Pages

ஏழுமலையான் கோயிலில் 15ம் தேதி நவராத்திரி பிரம்மோற்சவம் தொடக்கம்


திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நவராத்திரி பிரம்மோற்சவம் வரும் 15ம்தேதி தொடங்குகிறது. திருமலை-திருப்பதி ஏழுமலையான் கோயிலில் 3 ஆண்டுக்கு ஒருமுறை 2 பிரம்மோற்சவம் நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு முதல் பிரம்மோற்சவம் கடந்த மாதம் 18ல் கொடியேற்றத்துடன்
தொடங்கி 26ம் தேதியுடன் நிறைவடைந்தது. 2வது நவராத்திரி பிரம்மோற்சவம் வரும் 15ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. அன்று காலை தங்க திருச்சி வாகனத்தில் ஸ்ரீதேவி, பூதேவி சமேதரராக மலையப்ப சுவாமி வீதி உலாவும், இரவு பெரிய சேஷ வாகன உற்சவம் நடக்கிறது.

16ம்தேதி காலை சின்ன சேஷ வாகனத்திலும், இரவு அன்ன வாகனத்திலும், 17ம்தேதி காலை சிம்ம வாகனத்திலும், இரவு முத்து பந்தல் வாகனத்திலும், 18ம்தேதி காலை கல்ப விருட்ச வாகனத்திலும், இரவு சர்வ பூபால வாகனத்திலும் 19ம்தேதி காலை மோகினி அவதாரத்திலும் காட்சி தருகிறார். பிரம்மோற்சவ முக்கிய நிகழ்ச்சியாக இரவு கருட சேவையும் நடக்கிறது.

20ம்தேதி காலை அனுமந்த வாகனத்திலும், மாலை புஷ்ப பல்லக்கும், இரவு யானை வாகனத்திலும் 21ம் தேதி காலை சூரிய பிரபை வாகனத்திலும், இரவு சந்திர பிரபை வாகனத்திலும், 22ம் தேதி காலை 7.30 மணிக்கு தங்க ரதத்திலும், இரவு குதிரை வாகனத்திலும் ஏழுமலையான் வீதி உலா வருகிறார். 23ம் தேதி சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரியுடன் பிரம்மோற்சவம் நிறைவு பெறுகிறது.