Pages

26. ஞானியரின் அருள் உணர்வுகள், தீமைகளை விழுங்கிவிடும்


இப்பொழுது உங்களுக்கு, எது எது, எதை எதை விழுங்குகிறது என்ற நிலையை, அதாவது உங்கள் வாழ்க்கையில் வந்த தீமைகளை, அந்தத் தீமையை எடுத்து, அதை ஞானியர்களுடைய உணர்வுகளுடன் கலந்தவுடன், அது விழுங்கி, தீமையை அடக்குகின்றது. 


அதை அடக்கிய நிலைகள் கொண்டு உணவாக, ஆக உணவு தேவைதான், ஆனால், இதனுடைய தன்மை அதற்குத் தேவை. 

ஒரு மரம், அந்தக் கட்டை எரிகிறதென்றால் பல உணர்வுகள் சேர்த்து, எண்ணெய்ப்பசை இருந்தால்தான் எரியும். எண்ணெய்ப்பசை இல்லை என்றால் கருகிவிடும்.

இதைபோலத்தான் எதனின் உணர்வின் தன்மை எதுவாக இருப்பினும், ஒரு குழம்பிற்குள் சுவை தேவை என்றால், காரம் தேவை. அந்தக் காரத்தை எவ்வளவு சேர்க்கின்றோமோ, அதற்குத் தக்கவாறுதான் அந்த உணர்ச்சிகள் உந்தும்.

ஆகவே இதைபோல, நமக்குள் எத்தகைய தீய குணம் இருப்பினும், அருள்ஞானிகளின் உணர்வை நமக்குள் சேர்த்து, இதை விழுங்கிடல் வேண்டும்.

ஆக, அருள்ஞானிகளின் உணர்வை நாம் விழுங்கினால், அது தீமைகளை விழுங்கும். எனவே, நாம் மகரிஷிகளின் உணர்வுகளை அதிகமாகச் சேர்க்க வேண்டும்.

ஞானத்தை அறிய வேண்டும் என்றால், இப்பொழுது உங்களுக்குள் கேட்டறிந்த உணர்வுகள், உங்களுக்குள் எத்தனை கோடி குணங்கள் இருப்பினும், அவை அனைத்திலும், எண்ணத்தால் மகரிஷிகளின் அருள் உணர்வுகளைக் கலக்க வேண்டும்.

அவ்வாறு கலக்கும்பொழுது, இது உங்களுக்குள் பால்வெளி மண்டலமாக, துகள்களாக இது சேர்கின்றது. இவ்வாறு சேர்த்துகொண்ட இந்த துகள்கள்,  இந்த உணர்வுகள் நுகர, நுகர, எண்ணங்களாக விரிவடைகின்றது.

ஆக, எண்ணங்களின் தன்மை விரிவடையப்படும்பொழுது, இங்கே பொருள் கண்டுணர்ந்து செயல்படும் திறன் ஏற்படுகின்றது. அந்தத் திறன் இல்லையென்றால் நாம் செயலாக்கமுடியாது.

அந்தத் திறன் நீங்கள் அனைவரும் பெற வேண்டும் என்பதற்குத்தான் இந்த உணர்வைப் பதிவு செய்வதும், அந்த உணர்வின் துணைகொண்டு தீமைகளை அகற்றும் வல்லமை நீங்கள் பெற வேண்டும் என்றும், அதே சமயத்தில், அருள் ஞானிகளின் உணர்வை அடிக்கடி எண்ணும் பொழுது, நுகர வேண்டுமென்பதற்கும் இதை உபதேசிப்பது.

நம் உடல், நாம் உணவாக உட்கொள்ளும் நிலைகளில், உணவில் கலந்துள்ள நஞ்சினை, மலமாக மாற்றிடும் திறன் பெற்றது. அதே போன்று, நமக்குள் உணர்வின் தன்மை பதிவு செய்த நிலைகள் கொண்டு, கேள்விப்பட்ட தீமையான நஞ்சுகளையும்  அது நீக்கி, நல்ல உணர்வைப் படைத்திடும் ஆற்றல் பெற்றது.

ஆக, இவ்வாறு நஞ்சினை நீக்கியவன் மகரிஷி. மகரிஷிகளின் உணர்வை நுகர்ந்து, எடுத்து, நமக்குள் இணைத்திடவேண்டும் என்பதற்குத் தான்,  பல வட்டங்களை இங்கு எழுப்பி, உங்கள் உணர்வின் நினைவாற்றலை இணைத்து, அந்த மகரிஷிகளின் அருள் உணர்வை இணைத்து, உங்களுக்குள் இது பெறும் தகுதியை ஏற்படுத்தியது.

அவ்வாறு, மகரிஷிகளின் அருள் சக்தியை உங்களை நுகரும்படி செய்யும் பொழுது, உங்களுக்கு அது பால்வெளி மண்டலங்களாக வருகின்றது. ஆனால், நீங்கள் இதை நினைவு கொள்ள வேண்டும்.

பிறருடைய குறைகளை எவர் சொன்னாலும், அதை எண்ணத்தால் பதிவு செய்யக்கூடாது. உடனடியாக அந்த மகரிஷிகளின் அருள் சக்தியைப் பெற வேண்டும் என்ற நினைவை, அங்கேயே அதிகமாக்கி, இந்த கணக்கைக் கூட்டவேண்டும்.

எந்த அளவிற்கு, நீங்கள் இந்த கணக்கை, அளவு கோல் கூட்டுகின்றீர்களோ, ஆக, அந்தத் தீமைகளின் நிலைகள் நமக்குள் வராது. ஆனால், அவர் தீமை செய்தார் என்ற கணக்கினைக் கூட்டினால் நன்மை செய்யும் கணக்குகள் குறைந்துவிடும். ஆகவே, நீங்கள் இதை மாற்றுதல் வேண்டும்.

நாம் நன்மையினுடைய நிலைகள், நன்மை, நன்மை, என்று நாம் சொன்னாலும், ஆக, இந்த நன்மை நன்மையாகாது. நல்லது நல்லதும் ஆகாது, கெட்டது கெட்டதும் ஆகாது.

தீமை என்ற காரத்தின் உணர்வினுடைய நிலைகளை, நாம் நன்மை என்ற நிலைகள், நல்ல பொருளை அதிகமாகக் கூட்டினால், அந்த தீமையின் நிலைகள் இதுக்குள் உள்ளடங்கி, நன்மை பயக்கும் நிலையாக இணைந்தே இயக்கும்.

இதைப் போலத்தான், மகரிஷிகளின் அருள் வட்டத்தை நமக்குள், இதை இணைத்துப் பழகவேண்டும். சித்ரபுத்திரன் கணக்குப் பிரகாரம், இதில் அடிக்கடி, இந்த வாழ்க்கையில் எத்தகைய தீமைகள் வந்தாலும், அந்த மகரிஷியின் அருள் உணர்வுகள் என்னிலே பெற வேண்டும் என்று, இதைப் பெருக்கிக் கொண்டிருக்க வேண்டும். 

இந்தத் தீமை என்ற கணக்கை, இங்கே தள்ளிவிடனும், இது சரியில்லை, தப்பான கணக்கு, என்ற நிலைகள் நீக்கிப் பழகவேண்டும். இது இல்லையென்றால், நமக்குள் நாம் இந்த ஆறாவது அறிவை, சீராகப் பயன்படுத்தவில்லை என்றுதான் பொருள்.

இந்த ஆறாவது அறிவு, தெளிந்திடும் நிலைகள் பெற்றவன். பிரம்மாவைச் சிறைபிடித்தான் முருகன், நாம் மனிதனான பின் சிருஷ்டிக்கும் வலிமை பெற்றவர்கள்.

மகரிஷிகள் சென்ற பாதையில், நாமும் பிறவியில்லா நிலைகளை அடைவோம், உணர்வுகளை உயிரோடு ஒன்றி, உயிரைப்போன்று ஒளியாக மாற்றிடுவோம். பேரொளியாக மாற்றி, பெரு வீடு என்ற நிலையாக, நாம் அனைவரும் சப்தரிஷி மண்டல எல்லையை அடைவோம், மெய் உலகை சிருஷ்டி செய்வோம்.