Pages

கணேசா கணக்குச் சொல்லு...


விநாயகருடைய சரிந்த தொப்பையைப் பார்த்துச் சிரித்த சந்திரனுக்குப் பாடம் புகட்ட விநாயகர் சந்திரனுடைய கலைகள் எல்லாம் அழிந்துபோகச் சாபம் இட்டார். பிறகு சந்திரனுடைய நிலைமைக்கு இரங்கி இந்த விநாயகரே, அவனுடைய கலைகள் வளரவும் தேயவும் அருளினார். நான்காம் பிறையைப் பார்க்கும் தோஷம் அல்லது இன்னல்கள், விநாயகரைப் பூஜிப்பதால் நீங்கும். கண்ணபிரானுக்கும் இந்த இடர் கணபதி பூஜை மூலம் நீங்கிற்று.

குண்டையூர் தலத்தில் நெல் குதிர்களைச் சுந்தரருக்கு இறைவன் அருளினார். அதைத் திருவாரூரில் சேர்ப்பிக்கும்படி சுந்தரர் கேட்டுக் கொண்டார். இறைவனும் விநாயகனைக் கூப்பிட்டு, அந்தப் பணியை நிறைவேற்றப் பணித்தார். விநாயகரும் அப்படியே அருளினார்.

கங்கை கொண்ட சோழபுரத்தில், ராஜேந்திர சோழன் கட்டிய அற்புதமான சிவன் கோயில் உள்ளது. இக்கோயிலைக் கட்டிய ஸ்தபதி அரசன் தன்னிடம் கொடுத்த பணத்துக்குக் கணக்கு எழுதும் பணியை விநாயகரிடம் ஒப்படைத்தான். ஸ்தபதிக்கு வேண்டாத சிலர், அரசனிடம் கோயிலைக் கட்ட ஆன செலவுக்குக் கணக்குக் கேட்கச் சொன்னார்கள். அதை ஸ்தபதி விநாயகரிடம் சொல்ல அவன் கேட்டபடி கணக்கை ஒப்புவித்துவிட்டு, விநாயகர் கோயிலுக்கு வெளியே போய் உறைந்தார். இன்றும் இந்தக் கணக்கு விநாயகர், கோயில் வெளியிலேயே கையில் எழுத்தாணியுடன் காணப்படுகிறார்.

மாற்றுரைத்த விநாயகர், விருத்தாசலம், திருவாரூர் இரண்டு ஊர்களிலும் உள்ள பாடல் பெற்ற சிவத்தலத்தில் இருந்து அருள்பாலிக்கிறார். விருத்தாசலத்தில், சிவன் தனக்குக் கொடுத்த பொன்னை மாற்றுப் பார்த்துத் தருமாறு சுந்தரர் விநாயகனைக் கேட்கிறார். அதைத் திருவாரூருக்கு எடுத்துச் செல்ல வேண்டும். சுந்தரர் யோசித்தார். அந்தப் பொன்னை அப்படியே மணி
முத்தாற்றில் போட்டார். திருவாரூர்க் கமலாலயத்தில் வந்து தேடினார். பொன் கிடைத்ததும் மீண்டும் கணபதியைக் கூப்பிட்டார். பொன்னுக்கு மச்சம் பார்க்கச் சொன்னார். இருந்து வாங்கிக்கொண்டு சென்றார். கமிஷன் இல்லை, தரகு இல்லை, எத்தனை வேகமாய்க் காரியம் ஆனது! என்ன, அப்பாதான் கொஞ்சம் சிபாரிசு பண்ண வேண்டியிருந்தது!

திருப்புன்கூரில் உள்ள குளம், பிள்ளையார் குளம் என்றே அறியப்படுகிறது. நந்தனாருக்காக ஒரு குளத்தை வெட்டி அருளியிருக்கிறார் இந்த கணபதி.

அச்சிறுத்த விநாயகர் காணப்படுவது அச்சரப்பாக்கம் என்ற தலத்தில். இங்கு தன்னை வணங்காமல் முப்புரத்தையும் எரிக்கத் தேரில் ஏறிய சிவபிரானுக்கு, அவர் செய்த தவற்றை உணர்த்த வேண்டி, தேரின் அச்சு முறித்துத் தன் ஆற்றலை வெளிப்படுத்தினார்.

திருத்துருத்தி(குத்தாலம்) என்ற தலத்தில், இவர் சிவபிரானுக்கு மாப்பிள்ளைத் தோழனாக வந்ததால் துணை வந்த விநாயகர் என்ற பெயரில் அருள்கிறார்.
-ஜி. கிருஷ்ணரத்னம்