Pages

பொன் பரவிய பூங்கா


 

அரசர்கள் வளர்த்த ஆன்மிகம்

சுதத்தனுக்கு உறக்கம் வரவில்லை. மாளிகை மஞ்சத்தில் புரண்டு கொண்டிருந்தான். எப்போது பொழுது புலரும் என்று தவியாய் தவித்தான். பொழுது விடிந்தவுடன் புறப்பட்டுப்போய், வேறு வனத்திலிருக்கும் போதிமாதவரைத் தரிசித்து வந்துவிட வேண்டும் என்பது அவன் ஆசை. அத்தனை ஆர்வப் பரபரப்புடன் தவித்துக் கிடந்ததற்கும் காரணம் இருந்தது. அவன் ராஜகிருகத்திலுள்ள மைத்துனன் வீட்டிற்கு வந்திருக்கிறான். எப்போதும் விழுந்து விழுந்து விருந்தோம்பி உபசரிக்கிற மைத்துனனும் கவனிக்கவில்லை. சுதத்தனின் சொந்தத் தங்கையும் அண்ணனின் வருகையை அத்தனை பொருட்படுத்தியதாகத் தெரியவில்லை. அவர்கள் இருவரும் மாளிகையைச் சுத்தப்படுத்தி, அலங்கரிக்கும் பணியிலேயே முழுக் கவனம் செலுத்தினர்.

அவனும் மாலையில்தான் அங்கு வந்திருந்தான் பணியாட்களுக்குக் கட்டளையிடுவதும் இங்குமங்கும் ஓடி, எல்லாம் சரியாக இருக்கிறதா என்று பார்வையிடுவதுமாகத் தங்கையும் தங்கை கணவனும் ஒரே பரபரப்பாயிருந்தனர். தடபுடலாக ஒரு விருந்தும் ஏற்பாடானது. யாரோ ஒரு முக்கியப் பிரமுகரின் வருகையைப் புரிந்து கொண்ட சுதத்தன், ‘‘என்னம்மா இதெல்லாம்? மகதமன்னர் பிம்பிசாரர் விருந்துக்கு வரப்போகிறாரா நம் மாளிகைக்கு?’’ என்று தங்கையிடம் கேட்டான். ‘‘இல்லை அண்ணா, துறவிகளின் வேந்தர் புத்தபிரான் நம் இல்லத்தில் பிட்சை ஏற்க நாளை வரப்போகிறார். அவருக்கும் அவருடைய சீடர்களுக்கும் உணவளிக்கவே இந்த ஏற்பாடுகள்...’’ என்றாள்.

சுதத்தன் பெரிதும் வியந்து போனான். புத்தரைப் பற்றி அவன் நிறையவே கேள்விப்பட்டிருக்கிறான். அந்த அருளாளர் தன் தங்கை வீட்டுக்கு வரப்போவதறிந்து அவன் மிகவும் மகிழ்ந்தான். சுதத்தன் கோசலத்தின் கொடைவள்ளல் என்று பெயரெடுத்தவன். சிராவஸ்தி நகரில் உள்ள அவனது மாளிகையின் வாசல், ஏழைகள் வந்து பசியாற வசதியாய் எப்போதும் திறந்தே கிடக்கும். அங்கு நிகழும் அன்னதானம் மிகப் பிரபலம். அவன் பெயரே அநாதபிண்டிகன் என வழங்கலாயிற்று. அப்படிப்பட்ட தான், புத்தபெருமானை வரவேற்று உபசரிப்பதில் முந்திக் கொள்ளாமல் போனோமே என எண்ணி மிக வருந்தினான்.
இரவு முழுக்க இதே நினைவுகளால் உறக்கமின்றித் தவித்த சுதத்தன், பொழுது புலர்வதற்கு முன்பே எழுந்து அதி விடியலில் வேணுவனம் நோக்கி நடந்தான்.

பெருமான் அப்போது தூய மஞ்சள் வஸ்திரம் அணிந்து, வேணுவனத்தின் செய்பொய்கைக் கரையில் நின்றிருந்தார். தாமரை மலர்கள் மீதும் அருகே நீந்தும் வெள்ளன்னங்கள் மீதும் அவரின் பார்வை நிலைத்திருந்தது. ‘‘புத்தம் சரணம் கச்சாமி...’’என்றவாறே அங்கு வந்து நின்ற அநாதபிண்டிகனைப் பார்த்துப் பார்வை திருப்பிய கௌதமர், ‘‘வருக, சுதத்தரே! நலம்தானே? சிராவஸ்தியிலிருந்து எப்போது வந்தீர்?’’ என வினவி, வரவேற்றார். அநாதபிண்டிகர் வியப்பின் வசப்பட்டார். அவருடைய இயற்பெயர் பலரும் அறியாத ஒன்று. அதை எப்படிப் பெருமான் அறிந்து, மிகப் பழகியவர் போன்று வரவேற்கிறார்! இந்த வியப்பை அவன் புத்தபெருமானிடமும் தெரிவித்தான்.

புன்னகை பூத்த பெருமான், ‘‘அநாதபிண்டிகன்! மிக நல்ல பெயர். பிண்டிகா, நீ அளிக்கும் அன்னம் மட்டும் ஒருவனைக் கடைத்தேற்றி விடுமா, சொல்? ‘இது எனக்குப் பலனளிக்கும்’ என்றெண்ணிச் செய்யப்படும் தருமங்கள் அத்தனை உயர்ந்ததல்ல. இதை நீ அறிவாயா?’’ என்றார், சித்தார்த்த கௌதமர்.
சிந்தனை செப்பனிடப்பட்ட நிலையில் பிண்டிகன் மௌனம் காத்தான். ‘‘சரி. உன் வருகையின் காரணம் என்ன?’’ ‘‘ஐயனே, அணையா அடுப்பமைத்து, அன்னதான வள்ளல் என்று பெயரெடுத்த இந்த அநாதபிண்டிகன், பெருமானிடம் பிட்சை கேட்டு இருகையேந்தி வந்து நிற்கிறான்...‘‘ ‘‘என்னிடம் என்ன தானம் எதிர்பார்க்கிறாய் சுதத்தா?’’

‘‘பொன்னாசையை விடக் கொடிய புகழாசை என்னிடம் இருந்தது ஐயனே! அந்த ஆசை, அகந்தை, ஆணவம் எல்லாம் ஒரு நொடியில் உங்கள் முன் பொலபொலவென உதிர்ந்து விட்டன. இந்தக் கடையனுக்கும் கதிமோட்சம் கிட்ட தாங்கள் ஒருமுறை புத்தசங்கத்தாருடன் சிராவஸ்திக்கு எழுந்தருளி, இந்த சுதத்தன் மாளிகையில் உணவருந்த வேண்டும் பெருமானே...’’ ‘‘ஆகட்டும். ஆனால், சிராவஸ்தி பெரிய நகரம். அங்கு நானும் சக பிட்சுக்களும் எங்கே தங்குவது? அந்நகரில் எங்காவது ஒதுக்குப்புறமாக ஓர் உபவனம் இருக்கிறதா என்று பார்த்து வை. பிறகு அழைப்பு அனுப்பு. வருகிறோம்.’’
‘‘அவ்வாறே செய்கிறேன் போதிமாதவரே...’’

அன்று அநாதபிண்டிகனின் சகோதரி மாளிகையில் புத்தரும் பிட்சுக்களும் பிட்சை ஏற்றனர். பிண்டிகன் சிராவஸ்தி நகருக்குத் திரும்பினான். உடனே அந்நகரில் உபவனம் தேடினான். இருந்தது. அதன் உரிமையாளன் அரசகுமாரன். எனவே அவனிடம் அனுமதி கேட்க எண்ணிச் சென்றான். கோசல ராஜகுமாரன் பிண்டிகனை மகிழ்வுடன் வரவேற்று, அவன் நோக்கம் அறிந்ததும், ‘‘வணிகரே! நீர் என் தந்தைக்குச் சமமானவர். நகரப் பிரமுகரும்கூட. உமது வரிப்பணம் என் தந்தையின் கஜானாவை நிரப்பி விடுவதை நானறிவேன். மன்னர் பிரசேனஜித் உம்மை, ‘நம் பொக்கிஷதாரர்’ என்றே பெருமிதம் பொங்க வரவேற்பார். அப்படிப்பட்ட உமக்கு என் உபவனத்தை அபகரிக்கும் எண்ணம் ஏன் வந்தது? நான் மகிழ்ந்துலாவும் இடமல்லவா அது?’’ என்றான். ‘‘மன்னிக்க வேண்டும் இளவரசே! ஒரு முக்கியப் பணிக்காக அப்பூங்கா தேவைப்படுகிறது. என்ன விலை கேட்டாலும் தந்துவிடுகிறேன்.’’

இளவரசன் யோசித்தான். பிறகு, ‘‘நீர் பிடிவாதக்காரன். விலை வேறு பேசுகிறீர். அப்பூங்காவின் புல்தரை முழுக்க உமது பொற்காசுகளைக் கொணர்ந்து, பரப்பும். அதுதான் அதன் விலை’’ என்றான். ‘‘ஆகட்டும். அவ்வாறே செய்கிறேன்’’ என ஒப்புக்கொண்டு இல்லம் திரும்பினான் அநாத பிண்டிகன். மறுநாள், நதிக்கரைப் பூங்கா முழுக்கப் பொன்மயமாய் மின்னும் அதிசயம் கண்டு மக்கள் வியந்துபேச, அச்செய்தி இளவரசன் செவிகளில் விழுந்ததும், ‘அட! விளையாட்டாகச் சொன்னதை அநாதபிண்டிகன் நிஜம் என்று எடுத்துக்கொண்டு விட்டாரே’ என வியந்து எண்ணிய ஜேதன், ரதமேறி அங்கு சென்றான். பொன் தரையாய் மின்னும் பூங்காவைக் கண்டு பிரமித்துப் போனான் அவன். ‘‘அநாதபிண்டிகரே! இது உலகம் காணாத விந்தை! தங்களிடம் விலை பேசுவேனா நான்? விளையாட்டாகச் சொன்னேன். இப்படிப் புல்தரை முழுக்கப் பொற்காசுகளைப் பதித்துக்கொண்டிருக்கிறீர்களே!

தேவையா இது... அப்படியென்ன முக்கியத் தேவைக்காக இவ்வளவு விலை தந்து இப்பூங்காவை என்னிடமிருந்து வாங்கத் துடிக்கிறீர் நீர்?’’ ‘‘இளவரசே! புத்தபெருமான் நம் நகருக்கு வரவிருக்கிறார். அவரை வரவேற்றுத் தங்கச் செய்யவே இந்த உபவனம் தேவைப்படுகிறது. நாடாளும் வேந்தர் குடியில் தோன்றிய அம்மாமனிதர், நாடு துறந்து, காடு மேடுகளில் அலைந்து, கடுந்தவங்கள் இயற்றி, போதிஞானம் பெற்ற மனிதப் புனிதர். மானுடத்தின் மீது அவர் கொண்டுள்ள கருணை மகத்தானது. ஆசாபாசங்களில் அழுந்திக் கிடக்கும் மானுடத்தை மீட்டெடுத்துப் பகைமற, பண்புவளர், அறவழிநட, அது ஒன்றே உன்னைக் கடைத்தேற்றும்’’ எனப் புகன்றுவரும் அந்த ஞான சூரியனை வரவேற்க, என் செல்வம் அனைத்தையும் இழக்கக் கூட நான் சித்தமாக உள்ளேன். பூங்காவின் தரை முழுக்கப் பொன் பரவிவிட்டேன். இன்னும் இரண்டு பாதங்களைப் பதிக்கும் அளவே மிச்சமுள்ளது.

அதையும் நிரப்பித் தங்கள் வசம் ஒப்படைத்து விடுகிறேன். பொன்னைப் பெற்று, இப்பூங்காவை எனக்களியுங்கள்...!’’ என்று நாத்தழுதழுக்க வேண்டி நின்றான் பிண்டிகன். மெய்சிலிர்த்துப் போயிற்று ஜேதகுமாரனுக்கு. ‘‘அநாதபிண்டிகரே! நீர் என்னை இவ்வளவு சுயநலக்காரனாகவா எண்ணிவிட்டீர்? நானும் புத்தபெருமானைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறேன். அவரைப் பற்றிய ஒவ்வொரு செய்தியும் காவிய அந்தஸ்து பெற்றவை. அன்புத் தந்தை, ஆசை மனைவி, அருமைப்பிள்ளை, ஆட்சி அதிகாரங்கள், ஆள், தேர், யானை, குதிரை, நாடு, நகரம் என அனைத்தும் துறந்து, கடைமகன் வீட்டு வாசலிலும் கையேந்தி நின்று, பிட்சை ஏற்றுண்ணும் அந்த மன உரம் உலகில் யாருக்கு வரும்? மன்னன் பிம்பிசாரன், மகத சாம்ராஜ்யத்தையே அவர் பாதங்களில் சமர்ப்பித்து நின்றபோதும் ஏறெடுத்தும் பாராத இதயமல்லவா அவர் இதயம்! புத்தபெருமானின் வருகை பற்றியறிந்து நானுமே மகிழ்கிறேன் பிண்டிகரே. என் வேண்டுகோள் ஒன்றுண்டு. அதை நீர் நிறைவேற்ற வேண்டும்...’’

‘‘கட்டளையிடுங்கள் இளவரசே!’’ ‘‘இந்தப் பூங்கா முழுக்க நீர் பரப்பியுள்ள பொற்காசு களை நான் ஏற்றதாகவே இருக்கட்டும். ஆனால், இவற்றை நீர் என் சார்பில் ஏற்றுப் பிரமாண்டமான புத்தமடம் எழுப்பப் பயன்படுத்தும். பொன் பரப்பாத இச்சிறு இடம் எனக்குரியது. இதில் பெருமானாரின் திருப்பாதங்கள் பதியட்டும். இந்த உபவனத்தைப் புத்தபிரானுக்கு அடியேன் வழங்கினேன் என்கிற பெருமையை தயவு செய்து எனக்களியுங்கள்...’’என யாசகம் கேட்பதுபோல் வேண்டினான் ஜேதன். அநாதபிண்டிகனும் இதற்கு இசைவு தெரிவித்தான். அன்பும் அறமும் தழைக்க இந்த இருவரும் போட்டியிட்டு நின்ற செயல் புத்த சமய வரலாற்றில் பொன்னெழுத்துகளாய் நின்று ஒளிர்கின்றன. புத்தபிரானின் கோசல விஜயமும் அநாதபிண்டிகன் எழுப்பிய திருமடத்தில் அவர் பலமுறை வந்து தங்கியதும் அந்த வனம் ‘ஜேதவனம்’ என்றே பிரபலமாயிற்று என்பதும்கூட புத்தசமய இலக்கியங்கள் போற்றி மகிழ்கின்றன.