Pages

தோஷ பரிகாரங்கள்


1. சூரிய பகவானுக்கு ஞாயிற்றுக் கிழமைகளில் அபிஷேகம் செய்து சிவப்பு வஸ்த்திரம் சிவப்புமணி செந்தாமரையால் அலங்காரம் செய்து, சூரிய மந்திரங்களை ஓதி வெள்ளெருக்குக் சமித்தினால் யாகத்தீயை எழுப்பிக் கோதுமைச் சர்க்கரைப் பொங்கலை ஆகுதி பண்ணித் தீபாராதனை செய்து அர்ச்சனை செய்து தூப தீப நைவேத்தியம் கொடுத்து, சவுராட்டிர ராகத்தில் சூரிய கீர்த்தனைகளைப் பாடிப் பிரார்த்தனை செய்து கொண்டு கற்பூர ஆரத்தி எடுக்க வேண்டும். இப்படிச் செய்தால் சூரியக் கிரகதஷம் நீங்கும்.

2. சந்திர பகவானுக்குத் திங்கட்கிழமையில் அபிஷேகம் செய்வித்து வெள்ளை வஸ்த்திரம் முத்துமாலை வெள்ளலரி வெள்ளல்லி என்பவற்றால் அலங்காரம் செய்து சந்திர மந்திரங்களை ஓதி எருக்கஞ்சமித்தினால் யாகத் தீயை எழுப்பிப் பச்சரிசி, பாலன்னம், தயிரன்னம் என்பவற்றால் ஆகுதி பண்ணித் தீபாராதனை செய்து, அர்ச்சனை செய்து, தூப தீப நைவேத்தியம் கொடுத்து, அசாவேரி ராகத்தில் சந்திர கீர்த்தனைகளைப் பாடிப் பிரார்த்தனை செய்து கொண்டு கற்பூர ஆரத்தி எடுக்க வேண்டும். இப்படிச் செய்தால் சந்திரக் கிரக தோஷம் நீங்கும்.

3. அங்காரக பகவானுக்குச் செவ்வாய்க்கிழமையில் அபிஷேகம் செய்துவித்துச் சிவப்பு வஸ்திரம் பவழம் சிவப்பு அலரி என்பவற்றால் அலங்காரம் செய்து அங்காரக மந்திரங்களை ஓதி கருங்காலிச் சமித்தினால் யாகத்தீயை எழுப்பித்த வரம் பருப்புப் பொடி அன்னத்தை ஆகுதி பண்ணித் தீபாராதனை செய்து அர்ச்சனை செய்து தூப தீப நைவேத்தியம் கொடுத்து, சுருட்டி ராகத்தில் அங்காரகக் கீர்த்தனைகளைப் பாடிப் பிரார்த்தனை செய்து கொண்டு கற்பூர ஆரத்தி எடுக்க வேண்டும். இப்படிச் செய்தால் அங்காரக கிரக தோஷம் நீங்கும்.

4. புதபகவானுக்குப் புதன்கிழமையில் அபிஷேகம் செய்வித்துப் பச்சை வஸ்திரம் மரகதமணி வெண்தாமரை என்பவற்றால் அலங்காரம் செய்து, புதன் மந்திரங்களை ஓதி நாயுருதி சமித்தால் யாகத் தீயை எழுப்பிப் பாசிப்பயத்தம் பருப்புப் பொடி அன்னத்தை ஆகுதி பண்ணித் தீபாராதனை செய்து அர்ச்சனை செய்து தூப தீப நைவேத்தியம் கொடுத்து, நாட்டக்குறிச்சி ராகத்தில் புதன் கீர்த்தனைகளைப் பாடிப் பிரார்த்தனை செய்து கொண்டு கற்பூர ஆரத்தி எடுக்க வேண்டும். இப்படிச் செய்தால் புதக் கிரகதோஷம் நீங்கும்.

5. குருபகவானுக்கு வியாழக்கிழமையில் அபிஷேகம் செய்வித்து மஞ்சள் நிற வஸ்திரம் புஷ்பராகமணி, வெண்முல்லை என்பவற்றால் அலங்காரம் செய்து குரு மந்திரங்களை ஓதி அரசஞ்சமித்தினால் யாகத்தீயை எழுப்பிக் கொத்து கடலைப் பொடி அன்னம் எலுமிச்சம் பழ அன்னம் என்பவற்றால் ஆகுதி பண்ணித் தீபாராதனை செய்து அர்ச்சனை செய்து தூப தீப நைவேத்தியம் கொடுத்து அடாணாராகத்தில் குரு கீர்த்தனைகளைப் பாடிப் பிரார்த்தனை செய்து கொண்டு கற்பூர ஆரத்தி எடுக்க வேண்டும். இப்படிச் செய்தால் குருக்கிரக தோஷம் நீங்கும்.

6. சுக்கிர பகவானுக்கு வெள்ளிக்கிழமையில் அபிஷேகம் செய்வித்து, வெள்ளை வஸ்த்திரம் வைரக்கல் வெண்தாமரை மலர் என்பவற்றால் அலங்காரம் செய்து சுக்கிர மந்திரங்களை ஓதி அத்திச் சமித்தினால் யாகத்தீயை எழுப்பி மொச்சைப் பொடியன்னம் தயிரன்னம் என்பவற்றால் ஆகுதி பண்ணித் தீபாராதனை செய்து அர்ச்சனை செய்து தூப தீப நைவேத்தியம் கொடுத்து, பரசுராகத்தில் சுக்ர கீர்த்தனைகளைப் பாடிப் பிரார்த்தனை செய்து கொண்டு கற்பூர ஆரத்தி எடுக்க வேண்டும். இப்படிச் செய்தால் சுக்கிரக் கிரகதோஷம் நீங்கும்.

7. சனிபகவானுக்குச் சனிக்கிழமையில் அபிஷேகம் செய்வித்து, கருப்பு வஸ்த்திரம், நீலக்கல் நீலோற்பலம் (கருங்குவளை) என்பவற்றால் அலங்காரம் செய்து, சனிபகவானின் மந்திரங்களை ஓதி வன்னிச் சமித்தினால் யாகத்தீயை எழுப்பி, எள்ளுத்தானியம், எள்ளுப்பொடி அன்னம் என்பனவற்றால் ஆகுதி பண்ணித் தீபாராதனை செய்து நல்ல எண்ணைத்தீபம் ஏற்றி, அர்ச்சனை செய்து தூப தீப நைவேத்தியம் கொடுத்து, யதுகுல காம்போதி ராகத்தில் சனிபகவான் கீர்த்தனைகளைப் பாடிப் பிரார்த்தனை செய்து கொண்டு கற்பூர ஆர்த்தி எடுக்க வேண்டும். இப்படிச் செய்தால் சனிக்கிரஹ தோஷம் நீங்கும்.

8. இராகு பகவானுக்கு ஏதாவதொரு கிழமையில் அபிஷேகம் செய்வித்து, கருப்பு வஸ்திரம் கோமேதக மணி நீலமந்தாரை இலுப்பைப்பூ என்பவற்றால் அலங்காரம் செய்து இராகு மந்திரங்களை ஓதி அறுகம் புல்லால் யாகத்தீயை எழுப்பி உளுந்து தானியம் உளுத்தம் பருப்புப் பொடி அன்னம் என்பவற்றால் ஆகுதி பண்ணித் தீபாராதனை செய்து அர்ச்சனை செய்து தூபதீப நைவேத்தியம் கொடுத்து, ராகப் பிரியா ராகத்தில் ராகு கீர்த்தனைகளைப் பாடி பிரார்த்தனை செய்து கொண்டு கற்பூர ஆரத்தி எடுக்க வேண்டும். இப்படிச் செய்தால் இராகுக் கிரகதோஷம் நீங்கும்.

9. கேது பகவானுக்கு ஏதாவதொரு கிழமையில் அபிஷேகம் செய்வித்து, பலவர்ண ஆடை வைடூர்ய மணி செவ்வல்லிமலர் என்பவற்றால் அலங்காரம் செய்து கேது மந்திரங்களை ஓதித் தருப்பையினால் யாகத்தீயை எழுப்பிப் கொள்ளுதானிய் கொள்ளுப்பொடி அன்னம் என்பவற்றால் ஆகுதி பண்ணித் தீபாராதனை செய்து அர்ச்சனை செய்து தூப தீப நைவேத்தியம் கொடுத்துச் சண்முக பிரியா ராகத்தில் கேது கீர்த்தனைகளைப் பாடிப் பிரார்த்தனை செய்து கொண்டு கற்பூர ஆரத்தி எடுக்க வேண்டும். இப்படிச் செய்தால் கேதுக் கிரகதோஷம் நீங்கும்.