Pages

திருப்பதியில் தேரோட்டம் : பக்தர்கள் பரவசம்


 

திருமலை: திருமலை ஏழுமலையான் கோயில் பிரம்மோற்சவத்தின் 8ம் நாளான இன்று காலை மகா தேரோட்டம் நடந்தது. மாட வீதிகளில் ஆயிரக்கணக்கான
பக்தர்கள் வடம் பிடித்து இழுத்து சென்றனர். திருப்பதி-திருமலை ஏழுமலையான் கோயில் வருடாந்திர பிரம்மோற்சவம் கடந்த 18ம் தேதி தொடங்கியது. காலை மற்றும் இரவு நேரங்களில் வெவ்வேறு வாகனங்களில் மலையப்ப சுவாமி மாட வீதிகளில் பவனி வந்தார். 7ம் நாளான நேற்று காலை சூரியபிரபை, இரவு சந்திர பிரபை வாகனத்தில் வீதி உலா நடந்தது. 8ம் நாளான இன்று காலை 7 மணியளவில் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான மகா தேரோட்டம் நடந்தது. தேரை ஆயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர்.

அலங்கரிக்கப்பட்ட தேரில் ஸ்ரீதேவி, பூதேவியருடன் மலையப்ப சுவாமி 4 மாட வீதிகளில் பவனி வந்தார். அப்போது மாடவீதிகளில் திரண்டிருந்த பக்தர்கள் கோவிந்தா, கோவிந்தா என பக்தி பரவசத்துடன் தரிசனம் செய்தனர். இரவு 7 மணியளவில் ஊஞ்சல் சேவையும், 9 மணியளவில் குதிரை வாகன உற்சவமும் நடக்கிறது. நாளை காலை 6 மணியளவில் வராக சுவாமி கோயிலில் ஸ்ரீதேவி, பூதேவி மலையப்ப சுவாமிக்கு சக்கரத்தாழ்வாருடன் திருமஞ்சனம் நடைபெறுகிறது. பின்னர் புஷ்கரணியில் சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி நடைபெறும். இத்துடன் இந்த ஆண்டு முதல் பிரம்மோற்சவம் நிறைவு பெறுகிறது. இதையடுத்து 2வது நவராத்திரி பிரம்மோற்சவம் வரும் அக்டோபர் மாதம் 15ம் தேதி தொடங்கி 23ம் தேதி வரை நடைபெறும்.