அப்பர் அவதரித்த திருவாமூர் திருத்தலத்துக்கு அருகில்தான் சிறுகிராமமும் அமைந்துள்ளது. சுப்பிரமணியசுவாமி மூலவராக அருள்பாலிக்கும் அற்புத ஆலயம் இது. 300 ஆண்டுகளுக்கு மேல் பழமை வாய்ந்த இந்த திருக்கோயில் திருச்செந்தூர், பழநி முருகன் ஆலயங்களை நினைவுபடுத்துகிறது. மூன்றேகால் அடி உயரமுள்ள பீடத்தில் கருவறையில் நின்ற கோலத்தில் அருள்பாலிக்கிறார் சுப்பிரமணியசுவாமி. கையில் தண்டத்துடன், ஸ்ரீமந்திரம் எனும் நவசக்ரத்தில் எழுந்தருளியிருப்பதால் ஒன்பது மந்திரத்திற்கும் ஒன்பது விதமான பலாபலன்களை அளித்து அருள்பாலிக்கிறார். விழாக்காலங்களில் ஒரு கையில் வேல், மறுகையில் சேவற்கொடி கொண்டு கம்பீரமாக காட்சியளிக்கிறார்.
அளப்பரிய அற்புதங்களை நிகழ்த்தும் சுப்பிரமணிய சுவாமியையும் நவசக்ரத்தையும் கார்த்திகை தீப தினத்திலும் சஷ்டி தினத்திலும் விரதமிருந்து வலம் வருபவர்களுக்கு துயரம் நீங்கி வளமான வாழ்வு அமையும். கோயிலின் முன்மண்டபத்தின் உட்புற விதான கல்வெட்டுகளில் பாண்டிய நாட்டின் சின்னமான மீன் சின்னம் காணப்படுகிறது. பேய் ஓட்டுதல், செய்வினை, சூனியம் போன்றவற்றிற்கு பல சித்தர்களால் தீர்வு காணப்பட்ட இடமாகவும் இத்தலம் கருதப்படுகிறது. விநாயகர் விக்ரகம், உற்சவர்களான வள்ளி-தெய்வானை, மயில், பீடம் போன்றவை நம் கவனத்தை ஈர்க்கின்றன. வேல் பீடத்தில் நட்டு வைக்கப்பட்டுள்ளது. முருகப் பெருமான் கோயிலின் இடதுபுறம், தனிச் சந்நதியில் இடும்பன் சுவாமி அருள்பாலிக்கிறார்.
வெள்ளி, செவ்வாய்க்கிழமைகளில் சிறப்பு பூஜை நடக்கிறது. பங்குனி உத்திரத்தின்போது 50 காவடிகளை சுமந்து பக்தர்கள் ஊர்வலமாக வந்து நேர்த்திக்கடன் நிறைவேற்றுகிறார்கள். ஊர் மக்கள் ஆதரவுடன் சஷ்டி, சூரசம்ஹாரம், கிருத்திகை விழாக்களும் நடத்தப்படுகின்றன. சிறுகிராமம் எனும் இத்தலம் பண்ருட்டியில் இருந்து 13 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. விழுப்புரத்தில் இருந்தும் செல்லலாம்.



