அருள்... பொருள்... இன்பம்... 13
சமீப நாட்களாக தினசரிகளில் அன்றாடம் அடிபடும் விஷயங்களில் பிரதான இடத்தைப் பிடித்திருப்பது ஒரு நோய்தான். இதன் பெயர் டெங்கு! கூடங்கு ளம், பவர்கட், அரவிந்த் கேஜ்ரிவால், காவிரி நீர் என்கிற வரிசையில் டெங்குவும் இடம் பெற்று, தினசரி இதுவரை எத்தனை பேர் உயிரை வாங்கிக்கொண்டிருக்கிறது என்ற தக வல்களும் வெளியானபடி உள்ளன. இதை அடக்க அரசாங்கமும் யுத்த முஸ்தீபுகளுடன் களத்தில் இறங்கியுள்ளது. ஆனாலும் இது அடங்குவேனா என்று அடம் பிடித்து தினந்தோறும் உயிர்களை விழுங்கியபடியே தொடர்கிறது. இது அரசாங்க நடிவடிக்கையால் மட்டும் அடங்கிப் போகும் ஒரு விஷயமில்லை. மனிதச் சங்கிலிபோல ஒவ் வொருவரும் கரம் கோர்த்து, ஒன்றுபட்டு அழித்து ஒழிக்க வேண்டிய ஒரு விஷயம் இது!
‘‘இது எதனால் என்று எனக்குத் தெரியாது’’ என்று ஒருவரும் கூறிவிட முடியாது. அசுத்தமாய் தேங்கி நிற்கும் நீரும் அந்த நீருக்குள் பெருகும் ஒரு கொசுக் கூட்டமும்தான் இதன் காரணிகள். இந்த கொசுக் கூட்டம் ஒன்றும் நமக்கு புதியதல்ல. காலம் காலமாக இதனோடு நாம் ஒரு யுத்தத்தை நிகழ்த்திக் கொண்டேதான் இருக்கிறோம். இதன் உபயம்தான் மலேரியா. அதை போராடி கட்டுப்படுத்தினோம். இதுவும் சிறையில் இருந்து தப்பிய கைதி கணக்காய் திரும்ப வந்து சிக்குன் குனியா என்கிற பெயரில் மலேரியாவை விஞ்சிவிட்ட ஒரு உபாதையை தந்து, ‘என்னையா அழிக்கப் பார்க்கறீங்க?’ என்று விசிலடிக்காத குறையாக பறந்து திரியத் தொடங்கியது.
எப்படியோ போராடி அதற்கொரு மருந்தைக் கண்டறிந்து நிமிர்வதற்குள் அது டெங்குவைப் பரப்பத் தொடங்கிவிட்டது. யார் மீதாவது நமக்கு கோபம் வந்தால், அவர் எதற்கும் தேறாதவர் என்றால் திமிறாக, ‘‘நீ எல்லாம் எனக்கொரு கொசு’’ என்போம். உருவில் சிறியதா யும் கழிவில் பிறந்திருப்பதாலும் நம் மனித ஈகோ முன் அது அற்பம் என்பது நம் எண்ணம். ஆனால், அது உண்மையில் அற்பமில்லை. உலகின் மேலான சக்தியான மனித சக்தியை ஒவ்வொரு முறையும் நிர்மூலமாக்கியபடி, சாகாவரம் பெற்றுவிட்ட அசுரன் அது! இதன் முன்னால் ஆண்டி முதல் அரசன்வரை பயந்து நடுங்கி பதுங்கி ஒளிகிறோம் என்பதே உண்மை. இந்தப் பிசாசை அடக்க - நன்றாக கவனியுங் கள் அடக்கதான், அழிக்க இல்லை. நம் தாய்த்திரு நாட்டின் நூறு கோடி மக்களுக்கும் மேலானவர்கள் தினம்தோறும் செலவழிக்கும் தொகை எவ்வ ளவு தெரியுமா?
ஒவ்வொரு நாளின் ஒரு இரவுப் பொழுதுக்கு மட்டுமே நூறுகோடி ரூபாய்! இது சராசரி கணக்குதான். துல்லிய கணக்கு போட்டால் எகிறிவிடும். இந் தியா ஒரு ஏழை நாடு. இன்றும் சரியான கூரைகூட இல்லாத பள்ளிகள் மட்டுமே இந்த நாட்டில் ஆயிரமாயிரம்! பல ஊர்களிலும் ஆறுகளுக்கு நடுவே பாலங்கள் இல்லாத கொடுமை. பல கிராமங்களுக்கு பாதையே இல்லாத அவலம். அவ்வளவு ஏன், அடிப்படைத் தேவையான கழிப்பறை கூட இல் லாத வீடுகள் இன்றும்கூட லட்சக்கணக்கில்... இப்படி மிகமிக அத்தியாவசிய தேவைக்கு கூட செலவழிக்க நிதியில்லாத நிலையில்தான் தினமும் இந்த கொசுக் கூட்டத்தை அடக்கவும் இதனிடம் இருந்து தப்பிக்கவும் இந்திய மக்களாகிய நாம் இத்தனை கோடிகளை செலவிடுகிறோம்.
இதை இப்படி மாற்றிகூட சொல்லலாம். ஒரு வாரம் நம் இந்திய மக்கள் கொசுக்கடியைப் பொறுத்துக்கொள்வது என்று முன்வந்தால் கிட்டத்தட்ட 1000 கோடி ரூபாய் மிச்சமாகி மாவட்டத்துக்கொரு கல்லூரியை அளித்துவிட முடியும். இந்த ஒரு வாரம், ஒரு மாதம் என்று ஆனால் கங்கை, காவிரி இணைப்பெல்லாம் ஒன்றுமேயில்லை. அவ்வளவு ஏன்? சோலார் மின்சக்திக்கான திட்டத் தில் பல ஆயிரம் மெகாவாட் மின்சக்தியை பெறமுடியும். இம்மட்டில் இந்தக் கொசுக்களால் நாம் இருந்தும் இல்லாதவர்களாக இருக்கிறோம். இந்தக் கொசுவாலோ பலர் கொசுவர்த்தி, ஃப்ளுயிட் என்று தயாரித்து கொழிக்கிறார்கள். டிவி காட்சிகளிலும் இதன் விளம்பரங்கள்தான் அதிகம். மொத்தத்தில் கண்ணுக்கே தெரியாதபடி ஒரு பேனா முனைப் புள்ளியளவு இருந்துகொண்டு இந்தக் கொசுக்கள் உலகையே ஆட்டிப் படைக்கின்றன.
ஒட்டு மொத்த மனித சமூகமும் கூட்டாக சேர்ந்து இதை அழிக்க முனைந்தால் ஒருநாளில் இருந்து ஒரு வாரத்தில் இதை முற்றாக அழித்துவிட முடி யும். அதற்கு தூய்மையும் சுகாதார உணர்வும் மிக முக்கியம். வீட்டுக்கு வெளியே இடி விழுந்தாலும் கவலை இல்லை என்று வாழும் நம் மனோபாவம்தான் ஒவ்வொரு கொசுவும் இந்த மண்ணில் பறந்து திரிய காரணம். தினம்தோறும் கொசுவர்த்திக்கும், ஃப்ளுயிட்டுக்கும் எவ்வளவு வேண்டுமானாலும் கப்பம் கட்டுவோம். ஆனால், இந்தத் தண்ணீர் சுத்தம், அதை தேங்க விடாமல் பார்த்துக்கொள்வது எல் லாம் நம்மால் ஆகாது சாமி என்றால், தங்களைத் தேடிவரும் டெங்கு கொசுவால் கடிபட்டு வேதனையடைவதைத் தவிர்க்கவே முடியாது.
நகரங்களில் பாதாள சாக்கடை திட்டம் வந்ததால் திறந்தவெளிச் சாக்கடைகளுக்கு ஒரு விமோசனம் ஏற்பட்டுள்ளது. ஆனாலும் மேடுபள்ளமான சாலை கள், தூர்வாரப்படாத வாராவதிகள், ஆறுகளையே பெரும் சாக்கடையாக்கிவிட்ட நமது சுயநலம், இதெல்லாம்தான் கொசுக்களாகப் பெருகி வந்து நம் உயிரைப் பிடுங்கிக் கொண்டிருக்கின்றன. இப்படிப்பட்ட கொசு வளர் கலையை நாம் எப்போதுதான் கைவிடப்போகிறோம்? கடந்த மற்றும் இந்த நூற்றாண்டின் சுகாதாரமற்ற மனிதச் செயல்பாடுகளால் உருவான ஒரு உயிரினம்தான் இந்த கொசுக்கள். கொஞ்சம் பின்னோக் கிப்போய் சேர, சோழ, பாண்டியர் காலம் அதற்கும் பிந்தைய சங்க காலம், புராண இதிகாச காலங்களில் கொசு இருந்ததோ இல்லையோ தெரியவில்லை, ஏனெனில் ஆதாரம் இல்லை.
ஆனால், வடமொழியில் ‘மஸகதா’ என்று கொசுவை அழைத்திருக்கிறார்கள். புத்தர் கொசுக்கடியிலிருந்து தப் பிக்க ஒரு வலையைப் போர்த்திக்கொண்டார் என்று சொல்வார்கள். இந்த ‘மஸகதா’தான் ஆங்கிலத்தில் ‘மஸ்கிடோ’ ஆயிற்று என்றும் ஒரு தகவல் உண்டு. நீரில் முட்டையால் ஜனிக்கும் இதன் முன்னோடியாக எந்த இனம் இருந்திருக்க முடியும் என்பதும் தெரியாத நிலையில், அந்த நாளில் அசைவற்ற நீர் நிலைகளில் மண்டூகம் எனப்படும் தவளைகளே இருந்திருக்கின்றன. அந்த நாளைய ஈனப்பிறப்பு என்றால் அது தவளைதான். ஆனால், இந்தத் தவளை நீரில் உள்ள அழுக்கைத் தின்றும். பூச்சிகளைத் தின்றும், நீரின் சுத்தத்திற்கு உதவியாக இருந்துள்ளது.
இருப்பினும் சாபத்திற்கு சிலர் ஆளாகும்போது மண்டூகமாகப் போகக்கடவது என்றே முனிவர்கள் சபித்துள்ளனர். இந்தத் தவளைக்கும் இது இருக்கும் நீர்நிலை அளவுக்குதான் உலகம். இதன் வரையில் இந்த உலகம் என்பதே வெறும் நீர்மயம் மட்டும்தான். அதற்கு மேல் இது அறிவதற்கு வாய்ப்பும் இல்லை. அதற்கான வாழ்வும் இதற்கில்லை. நம்மிலும் பலர் இன்று அவ்வாறு இருக்கிறோமே? பிறந்த ஊரைக்கூட தாண்டாமல் அங்கேயே பிறந்து வளர்ந்து முடிந்து போனவர்கள் எத்தனை பேர்? இன்றும் இவ்வளவு போக்குவரத்து வசதிகளுக்கு நடுவிலும் தமிழ்நாட்டிலேயே பல ஊர்களைக் காணாமல் இருப்பவர்கள் எத்தனை
பேர்? மண்டூகங்களை எண்ணும்போது குறுகிவிடுகிற விசாலமில்லாத புத்தியும் அறியாமையும்தானே நினைவுக்கு வருகிறது.
எல்லாம் அறிந்தவர்களாலும்தான் பெரிதாக என்ன புண்ணியம்? அவர்களால் அற்ப கொசுக்களைகூட அழிக்க முடியவில்லையே? மதுரை சித்திரைத் திருவிழாவில் அழகர் பெருமான் வைகை ஆற்றில் இறங்குவது காலம் காலமாக நடந்துவரும் ஒரு வைபவம். அந்த ஆற்றில், சாபத் தால் மண்டூகமாகிப் போன மகரிஷிக்கு பெருமாள் சாபவிமோசனம் அளிப்பது என்று ஒரு சம்பவமும் உண்டு. கொசுவை ஒழிக்க வழி தெரிந்தும் ஒன்றுபடாமல் சுயநலமாய் வாழும் நாமெல்லாமும் ஒரு வகையில் மண்டூகம்தானே? இதுவும் ஒருவேளை சாபமோ? நமக்கு விமோசனமளிக்க எந்தப் பெருமாள் எப்போது வருவார்?



