Pages

சாமியேய்... சரணம் ஐயப்பா...


அருள்... பொருள்... இன்பம்... 14

கார்த்திகை மாதம் பிறந்து விட்டது. வழக்கமாக நான் சென்று வரும் மீனாட்சி அம்மன் கோயிலுக்குச் சென்ற போது திகைப்பு காத்திருந்தது. திரும்பிய பக்கமெல்லாம் ஐயப்ப பக்தர்கள் கூட்டம். சாரி சாரியாக கறுப்பு வேஷ்டியும் காவி வேஷ்டியும்தான் கண்ணில்பட்டது. கோயிலுக்கு வெளியிலும் அவர் கள் வந்த வாகனங்களின் தேக்கம்தான். இனி தை மாதம் முடியும் வரை மீனாட்சி தரிசனம் என்பது அவ்வளவு சுலபமல்ல என்பது விளங்கிவிட்டது. இது மதுரைக்கு மட்டுமல்ல. தமிழ்நாட் டில் புகழ் பெற்ற கோயில்கள் உள்ள இடங்களில் எல்லாமும் இதே நிலைதான். இந்த பக்திப் பெருக்கால் கோயில்களில் நெருக்கடி என்பதோடு சாலைகளிலும் பயணிக்க முடியாத அளவு நெருக்கடி. போக்குவரத்து போலீஸ்காரர் களுக்கோ ஒரு வகையில் கொண்டாட்டம், ஒருவிதத்தில் திண்டாட்டம்.

இதுபோக, ஆரஞ்சு, பேரீச்சம்பழம் என்று விற்கும் கூட்டம் ஒருபுறம். இந்த பக்தர்களுக்காகவே புற்றீசல் போல் முளைத்து எழும் பிளாட்பாரத்து இ ட்லிக் கடைகள். இவற்றையெல்லாம் தூக்கிச் சாப்பிடுவது போல சிலர் அபூர்வமான நாகமாணிக்கக் கல், புலிப்பல், ரசமணி என்று சொல்லி, பக்தர் களின் சென்டிமென்டை தங்கள் மோசடிக்கு பலியாக்கிக்கொள்ள அலையும் கும்பல் ஒருபுறம்.... இருபது, இருபத்தைந்து வருடங்களுக்கு முன்பெல்லாம் இப்படி ஒரு கூட்டம் கிடையாது. சபரிமலை பயணம் என்பதும் அவ்வளவு எளிதானது அல்ல. ஐயப்பனுக்கான விரதமும் அசாதாரணமான ஒன்று. அதிகாலை கண் விழித்து பச்சைத் தண்ணீரில் குளித்து பயபக்தியோடு சரண வழிபாட்டுடன் ஒவ்வொரு நாளையும் தொடங்க வேண்டும்.

நாக்கைக் கட்டுப்படுத்தி, வெங்காயம், பூண்டையும் உணவிலிருந்து விலக்கி, அளவோடு சாப்பிட்டு, துண்டை விரித்து வெறும் தரையில் படுத்துத் தூங்கி தேகசு கம் அவ்வளவையும் கொஞ்சம் கொஞ்சமாக விலக்கவேண்டும். இது போக சூரிய வழிபாடு - மாலையில் ஒரு குளியல், மீண்டும் சரணகோஷம். அழகுணர்ச்சிக்கு இடம் கொடாத சன்யாச தோற்றம், மனோநிலை என்றுதான் ஒவ்வொரு நாளும் கழிய வேண்டும். காலுக்கு செருப்பு கூடாது, கன்னிப்பெண்களை கூடியவரை பார்க்கக்கூடாது, அலங்கார உணர்வே கூடாது போன்ற மூன்று கூடாதுகள் இதில் மிக முக்கியம்.

எந்த குருசாமியின் தலைமையில் யாத்திரை போகிறோமோ அந்த குருசாமியை தினந்தோறும் காலைத் தொட்டு வணங்கி, குருவணக்கம் செலுத்துவதும் இதில் மிக முக்கியம். இப்படிப்பட்ட செயல்பாடுகளால் உடல், உள்ளம் இரண்டும் வலுப்பெற்று ஐயப்பனின் அருளுக்கு நாமும் பாத்தி ரமாவோம். இந்த ஐயப்பனும் சரி, இத்தெய்வத்தின் மீதான விரதமும் சரி, மிக விசேஷமானது மட்டுமல்ல; கலியுகத்தில் மிகப் பெரிய பிராயச்சித்தமான ஒரு விஷயமாகவும் கருதப்படுகிறது.
ஐயப்பன் பிறப்பே ஒரு அதிசயம்! காக்கும் கடவுளாகிய திருமாலுக்கும் அழிக்கும் கடவுளாகிய சிவபெருமானுக்கும் பிறந்த பிள்ளைதான் ஐயப்பன். இந்த புராண பின்புலத்தை விரச மாய் பார்த்து சிந்திக்கும் நாத்திகவாதிகளை நாம் இங்கே புறந்தள்ளிவிடுவது உத்தமம்.

உண்மையில் இதனுள் பொதிந்திருக்கும் உட்பொருள் மிகுந்த பொருட்செறிவை உடையதாகும். விஷ்ணுவின் பெண் வடிவை விஷ்ணுதுர்க்கையாகக் கொள்ளவேண்டும். அந்த வகையில் சக்தியும் சிவமும் கூடிப் பெற்றதுதான் ஹரிஹரசுதன் எனும் ஐயப்பன். அதனுள் காத்து ரட்சிக்கும் திருமாலின் கருணை பிரதான பங்கு வகிக்கிறது. அதாவது, ஐயப்ப அவதாரம் என்பது அழிக்க வேண்டியதை அழித்து, அளிக்க வேண்டியதை அளித்து, காக்க வேண்டியதைக் காக்கும் மூன்று அருட் செயல்பாடுகளைக் கொண்டதாகும். மானுட வாழ்விற்கும் இந்த மூன்றும் பெரிதும் தேவைப்படுகின்றன. ஆனால் கர்ம வினைகளின் காரணமாக ஏற்ப ட்டு விட்ட பிறப்புக்குள்ளேயோ நிறையவே ஏற்றத்தாழ்வுகள்!

இந்த நிலையில் உயிர்கள் கடைத்தேற ஒரு வழியாக உள்ளதே ஐயப்ப விரதமும் தரிசன மும். இது ஆடவர்களுக்கான பிரத்யேக ஆலயம். இங்கே பூப்பெய்திய கன்னியின் மூச்சுக்காற்றுக்கு இடமேயில்லை. இப்படி ஒரு இடத்தில் கடும் பிரம்மச்சர்ய விரதம் இருந்து வந்து தரிசனம் புரியும் போது உலக மாயையால் வந்த துன்பங்களும் தோஷங்களும் நீங்குகிறது என்பதுதான் இதன் உள்நுட்பம். மாயையில் பெரும் மாயை பெண்மாயை. இல்லறத்தில் இது அழகாய் தீர்கிறது. அல்லறத்தில் இது பெரும் பாவமாகி பிறவியை பாடாய்ப் படுத்தி விடுகிறது. இல்லறத்தில் இருந்து கொண்டே பெண்ணாசையால் அல்லறத்துக்கும் ஆளாகின்றவர்கள் எவ்வளவோ பேர்.

சரியான வழிகாட்டுதலும் வளர்ப்பும் இல்லாததால் திருமணத்துக்கு முன்பே இம்மாயை காரணமாக பாவக்கணக்கை ஏற்படுத்திக் கொண்டவர்கள் இல்லறம் கண்டபின் திருந்தி விட் டாலும் அந்தப் பழைய கணக்கை பைசல் செய்யவேண்டிய கடப்பாடும் இருப்பதை மறுக்க முடியாது. மனித வாழ்வில் இப்படிப்பட்ட மாயா விளையாட்டுகள் நிகழ்ந்துகொண்டுதான் இருக்கிறது. அதுதான் மாயையின் தன்மை. இந்த விளையாட்டில், அந்த மாயையை வென்று வெற்றிகரமாய் திகழ்பவர்கள் மிகச்சிலரே. அதற்கு தெளிந்த ஞானமும் நல்ல சூழலும் வளர்ப்பும் மிக முக்கியம். எல்லோருக்கும் இந்த ஞானமும் சூழலும் வளர்ப்பும் கிடைக்காததால் மோகமாக, காதலாக, காமமாக, ஏமாற்றமாக, கள்ள சுகமாக, ஒழுக்கக்கேடாக என்று அவர்கள் வரையில் இந்த பெண்மாயை ஒரு ஆட்டம் ஆடித் தீர்த்துவிடுகிறது.

இதன் காரணமாக வந்த வினைப்பாட்டை இதற்கு நேர் எதிரான கடும் பிரம்மச்சர்யத்தால் மட்டுமே நீக்க முடியும். அதற்கு வழிகாட்டுவதுதான் சபரிமலை.
இந்த பிரம்மச்சர்யம் நம்முள் பதிவான பண்பு. அது சகல மாயா வினைகளையும் கழுவிச் சுத்தம் செய்கிறது. பம்பையாற்றில் மூழ்கும் போதே அந்த பாவம் ஓடிவிடுகின்றது. அங்கிருந்து நாம் ஏறுவது மலை மீதல்ல, நம் வினைகள் மீது! ஏறி ஐயப்பன் சந்நதியில் அடைவது கருணை மாத்திரம் அல்ல, விரதம் இருந்ததற்கான பெரும் பொருளையும்தான்! சபரிமலை ஒரு ஆலயம் மட்டுமல்ல, அது வினைச் சலவை புரியும் சுத்திகரிப்பு நிலையம். புலியைவிட ஒரு கொடிய மிருகம் இருக்கமுடியுமா? பலி போடுவதே அதன் குணம். அதனால்தான் அதன் வினைப்பாடே சற்று நீண்டு ‘ப’ எனும் எழுத்து ‘பு’ என்றாகி புலியாகிற்று. இந்தப் புலித்தோல் மீது அமர்ந்து சன்யாசிகள் தவம்புரிவர். அதற்கு பொருள் என்ன தெரியுமா?

இந்தப் புலி சகலத்தையும் தன்னுள் கொள்ளும். அதை வெல்ல ஒரு மிருகம் கிடையாது. அதேபோல் புலித்தோல் மீது தவம் புரிபவர்களும் தவத் தால் சகலத்தையும் தங்களுக்குள் கொள்வர். அதாவது புலித்தோல் சன்யாசிக்குள் எல்லாமே அடங்கிவிடுவதாக உட்பொருள். நுட்பமான பொருள் என்ன தெரியுமா? ஐயப்பன் அருள் என்பது கொடிய புலியைக் கூட சாந்தமாக்கி நம்மை சுமக்கச் செய்து நம் பாரத்தையே இல் லாமல் போக்கிவிடும் என்பதுதான். இப்படி நுட்பமான உட்பொருளை ஏராளமாக கொண்டிருக்கும் சபரிமலை யாத்திரை இன்று அதற்குண்டான விரதத்தோடும் பிரம்மச்சரியத்தோடும் குருபக்தியோடும்தான் நிகழ்கிறதா என்பதுதான் கேள்வி.

ஆனால் இந்த பேருண்மையை பல பக்தர்கள் உணர்ந்ததாகவே தெரியவில்லை. இங்கே விளையாடாதே என்று அவர்களை எடுத்துரைக்க ஆள் இல்லாததால் இப்படி நடக்கிறதோ என்று நான் கேட்டுக் கொள்வதுண்டு. அதே சமயம் இன்றும் இந்த கார்த்திகை-மார்கழி குளிரில், கடுமையான ஐயப்ப விரதத்தால் தங்கள் கடந்த காலத்திற்கும் சரி, வருங்காலத்திற்கும் சரி குழுவாய் கூடிக் கொண்டு பொன்னாக ஜொலிக்கின்றவர்களும் அனேகர் உண்டு. இப்படிப்பட்டவர்கள் ஒரே நோக்காய் வீட்டை விட்டு மலைக்கும் மலையிலிருந்து வீட்டுக்கும் திரும்புவது வழக்கம். வழியில் திசைமாறுவது என்பதெல்லாம் இவர்கள் வரையில் கிடையாது.

ஏனென்றால் விரதமிருக்கும் ஒருவர் வீட்டுப் பூஜை விளக்கு, விரதம் முடிந்து அவர் வீடு திரும்பி மறு பூஜை செய்யும் வரையில் அணையாமல் எரிய வேண்டும் என்பதும் அவ்வாறு எரிந்திட அந்த வீட்டுப் பெண்ணே காரணமாக இருக்க வேண்டும் என்பதும் விதியாகும். இந்த ஒரு செயலாலேயே அந்தப் பெண்ணும் இல்லத்தில் இருந்து கொண்டே சபரீசனை தரிசித்த பயனைப் பெற்று விடுகிறார். எவ்வளவு பேர் இதையெல்லாம் புரிந்து உண்மையான சபரியாத்திரை மேற்கொள்கிறோம்?