Pages

சிலருக்கு ஓம்சிவசிவஓம் மந்திரஜபம் எதனால் பயன்படாமல் போகும்?



பல ஆன்மீகக்கடல் வாசகர்கள் எமக்கு மின் அஞ்சல் அனுப்பி வருகின்றனர்.நான் ஒரு லட்சம் தடவைகள் ஓம்சிவசிவஓம் ஜபித்துவிட்டேன்.ஆனால்,எனக்கு எந்த ஒரு நற்பயனும் விளையவில்லை;ஏன்? என்ற கருத்தின் அடிப்படையில் அவர்களின் மடல் இருக்கும்.இது தொடர்பாக எனது ஆன்மீக குரு திரு.சிவமாரியப்பன் அவர்களிடம் விவாதித்தேன்.அவர் சொன்ன பதிலை அப்படியே உங்களுக்கு தர விரும்புகிறேன்.
ஒரு லட்சம் தடவை ஓம்சிவசிவஓம் ஜபிக்கவேண்டும் என விரும்புவது போற்றத்தக்க,பாராட்டத்தக்க லட்சியமே! அதில் சிறிதும் சந்தேகமில்லை;
ஆனால்,ஒவ்வொரு நாளும் ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையில்,ஒரே சீராக ஓம்சிவசிவஓம் ஜபிக்க வேண்டும்.அப்படி ஜபிப்பதன்மூலமாக மட்டுமே ஓம்சிவசிவஓம் மந்திர அதிர்வுகள் நமக்குள்ளும்,நமது விதிக்குள்ளும் படிப்படியான மாற்றத்தை உருவாக்கும்.
விளக்கமாகச் சொல்வதானால்,
இன்று நீங்கள் ஓம்சிவசிவஓம் ஜபிக்க ஆரம்பிக்கிறீர்கள் என வைத்துக்கொள்வோம்;இன்றிலிருந்தே தினமும் ஒரு மணி நேரம் ஓம்சிவசிவஓம் ஜபிக்க இயலாது.ஒருவித அசதி வந்துவிடும்.எனவே,முதல் 15 நாட்களுக்கு 5 நிமிடம் அல்லது 10 நிமிடம் அல்லது 15 நிமிடம் வரை ஓம்சிவசிவஓம் ஜபித்துவர வேண்டும்;இரண்டாவது 15 நாட்களுக்கு இதுவரை நாம் எவ்வளவு நேரம் ஜபித்தோமோ அந்த நேரத்தை இரட்டிப்பாக்க வேண்டும்.(5 நிமிடம் எனில் 10 நிமிடமாகவும்; 10 நிமிடம் எனில் 20 நிமிடமாகவும்;15 நிமிடம் எனில் 30 நிமிடமாகவும்) இவ்வாறு இரண்டு அல்லது மூன்று மாதங்களுக்குள் நமது ஒரு நாள் ஓம்சிவசிவஓம் மந்திரஜபம் செய்யும் நேரத்தை ஒரு மணி நேரத்துக்கு படிப்படியாக உயர்த்திட வேண்டும்.இப்படி ஆறு மாதங்கள் அல்லது ஓராண்டு வரையிலும் தினமும் ஒரு மணி நேரம் வரையிலும் ஓம்சிவசிவஓம் ஜபித்துவருவதன் மூலமாக நமது ஜப எண்ணிக்கை ஒரு லட்சத்தைத் தொட்டுவிடும்.(நமது ஜப எண்ணிக்கையை ஒவ்வொரு நாளும் எண்ண வேண்டிய அவசியமில்லை;)ஒரு லட்சத்தைத் தொட்டப்பின்னர்,தினமும் 15 நிமிடம் மட்டும் ஓம்சிவசிவஓம் ஜபித்தால் போதுமானது.


ஒரு லட்சம் வரை ஓம்சிவசிவஓம் ஜபித்து முடிப்பது,நமது வங்கிக் கணக்கில் குறைந்த பட்ச இருப்பு வைப்பதற்குச் சமமாகும்;அதற்குப் பிறகு தினமும் 15 நிமிடம் வரையிலும் ஓம்சிவசிவஓம் ஜபிப்பது அந்த குறைந்த பட்ச இருப்பிற்கு மேல் சேமிப்பது போன்றது.எந்த ஒரு மந்திரமும் ஒரு லட்சம் வரை ஜபிக்கும்வரையிலும் பலன் தராது;அதன் பிறகு,அது நமது ஜபத்தினால்,நமக்கு மட்டும் உயிர்பெற்று,செயல்படத்துவங்கும்.
ஓம்சிவசிவஓம் மந்திர ஜபத்தைப் பொருத்தவரையிலும் ,10,000 தடவை ஜபித்ததுமே அது செயல்படுவதை அனுபவபூர்வமாக உணரலாம்.பல ஆன்மீகக்கடல் வாசகர்கள் 10,000;15,000;20,000 தடவை ஓம்சிவசிவஓம் ஜப எண்ணிக்கையைக் கடந்ததும்,ஜபிக்கும்போது அபூர்வமான சிவன் கோயில் அல்லது பறக்கும் யானை அல்லது நீண்ட ஜடாமுடியுடன் கூடிய ஒரு சாமியார் அல்லது பிரகாசமான கோவில் என வெவ்வேறு காட்சிகளைக் கண்டிருக்கிறார்கள்.அவையெல்லாம் அவர்களின் பூர்வ
ஜன்மத்துடன் தொடர்புடைய சிவத்தொடர்புக்குரியவை;விரிவாக விளக்கக் கூடாது என மானசீக குரு உத்தரவிட்டுள்ளதால் கோடி காட்டியிருக்கிறேன்.
சில மந்திரங்கள் பணத்தை வர வழைக்கும்;சில மந்திரங்கள் எல்லோரையும் நம்மைத் தேடி வர வழைக்கும்;சில மந்திரங்கள் நமது கஷ்டங்களைப் போக்கும்;சில மந்திரங்கள் நாம் தேடும் தெய்வம் அல்லது துறவியை சந்திக்க வைக்கும்;சில மந்திரங்கள் நமது நெற்றிக்கண்ணைத் திறக்க வைக்கும்;அப்படி நெற்றிக்கண் திறந்தால்,நம்மைச் சுற்றியிருக்கும் சூட்சும உலகத்தை நாமே பார்க்கவும் வைக்கும்;ஆனால்,நமது ஓம்சிவசிவஓம் இந்த அனைத்தையும் செயல்படுத்தி நம்மை சிவ அம்சமாகிய ருத்ரனாக்கும் என்பது அனுபவ உண்மை;எனவே, ஒரு லட்சம் தடவைக்கு மேலும் ஓம்சிவசிவஓம் ஜபிக்கவும்.

ஓம்சிவசிவஓம்