Pages

மண்ணில் இறங்கிய விண்ணரசி!


இன்றும் இனிக்கும் இதிகாசம் 11

அரச குமாரன் ஸம்வாணன் பேரழகன். அவனைப் பற்றிப் புகழ்ந்து பாடிப் பரிசில் பெற வரும் பாவலர்களெல்லாம் பரிசில் பெற மறந்து அவன் முகத்தையே ரசித்துக் கொண்டு நிற்பார்கள். நிலவைக் குழைத்துப் பிசைந்து செய்தது போன்ற நிறமும் குளுமையும் அவனிடம் தென்படும். அவன் சூரிய தேவனின் பக்தன். நாள்தோறும் சூரியனை உபாசித்து வாழ்ந்து வந்தான். பிரகாசமான சூரியன் தான் உலகைக் காக்கிறது, அவரை வேண்டினால் போதும், அனைத்தையும் அடையலாம் என்று அவன் உள்மனம் நம்பியது. ஒருநாள் வேட்டைக்குச் சென்றான். வேட்டை நாய்களும் குதிரையும் அவனைக் கானகத்தின் உள்ளே எங்கெங்கோ இழுத்துச் சென்றன. தண்ணீர்... தண்ணீர்... என்று தொண்டை ஓயாமல் கேட்டுக் கொண்டே இருந்தன. ஆனால் பாழாய்ப் போன அந்த அடர்ந்த கானகத்தில் ஒரு சொட்டு நீருக்கும் வழியைக் காணோம்.

குதிரையும் வேட்டை நாய்களும் தாகத்தாலேயே தவித்துக் கீழே விழுந்து இறந்தன. ஸம்வாணனுக்குத் திகைப்பு ஏற்பட்டது. ‘இந்த விலங்குகளைப் போலவே தானும் இங்கேயே நீர் வேட்கையால் மடிய வேண்டியதுதானா, இல்லை மறுபடியும் நாட்டுக்குப் போவோமா? அவன் மனம் கலங்கியது. குதிரை வேறு இறந்துவிட்டதே, திரும்பிச் செல்ல வழி காண இயலுமா, தெரியவில்லையே? முதலில் எங்காவது கொஞ்சம் தண்ணீர் கிட்டினாலன்றி இனி ஓர் அடியையும் எடுத்து வைக்க முடியாது! சூரிய தேவா! கடல் நீரை மேகமாக்கி மழைதரும் கடவுளே! எனக்கு ஒரு வாய் தண்ணீர் கிடைக்கச் செய்யக் கூடாதா?’
ஸம்வாணனுக்கு மயக்கம் வரும்போல் இருந்தது. அப்படியே கீழே சரிந்தான். அப்போது திடீரென்று அவன் அருகே ஒரு மின்னல் தோன்றியது. அது வானிலிருந்து பளிச் எனக் கீழே இறங்கியதை அவனால் காண முடிந்தது.

சேலை கட்டியிருந்த அந்த மின்னலைப் பார்த்து, ‘‘பெண்ணே! நீ யார்?’’ ஆவல் பொங்கக் கேட்டான். ‘‘அது அப்புறம். முதலில் தண்ணீர்!’’ அவள் அவன் கரங்களைக் குவிக்கச் சொல்லித் தன் இடுப்பிலிருந்த தங்கக் குடத்திலிருந்து தண்ணீர் வார்த்தாள். அவன் தாகம் தீர குடித்தான். பின் காதல் பொங்கச் சொன்னான்: ‘‘நீ தந்தது தண்ணீர்தான். ஆனால் நீ தருகிறபோது அது அமிர்தம் போல் இனிக்கிறதே? எப்படி?’’அவள் வெட்கத்தோடு கானகத்து மண்ணில் வலதுகால் கட்டை விரலால் கோடு கிழித்துக் கொண்டே சொன்னாள்: ‘‘காதலி கொடுத்தால் காதலருக்குத் தண்ணீரும் அமுதம் தான்!’’அவன் அவள் கையைப் பற்றிக் கேட்டான்: ‘‘அப்படியானால் நீ என் காதலியா?’’ ‘‘தெரியவில்லை. அது உங்களைப் பொறுத்த விஷயம். ஆனால் நீங்கள்தான் என் காதலர். அது என்னைப் பொறுத்த விஷயம்!’’

ஸம்வாணன் கலகலவென்று சிரித்தான். ‘‘சமத்காரமாகப் பேசுகிறாய். இனி நீதான் என் காதலி. இந்தத் தண்ணீர் மட்டும் இப்போது கிடைத்திராவிட்டால் நான் செத்தே போயிருப்பேன்!’’ அவள் தன் செங்காந்தள் போன்ற மெல்லிய விரல்களால் சடாரென்று அவன் வாயைப் பொத்தினாள். ‘‘அப்படியெல்லாம் அமங்கலமாகப் பேசாதீர்கள்!’’ என்றாள். அவள் விழிகளில் கண்ணீர்ப் படலம் திரையிட்டது. அவன் அவசர அவசரமாக அவள் விழிகளைத் துடைத்துவிட்டான். ‘‘என்னைக் கைப்பிடிக்கப் போகிறவள் நீ. ஒருபோதும் அழக் கூடாது!’’ என்றான். அவள் சட்டென்று அவன் கையைப் பிடித்துக் கொண்டாள்! அவன் மகிழ்ச்சியோடு நகைத்தான். பிறகு அவள் வெட்கத்தோடு அவன் கையிலிருந்து தன் கையை எடுத்தாள். ‘‘கைப்பிடிக்கப் போகிறவள் என்று நீங்கள் சொன்ன சொல் பொய்யாகக் கூடாது என்பதற்காகத்தான் உங்கள் கையைப் பிடித்துக் கொண்டேன்!’’ என்றாள்.

‘‘அதுசரி. உன் பெயர் என்ன பெண்ணே?’’ ‘‘என்னைத் தபதீ என்று அழைப்பார்கள்!’’ ‘‘தபதீ என்று ஒருமுறை சொன்னால் என் நாக்கு ஒரு நாழிகை நேரம் தித்திக்கும் போல் இருக்கிறதே? நல்லது. உனக்கும் என்னைப் பிடித்திருக்கிறது. எனக்கும் உன்னைப் பிடித்திருக்கிறது. உன்னைப் போன்ற அழகியை நான் இதுவரை பார்த்ததில்லை. நாமிருவரும் காந்தர்வ மணம் புரிந்து கொள்ளலாமா?’’ அவள் தயங்கினாள். பின் மெல்லச் சொன்னாள்: ‘‘என்னைப் போன்ற அழகி இல்லை என்றீர்களே? அதுதான் என் வாழ்வின் சிக்கலே!’’ ‘‘அதிலென்ன சிக்கல்? அழகாக இருப்பதால் என்ன சிக்கல் நேர்ந்துவிடும்?’’ ‘‘அபரிமிதமான அழகு சிக்கல்தான் அன்பரே! என் தந்தை என் அழகிற்கு ஏற்ற மணாளரை உலகம் முழுவதும் தேடிக் கொண்டிருக்கிறார். அகப்படவில்லை. என் அழகிற்கு இணையானவர், என் மனத்திற்கும் பிடித்தவர் நீங்கள் ஒருவர்தான்.’’

‘‘அப்படியானால் மணம் புரிந்துகொள்ளலாம் வா.’’ அவள் மறுபடியும் தயங்கினாள். ‘‘நான் என் தந்தைக்குக் கட்டுப்பட்டவள். தந்தையின் அனுமதியின்றி ஒருவரை மணந்துகொள்ளும் அளவு நான் பண்பாடில்லாதவள் அல்ல. நீங்கள் என் தந்தையிடம் என்னைத் தங்களுக்கு மனைவியாகத் தருமாறு கேளுங்கள். அதுதான் முறை.’’ ஸம்வாணன் ஆவலோடு கேட்டான்: ‘‘உன் தந்தை யார் என்றே சொல்லவில்லையே?’’ ‘‘உலகிலேயே அதிகப் பிரகாசமானவர். விருப்பு வெறுப்பில்லாமல் எல்லோரையும் பிரகாசப் படுத்துபவரும் கூட. நீங்கள் மன்னராகவே இருக்கலாம். ஆனால் அந்தஸ்தில் அவர் அடைந்துள்ள உயரத்தை நீங்கள் அடைவதென்பது ஒருநாளும் இயலாது. அவர் விரும்பி உங்களுக்கு என்னை மணமுடித்துக் கொடுத்தால் நான் உங்கள் மனைவியாவேன். இல்லாவிட்டால் காலம் முழுதும் நான் கன்னிதான். என் தந்தை யார் என்று நான் சொன்ன தகவல்களை வைத்துக் கொண்டு நீங்களே கண்டறியுங்கள்!’’

இப்படிச் சொன்ன அவள் திடீரென வானில் மின்னல்போல் பறந்து கலந்து மறைந்தாள். ஸம்வாணன் திக்பிரமித்து அவள் சென்ற வானத்தையே வைத்த கண் வாங்காமல் பைத்தியம்போல் பார்த்துக் கொண்டிருந்தான். மந்திரி பிரதானிகள், படைவீரர்கள் என நூற்றுக்கணக்கானோர் மன்னனைத் தேடிக் கானகத்தினுள் வந்தார்கள். அவர்கள் மன்னனைக் கண்டபோது, அவன் மோகனாஸ்திரத்தால் மயங்கியதுபோல் விழிகளில் இன்ப லாகிரியுடனும் உள்ளார்ந்த தாபத்துடனும் ஆகாயத்தையே வெறித்துப் பார்த்தவாறிருந்தான். மந்திரி அவன் தோளைப் பிடித்து உலுக்கினார். சுயநினைவுக்கு வந்த அவன் மந்திரியிடம் கேட்டான்: ‘‘மந்திரியே! உலகிலேயே அதிகப் பிரகாசமானவர் யார்? விருப்பு வெறுப்பில்லாமல் எல்லோரையும் பிரகாசப்படுத்துபவர் யார்? அந்தஸ்தில் யாரும் எட்டாத உயரத்தில் இருப்பவர் யார்? இந்த மூவரும் தனித்தனி நபரல்ல. ஒரே நபர் தான். அவர் யார் என்று எனக்குக் கண்டறிந்து சொல்லுங்கள்!’’ என்று ஆணையிட்டான்.

மந்திரிகளும் படைவீரர்களும் ஒருவரையொருவர் மெல்லிய முறுவலோடு பார்த்துக் கொண்டனர். தங்கள் மன்னனை கானகத்தில் வாழும் ஏதோ மோகினிப் பிசாசு பிடித்துக்கொண்டிருக்க வேண்டும் என்று நினைத்தனர். மன்னன் விழிகள் சிவந்திருந்தன. உதடுகள் வெளுத்திருந்தன. இனி மன்னன் உடல் மெலியும். அதற்குள் அந்தப் பெண் யார் எனக் கண்டுபிடித்தாக வேண்டும். அதோடு மன்னனின் பைத்தியக்காரத்தனமான மூன்று கேள்விகளுக்கும் விடை கண்டாக வேண்டும். ‘‘இந்தக் கேள்விகளுக்கெல்லாம் விரைவில் விடை காணலாம். முதலில் நாட்டுக்கு வாருங்கள்!’’ என்றழைத்தார் மந்திரி. ‘‘அடடா! என் தேவதை எனக்குக் காட்சி தந்த இந்த இடத்தை விட்டு நான் இனி எப்படி நாட்டுக்கு வருவேன்? வந்தால் அந்த தேவதையுடன் தான் வருவேன். அதற்குள் என் மூன்று வினாக்களுக்கும் விடை கண்டுவாருங்கள்! அதுவரை இங்கேயே எனக்கு ஓர் ஆசிரமம் அமைத்துத் தாருங்கள். இங்குதான் நான் வாழ்வேன்!’’ என்றான் மன்னன்.

அவனது பிடிவாதத்தை வானிலிருந்து கண்டு கலகலவென்று ஆகாயத்திலிருந்தே நகைத்தாள் தபதீ. அந்த சப்தம் மன்னன் காதுக்கு மட்டும் கேட்டது. ஸம்வாணன் ஆகாயத்தைப் பார்த்துப் பரவசத்தோடு பேசினான்: ‘‘கண்ணே! உன் சிரிப்புத்தான் எத்தனை அழகு!’’ மந்திரி நகைத்துக் கொண்டார். பருவ வயது. மன்னனுக்கு மோகம் முற்றிவிட்டது. இனி குலகுரு வசிஷ்டரை அழைத்துவந்து இந்தப் பித்தத்தைத் தெளிவிக்க என்ன வழி என்று பார்க்க வேண்டியதுதான். மந்திரி, படைவீரர்களை அழைத்து அங்கேயே ஓர் அழகிய குடில் கட்டுமாறு பணித்தார். குடில் கட்டி முடிப்பதற்குள் ஒரு வீரனை நாட்டுக்கு அனுப்பிக் குலகுரு வசிஷ்டரை அழைத்துவரச் செய்தார். உடனடியாகத் தேரேறி அங்கு வந்து சேர்ந்தார், வசிஷ்டர். ஸம்வாணன் எழுந்து அவர் பாதங்களில் விழுந்து பணிந்தான். வசிஷ்டர் அவன் நிலைகண்டு நகைத்தவாறே, ‘‘என்னவோ கேட்டாயே, என்ன கேள்விகள்?’’ என்று வினவினார்.

மன்னன் ஒரு பெருமூச்சுடன் சொன்னான்: ‘‘முனிவரே! நான் ஒரு தேவதையைச் சந்தித்தேன். அவளையே மணக்க விரும்புகிறேன். அவள் தன் தந்தை பற்றிச் சொன்ன விவரங்கள் இவை. உலகிலேயே அதிகப் பிரகாசமானவர் அவர். விருப்பு வெறுப்பில்லாமல் எல்லோரையும் பிரகாசப் படுத்துபவர். அந்தஸ்தில் யாரும் எட்டாத உயரத்தில் இருப்பவர். இந்த மூன்று பெருமைகளும் உடைய அவர் யார்?’’ ‘‘சந்தேகமில்லாமல் அவர் சூரிய தேவன் தான்! அவரது மகளைத்தான் நீ சந்தித்திருக்கிறாய். நல்லது. இந்தக் குடிலிலேயே அமர்ந்து சூரிய பகவானைக் குறித்துத் தவம் இயற்றி வா. அவர் பிரத்தியட்சமானவுடன் அவரது மகளையே வரமாகக் கேள். உன்னைத் தன் மகளுக்கேற்ற நல்ல வரன் என்று அவர் கருதினால் உனக்கு அந்த வரம் தருவார்!’’ என்றார், வசிஷ்டர்.

‘‘அவளும் என்னை நேசிக்கிறாள். எனவே அவளின் தந்தை அவளை எனக்கு மணம் செய்து கொடுத்துவிடுவார் என்றே நம்புகிறேன்!’’ என்று தயங்கித் தயங்கிச் சொன்னான் மன்னன். தங்களுக்கு ஓர் அரசி வரப் போகிறாள் என அனைவரும் ஆனந்தம் கொண்டார்கள். மன்னன் அந்தக் குடிலில் தவம் இயற்றலானான். படைவீரர்கள் கானக விலங்குகள் அங்கு வராமல் காவலிருந்தார்கள். பன்னிரண்டு நாட்கள் செய்த கடுந்தவத்திற்குப் பின் சூரியதேவன் பிரத்யட்சமானார். ‘‘ஸம்வாணனே! பேரழகு நிறைந்த என் மகளுக்கு நீதான் ஏற்ற மணாளன். ஏற்கெனவே நீ என் பக்தனும் கூட. என் மகள் தபதீயை மகிழ்ச்சியோடு உனக்கு மணமுடித்துத் தருகிறேன். தந்தை என்ற வகையில் என் கடமையைச் சிறப்பாக முடித்த பெருமையை அடைய விரும்புகிறேன்!’’ என்றார், அவர்.

வசிஷ்டர் கானகத்திற்கு வரவழைக்கப்பட்டார். கானகத்திலேயே மிக விமரிசையாகத் திருமணம் நடைபெற்றது. பின்னர் சூரியதேவன் தன் மகளை ஸம்வாணனிடம் ஒப்படைத்துவிட்டு வானகம் போனார். ஸம்வாணன் தன் மனைவி தபதீயுடனும் மந்திரி பிரதானிகளுடனும் வசிஷ்டருடனும் நாடு திரும்பினான். பிரகாசமாக மின்னும் தங்கள் அரசி தபதீயைப் பார்த்த மக்கள் வியப்பும் பெருமையும் அடைந்தார்கள். ‘‘இரவில் கொஞ்சம் அரண்
மனைக் கதவைத் திறந்து வைத்தால் போதும். அரசியின் ஒளியால் நாட்டின் இருள் விலகிவிடும்!’’ என்று மக்கள் தங்கள் ராணி குறித்துப் பெருமிதமாகப் பேசுவதைக் கேட்டு, மன்னன் ஸம்வாணன் கடைக்கண்ணால் தன் மனைவியைப் பார்த்தான். வெட்கத்துடன் தன் வலதுகால் கட்டை விரலால் இப்போது நாட்டிலும் கோடு கிழிக்கத் தொடங்கினாள் அவள்.

(சூரியன் என்பது தெய்வம். அது தந்த வரம் என்பது தபதீ. அந்த வரத்தைப் பெற உதவிய வசிஷ்டர் என்பவர் கடவுளிடம் வரம்பெற வழிசொல்லித் தரும் குரு என்ற கருத்தைப் புலப்படுத்தும் இந்தக் கதை, மகாபாரதத்தின் ஆதிபர்வத்தில் ‘தபத்யுபாக்கியானம்’ என்ற தலைப்பில் இடம்பெற்றுள்ளது.) (இன்னும் சொல்லும் இதிகாச