகின்றார். அதாவது,
மற்றொன்றின் மீது போர் தன்மை கொண்டு,
வெற்றி பெறச் செய்த உணர்வுகளின்,
உணர்ச்சியின் தன்மை
இந்த உடலுக்குள் நின்று, எப்படிச் செயல்படுகின்றது? என்ற நிலையைத்தான், தசரத சக்கரவர்த்தியின் உடலில், பத்தாவது நிலையை அடையப்படும் பொழுது, இவருடைய உடலில் இருந்த உணர்வின் உணர்ச்சிகள், எப்படிச் செயல்படுகின்றது என்பதைத் தெளிவாகக் காண்பிக்கின்றார்கள்.


அது சமயம், தசரதச் சக்கரவர்த்தி இராமனுக்குப் பட்டாபிஷேகம் செய்வதற்குண்டான எல்லா ஏற்பாடுகளையும், செய்து விடுகின்றார். இதுதான் தருணம் என்று, கைகேயி தசரதச் சக்கரவர்த்தியிடம், “போர் காலத்தில் இரண்டு வரங்கள் தருவதாகச் சொன்னீர்கள் அல்லவா? அந்த இரண்டு வரங்களை இப்பொழுது தருவீர்களா” என்று கேட்கின்றார்.


கைகேயி தன் மகனுக்குப் பட்டம் சூட்ட வேண்டும் என்று எண்ணுகின்றார். தன் மகன் என்றால்,
மற்ற போர் முறைகளில் வென்ற உணர்வுகள்.
அது இவ்வுடலில் என்ன செய்யும்?
தனது கை ஓங்கி இருக்க வேண்டும், என்ற நிலையைச் செய்யும்.


உணர்வின் உணர்ச்சிகள் எண்ணமாகி, எதன் உணர்ச்சிகள் உடலில் உருவாகின்றதோ, அதன் தொடர் கொண்டு, நமது உடலில் எத்தனை போர் முறைகள் நடக்கின்றது?


தீமையின் உணர்வுகள், நல்ல குணங்களைச் செயலற்றதாக மாற்றுகின்றது என்பதைத் தெளிவாக்குகின்றது இராமாயணம்.


கைகேயி, “வரங்களைத் தாருங்கள்” என்று கேட்டபின், தசரதச் சக்கரவர்த்தி, “தாரளமாகக் கேள், உனக்கில்லாததா?” என்று சொல்லுகின்றார். தொடர்ந்து கைகேயி கேட்ட வரங்கள், “இராமன் காட்டிற்குச் செல்லவேண்டும், பரதனுக்குப் பட்டம் சூட்ட வேண்டும்” என்பது.


ஆகவே, அன்றைக்குப் போர் முறைகளில் வெற்றி பெறக் காரணமாக இருந்த நிலைகளால், தன் உடலுக்குள் நல்லவனைத் தேர்ந்தெடுக்க முடியாமல் தவிக்கின்றார் தசரதச் சக்கரவர்த்தி.
பத்தாவது நிலை அடையக் கூடியவர்,
மற்றதை வேதனைப்படுத்தி,
ஜெயித்துக் கொண்டபின்,
தான் நிகரில்லாதவன், என்ற நிலைகளை எண்ணினாலும், உடலுக்குள் தீய வினைகள் வந்து, நல்லதைச் செய்யவிடாதபடி எப்படித் தடுக்கின்றது? என்பதை இங்கே உணர்த்துகின்றது, இராமாயணக் காவியம்.


உதாரணமாக, நீங்கள் நன்மை செய்ய வேண்டும் என்று எண்ணினாலும், தீய உணர்வுகள், உங்கள் உடலில் எப்படி நோயை உருவாக்குகின்றது என்பதனையும், பத்தாவது நிலையை அடையும் உயிர், எல்லாவற்றையும் ஆட்சி புரியும் நிலை வந்தாலும், நமக்குள் தீய உணர்வுகள் எப்படி இயக்குகின்றது? என்ற நிலையையும், இராமாயணக் காவியம் தெளிவாக உணர்த்துகின்றது.


சட்டப்படி, “நான் முதலில், மூத்தவனுக்குப் பட்டம் சூட்டவேண்டும் என்று எண்ணினேன். நீ இடைமறித்து பரதனுக்குப் பட்டம் சூட்ட எண்ணுகின்றாய், பரவாயில்லை. ஆனால், நீ நல்லவனைக் காட்டிற்கு அனுப்பச் சொல்லுகின்றாயே? இது உனக்குத் தகுமா?” என்று கைகேயியிடம் தசரதச் சக்கரவர்த்தி கேட்கின்றார்.


உடனே கைகேயி, “சட்டப்படி மூத்தவன் இருக்கும் பொழுது, இளையவனுக்குப் பட்டம் சூட்ட முடியாது, ஆகவே, இராமன் துறவறம் பூண்டால்தான், பரதனுக்குப் பட்டம் சூட்ட முடியும். அதனால்தான் சொல்கின்றேன், பரதனுக்குப் பட்டம் சூட்டினால்தான், நான் அரசியாக இருக்க முடியும், இல்லையென்றால், வேலைக்காரியாகத்தான் இருக்க முடியும்”.


“போர்க்காலத்தில் நீங்கள் வெற்றி பெறுவதற்கு உதவி செய்தேனே, எதற்கு? நான் வேலைக்காரியாக இருப்பதற்காகவா? என்பது போன்ற வினாக்களை கைகேயி எழுப்புகின்றார்.


அதாவது, விஷ உணர்வுகளை எடுத்துக் கொண்டால் என்னவாகும்? என்பது இங்கே உணர்த்தப்படுகின்றது.


இதனால், வேதனை உணர்வை நுகர்ந்த தசரதச் சக்கரவர்த்தியின் நிலை என்னவென்றால், “இப்படி ஆகிவிட்டதே, நல்லவனுக்கு ஒன்றும் செய்ய முடியவில்லையே” என்று எண்ணுகின்றார்.


எத்தனை பேரை வேதனைப்படுத்தி சாம்ராஜ்யத்தைப் பிடித்தாரோ, அதே வேதனை அவருக்குள் எப்படி வருகின்றது?


போர் முறைகளில் வெற்றி பெறும் பொழுது, இரசித்தார். ஆனால், உடலில் ஆட்சி புரியும் தன்மை வரப்படும் பொழுது, நல்லவைகளை ஒதுக்கி, தீமைகளை எப்படி வளர்க்கின்றது என்பதை, இராமாயணத்தில் தெளிவாகக் கூறுகின்றார்கள்.


ஆகவே, பத்தாவது நிலையை அடையக் கூடிய தகுதி பெற்ற நாம், இந்த வாழ்க்கையில், தீமைகளை எப்பொழுதெல்லாம் காணுகின்றோமோ, உடனடியாக, துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை நமக்குள் சேர்த்து, அந்தத் தீய வினைகள் நமக்குள் வளராமல் தடுக்க வேண்டும்,

இந்தப் பிறவியில், பிறவி இல்லா நிலை அடையும், அருள் வாழ்க்கை வாழ்வோம். அந்த மகரிஷிகள் சென்ற எல்லையை அடைவோம். எமது அருளாசிகள்.