புதன் – பொது
பொதுவாக புதனை எழுத்தறிவிக்கும் இறைவன் என்று சொன்னால்
அது மிகையாகாது. மக்களிடம் ஏற்படும் விழிப்புணர்வு, கல்வியறிவு, தொழிலில்
ஏற்படும் தொழில்நுட்ப வளர்ச்சி, நுண்ணறிவு, கணிதம் போன்றவற்றிற்கு புதனே
அடிப்படையாகப் பொறுப்பேற்கிறார். புதன் வித்யாகாரகன். தனி மனிதனின் கல்வி
வளர்ச்சிக்கு மட்டுமல்லாது, ஒரு நாட்டின் கல்வி வளர்ச்சிக்கும்
பொறுப்பேற்கிறார். நாட்டின் கல்வித்துறையில் ஒரு மறுமலர்ச்சி அல்லது
மாற்றம் அல்லது முன்னேற்றம் ஏற்படும் சமயங்களில், நாட்டை ஆட்சி செய்யும்
மன்னன் அல்லது மன்னியின் (சத்தியமாக மன்னனின் பெண்பால் தாங்க) ஜாதகத்தில்,
புதனின் நிலையை உற்று நோக்கி மாற்றம் வருமா அல்லது ஏமாற்றம் வருமா என்று
சொல்லி விடலாம்.
நாடு விடுதலை அடைந்த பிறகு, இப்பொழுது தான்
தமிழ்நாட்டில் முதன் முறையாக இத்தனை நாட்கள் பள்ளிகளுக்கு விடுமுறை
கிடைத்துள்ளது. இதனை அட்ஜஸ்ட் செய்ய சனி, ஞாயிறுகளிலும் பள்ளிகள்
திறக்கப்பட்டாலும் ஆச்சரியப்பட வேண்டாம். ஏனெனில், நீண்ட விடுமுறைக்கு
பிறகும் இன்னும் பாடம் நடத்தத் தொடங்கவில்லை. குழந்தைகள் சமச்சீர்
கல்விக்கு நன்றி சொல்லும் பொழுது, பெற்றோர்கள் மனதில் புழுங்கி அழுது
கொண்டிருக்கிறார்கள். ஒரு நாள் குழந்தை வயிற்று வலி, வாய் வலி என்று பொய்
சொல்லி பள்ளிக்குப் போக மாட்டேன் என்று அடம் பிடித்தாலும், குழந்தையின்
அம்மா தர தர என்று இழுத்துக் கொண்டு சென்று பள்ளியில் விடுவது நாம்
அன்றாடம் காலையில், காண்கின்ற காட்சியாகும். கண்டிப்புடன் குழந்தைகளிடம்
நடந்து கொள்ளும் டீச்சரும், நல்ல அம்மா என்று சொல்லி அம்மாவைப் பாராட்டி,
அழும் குழந்தையை மிரட்டி, வாயைப் பொத்தி வகுப்பறையில் உட்கார
வைத்துவிடுவார்.
ஆனால் இன்றைய நிலையே வேறு. இதுவரை புத்தகங்களை
குழந்தைகள் கிழித்தது போக, இப்பொழுது டீச்சர்கள் கிழித்துக்
கொண்டிருக்கிறார்கள். 4 மாதங்கள் கழித்து, எங்கே உன்னுடைய புத்தகத்தில்
14ஆம் பக்கம் இல்லை என்று, டீச்சர் கேட்டால், நீங்கள் தான் கிழித்தீர்கள்
டீச்சர் என்று சொல்லி குழந்தைகள் தப்பித்துக் கொள்ள ஏதுவாக இருக்கும்.
இப்படி கல்வி நகைச்சுவையாகி விட்டது. வாழ்க சமச்சீர் கல்வி ! வாழ்க
ஜனநாயகம் !
ஜோதிடரும் சமுதாயத்தில் ஒரு அங்கம் தான்,
ஆகாயத்திலிருந்து வந்தவரில்லை. அவருக்கும் சமூக அக்கறை உள்ளது. இப்பதிவில்
அரசியல் எள்ளளவும் இல்லை.
இனி ஜோதிடத்திற்கு வருவோம். இனி
மன்னியின் ஜாதகத்தை ஆராய்வோம். மன்னிக்கு லக்னம் மிதுனம். லக்னாதிபதி
புதன். அவர் பாக்கியஸ்தானத்தில் அமர்ந்திருப்பது விசேஷம்தான். ஆனால் அவர்
எந்த நிலையில் அங்கு அமர்ந்துள்ளார், வக்ர கதியில், சனிபகவானின் வீட்டில்
உள்ளார். உடன் இருப்பவர் யார் தெரியுமா தி கிரேட் சூரிய பகவான். சூரிய
பகவான் மிதுன லக்னத்திற்கு யார்? கடந்த பதிவில் உள்ள அட்டவணையை
பார்க்கவும். மிதுன லக்னத்திற்கு சூரியன் பாவியாகிறார். அது
மட்டுமல்லாமல், சனிபகவானின் வீட்டில், அதாவது பகைவன் வீட்டில் இருக்கிறார்.
இப்படியாக லக்னாதிபதியான புதபகவான், வித்தியாகாரகனான புதபகவான், வக்கிரம்
பெற்று, பகை பெற்ற பாவியான சூரியனுடன் இருப்பதால்தான், உயர்தர கான்வெண்ட்
பள்ளியில் படித்திருந்தாலும், வசதி, வாய்ப்புகள் இருந்தும், தொடர்ந்து
கல்வியில் அவர் சுயமுன்னேற்றம் அடைய இயலவில்லை. நானும் எழுதப் போகிறேன்
என்று சொல்லி, தனது எழுத்தாற்றலை நிரூபிப்பதாகக் கூறி 80-களில்,
துக்ளக்கில் சில மொழி பெயர்ப்பு கட்டுரைகளும், குமுதத்தில் தொடர்கதையும்
சில நாட்கள் (வருடங்கள் அல்ல) எழுதினார். ஆனால் எழுத்துலகிலும் அவரால்
தொடர்ந்து வெற்றி பெற இயலவில்லை. அதற்கு ஜாதக ரீதியில் புதனே காரணம்.
ஏற்கனவே
2003, மார்ச் மாதத்தில், இராணி மேரி கல்லூரியை இடித்துவிட்டு அதில்
சட்டசபை கட்டப்போகிறேன், என்றார். கல்லூரியை காலி செய்ய வேண்டும் என்று
கல்லூரி நிர்வாகத்திற்கு நோட்டீஸ் அனுப்பினார். இதற்கு கல்லூரி மாணவிகள்
பலத்த எதிர்ப்பு தெரிவித்து, சுமார் 2 வாரங்கள் உள்ளிருப்பு போராட்டம்
நடத்தினர். தமிழக வரலாற்றில் மாணவிகள் இவ்வளவு பெரிய போராட்டத்தை இதுவரை
நடத்தியதில்லை. இதுதான் சாக்கு என்று மாணவர்களும், மாணவிகளுக்கு ஆதரவாக
களத்தில் இறங்கியது, ஒரு தனிக்கதை. ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்ட,
அந்தக் கல்லூரியை இடிக்க உயர்நீதி மன்றம் தடை விதித்தது.
ஆட்சி
அதிகாரம் கிட்டினாலும், கல்வித்துறையில் அவரால் புரட்சி செய்ய இயலவில்லை.
பெயர் கெட்டதுதான் மிச்சம். நீதிமன்றத்திலும், மக்கள் மன்றத்திலும்
குட்டுப்படவே நேரிட்டது. ஈகோ உணர்ச்சியால் அவர் குற்றம் செய்தாலும்,
ஜாதகத்தில் வேறு பல யோகங்கள் இருப்பதால், தண்டனையை அவர் அனுபவிக்காமல்
தமிழ்நாட்டுப் பள்ளிக்குழந்தைகளே அனுபவிக்கிறார்கள்.
ஆடுமாடு
மேய்க்கும் சிறுவர்களை இழுப்பதற்காக கல்விக் கண் திறந்த காமராஜர், இலவசக்
கல்வித்திட்டத்தையும், இலவச மதிய உணவுத் திட்டத்தையும் கொண்டுவந்தார். அதனை
மேலும் செம்மையாக்க வேண்டி, எம்.ஜி.ஆர் அவர்கள் சத்துணவு திட்டமாக
மாற்றினார். அடுத்து வந்த மு.க. அவர்கள் அரசியல் எதிரி என்றும் பாராமல்,
ஈகோ பார்க்காமால் வாரத்திற்கு 3 முட்டைகளை சத்துணவோடு சேர்த்துக்
கொடுத்தார். ஆனால் இன்று ஆடு, மாடுகளை இலவசமாகத் தருகிறேன் என்று
சொல்வதால், மேய்க்க ஆள் இல்லாமல், சிறுவர்களை பள்ளிக்கு அனுப்புவதில்
கிராமத்து பெற்றோர்களுக்கு சிரமம் இருக்கும். ஏற்கனவே விவசாயத்திற்கு
தொழிலாளிகள் கிடைப்பது கடினமாக உள்ளது. அதனால் கிராமப் புறங்களில் கல்வி
வளர்ச்சி குறைய வாய்ப்புண்டு என்று கல்வியாளர்களும், பொது ஜனங்களும்,
கருத்து தெரிவிக்கின்றனர்.
மீண்டும் ஜோதிடத்திற்கு வருவோம்.
இப்படி கேடு கெட்டுப் போன புதனைத் திருப்திபடுத்தவே பச்சை நிற உடைகளை அணிய
ஆரம்பித்தார். புதனை திருப்தி படுத்த வேண்டியும், சமச்சீர்
தலைவலியிலிருந்து விடுபட வேண்டியும், மாணவ, மாணவிகளும், ஆசிரிய
பெருமக்களும் இனிமேல் பச்சை நிற சமச்சீருடையில்தான் வர வேண்டும் என்று
கூடிய விரைவில் அரசின் சுற்றறிக்கை பறந்தாலும் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றும்
இல்லை.உயர்நீதிமன்ற, உச்சநீதிமன்ற தீர்ப்பு வருவதற்கு முன்பே புத்தகங்களில்
பல பக்கங்களை கிழிக்கச் சொல்லி ஆணையிட்டவர்கள் தானே.
இப்பொழுது
புரிகிறதா ஒரு நாட்டின் கல்வி வளர்ச்சிக்கு வித்யாகாரகன் புதன் எவ்வாறு
பொறுப்பேற்கிறார் என்று. ஜாதக ரீதியாக ஏற்படும் ஈகோ பிரச்சினைகளை பிறிதொரு
பதிவில் ஆராயலாம்.
புதன் – அறிவியல்
சூரியனுக்கு
மிக அருகில் உள்ள கோளாகும். மேலும் இது சூரியக் குடும்பத்தில் மிகச்சிறிய
கோளாகும். இது ஒரு முறை சூரியனைச் சுற்றி வர 88 நாள்கள்
எடுத்துக்கொள்கிறது. பெரும்பாலும் சூரியனின் பொலிவு காரணமாக புதனை காண்பது
அரிது. எனவே தான் நம் சான்றோர் பொன் கிடைத்தாலும் புதன் கிடைக்காது என்று
கூறுவர். காலை அல்லது மாலை நேரமே புதனைக் காண்பதற்கு சரியான தருணம்.
தோற்றத்தில்
கிட்டத்தட்ட சந்திரனைப் போன்றது புதன். இது வெட்டவெளியுடன் கூடிய பல
பெரும்பள்ளங்களைக்(craters) கொண்டு விளங்குகிறது. சந்திரனைப் போலவே
புதனுக்கும் காற்று மண்டலம் இல்லை. புதனுக்கு துணைக்கோள் கிடையாது. ஆனால்,
புதனுக்கு இரும்பாலான பெரிய உள்ளகம் உள்ளது. இதன் காரணமாக ஓரளவு
காந்தப்புலமும் புதனுக்கு உண்டு. இதன் புறப்பரப்பு வெப்பநிலையின் நெடுக்கம்
(range) −183 °C முதல் 427 °C வரை உள்ளது.
புதனைப்பற்றி அவ்வளவாக
அறியப்படவில்லை என்றே கூற வேண்டும். புதனை நெருங்கிய இரண்டு விண்கலங்களில்
முதலாவது மாரினர் 10 (Mariner 10). இது 1974-1975 காலகட்டத்தில் புதனை
நெருங்கி அதன் புறப்பரப்பில் 45% வரை படமெடுத்தது (mapped). இரண்டாவதாக
அனுப்பப்பட்ட மெசஞ்சர் 2008 சனவரியில் புதனருகில் பறந்த போது மேலும் 30%
படமெடுத்தது. இது மீண்டும் 2009ல் புதனை நெருங்கியது. அதன்பின் 2011 மார்ச்
18 இல் புதனின் சுற்றுப்பாதையில் புகுத்தப்பட்டு (Orbital insertion)
புதனின் துணைக்கோளாக மாறியது. இப்போதைக்கு புதனின் துணைக்கோள் என்றால் அது
மெசஞ்சர் விண்கலம்தான்.
பூமியைப் போல மூன்றில் ஒரு பங்கு விட்டத்தைக் கொண்டது. அதன் புவியீர்ப்பு விசை பூமியை விட 4 மடங்கு குறைவே.
புதன் – காரகத்துவம்
வித்யாகாரகன்.
கல்விக்கு அதிபதி. கணிதத்திற்கும், நுண்கலைகளுக்கும், தொழில்
நுட்பத்திற்கும், நுண்ணறிவிற்கும் காரகனாவார். ஜோதிட அறிவு, ஜோதிடத்தில்
நிபுணத்துவம் பெற புதன் பொறுப்பேற்கிறார். தாய்மாமனுக்கும் இவரே காரகன்.
நரம்புத் தளர்ச்சி போன்ற நோய்களுக்கும், சூதாட்டத்திற்கும் இவர்
பொறுப்பேற்கிறார். பெரும்பாலும் தன் நிலையை அடிக்கடி மாற்றிக்கொள்வார்.
சுபகிரகங்களுடன் சேர்ந்தால் சுபராகவும், அசுப கிரகங்களுடன் சேர்ந்தால்
தீயவராகவும் மாறிவிடுவார். கூட்டணி தர்மததைப் பற்றியெல்லாம் கவலைப்பட
மாட்டார். எப்படி வேண்டுமென்றாலும் மாறிக்கொள்வார்.
புதன் தசா
ஆயில்யம்,
கேட்டை, ரேவதி ஆகிய நட்சத்திரங்களில் ஜனித்த ஜாதகருக்கு தொடக்க தசையாக
புதன் தசை வரும். புதன்தசை மொத்தம் 17 வருடங்கள். தொடக்க தசையாக வரும்போது
பெரும்பாலும் 17 வருடத்தை விட குறைவாகவே வரும். இடையில் வரும் தசையாக
இருந்தால், 17 வருடம் முழுமையாக வரும். மேற்கூறிய நட்சத்திரத்தில் பிறந்த
குழந்தை, நட்சத்திரத்தை எவ்வளவு பாகம் கடந்துள்ளதோ அவ்வளவு விகிதம் தசையில்
கழிவு ஏற்படும். அதனை ஜோதிடத்தில் ”கர்ப்பச்செல்” என்று
குறிப்பிடுவார்கள். புதன் தசையில் புதன் – காரகத்துவம் என்ற தலைப்பில்
கூறப்பட்ட விஷயங்கள் ஜாதகருக்கு நடைபெறும், மேலும் ஜாதகரின் ஜென்ம
லக்கினத்தைப் பொறுத்து, பாவ (Bhava) அடிப்படையில், புதன் தரும் பலன்களும்
நடைபெறும்.
இனி ஜோதிட ரீதியாக புதனின் பயோடேட்டாவை பார்க்கலாம்.
புதன் – பயோடேட்டா
ஆட்சி பெறும் ராசி
மிதுனம், கன்னி
உச்சம் பெறும் ராசி
கன்னி
நீச்சம் பெறும் ராசி
மீனம்
நட்பு பெறும் ராசிகள்
ரிஷபம், சிம்மம், துலாம்,
சமம் (நியூட்ரல்)
மேஷம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம்
பகை பெறும் ராசிகள்
கடகம்
மூலத்திரிகோணம்
கன்னி
சொந்த நட்சத்திரம்
ஆயில்யம், கேட்டை, ரேவதி
திசை
வடகிழக்கு
அதிதேவதை
விஷ்னு
ஜாதி
வைசியன்
நிறம்
பச்சை
வாகனம்
குதிரை
தானியம்
பச்சைப் பயறு
மலர்
வெண்காந்தள்
ஆடை
பச்சைப் பட்டு
இரத்தினம்
பச்சை மரகதம்
செடி / விருட்சம்
நாயுறுவி
உலோகம்
பித்தளை
இனம்
அலி
அங்கம்
கழுத்து
நட்பு கிரகங்கள்
சூரியன், சுக்கிரன்
பகை கிரகங்கள்
சந்திரன்
சுவை
உப்பு
பஞ்ச பூதம்
வாயு
நாடி
வாதம்
மணம்
கற்பூரம்
மொழி
தமிழ், கணிதம், ஜோதிடம்
வடிவம்
குள்ளர்
புதனுக்குரிய கோயில்
மதுரை சொக்கர்
புதன் போற்றி
இதமுற வாழ இன்னல்கள் நீக்கு
புதபகவானே பொன்னடி போற்றி !
பதந்தருள்வாய் பன்னொலியானே
உதவியே அருளும் உத்தமா போற்றி !
கற்றல்! தெளிதல்! தெளிவித்தல்! என்ற கொள்கையுடன்