
திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் 20 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் தரிசனம் செய்தனர். இது குறித்து திருமலை திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள் கூறியதாவது: ஏழுமலையான் கோயில் நவராத்திரி பிரம்மோற்சவத்திற்கு அதிகளவில் பக்தர்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், தொடர் மழையால் கூட்டம் குறைந்தது. வெள்ளி, சனி, ஞாயிறு என தொடர்ந்து விடுமுறை என்பதால் நேற்று பக்தர்கள் கூட்டம் அதிகளவில் இருந்தது. இலவச தரிசனத்தில் பக்தர்கள் காத்திருக்கும் 31 அறைகளும் நிரம்பி, 2 கிமீ தூரம் வரை நீண்ட வரிசையில் காத்திருந்தனர். இதனால், ஏழுமலையானை அவர்கள் தரிசிக்க 20 மணி நேரமானது. மேலும், ரூ.300 சிறப்பு தரிசன டிக்கெட்டில் 3 கிமீ தூரம் வரை 7 மணி நேரமும், மலை பாதை வழியாக நடந்து வரும் பக்தர்கள் 3 மணி நேரமும் காத்திருந்து தரிசனம் செய்தனர். தொடர் விடுமுறை நாட்கள் என்பதால் வரும் திங்கட்கிழமை வரை இதே நிலை நீடிக்கும்.
இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.


