திருப்பதி
ஏழுமலையானை தரிசனம் செய்தாயிற்று. ஆந்திர மாநிலத்தில் இந்தக் கோயில் தவிர,
அஹோபிலம் என்ற திருத்தலம் இன்னொரு திவ்ய தேசம். பிரயாண சௌகரியம் கருதி,
இந்தத் தலத்தை சில நாட்கள் கழித்து தரிசிக்கலாம் - அஹோபில நரசிம்மர்
கோபித்துக் கொள்ள மாட்டார்.
ஆகவே இப்போது நடுநாட்டுத் திவ்ய தேசங்களுக்குச் சென்று தரிசிக்கலாம். முதலில் திருவஹீந்திரபுரம். திருமலை கோவிந்தனுக்கு அடுத்தபடியாக இந்தக் கோயில் தேவநாதனை தரிசிப்பதும் பொருத்தம்தான். ஏனென்றால் இவர் வேங்கடவனுக்கு அண்ணனாகக் கருதப்படுகிறவர்!
கோயிலுக்குள் நுழையும் முன்னால் இத்தலம் பற்றிய புராணம்.
முனிவர்களுக்கும் தேவர்களுக்கும் ஒட்டு மொத்தமாக ஓர் எண்ணம் தோன்றியது. அது, பாற்கடலுக்குச் சென்று பரந்தாமனை வழிபட வேண்டும் என்பது. அனைவரும் அவ்வாறு சென்றபோது அங்கே நாராயணனைக் காணாமல் திகைத்தார்கள். சரி, வைகுந்தம் சென்று பார்க்கலாம் என்று புறப்பட்டுச் சென்றால், அங்கும் ஏமாற்றமே! எங்கே போய்விட்டார் எம்பெருமான்?
பூலோகத்தில் பூமாதேவியும் மார்க்கண்டேயரும் அவரைக் குறித்து தவம் இயற்றுவதால், அவர்களுக்குக் காட்சியளிப்பதற்காக திருமால் அங்கே சென்றுவிட்டார் என்று தகவல் கிடைத்தது. உடனே அவர்கள் அனைவரும் பூலோகத்திற்குப் புறப்பட்டு வந்தார்கள். திருவஹீந்திரபுரத்தில் கண்ணாரக் கண்டார்கள். இவர்களுக்கும் திவ்ய தரிசனம் தந்த நாராயணன், அவர்களது விருப்பம் என்னவென்று கேட்டார். அவர்களோ, மார்க்கண்டேயரின் விருப்பமே தம் விருப்பம் என்று பெருந்தன்மையுடன் தெரிவித்தனர். மார்க்கண்டேயரோ கூடுதல் பெருந்தன்மையுடன், தங்களுக்கு சேவை சாதித்த அதே தோற்றத்தில் பூலோகவாசிகள் அனைவருக்கும் காட்சி தரும் வகையில் அந்தத் தலத்திலேயே கோயில் கொண்டு அருளுமாறு பகவானை வேண்டிக் கொண்டார்.
அப்படியே ஆயிற்று.
இன்னொரு புராணமும் உண்டு. ஒரு சமயம் தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் கடும்போர் நிகழ்ந்தது. அந்த யுத்தத்தில் அசுரர்கள் தேவர்களை வெற்றி கண்டார்கள். இதனால் மனமொடிந்து போன தேவர்கள் திருமாலைத் தஞ்சமென அடைந்தார்கள். உடனே கருட வாகனமேறி, பரந்தாமன் அவர்களைக் காக்கப் பறந்து வந்தார். தன் சக்ராயுதத்தை ஏவி, அதனால் அனைத்து அசுரர்களையும் மாய்த்தார். ஆனால் அசுரர்கள் தம் கொடிய தவத்தால் சிவபெருமானிடமிருந்து அரிய வரங்களைப் பெற்றிருந்தார்கள். ஆகவே தம்மை வழிபட்ட அசுரர்களைக் காக்க வேண்டிய பொறுப்புணர்வில், தன் சூலாயுதத்தை சக்ரத்தை நோக்கி எறிந்தார் ஈசன். சக்ராயுதமோ அதனை அப்படியே வாங்கி தனக்கு ஓர் அணிகலனாக அணிந்து கொண்டது. அது கண்டு வியந்த மகாதேவன், மகாவிஷ்ணுவை உற்றுப் பார்க்க, அங்கே அவர், பிரம்மா-விஷ்ணு-சிவ ஸ்வரூபனாகக் காட்சியளித்தார். பிறகு சூலத்தை சிவபெருமானிடமே அளித்த திருமால், அந்தக் காட்சியைக் கண்ணுற்ற தேவர்கள், ரிஷிகள் வேண்டுகோளின்படி, அங்கேயே அதே கோலத்தில் நிலை கொண்டார்.
அப்போது பெருமாளுக்கு தாகம் ஏற்படவே, அதைத் தணிப்பதற்காக கருடன் வைகுண்டத்துக்கு விரைந்தான். அங்கிருந்த விரஜா தீர்த்தத்தைக் கொண்டுவந்து தன் தலைவன் தாகம் தணிக்க வேண்டும் என்று அவனுக்கு அவா. போரினால், மஹாவிஷ்ணு சோர்வு கொள்ளக் கூடுமோ எனக் கருதி, அவர் ஓய்வு எடுக்க தன் உதவி தேவைப்படும் என்று நினைத்து, ஏற்கெனவேயே அங்கே வந்திருந்தான் ஆதிசேஷன். அவருக்கு தாகம் என்றறிந்ததும் உடனே அந்த பூமியைத் தன் வாலால் அடித்துப் பிளந்து அங்கிருந்து ஊற்றுப் பெருக, ஐயனின் தாகமும் தணிந்தது. (இந்த சேஷ தீர்த்தம் இப்போதும் ஒரு கிணறாக, மேல்சுவரில் பாம்புத் தலையுடன் காணப்படுகிறது. பக்தர்கள் பிரார்த்தனை வகையாக பால், உப்பு, மிளகு ஆகியவற்றை இந்தக் கிணற்றில் இடுகிறார்கள்.
இதே கிணற்று நீர்தான் பெருமாளின் திருமஞ்சனத்துக்கும் பயன்படுத்துவதாகச் சொல்கிறார்கள். ஆனால் இந்தக் கிணற்றைப் பார்க்க மிகவும் வேதனையாக இருக்கிறது. அவ்வளவு அசுத்தம், துர்நாற்றம். இதற்கு பதிலாக கோயிலுக்கு அருகில் ஓடும் கெடில நதியில் பால் முதலான பிரார்த்தனைப் பொருட்களை இடலாம் என்று இந்தக் கோயிலில் விதி செய்யலாமே என்று தோன்றியது. ஆனால் விரஜா தீர்த்தத்தைக் கொண்டு வந்த கருடன், அந்த நீரைத் தன் தலைவன் பருக, தனக்குக் கொடுத்து வைக்கவில்லையே என்று வருத்தம் கொண்டான். ஆனாலும் அவனுடைய ஏமாற்றத்தைப் போக்கும் வகையில், அந்த விரஜா தீர்த்தத்தை அங்கேயே நிலை கொள்ளச் செய்து, அதை நதியாகவும் ஓடவிட்டார், மஹாவிஷ்ணு. அதுமட்டுமல்லாமல், வருங்காலத்தில் நடைபெறப்போகும் ரதோற்சவ தினத்தில் அந்த நதிக்கரையில் பூஜைகளையும் தீர்த்தத்தையும்
ஏற்றுக் கொள்வதாக வாக்களித்தார்.
கருடனால் கொண்டுவரப்பட்ட தீர்த்தம் இங்கே, இப்போதும் கெடில நதியாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்த நதி நீர், பார்வைக்குக் கலங்கலாக இருந்தாலும், கையில் முகந்தால், ரேகைகள் தெரியுமளவுக்குத் தெளிவாக மாறும் அதிசயத்தைக் காணலாம். இந்த நீர் கலங்குவானேன்? தான் கொணர்ந்த தீர்த்தம் சரியான சமயத்தில் தன் நாயகனுக்கு உதவாமல் போய்விட்டதே என்ற கருடனின் மனக் கலக்கம்தான் காரணமா? இல்லை, இதற்கு இன்னொரு கதையும் சொல்லப்படுகிறது.
அதாவது, எம்பெருமான் தாகம் தீர்க்க வைகுண்டம் நோக்கி வேகமாகப் புறப்பட்ட கருடன், வழியில் ஒரு ரிஷியின் கமண்டலத்தில் தான் தேடிச் செல்லும் விரஜா தீர்த்தம் இருப்பதை அறிந்து, தன் அலகால் அந்தக் கமண்டலத்தைத் தட்டிவிட்டான். வைகுந்தம் போகிற நேரத்தில், அதே தீர்த்தம் அருகிலேயே கிடைக்கும் பட்சத்தில், இதையே எடுத்துச் சென்று பெருமாளுக்கு அர்ப்பணிக்கலாமே என்று அவனுக்குத் தோன்றியிருக்கிறது. கருடனின் இந்தச் செயலால் கோபமுற்ற ரிஷி, கருடனை எதிர்க்க மனமில்லாதவராக, ‘இந்த நீர் கலங்குவதாக’ என்று சபித்து விட்டார். அதுகேட்டுப் பதறிய கருடன், தான் நாராயணனின் தாகம் தீர்ப்பதற்காகத்தான் அவ்வாறு அவருடைய கமண்டலத்தைத் தட்டிவிட்டதாகச் சொன்னார். இதைக்கேட்டு கருடனைவிட அதிகமாகப் பதறிய ரிஷி, உடனே ‘கலங்கிய நீர் தெளியட்டும்’ என்று சாப விமோசனமும் தந்தார். அதனால், கருடனால் கொண்டு வரப்பட்ட இந்த நதி, கெடில நதியாக இன்றும் ஓடிக் கொண்டிருக்கிறது.
இப்பகுதியை ஆண்டு வந்த சோழ மன்னன் ஒருவன் சிவ பக்தனாகத் திகழ்ந்தான். அதனால் விஷ்ணு கோயில்களைப் பொறுத்தவரை பாராமுகத்தோனாக இருந்தான். ஒருமுறை திருவஹீந்திரபுரம் தலத்துக்கு வந்த அவன், இங்கு உறைபவர் திருமால் என்பதால் அவரை தரிசிக்காமல் போக யத்தனித்தான். ஆனால் அங்கே இருந்த ஆடு மேய்க்கும் சிறுவர்கள், அது சிவன் கோயில் என்று வலியுறுத்திக் கூற, உள்ளே சென்ற மன்னனுக்கு பெருமாள், பரமேஸ்வரனாகக் காட்சியளித்தார். அதோடு, அரியும் சிவனும் ஒன்று என்ற தத்துவத்தையும் அந்த மன்னனுக்கு போதித்தார்.
இதற்கு சாட்சியாக இன்றும் மூலவர் தேவநாத சுவாமியின் விமானத்தில் கிழக்கு திக்கில் பெருமாள் காட்சிதர, தெற்கில் தட்சிணாமூர்த்தி, மேற்கில் நரசிம்மர், வடக்கில் பிரம்மா என்று பிரம்மா-விஷ்ணு-சிவன் என்ற மும்மூர்த்திகளின் சொரூபமாக இங்கே பெருமாள் அமைந்திருக்கிறார். இந்த விமானத்தின் மூலைகளில் சிம்மங்களைக் காணலாம். வழக்கமாக அமையும் கருடனின் இடத்தை இந்தக் கோயிலில் சிங்கம் பிடித்துக் கொண்டிருக்கிறது! பெருமாளின் தோற்றம் இன்னும் இந்தக் கருத்தை உறுதியாக வலியுறுத்துகிறது. ஆமாம், இவர் நெற்றியில் ஒரு கண் துலங்குகிறது; மழு, ஜடாமுடியுடனும் இவர் காட்சி தருகிறார். புஜங்கள் சங்கு-சக்ரத்தைத் தாங்கியிருக்கின்றன.
இத்தகைய அற்புத கோலத்தை அவ்வளவு எளிதாக தரிசித்துவிட முடியாது. தேவநாத சுவாமியின் கவசங்களையும் அலங்காரங்களையும் களைந்து, அவருக்குத் திருமஞ்சனம் செய்விக்கிறார்களே அப்போது மட்டுமே காணக் கிடைக்கும் அற்புதம் அது. திருமங்கையாழ்வார், ‘மூவராகிய ஒருவன்’ என்று பாடி சிறப்பித்திருக்கிறார்.
திருப்பதி-திருமலை வேங்கடவனுக்கு மூத்தவர் இவர் என்கிறார்கள். அதாவது வேங்கடவன் அவதாரத்துக்கு முந்தியவராம் இவர். இந்த தேவ
நாதனுக்கு எதிரே, உபதேசம் பண்ணும் பாவனையில், ஞான முத்திரையுடன் கருடன் காட்சி தருகிறார். மூலவர் சந்நதிக்கு நேர் எதிரே மலை, அதன் பின்னே உத்திரவாஹினியாக கருடநதி பாய்கிறது.
தாயார், வைகுண்ட நாயகி. தன் நாயகன் தேவநாதனுக்கு உறுதுணையாக இருந்து தேவர்களைக் காத்ததால் ஹேமாம்புஜவல்லி என்றும் அழைக்கப்படுகிறார். பார் அனைத்திற்கும் அருள் பரிபாலிப்பதால் பார்கவி. பிருகு மகரிஷிக்கு அவரது தந்தையார் பிரம்மன் அருளியபடி, பிரம்ம தீர்த்தம் என்ற புஷ்கரணியில், தாமரை மலரின் நடுவில் திருமகள் குழந்தையாகத் தோன்றினாள். அவளை அள்ளி அணைத்த பிருகு மகரிஷி ஹேமாம்புஜவல்லி என்று திருநாமமிட்டுத் தன் தவச்சாலையில் வளர்த்து வந்தார். அந்தப் பெண் ஸ்ரீமன் நாராயணனையே தியானித்து, அவரையே தன் கணவராக அடைய, சேஷ தீர்த்தக் கரையில் தவம் இயற்றினாள். அதனால் மகிழ்ந்த தேவநாதன் அவள் முன் பிரத்யட்சமானதோடு, பிருகு முனிவரின் சம்மதத்துடன் அவளைக் கரம் பிடித்தார்.
இந்தத் தலத்தின் முக்கியமான இரு சிறப்புகள்: 1. ஸ்ரீமந் நிகமாந்த தேசிகர்; 2. ஹயக்ரீவர்.
நிகமாந்த தேசிகர், காஞ்சி, தூப்புல் தலத்தில் பிறந்தவர். ஆனால், நாற்பதாண்டுகள் திருவஹீந்திரபுரத்தில் தங்கி, தனக்கென ஒரு வீட்டையும் கிணற்றையும் அமைத்துக் கொண்டு, வடகலை வைணவ சம்பிரதாயத்துக்கு அருந்தொண்டாற்றியவர். ராமானுஜர் ஸ்ரீபெரும்புதூரில் தன் திருமேனியை உருவாக்கிக் கொண்டதுபோலவே, இங்கும் தேசிகரும் தன் வடிவத்தை செய்வித்தார். ‘பார்க்க தத்ரூபமாக இருக்கிறது’ என்று பாராட்டிய பலருள் சிற்ப வல்லுநரும் ஒருவர். வெறும் பாராட்டோடு நிற்காமல், ‘இந்த சிலை அச்சு அசலாக உம்மைப் போலவே இருப்பது உண்மைதான். ஆனால் இதற்கு உங்களால் உயிரோட்டம் கொடுக்க முடியுமா?’ என்று கேட்டார். ‘தொட்டுத்தான் பாருங்களேன்’ என்று தேசிகர் அமைதியாக பதில் சொன்னார். தன் கைவிரல் நகத்தால் மெல்ல அந்தச் சிலை மீது கீறிப் பார்த்தார் வல்லுநர். உடனே அந்தப் பகுதி ரத்தக் கோடிட்டது! விதிர்விதிர்த்துப் போய்விட்டார் வல்லுநர். தன் ஆணவத்தை மன்னிக்குமாறு தேசிகர் காலில் விழுந்து மன்னிப்பு கேட்டார்.