Pages

திருப்பதி பிரம்மோற்சவம் 7ம் நாள் : சூரிய, சந்திர பிரபையில் மலையப்ப சுவாமி பவனி


திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயில் நவராத்திரி பிரம்மோற்சவத்தின் 7ம் நாளான நேற்று காலை சூரிய பிரபை வாகனத்திலும், இரவு சந்திர பிரபை வாகனத்திலும் மலையப்ப சுவாமி நான்குமாட வீதிகளில் உலா வந்தார். திருமலை திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நவராத்திரி பிரம்மோற்சவம் கடந்த 15ம் தேதி தொடங்கியது. 6ம் நாளான நேற்றுமுன்தினம் காலை அனுமந்த வாகனத்திலும், மாலை புஷ்ப பல்லக்கில் ஸ்ரீதேவி, பூதேவி தாயாருடன் மலையப்பர் நான்கு மாடவீதியில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இரவு கஜ வாகனத்திலும் பவனி வந்தார். 7ம் நாளான நேற்று காலை சூரிய பிரபை வாகனத்தில் மலையப்ப சுவாமி மாட வீதிகளில் பவனி வந்தார். நான்கு மாட வீதிகளிலும் திரண்டிருந்த பக்தர்கள் கோவிந்தா, கோவிந்தா என முழக்கமிட்டனர். நேற்றிரவு சந்திரபிரபை வாகன உற்சவம் நடந்தது. கடும் குளிரிலும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.