ஒவ்வொரு நிமிடமும், நமது குருநாதர் அருள்வழி கொண்டு, அவரின் ஆற்றலின் துணை கொண்டு மகரிஷிகளின் அருள் ஒளியைப் பெற்று, அருள் ஒளிகளினுடைய நிலைகளை நீங்கள் பெறுவதற்கு, இந்த சந்தர்ப்பத்தை நிகழ்த்துகின்றோம்.
இதை நல்ல சந்தர்ப்பமாக பயன்படுத்தி, சாதாராண வாழ்க்கையில் சொன்னது போல “என்னத்த” என்ற சோர்வை விடுத்து உங்கள் நல்ல உணர்வுகள் அழிந்துவிடாதபடி “நாம் நிச்சயம் மகரிஷிகளின் அருள் ஒளியை பெறுவோம் என்றும், இந்த மனித வாழ்க்கையில் சேர்த்த இருளை நீக்கிவிட்டு நிச்சயம் அந்த ஒளி நிலை பெறுவோம்” என்ற ஏக்க உணர்வுடன் இருக்கப்படும்போது,
வாழ்க்கையில் எத்தகைய துன்பங்களை சந்தித்தாலும்,
துன்பங்கள் வரும் நேரங்களில் தான்
அந்த மெய் ஒளியின் உணர்வை, நாம் கூட்டுவதற்கு, இந்த சந்தர்ப்பம் ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்.
ஆக, நமக்குள் வரக்கூடிய துன்பத்தை மறந்து, “நாம் மெய்ஞானியின் அருள் ஒளியைப் பெறுவோம்” அந்த அருள் ஒளியாலே, வரக்கூடிய நிலைகளை நம் சொல்லும் செயலும், நம் பேச்சும் மூச்சும், உலகத்தை ஒளியின் சுடராக்கச் செய்யும். ஒருவரை மகிழச் செய்யும் எண்ணங்களாக, நம் பேச்சும் மூச்சும் இருக்கும்,
அந்த நிலைகளை நாம் பெறுவோம் என்ற நிலைகளில், எத்தகைய துன்பங்கள், எந்த நேரத்தில் வந்தாலும், நமது குருநாதர் அருள் ஒளி கொண்டு, நாம் அதைப் பெறுவோம் என்று உறுதி கொண்டு,
அந்த உறுதியான நிலையைப் பெறுவதற்குண்டான சந்தர்ப்பம்
எந்த மகரிஷிகள், அவர்கள் எதை விளைய வைத்தார்களோ, அந்த உணர்வலைகளை, சிலிகான்களை, உங்களுக்குள் பதியச் செய்திருக்கின்றோம். இனி, இதைக் கூட்டிப் பெருக்குவது, உங்கள் கையில்தான் இருக்கின்றது.
நீங்கள் பெறவேண்டுமென்ற ஆசை எனக்கிருக்கிறது. அதை யாம் பதிவு செய்கின்றோம். நீங்கள் அனைவரும் அதைப் பெற வேண்டுமென்ற ஆசையில், யாமும் ஒளி நிலை பெறுகின்றோம்.
என் பேச்சும், மூச்சும், உலகம் நன்மை பெறச் செய்யும். யாம் எடுத்துக் கொண்டது, என் பேச்சும் மூச்சும் உலகம் நன்மை பெறவேண்டும் என்ற எண்ணத்தைச் செலுத்தி, அதை யாம் பரப்புகின்றோம்.
இதையே நீங்களும் எடுத்து, உங்கள் உடலுக்குள் இதன் நிலைகளைப் பெருக்கும்போது, உங்களுக்குள்ளும் உங்கள் பேச்சும் மூச்சும் பிறருடைய நிலைகளை அது நன்மை பெறச்செய்யும்
(பக்கம் 96-105)
“ஆக மனிதனின் கடைசி நிலை ஒளி சரீரமே”. எனவே, அதை விட்டுப் பரிணாம வளர்ச்சியில் நாம் மனிதனாக வளர்ந்தாலும், நமக்குள் ஆசாபாசமும், அரச மோகத்தின் நிலைகள் கொண்டு, நம்மையறியாமல் விஷம் சூழ்ந்து கொண்டால், அதை துடைக்காத வண்ணம் விஷத்திற்குள் சிக்கிவிட்டால், விஷத்தின் சரீரமாக ஆரம்ப நிலையாக, மிருக நிலைகளை நாம் பெற்றுவிடுவோம்.
அதிலிருந்து மீள்வதற்கு, இதைத் தவிர வேறு சிறந்த வழி இல்லை. நீங்கள் அனைவரும், அந்த ஒளி சரீரம் பெறவேண்டுமென்று, உங்கள் எண்ணத்தைக் கொண்டு, தியானியுங்கள்.
யாரிடத்திலும் பிரதிபலனை எதிர்பார்க்க வேண்டாம்.
நம்மைப் புகழ வேண்டாம்.
புகழுக்காகச் செய்கிறோமென்று எண்ண வேண்டாம்.
மனதார, நம் உள்ளத்திற்குள் எடுக்கின்ற உணர்வின் சக்தி,
இந்த மகிழ்ச்சியின் நிலைகளில், பிறர் மகிழ
நம்மை அறியாமலே பிறர் மகிழ,
அந்த மகிழ்ச்சியை சுவாசித்து
நாம் அந்த ஆனந்தத்தை நமக்குள் பெற, இந்த எண்ணத்தைத் தோற்றுவிக்க வேண்டும்.
இதுதான் மனிதனின் கடைசி நிலைகள். ஆக, நாம் இதையெல்லாம் பெறுவோம் என்று உறுதிப்படுத்திக் கொண்டு, இனியும் பெறவேண்டும் என்று எல்லா மகரிஷிகளை வேண்டி, யாம் பிரார்த்தித்துக் கொள்கின்றோம்.
நாமும் இத்தகைய வாழ்க்கையில், எத்தகைய இன்னல்கள் இருந்தாலும் அத்திரி மகரிஷியைப் போன்று, இந்த வாழ்க்கையில் வரக்கூடிய நிலைகள்,
நமக்குள் “அது பெரிது, இது பெரிது”
என்ற நிலையை உதறித்தள்ளிவிட்டு,
“நாம் பெறும் மெய்வழியே பெரிது” என்றும்,
நாம் செயல்படுத்தும் நிலைகளில், பிறருடைய நிலைகள் மகிழ, நாம் பார்ப்பதே நமக்குப் பெரிது. அந்த மகிழ்வான உணர்வு, “நமக்குள் விளைந்த அந்த ஒளியின் தன்மையே நமக்குப் பெரிது”, என்ற இந்த மகிழ்ச்சியின் ஓட்டத்தை நீங்கள் பெறவேண்டும். இந்த எண்ணத்துடன் வாழ்க்கையைத் தொடங்குங்கள்.
உணர்வைத் தனக்குள் ஒளியாக மாற்றி, கடைசி நிலை பெறத் தகுதியானதுதான் மனிதனின், இந்தக் கடைசி சரீரம். நாம் அனைவரும் அதை விரும்ப வேண்டும்.
ஏனென்றால், விஷத்தைத் தனக்குள் அடக்கி, ஒளியாக மாற்றும் எண்ணம் வேண்டும். நாளை இந்த உடலை விட்டு, இந்த உயிராத்மா சென்றுதான் ஆகவேண்டும்.
ஆக இந்த முறைப்படி பழக்கிவிட்டால், நாம் உடலை விட்டுச் சென்றபின், நம் குழந்தைகள் இதைப் போன்று, சப்தரிஷி மண்டலத்துடன் இணைந்து, அந்த உயிராத்மா ஒளி சரீரம் பெறவேண்டுமென்று, உந்தி அவர்கள் தள்ளலாம்.
நாம் இதைப் போன்று, மூதாதையரகளின் உயிராத்மாக்களை விண்ணிலே செலுத்தி, அந்த சத்தின் நிலையை நாம் பெற்றுக் கொண்டால், நமது உணர்வின் எண்ணம், அந்த சப்தரிஷி மண்டலங்களுடன் தொடர்பு கொள்கின்றது.
நாம் இந்த உடலைவிட்டுச் சென்றபின், கடைசி நிமிடம் வரையிலும், அந்த எண்ணங்கள் நமக்குள் ஓடிக் கொண்டேதான் இருக்கும்.
இந்த உணர்வின் துடிப்பலைகள் கொண்டு, நாம் இதைப் போல அந்த சப்தரிஷி மண்டலத்துடன் இணைய வேண்டுமென்று, அந்த உயிராத்மாக்களை உந்தித் தள்ளினால்தான், அந்த உயிராத்மாக்கள் அங்கே செல்ல முடியும்.
(பக்கம் 114-116)
கணவன் மனைவி இருவரும், ஒருவருக்கொருவர் நமது குருநாதர் காட்டிய அருள்வழியில், ஆத்ம சுத்தி செய்து கொண்டு, இதைப் பழகிக் கொண்டால், இப்பொழுது, சரீரங்கள் இரண்டாக இருந்தாலும், பெண்களுக்குண்டான அமில சக்திகள் அதிகம். ஆக, இருவருமே அடிக்கடி அந்த எண்ணங்கள் கொண்டு இருந்தால், அந்த ஆற்றல்மிக்க சக்திகளை பெறமுடிகின்றது.
ஆக, இந்த உடலை விட்டு இவர்களது உயிராத்மாக்கள் சென்றாலும், ஒரே சரீரமாக அங்கே இயங்கி, அதாவது, ரிஷி சக்தியின் தன்மையில் ஒரு கோளாக, ஒரு நட்சத்திரமாக இயங்கி, பேரண்டத்தையும் தனக்குள் சிருஷ்டிக்க முடியும்.
இன்று ஒரு பிரபஞ்சத்தை, சூரியன் எப்படி தான் எப்படி ஆட்டிப்படைக்கின்றதோ, அதைப் போல, இந்த சப்தரிஷிமண்டலம் என்பது, ஒரு கணவன் மனைவியினுடைய நிலைகளில், இரு உயிராத்மாக்களும் ஒரே உயிராத்மாவாக ஆகும் பொழுதுதான், அந்த ரிஷியின் சிருஷ்டிக்கும் தன்மை பெறுகின்றது.
ஆக, பேரண்டத்தின் பேருண்மையினுடைய நிலைகளை, இப்பொழுது நாம் எப்படி, நட்சத்திரங்களிலிருந்து பல அலைகள் தெரிகின்றதோ, இதைப் போன்று வெளிப்படும் உணர்வலைகள், மண்டலங்களாக சுழன்று கொண்டு, புறத்திலிருந்து வரக்கூடிய பல உணர்வின் ஆற்றல்களை அது மாய்த்து, அதற்குள் நின்று, தனக்குள் பாதுகாப்பான நிலைகளை அது செயல்படுத்தும்.
மனிதர்களாக இருக்கக்கூடியவர்கள்,
கோபமான உணர்வை செலுத்திவிட்டால்,
இந்த உணர்வலைகள், நம் ஆத்மாவின் முன் நின்று
அந்த குணத்தின் தன்மையைக் காக்க,
அந்த உணர்வை சுவாசித்து,
அந்த உணர்வு கொண்டே, நாம் செயல்படுகின்றோம்.
இதைப் போன்றுதான், வேப்பமரம் கசப்பின் தன்மையைத் தனக்குள் எடுத்துக் கொண்டால், அந்த மணம், அந்த மரத்திற்கு முன்பு அதிகமாக வரும்போது, கசப்பின் தன்மையைத் தவிர, மற்ற அலைகளைத் தனக்குள் வராதபடி, பாதுகாப்பாக வளர்த்துக் கொள்கின்றது.
இதைப்போன்றுதான், இந்த மனித உடலுக்குள்
இரு சரீரங்களும், ஒரு சரீரமாக ஆக்கப்படும்போது,
சப்தரிஷி மண்டலங்களாக செயல்படும்போது,
இந்த உணர்வுகள், பாசத்துடன்
ஒரே குடும்பமாக, ஒரே எண்ணமாக
அது வளர்ச்சி பெறும் நிலைகள் வரும்போது,
இரு சரீரங்களும் ஒன்று சேர்ந்து,
தான் எடுத்துக் கொள்ளும் இந்த உணர்வலைகள்
தனக்குள் ஆத்மாவாகப் படைக்க செய்து,
விண்ணிலிருந்து வரும் ஆற்றலின் தன்மையை
அணு சக்தியாக மாற்றி,
தன் உணர்வின் ஆகாரமாகத் தேடி,
அதனின் கூட்டுக்குள்
எப்படி ஒரு சூரிய குடும்பம், ஒரு பிரபஞ்சமாகத் தோன்றி, அகண்ட நிலைகள் பெற்றதோ, இதைப் போன்று, நம் உயிராத்மா விண்ணிலே வரக்கூடிய உணர்வின் ஆற்றல்மிக்க தன்மையை, தனக்குள் பிரபஞ்சமாக அமைத்துக் கொண்டு,
விண்ணின் ஆற்றலை, நுண் அணுக்களாக மாற்றி,
அந்த அணுவிற்குள் அணுவாக நின்று,
ஆற்றல்மிக்க சக்தியாக, என்றும் பதினாறு
என்ற நிலையான நிலைகள், நாம் அனைவரும் பெறமுடியும்.