Pages

(மே 2000)

மெய்ஞானிகள் காண்பித்த அருள் வழியில், மக்கள் அனைவரும் ஏகோபித்த நிலையில், துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியின் உணர்வுகளை தம்முள் கவர்ந்து வலுவாக்கும் பொழுது, நம்மிடத்தில் தீமை என்ற நிலைகள் அணுகுவதை தடுத்து விலக்கிவிடும்.




நாம் கவராது விட்டுவிட்ட தீமையின் உணர்வுகள் அனைத்தையும், காலையில் ஆறு மணிக்கெல்லாம் சூரியன் கவர்ந்து மேலே கொண்டு சென்றுவிடும். இதனால்,

நமது பூமியில், பரமாத்மாவாக இருப்பது சுத்தமாகின்றது.

நமது ஆன்மாவும் சுத்தமாகின்றது.

நமது ஆன்மா சுத்தமாகும் பொழுது,

நமது உடலில் உள்ள, ஜீவான்மாவும் சுத்தமாகின்றது.

நமது உயிரான்மா, அது ஒளியின் தன்மை பெறுகின்றது.




நாம் மெய்ஞானிகளின் அருள் உணர்வைப் பெறுகின்றபொழுது, அது, நமக்கு சொர்க்கவாசலாக அமைகின்றது. இதை விடுத்து, கோவிலுக்குச் சென்று தெய்வத்தை தரிசிக்கின்றேன் என்று சொல்லி, ஒருவர் மீது ஒருவர் விழுந்து, ஒருவரை ஒருவர் தள்ளிக் கொண்டு செல்லும் பொழுது, நமக்கு வெறுப்புத்தான் வரும். ஆகவே, இது மனிதருக்குகந்த நிலையல்ல, அசுர உணர்வுதான் வரும்.




அதே போன்று, கோவிலில் பிரசாதம் கொடுக்கும் பொழுது பாருங்கள். நான் முதலில் பெறவேண்டும் என்றுதான் எண்ணுவார்களே தவிர, அனைவரும் ஒன்றுபட்ட உணர்வு கொண்டு, மனதைக் கட்டுப்படுத்தி, அங்கே நிற்கிறார்களா என்றால் இல்லை.




மற்றவர்கள் முதலில் பெறட்டும் என்று நாம் எண்ணும்பொழுது, நமது மனம் கொண்டு, நாம் இருந்த இடத்திலிருந்தே பெறமுடியும். அவர்கள் அருகிலே சென்று பெறுகின்றனர். ஆனால், அவர்கள் அருகில் செல்வதற்கு முன்னால், நாம் இருந்த இடத்திலிருந்து, உடனடியாகப் பெறுகின்றோம். இந்த உண்மையை, அறிந்து கொள்தல் வேண்டும்.




ஆகவே, நமது மனம் பண்பட்டால்தான், நமது குணங்கள் பண்படும். நமது குணங்கள் பண்பட்டால்தான், நமது வாழ்க்கையினை பண்படுத்தும் நிலை வரும். ஆகவே, இதையெல்லாம் நாம் சிந்தித்தல் வேண்டும்.




இவைகளை எல்லாம் யாம் பெறவேண்டும் என்றுதான், எமது குருநாதர் மலை, காடு, என்று பல இடங்களுக்கு எம்மை அழைத்துச் சென்றார். அப்படி அழைத்து செல்லும் காலத்தில், ஒரு முறை எமக்கு ஒரு பச்சிலையைக் காண்பித்துக் கொடுத்தார். அந்த பச்சிலையை கையில் கொடுத்து, “அதில் உன் உணர்வின் மணத்தை ஓது, அதனின் உணர்வின் எண்ணத்தால் எண்ணி, அங்கே போட்டு விட்டு வா” என்றார் குருநாதர்.




குருநாதர் சொன்ன முறைப்படி, உணர்வின் மணத்தை ஓதிப் போட்டு விட்டு வந்தபின், அந்த பக்கம் புலி ஒன்று வருகின்றது. யாம் அங்கு போட்டிருந்த பச்சிலையை, அந்தப் புலி நுகர்ந்த பின், அப்படியே அசையாமல் நிற்கின்றது. அதே சமயத்தில், மலைக் காட்டுக்குள் “மறதிப் பூடு” என்பதை குருநாதர் எமக்கு காண்பித்தார்.




இந்த மறதிப் பூட்டினை, இலேசாகக் கிள்ளி யாராவது ஒருவரது வீட்டில் போட்டுவிட்டு வந்துவிட்டாலோ, அல்லது அவர்களது வீட்டின் கதவிடுக்குகளில் வைத்து விட்டாலோ போதும், அவர்கள் வீட்டிற்கு வெளியே என்னென்ன செயல்கள், வேலைகள் செய்துவிட்டு வீட்டிற்கு வந்தாலும், அவைகளெல்லாம் ஞாபகத்தில் இருக்காது.




இந்நிலையை நாம் ஒருவருக்குச் செய்தால் என்னவாகும். நாம் பெரிய மனிதர் ஆகிவிடலாம். இது போன்ற நிலைகள், நாட்டில் நிறைய உண்டு. குருநாதர் இன்னும் சில வேர்களைக் காண்பித்தார். அந்த வேர்களைக் கையில் வைத்துக் கொண்டால், விஷப் பூச்சிகள் மட்டுமல்ல, புலியும் கூட ஒடுங்கி நிற்கின்றது.




ஏனென்றால், மனித உடலுக்குள் அந்த மணத்தின் தன்மை கொண்டபின், விஷம் கொண்டவைகள் பயப்படுகின்றன.

அவைகளுடைய விஷம் ஒடுங்குவதினால்,

அவைகள், தங்களுடைய வலுவையும் இழந்துவிடுகின்றன.




இப்படி குருநாதர் ஒவ்வொன்றாகக் காண்பித்து, இயற்கையின் உண்மையின் நிலைகளை உணர்த்தி, எமக்குச் சில ஆசைகளை ஊட்டுகின்றார். இவைகளைக் காணும் பொழுது, எமக்குள் உடனே அகந்தை வருகின்றது. எவராவது வம்புக்கு வரட்டும், அவர்களை ஒரு கை பார்ப்போம், என்ற எண்ணம்தான் வருகின்றது. ஆனால், தீமைகள் நமக்குள் வராது தடுக்கும், பாதுகாப்புக் கவசமாக வைத்துக் கொள்வோம் என்ற எண்ணம் இல்லை.




அப்பொழுது குருநாதர், “தீமைகள் உடலுக்குள் புகாது தடுக்கும் நிலைகள் கொண்டு, நல்லுணர்வின் தன்மையை உனக்குள் வலுவாகச் சேர்த்துக் கொள்ளவேண்டும்.




தவிர, பிறரை வீழ்த்துவது எளிது. வீழ்த்தும் உணர்வு, திருட்டுத்தனமாக உனக்குள் சென்று விடுகின்றது. வீழ்த்தும் உணர்வை உனக்குள் எடுக்கும் பொழுது, இந்த உணர்வுகள் உள் நின்று என்ன செய்யும்? அதே தவறைத்தான் செய்ய வைக்கும்”.




ஆகவே, “நான் கொடுத்த சக்தியை நீ இழக்கத்தான் நேருமே தவிர அதை வளர்க்க முடியாது. ஒருவர் தீமை செய்கிறார் என்றால், அவரைத் தீமையின் உணர்வுகளிலிருந்து மீள வைக்க வேண்டும். அவருக்குத் தெளிந்த உணர்வை ஊட்ட வேண்டும்




"நீ ஏன் அவர்களுக்கு தெளிந்த உணர்வை ஊட்ட வேண்டும்?" என்று குருநாதர் கேட்டார்.

“ஓம் நம சிவாய” என்று,

அவருக்குள் தவறின் உணர்வுகள் இயங்குகின்றது.

அவர் செய்யும் தவறின் உணர்வுகளை நாம் நுகர்ந்தால்,

“சிவாய நம ஓம்” என்று அவருடைய தவறின் உணர்வுகள்

உனக்குள் வந்து, அவர் செய்த தவறையே

உன்னையும் செய்யத் தூண்டும் என்று தெளிவாக்கினார்.


ஆகவே, ஒவ்வொரு மனிதருடைய உயிரையும் கடவுளாக மதித்தால், அவர்களுடைய உடலைக் கோவிலாக மதித்தால், அவர்கள் செய்யும் தவறின் உணர்வுகள், உனக்குள் வராது, என்று எனக்கு உபதேசித்தார்.


இதன் வழி கொண்டு, உலக மக்கள் அனைவரும் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெறவேண்டும், என்று நாம் தவம் இருப்போம். அனைவரும் மகரிஷிகளின் அருள் வட்டத்தில் வாழவேண்டும், என்று பிரார்த்திப்போம். இந்த உடலுக்குப் பின், “பிறவி இல்லா நிலை என்ற அழியா ஒளிச்சரீரம்” நாம் அனைவரும் பெறுவோம்.




ஒரு முறை ஆனைமலைக் காடுகளுக்கு, குருநாதர் எம்மை அழைத்துச் சென்றுவிட்டு, பொள்ளாச்சி பஸ் நிலையத்திற்கு அழைத்து வந்தார்.




பொள்ளாச்சி பஸ் நிலையத்திற்கு அருகில் வந்து கொண்டிருக்கும் பொழுது, வேகமாக வந்து கொண்டிருக்கும் பஸ்ஸிற்கு முன்னால், ரோட்டைக் கடப்பது போன்று குறுக்கே சென்று, எம்மையும் இழுத்தார். நாங்கள் குறுக்கே புகுந்தவுடன், பஸ் திடீரென்று நின்றுவிட்டது.




உடனே குருநாதர் டிரைவரைப் பார்த்து, "மடத்தனமாக வண்டி ஓட்டுகின்றான் பார்" என்கிறார்.




பஸ்ஸின் டிரைவரோ, "ஏனய்யா புத்தி இருக்கிறதா? பைத்தியமா பிடித்திருக்கிறது" என்று திட்டினார்.




குருநாதரும், "இது போலவா வண்டி ஓட்டுவது? அறிவு கெட்டதனமாக வண்டி ஓட்டுகிறாய்" என்று டிரைவரைத் திட்டினார்.




பின், குருநாதர் தெளிவுபடுத்தினார். அதாவது, இதுபோன்று சமுதாயத்தில், சந்தர்ப்பங்கள் சில நேரங்களில், உணர்வின் வேகம் கொண்டு, நம் உணர்வுகள் செயல்பட்டு,

தான் செய்த தவறை மறந்து,

பஸ் டிரைவரைத்தான், குறை சொல்கிறோம்.




தவறு எப்படி நேர்ந்தது? என்று சிந்திக்கத் தவறும் பொழுது, டிரைவர் மீது கோபம் கொள்வது போன்ற நிலைகள் ஏற்படுகின்றன.




டிரைவர் பிரேக் போடாமல் விட்டு விட்டால், அங்கே என்ன நேரும்? என்று நாம் சிந்திப்பதில்லை. நாம் நசுங்கி இருப்போம் என்று, அந்த இடத்தில் சிந்திக்க வேண்டும்.




டிரைவர் திட்டியது சரிதான்,

என்று ஏற்றுக் கொள்ளும் நிலை வருமானால்,

நாளை இது போன்ற அவசர புத்தி நமக்கு வராது.

நல்ல அறிவினை ஊட்டினார் என்று எண்ணினால்,

டிரைவர் மீது பகைமை வராது.




இப்படி, குருநாதர் உணர்வுகள் ஒவ்வொன்றையும் அனுபவ ரீதியில் கொடுத்தார். மக்கள் தங்கள் வாழ்க்கையில், தாம் எடுத்துக் கொண்ட எண்ணங்கள் கொண்டு செயல்படும் பொழுது, சிந்தனை அதன்பால் தான் இருக்கின்றதே தவிர, அங்கே தாம் செல்லும் பாதையில் உள்ள, இடையூறுகள் தெரிவதில்லை. தம்முடைய ஆசையின் நிலைகளிலே செல்கின்றனர். ஆனால், பாதையில் இருக்கும் ஆபத்தையும் எதிரியையும் மறந்து விடுகின்றனர்.




இது போன்ற சந்தர்ப்பங்கள் வரும் பொழுது, நாம் என்ன செய்ய வேண்டும் என்றால், அருள் ஒளியின் உணர்வை நமக்குள் சேர்த்து, தீமைகள் நம்மிடையே வராது விலக்கி, அருள் உணர்வுகள் அவர்கள் பெறவேண்டும் என்று எண்ணுதல் வேண்டும்.




ஆகவே, நான் கொடுத்த சக்தி கொண்டு பிறரை வீழ்த்துவேன் என்ற அகந்தை கொண்டால், நல்வழியின் உணர்வுகள் உனக்குள் வராது என்று, குருநாதர் எமக்குத் தெளிவுபடுத்தினார்.




ஒருவர் தீங்கு செய்கிறார் என்று எண்ணி, அதே உணர்வினை நுகர்ந்தால், நமக்குள் தீங்கு விளைவிக்கும் உணர்வுகள் வரும். ஆகவே, நாம் தீமைகளைத்தான் செய்ய முடியுமே தவிர, நன்மை செய்ய முடியுமா?, என்று நாம் சிந்தித்தல் வேண்டும்.


ஒருவர் வேதனைப்படுகின்றார் என்று நுகரும் பொழுது, அந்த வேதனை நமக்குள் ஆகின்றது. இதைப் போன்று, ஒருவர் தீங்கு செய்கின்றார் என்றால், தீங்கின் நிலையே நமக்குள் விளைகின்றது. எனவே தீங்கு செய்கின்றவர்களை எண்ணும் பொழுது,

அவர்கள் அதிலிருந்து மீள வேண்டும் என்று,

“நான் கொடுத்த அருள் சக்தியின் துணை கொண்டு,

அவரைத் தீமையிலிருந்து மீட்ட வேண்டும்”

என்று ஒவ்வொரு நொடியிலும் அனுபவ ஞானத்தை ஊட்டினார் குருநாதர்.


யாம், தியான வழி அன்பர்கள் அனைவருக்கும், குருநாதர் காண்பித்த அருள் வழியில் தெளிவுபடுத்துகின்றோம். ஒருவர் நமக்குத் தீமைகள் செய்கிறார் என எண்ணும் பொழுது, அவர் தீமைகளிலிருந்து விடுபட வேண்டும் ஈஸ்வரா என்று எண்ணி, உங்களுடைய உயிரான ஈஸ்வரனிடம் வேண்டுங்கள்.


உங்களுக்குள் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியின் உணர்வைப் பெறுங்கள். இந்த உணர்வின் தன்மை உங்களுடைய உடலை, உணர்வைத் தூய்மையாக்கிவிடும்.


அதே சமயத்தில், அவர்களைப் பாதுகாக்கும் உணர்வுடன் செயல்படுத்துங்கள், அப்பொழுது நமக்கும் பாதுகாப்பாகின்றது.



நீங்கள் ஆலயங்களுக்குச் சென்று,

அபிஷேகமும், ஆராதனையும் செய்வதைப் போன்று, உங்கள் உடலுக்குள், மகிழ்ச்சியூட்டும் உணர்வுகளை அபிஷேகம் செய்யுங்கள்.


இதனால், உங்கள் உடலை உருவாக்கிய அணுக்களுக்கு, உங்கள் உடலில் உள்ள நல்ல அணுக்களுக்கு, நல் அமுது கிடைக்கின்றது.

நமது குருநாதர், துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்தில் ஆறாவது அறிவு கொண்டு, ஏழாவது அறிவு பெற்ற சப்தரிஷி மண்டலங்களாக வாழ்கின்றார். தீமைகளிலிருந்து விடுபடும் நிலையையும், அருள் ஒளியைப் பெறும் நிலையையும், உணர்த்திய உணர்வு கொண்டு, துருவ நட்சத்திரத்தை எமக்குக் காண்பித்தார்.


குருநாதர் எம்மிடம், “அந்த துருவ நட்சத்திரத்தின் உணர்வை எடுத்து, நீ பெற்றுக்கொள். இருளை அகற்ற உதவும், மெய்ப்பொருளைக் காண உதவும், உன்னை அறியாத தீங்கினை அகற்றிட உதவும்” என்று உபதேசித்தார்.


நமது குருநாதர், தாம் ஒளியின் சரீரமான பின், எம்மை, “நீ அதில் ஆயுள் மெம்பராகு” என்று உரைத்தார். அதனால், யாம் தியானவழி மெம்பர்கள் உங்கள் அனைவரையும், அங்கு ஆயுள் மெம்பராக இணைத்து விடுகின்றோம்.


இன்று விஞ்ஞான உலகில் நாம் இருந்தாலும், அஞ்ஞான வாழ்க்கையாகதான் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். விஞ்ஞானிகள் இவ்வளவு கண்டுபிடித்துக் கொடுத்தாலும், அவர்களுடைய வாழ்க்கையில் நிம்மதி இருக்கின்றதா? செல்வத்தைத் தேடி, செல்வந்தராக ஆனாலும் குடும்பத்தில் நிம்மதி இருக்கின்றதா?


செல்வத்தின் மேல்தான் நாட்டம் வருகின்றதே தவிர, அருள் செல்வத்தின் மீது யாருக்கும் நாட்டம் இருப்பதில்லை. கோயிலுக்குச் சென்று தெய்வத்தை வணங்கினாலும், உடல் இச்சைக்கு வேண்டியதைக் கேட்டு வணங்குகின்றோம்.




ஆனால், இந்த உடலில் வரும், “தீமை தரும் ஆசை நீங்க வேண்டும், அருள் ஒளி பெறவேண்டும்” என்று யாரும் எண்ணுவதில்லை.




விஞ்ஞானம், எவ்வளவோ முன்னேறி இருக்கிறது. இன்று செவ்வாய் கோளுக்கு, இராக்கெட் அனுப்புகின்றனர். அங்கே இருக்கும் உண்மைகளை அறிய விரும்புகின்றனர். செவ்வாய் நாதகாரகன்.

இவர்கள் அனுப்பும் இராக்கெட்டின் ஒலியைக் காட்டிலும்,

செவ்வாயின் ஒலி அதிகமாக இருப்பதனால், செவ்வாய்க் கோளில் இறங்கிய இராக்கெட்டின் ஒலிஅதிர்வுகள் மாறி, இராக்கெட்டின் இயந்திர இயக்கங்களும் மாறுகின்றது.

இந்த நிலை ஆனாலும், விஞ்ஞானிகள் விடுவதில்லை.


ஏன்? எதனால்? எப்படி? என்ற நிலைகளில் சிந்திக்கின்றனர். குறையினை மாற்றியமைத்து, மறுபடியும், செவ்வாயில் இராக்கெட்டை இறக்குவதற்கு, விஞ்ஞானிகள் முயற்சி எடுக்கின்றனர்.


ஆகவே, இதைப் போன்று நமது வாழ்க்கையில், தியானவழியில் சில சந்தர்ப்பங்களில் நமது செயல்பாட்டில் தோல்வி அடைந்தாலும், எப்படியும் இதிலிருந்து மீளவேண்டும், எது நம்மை மாற்றியமைத்தது? என்று சிந்தித்து, பேரருளை நமக்குள் பெருக்கி, இருளை அகற்றும் நிலைகளை நமக்குள் பெறுதல் வேண்டும்.


சாமியிடம் சென்று ஆசீர்வாதம் வாங்கினேன், தொழில் நன்றாக நடந்தது. சாமியிடம் ஆசீர்வாதம் வாங்கினேன், என் வேதனைகள் நீங்கியது. என்ற எண்ணத்தை வளர்த்துக் கொள்ளாமல், உயர்ந்த உணர்வின் தன்மையை, அருள் உணர்வை உங்களுக்குள் பெருக்கினால், உங்கள் உடலில் உள்ள குறைகள் நீங்குகின்றது. தன்னிச்சையாக வியாபாரமும் பெருகிவரும், நீங்கள், தேடி அலைய வேண்டியதில்லை.


அருள் உணர்வைப் பெருக்கினாலே, அதற்குண்டான அமைப்பும் தேடி வருகின்றது என்று அதிக ஆசைப்பட்டால், எதனையும் நிர்வகிக்கும் குறைந்துவிடும்.


பின், நாம் கிடைத்த செல்வத்தையும், பாதுகாக்கும் தன்மையினை இழந்து விடுவோம். இது போன்ற நிலைகள் இல்லாதபடி, நாம் நமது வாழ்க்கையில், குரு அருள் ஒன்றையே பிரதானமாக வைத்து வாழ்வோம்.


குருவின் துணையால், துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியினைப் பெறுவோம். நம்மில் அறியாது சேர்ந்த, இருளை விலக்குவோம், என்று அருளுணர்வை தம்முள் வளர்த்து வரும் அன்பர்கள் அனைவரும், அருள் மகரிஷிகளின் அருள் சக்தி பெற்று, இல்லற வாழ்க்கையில் இருளினை அகற்றி, மெய்பொருள் காணும் திறன் பெற்று, மலரைப் போன்று மனம் பெற்று, மகிழ்ந்து வாழும் சக்தி பெற்று, இந்த வாழ்க்கையில் பிறவியில்லா நிலை பெறும் நிலையாக, பேரின்பப் பெருவாழ்வாக வாழ்ந்து வளர்ந்திட, எமது அருள் ஆசிகள்.