Pages

மெய்யூர் ஆதிகேசவ பெருமாள் கோயிலில் கும்பாபிஷேகம்


திருக்கழுக்குன்றம்: சதுரங்கப்பட்டினம் ஊராட்சி மெய்யூர் கிராமத்தில் உள்ள ஆதிகேசவ பெருமாள் கோயில் கும்பாபிஷேகம் இன்று காலை நடந்தது. ஏராளமான பக்தர்கள் தரிசித்தனர். கல்பாக்கம் அடுத்த சதுரங்கப்பட்டினம் ஊராட்சி மெய்யூர் கிராமத்தில் ஸ்ரீஆதிலட்சுமி சமேத ஸ்ரீஆதிகேசவ பெருமாள் கோயில் உள்ளது. இது 500 ஆண்டுக்கு முன்பு கட்டப்பட்ட பழமையான கோயில். கடந்த 1954-ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. அதன்பிறகு தற்போது கோயிலில் திருப்பணிகள் செய்யப்பட்டு, இன்று காலை கும்பாபிஷேகம் சிறப்பாக நடந்தது. கோபுர கலசத்தில் புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் செய்தனர்.

பக்தர்கள் மீதும் புனிதநீர் தெளித்தனர். ஆயிரக்கணக்கான பக்தர்கள் இதை தரிசித்தனர். அவர்களுக்கு பிரசாதம், பொங்கல், சுண்டல் வழங்கப்பட்டது. கல்பாக்கம் அணுமின் நிலைய இயக்குனர் கோட்டீஸ்வரன், கண்காணிப்பாளர் வெங்கடாச்சலம், மாவட்ட கவுன்சிலர் வீராசாமி, சதுரங்கப்பட்டினம் ஊராட்சி மன்ற தலைவர் ராஜேந்திரன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். முன்னதாக நேற்று யாகசாலை பூஜை, பகவத் பிரார்த்தனை, அங்குரார்ப்பணம், அக்னி பிரதிஷ்டை, அஷ்டபந்தனம், திருமஞ்சனம், மகாசாந்தி பூஜை போன்றவை நடந்தன.