திருமலை:
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நவராத்திரி பிரம்மோற்சவ 3ம் நாளான நேற்று
காலை சிம்ம வாகனத்திலும், இரவு முத்துப்பந்தல் வாகனத்திலும் மலையப்ப சுவாமி
மாட வீதிகளில் பவனி வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். திருமலை -
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நவராத்திரி பிரம்மோற்சவம் கடந்த 15ம் தேதி
தொடங்கியது. இதன் 3ம் நாளான நேற்று காலை, நரசிம்ம வாகனத்தில் மலையப்ப
சுவாமி மாட வீதிகளில் உலா வந்தார். ஸ்ரீராமானுஜ பெரிய ஜீயர், சின்ன ஜீயர்
தலைமையில் வேத பாடசாலை மாணவர்கள் வேதங்களை படித்து, திவ்ய பிரபந்தம்
பாடினர். இதில் தமிழகம், ஆந்திரா, கர்நாடக மாநிலங்களை சேர்ந்த பக்தர்கள்
பல்வேறு வேடமணிந்து வந்தனர். பெண்கள் கோலாட்டம் ஆடினர். அன்னமாச்சார்யா,
தேச சாயித்யா திட்டத்தின்கீழ் கலைஞர்களின் பஜனை நடந்தது. நான்கு மாட
வீதிகளிலும் திரண்டிருந்த பக்தர்கள் கோவிந்தா, கோவிந்தா என பக்தி
முழக்கமிட்டனர். இரவு முத்துப்பந்தல் வாகனத்தில் ஸ்ரீதேவி, பூதேவி சமேத
மலையப்ப சுவாமி வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். பக்தர்கள்
கூட்டம் அலை மோதியது.



