
மதுராந்தகம்: பவுஞ்சூர் அருகே பெரிய வெளிக்காடு வெக்காளி அம்மன் கோயில் 3 நாள் ஆடித் திருவிழா இன்று தொடங்கியது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர். மதுராந்தகம் அடுத்த பவுஞ்சூர் அருகே பெரியவெளிக்காடு கிராமத்தில் வெக்காளி அம்மன் சித்தர் பீடம் உள்ளது. இங்கு 5ம் ஆண்டு ஆடித் திருவிழா இன்று முதல் 3 நாட்கள் நடைபெறுகிறது. முதல் நாளான இன்று காலை 6 மணிக்கு சிறப்பு வழிபாடு நடந்தது. பம்பை, உடுக்கை, தாரை, செண்டை மேள இசை, சிலம்பாட்டம் நடந்தது.
பின்னர் பந்தல்கால் நடும் நிகழ்ச்சி, ஏகதின லட்சார்ச்சனை நிகழ்ச்சி நடைபெற்றது. காய்கறிகள், பழங்கள், மலர்களால் அம்மனுக்கு அலங்காரம் செய்தனர். பகல் 12 மணிக்கு மகா அபிஷேகம், காதம்பரி அலங்காரம் நடந்தது. பிற்பகலில் சொற்பொழிவு, மாலையில் காப்பு கட்டுதல், சக்கர மகாமேரு பூஜை, இரவில் அம்மன் கேடயத்தில் புறப்படும் நிகழ்ச்சி, இன்னிசை ஆகியவை நடைபெறும்.
விழாவுக்கு மதுராந்தகம், பவுஞ்சூர், செய்யூர், மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்தனர். அவர்களுக்கு காலை முதல் இரவு வரை அன்னதானம் வழங்கப்படுகிறது. கடைகள், ராட்டினங்கள் என கோயில் பகுதியே களைகட்டி உள்ளது. விழா ஏற்பாடுகளை வெக்காளி அம்மன் அறக்கட்டளை சார்பில் சுந்தரவரதன், சுதா சுந்தரவரதன் செய்துள்ளனர்.


