Pages

கிருஷ்ணா... கிருஷ்ணா...


இவருக்கு அறிமுகம் தேவையில்லைதான். தமிழ் இலக்கிய உலகின் கனிந்த மரம். இந்தியாவின் உயரிய இலக்கிய விருதுகளில் ஒன்றான சாகித்ய அகாதமி, இவர் எழுதிய ‘குருதிப்புனல்’ என்கிற நூலுக்காக தேடி வந்தது. 1930ல் கும்பகோணத்தில் பிறந்த இவர், தி.ஜானகிராமனின் மாணவர். சுமார் 40 ஆண்டுகாலம் டெல்லி பல்கலைக் கழகத்தில் பேராசிரியராக பணியாற்றியவர். போலந்தில் உள்ள வார்சா பல்கலைக் கழகத்தில் இந்திய தத்துவத்தையும் பண்பாட்டையும் கற்பிக்கும் ஆசிரியராகவும் விளங்கியவர். இவர் எழுதிய ‘ராமானுஜர்’ நாடகம், பலரையும் புருவம் உயர்த்த வைத்ததோடு, சரஸ்வதி சம்மான் விருதையும் பெற்றுத் தந்தது. 17 புதினங்கள், 6 சிறுகதை தொகுப்புகள் என அணிவகுக்கும் இவரது படைப்புத் தோன்றலுக்குப் பிள்ளையார்சுழியாய் அமைந்தது ‘மழை’ என்கிற நாடகம்.

இந்திரா பார்த்தசாரதி?

மகாவிஷ்ணுவை, ‘திருமகள் கேள்வன்’ என்றுதான் அழைத்தார்கள். லட்சுமியின் கணவன் என்று அர்த்தம். நம் பாரம்பரியம் இது என்றும் சொல்லலாம். உண்மையில் இந்த பெயரில் நான் எழுதியபோது என் மனைவி இந்திராவுக்கு உடல்நிலை சரி இல்லாமல் இருந்தது. அவரை சந்தோஷப்படுத்த பார்த்தசாரதி என்கிற என் பெயருக்கு முன்னால் இந்திராவைச் சேர்த்து, படைப்புகளை அனுப்பிவைத்தேன். இந்திரா பார்த்தசாரதி என்கிற பெயரில் படைப்புகள் பிரசுரமானது. அந்தப் பெயர் நன்றாக இருக்கவே அப்படியே நிலைத்தும் விட்டது.

ராமானுஜர்?

இன்றைய புரட்சிகளுக்கெல்லாம் ஆணிவேர் இவர். வேதங்களை அடிப்படையாகக் கொண்டு, வைதீக நெறியை முன்னிறுத்தி வாழ்ந்தவர்கள் நம் முன்னோர்கள். ‘அறிவு தொடர்பான விஷயங்களை நீங்கள் பாருங்கள், நீங்கள் வியாபார விஷயங்களை கவனித்துக் கொள்ளுங்கள், நீங்கள் பாதுகாப்பு தொடர்பானவைகளுக்கு முக்கியத்துவம் கொடுங்கள், விவசாயம் உங்கள் பொறுப்பு’ என சமூகத்தின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்ற பரஸ்பரம் புரிதலோடு பணிகளை பிரித்துக் கொண்டு செய்ய ஆரம்பித்தார்கள். இது எதுவும் சாதியின் அடிப்படையில் நடந்தவை அல்ல. ஆனால் மனித சுபாவம் என்று ஒன்று இருக்கிறதே! கையில் கொஞ்சம் அதிகாரம் கிடைத்தவுடன் அது ஆட்டம் போட வைத்து விடுகிறதல்லவா? நான் செய்வது தான் உன்னதமான பணி என்கிற கர்வமும் அதனோடு அரசியலும் சுயநல சூழ்ச்சிகளும் சேர்ந்து கொள்ள உருவானதுதான் சமூக ஏற்றத் தாழ்வுகள், வர்ணாசிரமம் என்கிற தத்துவம், அதன் வாரிசுகளாய் சாதி, தீண்டாமை என அடுக்கடுக்கான அவலங்கள் எல்லாம்.

சமூகத் தேவைகளுக்காக உருவான பணி ஏற்பாடுகள், வர்ணாசிரமம் என்கிற விஷயத்தை ஆயுதமாகக் கொண்ட குழுக்களால் தீவிரமாக கடைப்பிடிக்கப்பட்டு, சமுதாயத்தில் ஏற்றத் தாழ்வுகள், உயர்ந்த சாதி-தாழ்ந்த சாதி, தீண்டாமை என்கிற விஷ விதை, செடியாய் முளைவிட்டு பெருமரமாய் கிளைவிட்டது. இந்த நேரத்தில், இத்தகைய கொடுமைகளுக்கு எதிராக சித்தார்த்தர் புறப்பட்டார். வைதீக கெடுபிடிகளுக்கெல்லாம் மாற்றாக பௌத்தமும் சமணமும் தோன்றின. கடவுள் என்கிற விஷயத்துக்குள்ளேயே அவை வரவில்லை. ஒருவர் தன் கடமையைச் சரியாகச் செய்து கொண்டிருந்தால் கடவுளின் தேவையே இல்லை என்கிற தத்துவத்தை அவை வெளிப்படுத்தின. சமூகத்தில் புரையோடிப்போன வெற்று சடங்குகள், சம்பிரதாயங்களுக்கு இந்த புதிய கோட்பாடு சவால் விட்டது. சமூகத்தில் புதிதாக ஒரு விஷயம், ஒரு கோட்பாடு அறிமுகமாகிறதென்றால், ஒரு புரட்சி உதயமாகிறது என்றால் அதை முதலில் அறிவுஜீவிகளும் அடுத்ததாக பாதிக்கப்பட்ட அடித்தட்டு மக்களும் கொண்டாடி ஏற்றுக் கொள்வார்கள்.

கம்யூனிச சித்தாந்தம், இந்தியாவில் முதலில் படித்த அறிவு ஜீவிகளிடமும் அதைத் தொடர்ந்து தொழிலாளி வர்க்கத்திடமும் பரவியதே, அது போல! அப்பர் போன்ற அறிவு ஜீவிகள் சமணத்தை ஏற்றுக் கொண்டது இந்த வகையில்தான். ஆனால் சமண, ஜைன மதங்கள் எந்த வேகத்தில் வளர்ந்தனவோ அந்த அளவுக்கு அவற்றால் தாக்குப் பிடிக்க முடியவில்லை. சாமானியனை, நடுத்தர வர்க்கத்தை அவற்றால் கவர முடியவில்லை. காரணம், அந்த சமயங்களில் கொண்டாட்டம் இல்லை. வெறுமை நிரம்பி வழிந்தது. ஒன்றுமில்லாத சூன்யத்தை நோக்கியதாக அவற்றின் பயணம் அமைந்தது. கால ஓட்டத்தில் இதற்கும் ஒரு மாற்று உருவாக வேண்டியது அவசியமானது. அந்த இடத்தை ஆதிசங்கரர் நிரப்ப வந்தார். அவர் வகுத்துத் தந்த அத்வைத நெறியோ தத்துவ மயமாக இருந்தது. அதுவும் அப்போதைக்குப் போதுமானதாக இல்லை.

பிடிவாதமான வைதீக நெறிகளாலும் சமண, ஜைன கோட்பாடுகளாலும் சனாதன தர்மம் பாதிக்கப்பட்டிருந்தது. வேதத்தில் எந்த இடத்திலும் இல்லாத தீண்டாமை, சமூகத்தில் பேயாட்டம் போட்டது. இவை எல்லாவற்றையும் தலைகீழாக மாற்ற வந்த புரட்சி சூரியன்தான் ராமானுஜர். மனிதனை மனிதன் தொடுவது தீட்டா? தன்னைச் சுற்றி, ஏன் வீட்டில்கூட இத்தகைய இழிநிலை இருக்கிறதே என தவித்தார், ராமானுஜர். இதற்கெல்லாம் மருந்து தேடத் துணிந்த அவர், தான் பிராமணராக பிறந்திருந்தாலும் தனது குருவாக ஒரு வைசியரை ஏற்றுக் கொண்டு சமய-சமூக வாழ்க்கையில் முன்மாதிரியை உருவாக்கினார். மாற்றத்தை தன்னிலிருந்து தொடங்கினார். எல்லோருக்கும் எல்லா உரிமையும் கிடைக்க வேண்டும் என நினைத்தார். வாழ்க்கையிலிருந்து வழிபாடுகள்வரை அனைத்திலும் புதுமை கொண்டுவர முயன்றார்.

முதல்படியாய் வழிபாட்டு முறைகளில் மகத்தான மாற்றங்களை கொண்டு வந்தார். ஒரு தத்துவத்தைப் பிடித்துக் கொண்டு உள்முகமாக பயணித்து, தங்களின் ஆற்றலின் எல்லையை கண்டுபிடித்து, இதுதான் கடவுள் என எல்லோரும் கண்டுகொள்வது கஷ்டம். எல்லோருக்கும் பிடித்தமான கடவுள் மகாவிஷ்ணு. அவரிடம்தான் மனிதனுக்குப் பிடித்த அத்தனை அம்சங்களும் இருக்கின்றன. ஆகவே அவரை தன் மாற்றத்திற்கான ஆதார சக்தியாக கொண்ட ராமானுஜர், விஷ்ணுவை வழிபடும் கடவுளாக ஏற்றுக் ஏற்றுக் கொள்ளும் அனைவரும் வைணவர்கள் என்று அழைக்கப்படுவார்கள் என்று சொன்னார். வைணவனாகி விட்டால் அவர்களுக்குச் சாதி இல்லை என்று பிரகடனப்படுத்தினார்.

சூன்யமாகிக் கிடந்த மக்களுக்குக் கொண்டாட்டம் வேண்டும். அவர்களை ஒன்றிணைக்க ஒரு கேந்திரம் வேண்டும். அதற்காக கோயில்கள், அங்கு திருவிழாக்கள், உற்சவங்கள் என பலதையும் திட்டமிட்டு உருவாக்கினார். இவை எல்லாவற்றையும் விட கடவுள் வழிபாடு என்பது பக்தனுக்குத் தெரிந்த, அவனது சொந்த மொழியிலேயே இருக்க வேண்டும் என்று விரும்பினார். அப்போதெல்லாம் சமஸ்கிருதம்தான் வழிபாட்டு மொழியாக இருந்தது. மக்களுக்கும் அந்நியமாக இருந்தது அந்த மொழி. மூடுமந்திரம் என்கிற வார்த்தை கூட இதைக் குறிப்பதற்காகவே வந்திருக்கக் கூடும். இதை மாற்றம் செய்ய விரும்பிய ராமானுஜர், தமிழில் வழிபாட்டுக்கு வழி வகுத்தார்.

தமிழ் வேதங்களாக, திராவிட உபநிஷதம் என போற்றப்படுகின்ற, நம்மாழ்வார் எழுதிய திருவாய்மொழி, நாலாயிர திவ்ய பிரபந்தம் ஆகியவற்றை கோயில் கருவறையில் ஒலிக்கச் செய்தார். இதனால் மக்கள் வைணவத்தின் பால் ஈர்க்கப்பட்டார்கள். கடவுளுக்கும் மனிதர்களுக்குமான இடைவெளி வெகுவாக குறைந்தது. வைணவன் என்கிற அடையாளத்தில் சாதிகள் கரைய, சமுதாயம் புத்தொளி பெற்றது. பக்தி இலக்கியங்கள் வாழ்வை ரசமாக்கின. இந்த மாற்றங்களுக்கெல்லாம் ஆதாரமான நாயகன் ராமானுஜர். ஆதலால்தான் அவரை முன்னிலைப்படுத்தி ராமானுஜர் என்றொரு நாடகம் எழுதினேன்.

ஆனால் இன்றும் சாதி, தீண்டாமை எல்லாம் இருக்கிறதே! சாதி இந்தியாவின் சாபக்கேடு. அதற்கு காரணம் சமூகத்தில் விழிப்புணர்வு இல்லாதது தான். மகத்தான எல்லா மாற்றங்களும் கால ஓட்டத்தில் ஒரு அடையாளமாகியும் விடுகிறது. மேல்கோட்டையில் துளசி வனத்தில் இருந்த சம்பத்குமார சுவாமி கோயிலை கண்டுபிடிக்க உதவியவர் அன்று தீண்டத்தகாதவர்கள் என புறக்கணிக்கப்பட்டவர்கள். அவர்களை திருக்குலத்தார் என அறிவித்து, அந்த ஆலயத்தின் அத்தனை நிர்வாகப் பொறுப்புகளையும் அந்த மக்களிடமே ராமானுஜர் ஒப்படைத்தார். ஆனால் இன்று என்ன நிலைமை? ஆண்டுக்கு ஒருமுறை, திருக்
குலத்தார் என்கிற அந்த மக்கள் கோயில் மரியாதை பெறுவார்கள் என்கிற அளவுக்குத் தேய்ந்து போனதே, எதனால்?

ராமானுஜர் நாடக நூல் வெளிவந்து, அது விருதுக்கும் தேர்ந்தெடுக்கப்பட்டபோது சிலரிடமிருந்து எதிர்ப்பு கிளம்பியது. ஆனால் சமூக மாற்றத்திற்கான மிகப் பெரிய காரணமாகத் திகழ்ந்த அவரை குறுகிய, குறிப்பிட்ட ஒரு சாரரிடமிருந்து மீட்டெடுக்கும் முயற்சியாகவே அந்த நூல் அமைந்தது. உண்மையில் புதுமையையும் முன்மாதிரியான சமூக மாற்றத்தையும் விரும்பும் அத்தனை பேருக்கும் சொந்தமானவர் ராமானுஜர். ஒரு இஸ்லாமிய இளவரசிக்கு விஷ்ணுவின் உற்சவர் சிலைமீது இருந்த அளவில்லாத காதலைப் புரிந்து கொண்டு, அந்தப் பெண்ணை தனது மருமகளாக்கிக் கொண்டு, மாயவனுக்கு அவளை மனைவியாக்கியது முதல், அவளையே துலுக்க நாச்சியாராக்கி எதிர்ப்பு சமூகத்தை நமக்கு சொந்தக்காரர்களாக்கியது எத்தனைப் பெரிய சமுதாய நல்லெண்ணம் என்பதை நாம் கவனிக்கத் தவறக்கூடாது.

ஒரு இஸ்லாமியப் பெண்ணை சனாதன தர்மம் எப்படி தங்களில் ஒருத்தியாய் ஏற்றுக் கொண்டது? வியப்பானாலும் ஒரு வகையில் இந்து மதத்தின் பலம் இது. ஏனெனில் எந்தெந்த காரணிகள், கோட்பாடு எல்லாம் தன்னை எதிர்த்து நின்றதோ, எது மாற்றாய் முன்னிறுத்தப் பட்டதோ, அதிலிருந்த நல்ல அம்சங்களை எல்லாம் இந்து மதம் எதிர்காலத்தில் தனதாக்கிக் கொண்டிருக்கிறது. புத்தரின் அகிம்சையை, அந்த கோட்பாட்டின் துறவு போன்ற விஷயங்களை எடுத்துக் கொண்டதோடு புத்தரையும் மகாவீரரையும் மகாவிஷ்ணுவின் அவதாரம் என அறிவித்து, சுவீகரித்துக் கொண்டுவிட்டதல்லவா! அது போலத்தான் இதுவும்.
ஸ்ரீரங்கம் பெருமாளுக்கு காலை படையல் என்ன தெரியுமா? சப்பாத்தி!

ஸ்ரீமுஷ்ணம், பூவராகப் பெருமாள் கோயிலில் இஸ்லாமியர்களுக்கு ஒரு உற்சவம் இருக்கிறது. அவர்களுக்கு மரியாதை செய்யப்படுகிறது. இவை எல்லாம் ஆரோக்யமான, ஏற்றுக் கொள்ளத்தக்க மாற்றங்கள். ஆனால் இத்தகைய முற்போக்கு சிந்தனை சுமார் 800 ஆண்டுகளுக்கு முன்பே ஒருவர் மனதில் தோன்றி, அதற்காக அவர் மெனக்கட்டார் என்றறியும்போதுதான் அவர் அனைவரது கவன ஈர்ப்புக்கும் உள்ளாகிறார்.

சமஸ்கிருதம் அந்நிய மொழியா?

இல்லை. இது நம் மக்களுக்கு அந்நியமான மொழியாய் இருக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும். சமஸ்கிருதம் அறிவுஜீவிகளுக்கான தொடர்பு மொழியாகவே இருந்திருக்கிறது. எந்தக் காலத்திலும் சமஸ்கிருதம் ஒரு சாதிக்காரருக்கோ, ஒரு இனத்துக்கோ தாய்மொழியாக இருந்ததில்லை. இன்று ஆங்கிலம் எப்படி தொடர்பு மொழியாக இருக்கிறதோ அதேபோல அன்று சமஸ்கிருதம் இருந்திருக்கிறது. கருவறையில் தமிழால் இறைவனைப் பாடச் சொன்ன ராமானுஜர், பாஷ்யம் இயற்றியபோது சமஸ்கிருதத்தில்தான் எழுதினார். அப்போதுதான் வடபாரத அறிவுஜீவிகளுக்கு அது போய் சேரும் என்கிற தெளிவு அவரிடம் இருந்தது.
கம்பர் ராமாயணத்தை தமிழில் எழுதினார். மூலம் எது? வால்மீகி சமஸ்கிருதத்தில் எழுதியதுதானே! தமிழரான கம்பர் அப்போது சமஸ்கிருதம் தெரிந்த அறிவுஜீவி என்பதுதானே இதன் வெளிப்பாடு? அந்த காலத்தில் தமிழ், பாலி, பிராக்ருதம் ஆகியவைதான் நம்மவர்களின் பேச்சு மொழியாக இருந்தன; சமஸ்கிருதம் அல்ல. சமஸ்கிருதம் என்றால் நன்றாக செய்யப்பட்டது என்று பொருள். அந்த மொழியை குறிப்பிட்டவர்களுக்கு மட்டும் சொந்தம் என்று சொல்வது அறியாமை.

பாவம்-புண்ணியம் இதெல்லாம் உண்மையா?

தனியொரு மனிதன் தப்பு செய்யாமல் இருந்தால் சமூகத்தில் எந்த பிரச்னையும் எழாது. அப்படி தப்பு செய்யாமல் இருக்க, ஒரு கட்டுப்பாடு வேண்டும். அந்த கட்டுப்பாடும் தார்மீகமாக இருக்கும்போது கண்காணிக்க ஆள் தேவை இருக்காது. அதற்கான ஏற்பாடுகள்தான், பாவம்-புண்ணியம் என்பதெல்லாம். இன்று போலீஸ்காரர்கள் செய்யும் வேலையை, உளவியல் ரீதியாக இவை செய்கின்றன. பாவம் செய்தால் நரகத்திற்கு செல்வீர்கள். புண்ணியம் செய்தால் சொர்க்கம் நிச்சயம் என்பதெல்லாம் குற்றங்களை குறைக்கச் செய்ய உருவாக்கப்பட்டவை. உண்மையில் இது நல்லது என்கிறபோது ஏற்றுக் கொள்வதில் என்ன தவறு? இந்து? இந்துஸ்தான் என்கிற வார்த்தையின் சுருக்கம். சிந்து சமவெளி மக்களை குறிக்க பயன்படுத்தப்பட்ட வார்த்தை. இப்போது இது, மதமாகிவிட்டது. ஆனால் இது உண்மையில் ஒரு வாழ்க்கை முறை; மதமல்ல.

கடவுள்?

ஒவ்வொரு மனிதனுக்குமான உளவியல் தேவை கடவுள். அந்தரங்கமான ஒரு கடவுள் இல்லாமல் எந்த மனிதனாலும் இருக்க முடியாது. ஏனென்றால் இன்பத்திற்கு நன்றி சொல்வதாக இருந்தாலும் அல்லது தனக்கு இன்பம் மட்டுமே வேண்டும் என கேட்பதென்றாலும் அவன் கையேந்தும் இடம் கடவுளின் சந்நதி. தனக்கு நேர்ந்துவிட்ட துன்பத்தை துடைத்தெறிய அவன் உடனே ஓடுவது கோயிலையும் அதில் உறையும் கடவுளையும் நோக்கிதான். கடவுள் மனிதனின் பாதுகாப்புக்கும் உணர்வுகளுக்கும் வடிகால் என்றே சொல்லலாம். மரணத்தின் வாயிலில் நிற்கும் ஒரு நாத்திகனின் பிரார்த்தனையாக, ‘‘கடவுளே, நீ இருக்கிறாயா இல்லையா என்று எனக்குத் தெரியாது. இருந்தால், ‘இருக்கிறதா, இல்லையா’ எனத் தடுமாறும் என் ஆன்மாவை காப்பாற்று’’ என்ற பிரபலமான இந்த வாக்கியத்தைச் சொல்வார்கள். ஆகவே உள் மனதின் சக்தியின் எல்லை, இயற்கை என எப்படி சொன்னாலும் இதன் தேவை என்றும் நிலையானது. என்னைப் பொறுத்தமட்டில் ‘கடவுள்’ என்ற வார்த்தையில் கட்டளையைப் பார்க்கிறேன்.

கட-உள் என்று உத்திரவிடும் இது, உள்ளே கடந்து செல் என்று சொல்கிறது. உள்முகமான சக்தியின் பூர்த்தியடையாத தேடல் இது. இதைத் தேடி உள்ளே பயணித்துக் கொண்டே இருக்க வேண்டும். பார்த்தால், உண்டு. பார்க்காவிட்டால், தேடல் தொடர்ந்து கொண்டே இருக்க வேண்டியதுதான். நான் கடவுள் இல்லை என்றும் சொல்லவில்லை. ஏனெனில் நான் கடவுளை மறுப்பவனும் இல்லை. அதை அணுகுவதில் எனக்கென தனித்த வழியைக் கொண்டிருக்கிறேன்.

பிடித்த கடவுள்?

கிருஷ்ணன்தான். அதனால்தான் ‘கிருஷ்ணா கிருஷ்ணா’ என்றொரு புதினம் எழுதினேன். மனிதனின் அத்தனை அபிலாஷையின் மொத்த உருவகம் கிருஷ்ணன். இப்படி ஒரு பாத்திரப் படைப்பு உலகில் எந்த இலக்கியத்திலும் இல்லை. ராமனாய் ஒரே நேர்க்கோட்டில் பயணிக்கும் வாழ்க்கைக்கு மாறாக இருக்கும் கிருஷ்ணனின் எந்த செயலையும் நாம் குறை சொல்வதில்லை; மாறாக கொண்டாடுகிறோம். மனித மனத்திற்கு பிடித்த செயல்களின் மொத்தக் கலவையான கிருஷ்ணனை எனக்கு மட்டுமல்ல எல்லோருக்கும் பிடிக்கும்

தீபாவளி?

பொதுவாக பண்டிகைகள் கொண்டாட்டத்திற்கானது. அலுப்பு மிகுந்த, இயந்திரத்தனமான வாழ்க்கையை ரசனையாக்கும் முயற்சியே, இவை எல்லாம். தீபாவளி குழந்தைகளுக்கான பண்டிகை. பட்சணம், புத்தாடை, பட்டாசு என குழந்தைகளின் குதூகலத்தில் பெரியவர்களும் பூரிப்பார்கள். தமிழ்நாட்டில் நரகாசுர வதம் என்றால் வட நாட்டில் ராவணனை வென்று ராமன் நாடு திரும்பியதன் கொண்டாட்டம். இப்படியாக காரணம் எத்தனை இருந்தாலும் மகிழ்ச்சிதான் இதன் நோக்கம். ஆகவே தீபாவளி என்றாலே மகிழ்ச்சிதான்!