Pages

தோஷம் போக்கிய முருகன்


கந்தசஷ்டியின் போது முருகப் பெருமான் சூரசம்ஹாரம் செய்து, பின் மிகவும் களைப்பாகி சோர்ந்து விடுகிறார். கொல்வது என்பது யாராக இருந்தாலும் ஹத்திதோஷம் பிடிக்கும். பரமேஸ்வரன் ஆனாலும் அல்லது பரந்தாமன் ஆனாலும் அவர்களும் தோஷம் நீங்க பரிகாரம் செய்து கொள்ள வேண்டியது. அவசியமாகும். முருகனும் ஹத்திதோஷம் போக்க கீழ்வேளூர் என்ற இடத்திற்கு வந்தார்.

இது நாகப்பட்டினம் அருகில் இருக்கிறது. அழகான ஆறு ஒன்று அங்கு ஓடுகிறது. முருகன் இந்தத்தலத்திற்கு வந்து தன் வேலை ஊன்ற, அந்த இடத்திலிருந்து புனிதநீர் வெளி வந்தது. அதுவே தீர்த்தமானது. அந்த தீர்த்ததில் நீராடி, பின் தியானத்தில் அமர்ந்தார். அப்போது சூரசம்ஹாரக் காட்சிகள் அவர் தியானத்தைக் கலைத்தன.

உடனே முருகன் தன் அன்னை உலகமாதாவை வணங்கினார். பின் வேண்டிக் கொண்டார். `தாயே' உலக நன்மைக்காக சூரசம்ஹாரம் செய்து விட்டு வந்தேன், ஆனாலும் என்மனம் நிம்மதி இல்லாமல் தவிக்கிறது. தாங்கள் தான் அருள் புரிய வேண்டும் என்றார். உடனே பார்வதி தேவி இத்தலத்தின் எல்லா திசைகளிலும் தன் உருவத்தைப் பரப்பி ஒரு வேலி போல் போட்டு நின்றாள்.

அவள் பெயர் அஞ்சு வட்டத்தம்மன் ஆயிற்று. அவள் முழு வட்டமாக தன் உருவத்தை பரப்பி நின்று முருகனைக் காத்ததால் இந்தப் பெயர். இதனால் பிரும்ம ஹத்திகள் ஓடிப்போயின. முருகனும் தவத்தை முடித்து தோஷம் நீங்கி அருள் பெற்றார். இந்த இடம் கீழ்வேளூர் என்று ஆனது.