இயேசு கிறிஸ்து யாரையெல்லாம் கட்டுவாரோ, அவர்கள் கட்டி எழுப்பப்படுவார்கள். அவர்கள் கட்டி முடிக்கப்பட்டவுடன் நிறைவு பெறுவார்கள். அவர்களை இறைவனே வழிநடத்தத் துவங்குகிறார். ஆண்டவரே அவர்களுடைய வலிமையாக மாறுகிறார். ஒதுக்கப்பட்ட கல்லை கட்டிடத்தின் மூலைக்கல்லாய் மாற்றி விடுகின்றார். நம்மை எத்தனை பேர் வெறுத்தாலும் பகைத்தாலும் ஒதுக்கி ஓரம் கட்டினாலும் இறைவன் நம்மைக் கொண்டு ஏதாவது செய்ய வேண்டுமென்று முடிவெடுத்துவிட்டால் அதை யாராலும் தடுத்து நிறுத்திவிட இயலாது. ஆண்டவருடைய வழிகள் எல்லாம் அருளும் உண்மையும் கொண்டவை. நல்ல கொடைகள் அனைத்தும் நிறைவான வரமெல்லாம் ஒளியின் பிறப்பிடமான விண்ணகத் தந்தையிடமிருந்தே வருகின்றன.
இயேசு தம்மிடம் வருவதைக் கண்ட யோவான், ‘‘இதோ! கடவுளின் ஆட்டுக்குட்டி! ஆட்டுக்குட்டியாம் இவரே உலகின் பாவங்களைப் போக்குபவர். எனக்குப் பின்வரும் இவர் என்னைவிட முன்னிடம் பெற்றவர். ஏனெனில் எனக்கு முன்பே இருந்தார் என்று நான் இவரைப் பற்றியே சொன்னேன். இவர் யாரென்று எனக்குத் தெரியாதிருந்தது. ஆனால் இஸ்ரயேல் மக்களுக்கு இவரை வெளிப்படுத்தும் பொருட்டே நான் வந்துள்ளேன்; தண்ணீரால் திருமுழுக்குக் கொடுத்தும் வருகிறேன்’’ என்றார்.
தொடர்ந்து யோவான் சான்றாகக் கூறியது: ‘‘தூய ஆவி, புறாவைப் போல வானிலிருந்து இறங்கி இவர் மீது இருந்ததைக் கண்டேன். இவர் யாரென்று எனக்குத் தெரியாதிருந்தது. ஆனால் தண்ணீரால்
திருமுழுக்குக் கொடுக்கும்படி என்னை அனுப்பியவர், ‘தூய ஆவி இறங்கி யார் மீது இருப்பதைக் காண்பீரோ அவரே தூய ஆவியால் திருமுழுக்குக் கொடுப்பவர்’ என்று என்னிடம் சொல்லி இருந்தார். நானும் கண்டேன்; இவரே இறைமகன் எனச் சான்றும் கூறிவருகிறேன்.
மறுநாள் யோவான் தம் சீடர் இருவருடன் மீண்டும் அங்கு நின்றிருந்தார். இயேசு அப்பக்கம் நடந்து வந்தார். யோவான் அவரைக் கூர்ந்து பார்த்து, ‘இதோ! கடவுளின் ஆட்டுக்குட்டி’ என்றார். அந்த சீடர் இருவரும் அவர் சொன்னதைக் கேட்டு இயேசுவைப் பின்தொடர்ந்தனர். இயேசு திரும்பிப் பார்த்து, அவர்கள் தம்மைப் பின்தொடர்வதைக்கண்டு, ‘‘என்ன தேடுகிறீர்கள்?’’ என்று அவர்களிடம் கேட்டார். அவர்கள், ‘‘போதகரே, நீர் எங்கே தங்கி இருக்கிறீர்?’’ என்று கேட்டார்கள்.
அவர் அவர்களிடம், ‘‘வந்து பாருங்கள்’’ என்றார். அவர்களும் சென்று அவர் தங்கியிருந்த இடத்தைப் பார்த்தார்கள். அப்போது ஏறக்குறைய மாலை நான்கு மணி. அன்று அவர்கள் அவரோடு தங்கினார்கள். யோவான் சொன்னதைக் கேட்டு இயேசுவைப் பின்தொடர்ந்த இருவருள் ‘அந்திரேயர்’ ஒருவர். அவர் சீமோன் பேதுருவின் சகோதரர். அவர் போய் முதலில் தம் சகோதரரான சீமோனைப் பார்த்து, ‘‘மெசியாவைக் கண்டோம்’’ என்றார். ‘மெசியா’ என்றால் அருள் பொழிவு பெற்றவர் என்பது பொருள். பின்பு அவர் சீமோனை இயேசுவிடம் அழைத்து வந்தார். இயேசு அவரைக் கூர்ந்து பார்த்து, ‘‘நீ யோவானின் மகன் சீமோன். இனி ‘கேபா’ எனப்படுவாய்’’ என்றார். கேபா என்றால் பாறை என்பது பொருள். பாறை என்பதன் கிரேக்கச் சொல் ‘பேதுரு’ என்பதாகும்.
மறுநாள் இயேசு கலிலேயாவுக்குச் செல்ல விரும்பினார். அப்போது அவர் பிலிப்பைக் கண்டு ‘‘என்னைப் பின்தொடர்ந்து வா’’ எனக் கூறினார். பிலிப்பு பெத்சாய்தா என்னும் ஊரைச் சேர்ந்தவர். அந்திரேயா, பேதுரு ஆகியோரும் இவ்வூரையே சேர்ந்தவர்கள். பிலிப்பு நத்தானியேலைப் பார்த்து இறைவாக்கினர்களும் திருச்சட்ட நூலில் மோசேயும் குறிப்பிட்டு, ‘‘அவரை நாங்கள் கண்டுகொண்டோம். நாசரேத்தைச் சேர்ந்த யோசேப்பின் மகன் இயேசுவே அவர்’’ என்றார். அதற்கு நத்தனியேல், ‘‘நாசரேத்திலிருந்து நல்லது எதுவும் வர முடியுமோ?’’ என்று கேட்டார். பிலிப்பு அவரிடம், ‘‘வந்து பாரும்’’ என்று கூறினார்.
நத்தனியேல் தம்மிடம் வருவதை இயேசு கண்டு, இவர் உண்மையான இஸ்ரயேலர், கபடற்றவர் என்று அவரைக் குறித்துக் கூறினார். நத்தனியேல், ‘‘என்னை உமக்கு எப்படித் தெரியும்?’’ என்று அவரிடம் கேட்டார். ‘‘பிலிப்பு உம்மைக் கூப்பிடுவதற்கு முன்பு நீர் அத்திமரத்தின் கீழ் இருந்தபோதே நாம் உம்மைக் கண்டேன்’’ என்று இயேசு பதிலளித்தார். நத்தனியேல் அவரைப் பார்த்து, ‘‘போதகரே, நீ இறைமகன், நீரே இஸ்ரயேல் மக்களின் அரசர்’’ என்றார். அதற்கு இயேசு, ‘‘உம்மை அத்திமரத்தின் கீழ் கண்டேன் என்று உம்மிடம் சொன்னதாலா நம்புகிறீர்? இதைவிடப் பெரியவற்றைக் காண்பீர்’’என்றார். மேலும் ‘‘வானம் திறந்திருப்பதையும் கடவுளின் தூதர்கள் மானிட மகன் மீது ஏறுவதையும் இறங்குவதையும் காண்பீர்கள் என மிக உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்’’ என்று அவரிடம் கூறினார். (யோவான் 1: 29-51)
சர்வ வல்லவராய் விளங்கும் இறைவன் நம்மோடிருக்கையில் நமக்கு எதிராய் ஒருவரும் இருக்க முடியாது; இருக்கவும் விடமாட்டார். அவரே நம்மை வழி நடத்திக் கொண்டிருப்பார். எல்லா வழிகளிலும் நமக்குப் பாதுகாப்பைக் கொடுப்பார்.
நம்மை முன்னேற்றத்திற்கு அழைத்துச் செல்வதே நல்லொழுக்கம். கீழ்நிலைக்கு இழுத்துச் செல்வதே தீய ஒழுக்கம். மனித இயல்பு, தெய்வீக இயல்பு, மிருக இயல்பு என்ற இந்த மூன்று குணங்களால் மனிதன் உருவாக்கப்பட்டிருக்கிறான். நம்மிடமுள்ள தெய்வீகத் தன்மையை வளர்க்கக்கூடியதுதான் நல்லொழுக்கமாகும். நம்மிடமுள்ள மிருக இயல்பை அதிகரிக்கச் செய்வதே தீய ஒழுக்கம். மிருக இயல்பை நம்மிடமிருந்து அழித்துவிட்டு மனிதத்தன்மை கொண்டவராக நாம் மாற வேண்டும். அதாவது அன்புள்ளமும் தர்ம சிந்தனையும் உடையவர்களாக இருக்க வேண்டும்.
ஒரு போர் வீரன் குருவிடம் வந்தான். ‘‘குருவே! சொர்க்கம், நரகம் என்று சொல்கிறார்களே, அவை எங்கே இருக்கின்றன, சொல்லுங்கள்’’ என்று கேட்டான்.
குரு அவனை ஏற இறங்கப் பார்த்தார். ‘‘பலருடன் போர் செய்கிற ஆள் நீ. ஒழுக்கமே கிடையாது. உயிர்களை நீ மதிக்கிறவன் இல்லை. குளிக்கக்கூட இல்லை. கைகால்களில் அழுக்குத் தெரிகிறது. உனக்கெல்லாம் சொர்க்கம், நரகம் பத்தி தெரியணுமா? வேலையப் பாத்துட்டுப் போ’’ என்றார்.
போர் வீரனுக்குக் கோபம் தலைக்கேறியது. சட்டென்று தன் வாளை உருவி குருவை வெட்டப் போனான். அப்போது குரு தன் கையை உயர்த்தி, ‘‘இதுதான் நரகம்’’ என்றார். போர் வீரன் ஒரு விநாடி யோசித்தான். அவனுக்குப் புரிந்துவிட்டது. வாளைக் கீழே போட்டு அமைதியானான். ‘‘இதுதான் சொர்க்கம்’’ என்றார், குரு. சொர்க்கமும் நரகமும் நம் செயல்களில்தான் இருக்கிறது.
நாம் எல்லோரும் விலை மதிப்பற்ற செல்வங்களைப் பெற்றுத்தான் வாழ்ந்துகொண்டிருக்கிறோம். நமது அடிப்படைத் தேவைகள் எல்லாமே பூர்த்தி செய்யப்பட்ட நிலையில்தான் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். உதாரணத்திற்கு, வாழ வீடு ஒன்று இருக்கிறது; உடுத்த உடைகள் இருக்கின்றன; குடிக்க நீர் இருக்கிறது; சுகதுக்கங்களைப் பகிர்ந்துகொள்ள குடும்பம் இருக்கிறது; சமூகத் தேவைகளைப் பெறும் வகையில் உறவு, சுற்றம், நண்பர்கள் யாவரும் இருக்கிறார்கள். சம்பாதித்துப் பொருள் ஈட்ட ஒரு வேலை இருக்கிறது.
இவை எல்லாம் நமக்குக் கிடைக்கச் செய்த பேரருள் எது என்பதை எப்பொழுதாவது சிந்தித்திருக்கிறோமா? வாழ்க்கையை முழுமையாக்க நமக்குக் கிடைக்கச் செய்த அந்தப் பேரருள் எங்கிருந்து வந்தது? இது கடவுள் ஒருவராலேயே செய்திருக்க முடிந்த காரியம். அவருக்கு நன்றி செலுத்துவது நம்முடைய தலையாய கடமை இல்லையா?
உண்மையில் சொல்லப் போனால், எந்த ஒரு நன்மை அல்லது செல்வம், அல்லது பொருள் போன்றவற்றை அவற்றிற்கெல்லாம் மூலகாரணம் எது என்று அறியாமல் அனுபவித்துக் கொண்டிருப்பது மட்டும் பாவமாகும். கடவுளைப் பற்றிய சிந்தனை எதுவும் இல்லாமல் இருப்பது பெருத்த சுயநலமாகும். கடவுளுக்கு என்றென்றும் நாம் கடமைப்பட்டவர்களாகவும் நன்றி செலுத்துபவர்களாகவும் நடந்துகொண்டு, ஒவ்வொரு நிலையிலும் கடவுளுக்கு நன்றி செலுத்தி வாழ்வோம்.



