Pages

ஆறுமுகனும் ஹரிஹரனும்!





இந்து மதத்தின் முப்பெரும் தத்துவங்களின் ஓர் உருவமாகத் திகழ்பவர்கள் - ஐயப்ப பக்தர்கள்.

அத்வைதம் என்பது பிரம்மம் என்பதாகும். விசிஷ்டாத்வைதம் என்பது ஜீவன் வேறு, பிரம்மம் வேறு என்பதாகும். த்வைதம் என்பது பிரம்மமும் ஜீவனும் ஒரு நிலையில் ஒன்றுபடுகின்றன என்பது.

ஒரு ஐயப்ப பக்தர், மாலை அணிந்து விரதம் தொடங்கிய நாளிலிருந்து அத்வைத தத்துவமான அஹம் பிரம்மாஸ்மி எனும்படி தானே கடவுளாகத் திகழ்கிறார். அவரை அனைவரும் சுவாமி என்று அழைத்து சரணம் கூறுகின்றனர். அடுத்து விரதம் முடிந்து சபரிமலைக்குச் செல்லும் நேரத்தில் ஜீவன் வேறு. பிரம்மம் வேறு; முயற்சித்தால் ஜீவன் பிரம்மனைக் காணலாம் என்று விசிஷ்டாத்வைத தத்துவத்திற்கு எடுத்துக் காட்டாகத் திகழ்கிறார். சந்நிதானத்தில் ஐயப்பனைக் கண்டு அவனருகில் சங்கமிக்கும் நேரத்தில் பிரம்மமும் ஜீவனும் வேறென்றாலும் ஒரு நிலையில் அவை ஒன்றுபடுகின்றன என்ற த்வைத தத்துவத்திற்கு உதாரணமாய்த் திகழ்கிறார்.

இப்படி அர்த்தமுள்ள இந்து மதத்தின் முப்பெரும் தத்துவங்களின் ஓருருவாகத் திகழ்பவர்தான் ஐயப்ப பக்தர்.

ஆறுமுகனும் ஹரிஹரனும்!

ஐயப்பனுக்கும் சுப்பிரமணியருக்கும் ஒற்றுமை உள்ளது.

சுப்பிரமணியர் சிவபெருமானின் நெற்றிக் கண்ணிலிருந்து புறப்பட்ட பிழம்புகளால், சரவணப் பொய்கையில் அவதரித்தவர். அந்த சரவணப் பொய்கை, அம்பாளே. அதுபோல் சிவனின் கதிரொளியும் அம்பாளின் நாராயண அம்சத்தின் அருள் ஒளியும் கலந்தவரே ஐயப்பன்.

குழந்தை உருவில் பழனியில் சுப்பிரமணியர் எழுந்தருளியிருக்கிறார். அந்த குழந்தை உருவில் குளத்துப் புழையில் ஐயப்பன் எழுந்தருளியிருக்கிறார்.

தேவியருடன் திருப்பரங்குன்றத்திலும் திருத்தணியிலும் முருகன் இருக்கிறார். அச்சங்கோவிலில் பூர்ணாபுஷ்கலை தேவியருடன் ஐயப்பனாகிய தர்ம சாஸ்தா இருக்கிறார்.

திருமண வயதில் பிரம்மச்சாரியாக திருச்செந்தூரில் முருகன் இருக்கிறார்; ஆரியங்காவில் ஐயப்பன் இருக்கிறார்.