ஆன்மீகம் என்றால் என்ன?
நம்மை இயக்கும் ஆன்மாவை அறிய, தேட
வழிகாட்டும் இயலே ஆன்மீகம் ஆகும். ஆன்மாவுடன் தொடர்புடைய எந்த விஷயத்தைப்
பற்றி சொன்னாலும் அது ஆன்மீகமே. ஆன்மீகம் என்பது, உடல் மற்றும் ஆன்மாவிற்கு
இடையிலான வேறுபாட்டை அல்லது இருமைத் தன்மையை குறிக்கிறது. சத்து, அசத்து
குறித்து ஆராய்வதே ஆன்மீகத்தின் நோக்கமாகும். ஆன்மீகம் என்பது மனிதனின்
அடிப்படையான கேள்விகளுக்கு உள்ளுணர்வின் மூலம் விடைதேடும் முயற்சி ஆகும்.
அடிப்படையான கேள்விகள் என்றால், நான் யார்? எனக்கும் இந்த
பிரபஞ்சத்திற்குமான தொடர்பு என்ன? போன்ற புதிரான கேள்விகளுக்கு விடை காண
விழைவதே ஆன்மீகம் ஆகும்.
தத்துவம் என்றால் என்ன?
தத்துவம்
என்பது ஒரு விஷயத்தைக் குறித்து ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டு, அதனால்
பெறப்படும் முடிவை ஒட்டி தருவிக்கப்படும் கொள்கையே தத்துவமாகும். ஆன்மீகம்
தன் உள்ளுணர்வால் அறிந்ததை தனக்குத்தானே சொல்லும்போதே அது தத்துவமாக
ஆகிவிடுகிறது. அறிதலானது அந்த அறிதல் நிகழக்கூடிய அக்கணத்தில் கட்டற்றதாக
வடிவமற்றதாக இருக்கிறது. அறிவாக அது மாற்றப்படும்போது அதற்கு எல்லையும்
வடிவமும் உருவாகிவிடுகிறது. பேசப்பட்ட , கேட்கப்பட்ட விவாதிக்கப்பட்ட
ஆன்மீகம் உடனேயே தத்துவம் ஆகிவிடுகிறது. அனுபவ நிலையில் அகத்தில் நிற்கும்
ஆன்மீகமே தூயது. இதனை இவ்வாறு விளக்கலாம், அதாவது ராமகிருஷ்ண பரமஹம்சரின்
ஆழ்ந்த மனநிலை ஆன்மீகம். அதை பிறருக்கு விளக்க அவர் சொல்லும் கதைகள்
தத்துவம் ஆகிவிடுகின்றன.
மதம் என்றால் என்ன?
தத்துவம்
மூலம் சொல்லப்பட்டதை, வாழ்க்கைமுறையாக மாற்றும் பொருட்டு நெறிகளும்,
ஒழுக்கங்களும், மரபுகளும் உருவாக்கப்படுகின்றன. அவற்றை நிலைநிறுத்தவே
கோவில், மடம், புனிதநூல் போன்ற பல அமைப்புகள் உருவாகின்றன. இந்த நெறிகளும்,
மரபுகளும், அமைப்புகளும் சேர்ந்ததே மதம் ஆகும்.
யோகம் என்றால் என்ன?
யோகம்
என்ற சொல்லானது, பல துறைகளில் பல்வேறு பொருட்களில் பயன்படுத்தப்பட்டு
வருகிறது. பகவத் கீதையில் பயன்படுத்தப்படும் யோகம் என்ற சொல்லானது, கடவுளை
அடைய காட்டும் வழிகளாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதாவது, பக்தி யோகம், கர்ம
யோகம், ஞான யோகம் என்று யோகங்கள் வகைப்படுத்தப்பட்டுள்ளன.
பக்தி யோகம்
என்றால், இறைவன் மேல் அளவு கடந்த பக்தி செலுத்துவதன் மூலம் யோகத்தை
அடையலாம். பக்த பிரகலாதன், அபிராமி பட்டர், மஹாகவி காளிதாசர், கண்ணப்ப
நாயனார் போன்றவர்களை பக்தி மூலமாக யோகத்தை அடைந்தவர்களுக்கு உதாரணமாகச்
சொல்லலாம். பக்தி யோகத்திற்கு, கல்வி, குரு தீட்சை எதுவும் அவசியமில்லை,
பாமரர்களுக்கும் இந்த யோகம் சாத்தியமே.
அடுத்தது கர்ம யோகம். தான்
செய்யும் உயர்ந்த செயலால் இந்த யோகத்தை அடையலாம். தனக்கு இடப்பட்ட கடமையை
ஒழுங்காக செய்வதன் மூலமும், பொறுப்பைத் தட்டி கழிக்காமல்,
உதாசீனப்படுத்தாமல், நல்ல எண்ணத்துடனும், உதவி மனப்பாண்மையுடனும் இருக்கும்
எல்லோருக்கும் இது சாத்தியமே. இல்லறத்தில் நல்லறம் காண்பவர்களுக்கு இந்த
யோகத்தை அடைவது மிக எளிதாகும். வெளியூர் சென்ற கணவன் திரும்பி வரும் வரை,
பெற்றோரை மகனின் பிரிவை உணராத வகையில், அன்பாக பார்த்துக்கொள்ளும்
மனைவிக்கு இந்த யோகம் கைவரப்பெறும். கலப்படமில்லா உணவுப் பொருட்களை
நியாயமான விலையில், தராசில் சரியாக எடை போட்டு விற்கும் வியாபாரியும்
கர்மயோகியே. தான் கல்வியறிவு பெற்றிருக்கவில்லை என்றாலும், தமிழகத்தில்
உள்ள எல்லா குழந்தைகளும், இலவசமாக கல்வி பெற திட்டம் வகுத்த பெருந்தலைவர்
காமராஜர் ஒரு கர்மயோகியே. இராமகிருஷ்ணரின் பெரும்பாலான கதைகள் கர்ம யோகத்தை
விளக்குவதாகவே உள்ளன.
அடுத்தது ஞான யோகம். ஞானத்தால் யோக நிலையை
அடைவது. அறிவைக்கொண்டு, குருவின் உதவியால் அல்லது சுய முயற்சியால், தியானப்
பயிற்சியால் அல்லது வேறு ஏதாவது ஒரு வகை முறையான பயிற்சியால் ஞானம் பெற்று
யோகநிலையை அடைவது. பாரதத்தில் பெரும்பாலும், பிரணாயாமம், வாசி போன்ற
முறைகளில் மூச்சை ஒழுங்கு படுத்தி மனதை ஒருமுகப்படுத்தி, தியானம் செய்து,
குண்டலினி சக்தியை எழுப்பி, உள்ளொளி பெருக்கி யோகநிலையை அடைகிறார்கள்.
இராமயணத்தில் வரும் ஜனகரே (அதாங்க சீதாபிராட்டியின் வளர்ப்பு தந்தை) ஒரு
சிவ யோகிதான் என்று கூறுகிறார்கள். தற்காலத்தில் உள்ள கார்ப்பொரேட் சாமிகள்
அனைவரும், தியானத்தின் மூலம் யோகத்தை அடைய விழைகிறவர்களே.
இனி
ஜோதிடத்தில் பயன்படுத்தப்படும் யோகம் என்ற சொல்லுக்கு என்ன பொருள் என்று
பார்ப்போம். ஜோதிடத்தில் யோகம் என்று சொல்லப்படுவது சில குறிப்பிட்ட கிரக
நிலைகளால் (பிளானடரி காம்பினேஷன்) ஜாதகருக்கு உண்டாகும் சிறப்பு
பலன்களாகும். உதாரணத்திற்கு, இராகு கேதுக்களுக்கு இடைப்பட்ட ராசிகளில் மற்ற
எல்லா கிரகங்களும் அமைந்து இருந்தால் அதனை காலசர்ப்ப யோகம் என்று கூறுவர்.
ஒன்பதாம் அதிபதியும், பத்தாம் அதிபதியும் இணைந்து, சுபத்துவம் பெற்று,
நல்ல ஸ்தானங்களில் அமைந்திருந்தால் அதனை தர்மகர்மாதிபதி யோகம் என்று
கூறுவர். இன்னும் பல வித யோகங்களை பின் வரும் பாடங்களில் விளக்கமாக
காணலாம். அதே சமயம் ஜோதிடத்தில் அந்த காம்பினேஷன் ஜாதகருக்கு நன்மை தரும்
எனில் அதனை யோகம் என்றும் தீமை தரும் என்றால் அதனை அவயோகம் என்றும்
கூறுவர்.
அறிவியல் என்றால் என்ன?
அறிவால் உணரப்படும்
விஷயங்களை, ஆராய்ச்சி செய்து, விதிகளை அல்லது சூத்திரங்களை அமைத்து,
கிடைக்கப்படும் முடிவுகளை, சரிபார்த்து, தகுந்த ஆதாரத்துடன் நிரூபிப்பதே
அறிவியல் ஆகும். அதாவது ஆன்மீகம் என்பது அகப்பொருளை ஆராய்வது போல, அறிவியல்
புறப்பொருளை ஆராய்கிறது.
ஜோதிடம் என்றால் என்ன?
ஆன்மீகம்
மற்றும் தத்துவங்களை உள்ளடக்கிய ஒரு அறிவியலே ஜோதிடம் ஆகும். இதனை எப்படி
அறிவியல் என்று கூறலாம், என கேட்பவரும் உளர். ஜோதிடமும் ஒரு மனிதனின்
வாழ்க்கையில் நடைபெறும் வாழ்வியல் நிகழ்வுகளை, முன் கூட்டியே கூறி அதனை
நிரூபணம் செய்வதால் அறிவியல் என்றே கூறலாம். சரி இப்பொழுது தலைப்பிற்கு
வருவோம்.
ஆன்மீகமும், ஜோதிடமும்
உங்களை நீங்களே நன்றாக
தெரிந்து கொண்டு வாழ்க்கையை அனுபவிப்பதே உண்மையான ஆன்மிகம். அனைத்திலும்
கடவுளைக் காண்பது தான் மனிதனின் லட்சியம். அனைத்திலும் பார்க்க
முடியாவிட்டால், நாம் மிகவும் நேசிக்கும் ஒன்றிலாவது பார்க்க வேண்டும். அது
தானாக இருக்கும் போது, உன்னையே நீ அறிவாய் என்ற சாக்ரடிஸின் தத்துவம்
மெய்ப்படுகிறது. உன்னிலும் நீ இறைவனைக் காணலாம். அதனையே வேதத்தில் “அஹம்
பிரம்மாஸ்மி” என்று கூறுகிறார்கள். அண்டத்தில் உள்ளதெல்லாம் உன்
பிண்டத்திலும் இருக்கிறது என்று தமிழில் கூறுவார்கள்.
உன்னையே நீ
அறிய வேண்டுமெனில், அதற்கான சிறந்த வழியாக ஜோதிடத்தைக் கூறலாம். ஆம்
உங்களுடைய ஜாதகத்தை வைத்து, உங்களையே நீங்கள் அறிந்து கொள்ளலாம். அறிந்து
கொண்டு அதற்கேற்ப வாழ்க்கையை அமைத்துக் கொள்ளலாம். ஆசையை அடக்கலாம், தவறான
வழிகளில் செல்வதை தவிர்த்து, நேர் வழியில் நடை போடலாம். ஏமாற்றங்களை,
ஆபத்துகளை தவிர்க்கலாம். தனக்கும், தனது குடும்பத்திற்கும், சமூகத்திற்கும்
தன்னால் என்ன செய்ய இயலும் என்று ஜாதகத்தை ஆராய்ந்து, அதற்கான வழிகளை
அமைத்துக்கொள்ளலாம். எந்த வகையான யோகத்தை (பக்தி, ஞான, கர்ம யோகங்கள்)
நீங்கள் அடைவீர்கள் என்றும் உங்கள் ஜாதகத்தை வைத்து சொல்லலாம்.
இன்னும்
சொல்லப்போனால், ஆன்மீக ஆராய்ச்சியில் நீங்கள் ஈடுபட்டு, அதன் இலக்கை அடைய
முடியுமா என்றும் கூறிவிடலாம். இதற்கு லட்சக்கணக்கான உதாரணங்களைக் கூற
இயலும். நெஞ்சையள்ளும் சிலப்பதிகாரம் எழுதிய இளங்கோவடிகள், தன்
சகோதரருக்காக(சேரன் செங்குட்டுவன்) அரியனையை விட்டுக்கொடுத்து, துறவறம்
பூண்டு ஞானம் அடைந்து, ஆயிரக்கணக்கான வருடங்களானாலும் இன்றும் அவர் பெயர்
நிலைத்து நிற்பதற்கும் ஜோதிடமே காரணம்.
அதனால் உன்னையே நீ அறிவாய்.
அதற்கு உங்கள் ஜாதகத்தை ஆராய்ந்து தெளிவதில், தவறில்லை. ஜோதிடத்திற்கும்
ஆன்மீகத்திற்கும் தொடர்பு உண்டு என்பதே இந்த நாட்டாமையின் தீர்ப்பாகும்.
தீர்ப்பை மாத்து! என்று சொல்பவர்கள் பின்னூட்டத்தில் தகுந்த சான்றுடன்
அப்பீல் (கமெண்ட்) செய்யலாம்.
கற்றல்! தெளிதல்! தெளிவித்தல்! என்ற கொள்கையுடன்