மகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் நல்ல செல்வந்தராகவும், புத்திசாலியாகவும், பிறரிடம் கருணை காட்டி உதவி செய்பவராகவும் இருப்பார்கள். நீங்கள் வியாபாரத்தில் வெற்றி காண்பதுடன், சுகபோகமான வாழ்க்கை நடத்துவீர்கள். உங்களுக்கு பல பணியாட்கள் இருப்பார்கள். மத காரியங்களிலும் உங்களுக்கு ஈடுபாடு இருக்கும்.
உங்கள் மனைவியுடன் சுமுகமான உறவுகளை கொண்டிருப்பீர்கள். உங்கள் பெற்றோரிடம் கடமைப்பற்றுடன் நடந்து கொண்டாலும் எதிலும் கண்டிப்பாக இருக்கக்கூடிய ஒரு கடும் சுபாவம். உங்களிடம் குடிகொண்டிருக்கும். உங்கள் எண்ணமும், செயலும், தெளிவானதாக, திட்டவட்டமானதாக அமைந்திருக்கும்.
மாசி மகம்:
மாசிமகம் என்பது மாத பவுர்ணமியுடன் கூடி வரும் மக நட்சத்திர நாளில் கொண்டாடப்படும் ஒரு சிறப்பான நாளாகும். அன்றைய தினம் கடலாடும் விழா என்று கொண்டாடப்படுகிறது. கடலில் தீர்த்தமாட இயலாதவர்கள் விரதமிருந்து கோவிலுக்கு சென்று இந்நாளை கொண்டாடுவர்.
அன்று யமுனை, சரஸ்வதி, கோதாவரி, நர்மதா, சிந்து, காவேரி போன்ற 12 நதிகள் மக்கள் கழுவிய பாவச் சுமைகளை அகற்றி புனிதம் பெற அங்கு வருவதாகவும், குரு சிம்ம ராசிக்கு வரும் இந்நாளில் எல்லோரும் கடலில் நீராடி நற்பேறு பெறுவர் என்பதும் ஐதீகம். மகம் நட்சத்திரத்திற்குரிய தெய்வம் விநாயகர். கிரகம் கேது.
விநாயகர் வழிபாடு:
விநாயகர் என்றால் முதல்வன் என்று பொருள். நாம் எந்தவொரு செயலை செய்தாலும், முதலில் விநாயகரை நினைத்து வழிபட்ட பின்னரே மற்ற கடவுள்களுக்கு பூஜை செய்கிறோம். விநாயகரின்றி எதுவும் நடைபெறாது. தவிர நம்முடைய வினைகளுக்கு தடையாக இருப்பவற்றை தகர்த்து சித்தியும், புத்தியும் வழங்க வல்லவர் கஜமுகன்- கரிமுகன் என்ற ஐங்கரத்தான். விநாயகர் என்ற சொல்லுக்கு `தனக்கு மேலே வேறு தலைவர் இல்லாதவர் என்றும் ஒரு பொருள் உண்டு. விநாயகர், தேவர்கள் எவருக்கும் இல்லாத தனித்த ஆற்றல் கொண்டவர்.
விரதத்தின் பலன்கள்:
மக நட்சத்திரகாரர்கள் சங்கடஹர சதுர்த்தி அன்று விரதம் கடைப்பிடிப்பதால் நீண்ட நாட்களாக தீராமல் உள்ள நோய் தீரும். வாழ்க்கையில் தொடர்ந்து பலவகை துன்பங்களுக்கு உள்ளாகிறவர்கள் நிலையான சந்தோஷத்தை அடைய முடியும். மிகச்சிறப்பான கல்வி அறிவு, புத்தி கூர்மை, நீண்ட ஆயுள், நிலையான செல்வம், நன்மக்கட்பேறு என பலவிதமான நன்மைகளை அடைய முடியும்.
சனி தோஷத்திற்கு உள்ளாகிறவர்கள் இவ்விரதத்தை அனுசரித்தால், சனியின் தாக்கம் பெரும் பகுதி குறையும். சங்கடஹர சதுர்த்தியன்று அதிகாலை நீராடி, பால்பழம் அருந்தி, உணவு உட்கொள்ளாமல் மாலை வரை கணநாதன் நினைவோடு உபவாசம் இருக்க வேண்டும்.
மாலை ஆலயத்திற்கு சென்று, விநாயகப் பெருமானுக்கு நடைபெறும் அபிஷேக ஆராதனையில் கலந்து கொள்ள வேண்டும். அன்றைய தினம் ஆலயத்தை எட்டு முறை வலம் வருதல் வேண்டும். அனைத்து பூஜைகளும் முடிந்தவுடன் வீட்டிற்கு வந்து உபவாசத்தை முடித்துக் கொள்ள வேண்டும்.
விநாயகப் பெருமானுக்கு வெள்ளை எருக்கு, அருகம்புல் மாலை சாற்ற வேண்டும். சங்கடஹர சதுர்த்தி தினத்தில் விநாயகருக்குரிய கணேச காயத்ரீ மந்திரத்தையும், தமிழில் அகவலையும் பாடி கணபதியை தியானித்தால் கூடுதல் பலன் உண்டு.
ஆலமரம்: ஆலமரம் மகம் நட்சத்திரத்தின் நண்பனாக திகழ்கிறது. அதன் நல்ல கதிர்வீச்சுகளையெல்லாம் சேகரித்து வைத்து மனிதர்களுக்கு திரும்பக் கொடுக்கிறது. கெட்ட கதிர்வீச்சுகளால் உண்டாகும் நோய்களையும், தோஷத்தையும் ஆலமரம் குணப்படுத்துகிறது.
மகம் நட்சத்திரத்தில் பிறந்த சிலர் இடத்திற்கேற்றபடியும், நேரத்திற்கேற்றபடியும், தன் பேச்சையும், செயலையும் மாற்றிக் கொள்ளும் குணம் கொண்டவராகவும், பேச்சில் பிறரைக் கவரக்கூடியவராகவும், முன்கோபம் கொண்டவராகவும், நல்ல நிர்வாகம் திறமை கொண்டவராகவும் இருப்பதால் மற்றவர்களை ஆட்சி செய்யும் ஆட்டிப் படைக்கவும் திறமை சாலியாகவும் இருப்பார்கள்.
இவ்வளவு இருந்தும் மனநிம்மதி இல்லாமல் தவிப்பார்கள். மகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் நன்றாக உடை உடுத்திக் கொண்டு இருப்பார்கள்.