அன்புள்ள சித்த உள்ளங்களுக்கு ,
நேற்றைய பதிவிற்க்கான
பின்னூட்டத்தில் ஐயா சங்கர் குருசாமி கேட்டதற்கான விளக்கத்தை பூரண மாலை
முடிந்த பிறகு தருகிறேன். ஏனெனில் ஒவ்வொரு வார்த்தைக்கும் ஒரு பதிவு
எழுதவேண்டிய நிலை இருக்கிறது. எம்மால் முடிந்த வரை விளக்கம் தருகிறேன்.
21 ) வாசிதனைப் பார்த்து மகிழ்ந்து உனைத்தான் போற்றாமல்
காசிவரை போய்திரிந்து கால் அலுத்தேன் பூரணமே !.
விளக்கம்
: வாசி என்றால் சிவா என்பர் சித்தர்கள் . உண்மையான சிவனை அறிந்து
கொள்ளவேன்டினால் காசி போக வேண்டிய அவசியம் இல்லை . வாசியை கவனித்தால்
போதும் காசிக்கு போக தேவை இல்லை. பொதுவாக எதுக்கு காசிக்கு நாம் யாத்திரை
செல்கிறோம் என்றால் அங்குள்ள சுடலை மயானத்தை பார்க்கிறோம். எண்ணற்ற
பிணங்கள் எரிக்கப்படுகிறது . கங்கையும் அங்கு செல்கிறாள் அவர்களின் பாவத்தை
கழுவ .இதுப்போன்ற பல அனுபவங்களை நமது மூதாதையர்கள் பாடி சென்று
இருக்கிறார்கள்.
காசியில் எரிக்கப்படும் பிணத்தை நாம்
பார்க்கும்போது மெய்யென்ற இந்த உடல் பொய் ஆகும் என்பதனை உணரவேண்டும்
.இதற்காக நாம் காசி வரை செல்லவேண்டும் என்ற அவசியம் இல்லை.
நம் உடலில்
உள்ள கங்கை என்பது கைலாயத்தில் உள்ளிருந்து வரும் அமுதமாகும் .அதனை
அருந்தி நாம் வாழ ஆரம்பித்தால் பொய் என்ற இந்த உடலும் மெய் ஆகும். நமது
பாவங்களும் அழிக்கப்படும். இந்த விளக்கம் தெரியாமல் காசி வரை சென்று கால்
அலுத்தேன் என்று புலம்புகிறார்.
22 ) கருவிகள் தொண்ணுற்றாரில் கலந்து விளையாடினதை
இருவிழியால் பாராமல் ஈடழிந்தேன் பூரணமே !
விளக்கம்
: நமது உடலில் அக கருவிகள் மற்றும் புற கருவிகள் மொத்தம் 96 உள்ளது.
அதனைப்பற்றிய விளக்கம் வரும் நாட்களில் காணலாம். இத்தகைய கருவிகளில் சிவன்
கலந்து விளையாடினதை எனது இரு விழிகளால் காணாமல் அழிந்தேனே என்று
கூறுகிறார்.
23 ) உடலுக்குள் நீ நின்று உலாவினதைக் காணமல்
கடல் மலை தோறும் திரிந்து கால் அழுத்தேன் பூரணமே !
விளக்கம்
: சிவன் எங்குள்ளான் என்று தெரியாமல் காடு , மலை ,நகரம் அலைந்து இறுதியில்
என்னுள் உலாவினதை அறியாமல் போனேனே என்று புலம்புகிறார்.
24 ) எத்தேச காலமும் நாம் இறவாது இருப்பும் என்று
உற்றுனைத்தான் பாராமல் உருவழிந்தேன் பூரணமே !
விளக்கம்
: நாம் இறக்கமாடோம் என்ற எண்ணத்தை கொண்டு நீ இருக்கும் இடத்தை உற்று
பாராமல் என் உடலை அழித்தேன் என கூறுகிறார். நாம் சிவனை கண்டால் இறப்பின்றி
வாழ முடியும். அதற்க்கான வழிமுறையை சித்தர்கள் பாடி சென்றுள்ளார்கள் .
உற்றுப்பார்த்தல் என்றல் தியான முறையில் சிவன் இடத்தை அதாவது
அருட்பெருஞ்சோதியை காணுதல் என்று விளக்கம் கொள்ளுதல் நல்லது.
25 ) எத்தனை தாய் தந்தை இவர்களிடத்தே இருந்து
பித்தனாய் யானும் பிறந்து இறந்தேன் பூரணமே !
விளக்கம்
: நாம் பல பிறவிகள் எடுத்து இருக்கிறோம் என்று எண்ணும்போது நாம் எத்தனை
தந்தை , தாயை பெற்று இருக்கிறோம் என்று நமக்கு தெரியாது. இதனை நானும்
தெரியாமல் பிறந்து இறந்தேன் என புலம்புகிறார். இதனை பார்க்கும்போது நமக்கு
பிறக்கும் குழந்தை நமது மூதாதையர்கள் போல இருப்பதாக சொல்லி பெருமை
கொள்கிறோம் . சித்தர்களின் வாக்குப்படி நமது ஐந்து தலைமுறைகளில்
இருப்பவர்களில் யாரேனும் ஒருவர் தான் நமக்கு மகனாவோ அல்லது மகளாகவோ பிறக்க
வாய்ப்பு இருப்பதாக கூறுகிறார்கள்.
26 ) பெற்று அலுத்தார் தாயார் , பிறந்து அலுத்தேன் யானும் ,உன்றன்
பொன் துணைத்தாள் தந்து புகழ் அருள்வாய் பூரணமே !.
விளக்கம்
: பல பிறவிகள் இருப்பதால் என் தாய் என்னை பெற்று அலுத்தார்கள் நானோ
பிறந்தே அலுத்தேன் இத்தகைய செயல்கள் மீண்டும் நிகழாமல் என்னை காப்பாற்றி
அருள் தருவாய் என புலம்புகிறார்.
27 ) உற்றார் அழுது அலுத்தார் , உறன் முறையார் சுட்டலுத்தார்
பெற்று அலுத்தார் தாயார் , பிறந்து அலுத்தேன் பூரணமே !
விளக்கம்
: எனது பிணத்தை பார்த்து என் உற்றோர்கள் அழுதே அலுத்தார்கள் மற்றும்
என்னை சுட்டு எரித்தும் அலுத்துபோனார்கள் . என் தாயார் பெற்றும் நான்
பிறந்தும் அலுத்தே போனேனே என்று புலம்புகிறார்.
28 ) பிரமன் படைத்து அலுத்தான் ,பிறந்து இறந்து நான் அலுத்தேன்
உரமுடைய அக்கினிதான் உண்டு அலுத்தான் பூரணமே !
விளக்கம்
: என்னை படைத்த பிரமன் என்னை படித்தே அலுத்து போனான் . நானும் பிறந்தும்
இறந்தும் அலுத்து போனேன். என்னை எரித்து எரித்து அக்கினியும் அலுத்து
போனான் என்று புலம்புகிறார்.
29 ) எண்பத்து நான்கு நூறாயிரம் செனனமும் செனித்துப்
புண்பட்டு நானும் புலம்பினேன் பூரணமே !
விளக்கம்
: நமது பிறவிகள் மொத்தம் 84000 என்று இதன் மூலம் குறிப்பிடுகிறார்.
இத்தனை பிறவிகளிலும் நான் புண்பட்டு தான் மாண்டு போனேன் என்றும்
கூறுகிறார். பாருங்கள் ஒரு பிறவிக்கே நாம் எத்தனை பாடுபடுகிறோம் . இன்னும்
எத்தனை உள்ளதோ ?
30 ) என்னை அறியாமல் எனக்குள்ளே நீ இருக்க
உன்னை அறியாமல் உடல் இழந்தேன் பூரணமே !.
விளக்கம் : எனக்குள் நீ இருப்பதை அறியாமல் உடல் இளைத்தேன் என்று புலம்புகிறார்.
என்றும்-சிவனடிமை-பாலா.