திருக்கோளூர்ப்பெண்பிள்ளை ரகசியம்
கைகேயியின் வரத்தின்படி ராமன் காடு செல்ல வேண்டும் என்பதை அறிந்த இலக்குவன் முதலில் கொதித்தெழுந்தான். ராமன், ‘‘இது விதியின் பிழை’’ என்று கூறி இலக்குவனைச் சமாதானம் செய்தான். ராமனுடன் தானும் காட்டிற்குச் சென்றான் இலக்குவன். ராமனுக்கும் சீதைக்கும் காட்டில் பணிவிடைகள் செய்தான். இறுதியில் வேலால் தாக்குண்டு வீழ்ந்து உயிர் கொடுக்கவும் துணிந்தான். அப்போது, ராமன் ஆற்றொணாத் துயரத்தில் ஆழ்ந்தான். ‘‘நாள்தோறும் மனைவியரைப் பெறலாகும்; இலக்குவனைப் போன்ற ஒரு தம்பியைப் பெற இயலுமா?’’ என்று ராமன் புலம்பினான். அவ்வாறு, ராமனுக்காகவே வழியடிமை செய்து வாழ்ந்தான் இலக்குவன். வழியடிமை செய்தேனோ இலக்குமணனைப் போலே?
-என்பது திருக்கோளூர்ப் பெண்பிள்ளையின் ஏக்கம். வழியடிமை என்ற சொல் இலக்குவனுக்கு முற்றிலும் பொருந்துகிறது. ராமன் சென்ற வழிகளில் எல்லாம் தொடர்ந்து சென்று அடிமைத் தொண்டு செய்தான் இலக்குவன். பதினான்கு ஆண்டுகள் கழிந்தன. குறிப்பிட்ட நாளில் ராமன் வரவில்லை. பரதன் முன்பு கூறியிருந்தபடி தீயில் புகுந்து இறக்கத் தீர்மானித்தான். அதற்கு முன்னர் சத்ருக்னனை அழைத்து, நாட்டை ஆளும் பொறுப்பை ஏற்க வேண்டினான். அப்போது
சத்ருக்னன்,
கான் ஆள நிலமகளைக் கைவிட்டுப்
போவானைக் காத்துப் பின்பு
போனானும் ஒரு தம்பி, போனவன்தன்
வரும் அவதி போயிற்று என்னா
ஆனாத உயிர்விட என்று அமைவானும்
ஒரு தம்பி; அயலே நாணாது
யானாம் இவ்வரசு ஆள்வன்? என்னே இவ்
வரசாட்சி? இனிதே? அம்மா!
-என்று கூறியதாகக் கம்பர் பாடுகிறார். ‘‘ராமன் காட்டிற்குச் சென்றான். அவனைத் தொடர்ந்து சென்று தொண்டு செய்யப் போனான் இலக்குவன் என்ற தம்பி. குறிப்பிட்ட நேரத்தில் அண்ணன் வராததால், மற்றொரு தம்பி பரதன் உயிர் துறக்க ஆயத்தமாய் நிற்கிறான். இந்த நிலையில் ‘நான் அற்ப அரசாட்சியை இனிதென்று ஏற்பேனா?’ என்று கூறிய சத்ருக்னனும் தன் உயர்ந்த உள்ளத்தை வெளிப்படுத்தினான். அத்தகைய தியாகத் தம்பியர் செய்தவை எதனையும் தான் செய்யவில்லையே என்று திருக்கோளூர்ப் பெண்பிள்ளை ஏங்குகிறார். நான்காவது தம்பி வேடர் குலத் தலைவனாகிய குகன், கங்கையாற்றின் இரு கரைகளிலும் ஆட்சி செலுத்தியவன். ஏராளமான படகுகளை வைத்திருந்தான். பக்தி நிறைந்த பண்பாளனாகவும் திகழ்ந்தான்.
ராமன் வனவாசத்திற்குப் புறப்பட்டுக் கங்கைக் கரையை அடைந்த செய்தியை அறிந்தான் குகன். தேனும் மீனும் எடுத்துச் சென்று ராமனைத் தரிசித்தான். சில மணித்துளிகளே ராமனுடன் பழகினான். அதற்குள் ராமனிடம் பேரன்பு கொண்டான். ராமனைப் பிரிய மனம் இல்லாமல் அன்றிரவு அவர்களுடன் தங்க அனுமதி கேட்டான். ராமனும் குகனது அன்பின் ஆழத்தை இலக்குவனுக்கும் சீதைக்கும் குறிப்பால் உணர்த்தினான். குகனிடம், ‘‘யாதினும் இனிய நண்ப! இருத்தி ஈண்டு எம்மொடு’’ என்றான். அன்றிரவு குகனும் கண்ணுறங்காது காவல் பணியில் ஈடுபட்டிருந்தான். இரவு முழுவதும் கண்ணீர் வடித்தபடி, காவல் பணியில் ஈடுபட்ட இலக்குவனின் ஈடுபாட்டைக் கண்டான். அடுத்த நாள் ராமன், சீதை, இலக்குவன் ஆகியோரைக் குகன் தன்னுடைய படகில் ஏற்றி வந்து அக்கரையில் விட்டான். தனது ஆட்சிக்குட்பட்ட பகுதியில் எல்லா வசதிகளும் இருப்பதால், அங்கேயே தங்கி, வனவாசத்தைக் கழிக்க வேண்டினான்.
‘‘சீதை உன் கொழுந்தி; என் தம்பியாகிய இலக்குவன் உனக்குத் தம்பி!’’ என்று ராமன் அவனுக்கு ஆறுதல் வார்த்தைகள் கூறி அங்கிருந்து புறப்பட்டான். ராமனைத் தேடி காட்டிற்கு வந்த பரதனை, குகன் முதலில் தவறாக எண்ணிச் சினம் கொண்டான். ‘‘தோழமை என்று ராமன் சொல்லிய சொல் ஒரு சொல்!’’ என்றும் ‘‘அவனுக்காக உயிரைக் கொடுப்பேன்’’ என்றும் கூறி, பரதனை எதிர்கொள்ளச் சென்றான். பரதனின் கோலத்தையும், கண்ணீரையும் கண்டு கலங்கிய குகன், ‘‘ராமனுக்குப் பின்னால் பிறந்தவர்கள் பிழைசெய்யார்!’’என்று பெருமிதத்துடன் கூறிப் பாராட்டினான். அக்கரைக்கே விட்டேனோ குகப்பெருமானைப் போலே? ராமனை அன்புடன் உபசரித்து படகில் ஏற்றி, அக்கரையில் இறக்கிய குகனைப் போன்ற தொண்டு எதனையும் தன்னால் செய்ய இயலவில்லையே என்று ஏங்குகிறாள் திருக்கோளூர்ப் பெண்பிள்ளை.
பாதுகை பெற்ற பக்தை
ராமானுஜர் திருவரங்கம் திருக்கோயில் நிர்வாகத்தை ஏற்றார். பல்வேறு சீர்திருத்தங்களைச் செய்தார். அவருடைய முயற்சியால் வைணவம் தழைத்தது. அதனால் உடையவரின் புகழ் எங்கும் பரவியது. பாரதத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பக்தர்கள் திருவரங்கத்திற்கு வந்தனர். அவர்களில் பலர் ராமானுஜரின் சீடர்களாகித் தொண்டு வாழ்க்கை மேற்கொண்டனர். அவ்வகையில் சுமதி என்ற பெண்ணும் உடையவரின் கைங்கர்யத்தில் ஈடுபட்டாள். அவள் கொங்கு நாட்டிலிருந்து வந்தவள் என்பதால், அவளை ராமானுஜர், ‘கொங்குப் பிராட்டி’ என்று அழைத்தார். அனைத்தையும் மறந்து, ஆச்சார்ய சேவையில் ஈடுபட்டிருந்த கொங்குப்பிராட்டிக்கு, சொந்த ஊரிலிருந்து அழைப்பு வந்தது. தவிர்க்க முடியாத குடும்பச் சூழலால் அவள் ஊருக்குத் திரும்ப வேண்டியிருந்தது.
கொங்குப்பிராட்டிக்கு, திருவரங்கத்தையும் ராமானுஜரையும் விட்டுப் பிரிந்து செல்ல மனம் இல்லை. எனினும், செல்ல வேண்டிய சூழ்நிலை. கொங்குப்பிராட்டி தன் குருநாதரின் பாதுகைகளைக் கேட்டுப் பெற்றாள். பரதன், ராம பாதுகையை வைத்து வழிபட்டதுபோல், கொங்குப் பிராட்டி உடையவரின் பாதுகைகளை தன்னுடைய ஊரில் வைத்து வழிபட்டு வந்தாள். ஆசானின் திருவடிகளைப் பெற்று வழிபட்டாள். அத்தகைய பேறு தனக்குக் கிடைக்கவில்லையே என்று ஏங்குகிறாள் திருக்கோளூர்ப் பெண்பிள்ளை: அடிவாங்கினேனோ கொங்குப் பிராட்டியைப் போலே?
‘அடி வாங்கியது’ என்பது இங்கு, திருவடியைப் (பாதுகையை) பெற்ற செயலைக் குறிக்கிறது. மாலுக்கு உகந்த மண்மலர் திருப்பதிக்கு அருகில் குருவபுரம் என்ற சிற்றூர் உள்ளது. அங்கு நம்பி என்ற திருமாலடியார் வாழ்ந்து வந்தார். அவர் மண்பாண்டங்கள் செய்யும் தொழிலாளியாவார். குருவபுரத்தைச் சேர்ந்த நம்பிஎன்ற பொருளில் அவரை, ‘குருவநம்பி’ என்று அழைத்தனர். குருவநம்பி அன்றாடம் தன்னுடைய தொழிலைத் தொடங்கும்பொழுது, மண்ணால் ஒரு தாமரை மலரைச் செய்வார். அதனை வேங்கடவன் ஏற்றுக்கொள்வார். வேங்கடவன் திருவடியில் மண்மலர் ஒவ்வொரு நாளும் தவறாமல் சென்று சேர்ந்துவிடும். அவரைப்போலவே தொண்டை மான் அன்றாடம் பொன்மலர் ஒன்றைச் செய்து வேங்கடவனுக்குச் சமர்ப்பிப்பார். பெருமாள், குருவநம்பி சமர்ப்பிக்கும் மண்மலரே தமக்கு உவப்பானது என்று தொண்டைமானிடம் கூறிவிட்டார்! ஏனெனில், தொண்டைமான் பொன்மலரை கர்வத்துடன் சமர்ப்பித்தார்.
அதன்பின்னர் தொண்டைமான் தனது செருக்கை மாற்றிக் கொண்டார். பூவை இட்டேனோ குருவநம்பியைப் போலே! -என்ற திருக்கோளூர்ப் பெண்பிள்ளையின் ஏக்கம் இந்த சம்பவத்தை விவரிக்கிறது.