Pages

2 வாலி, சுக்ரீவன்

ஒரு நோயாளியையோ, தீமை செய்பவரையோ பார்க்க நேர்ந்தாலும், அது வாலியாக, வலிமை மிக்க சக்தியாக நமக்குள் வந்து, நல்ல குணங்களை அடக்குவதை, அந்த அருள் ஞானிகளின் உணர்வை நமக்குள் பதிவு செய்து வைத்திருந்தால், தடுக்க முடியும்.

அருள் மகரிஷிகளின் உணர்வுகளை நாம் கவர்ந்தோம் என்றால், அந்த உணர்வுகள் நமக்குள் தீயதை அடக்கும் நிலையாக வரும். இதைத்தான் இராமாயணத்தில், இராமன் வாலியை, சுக்ரீவன் துணைகொண்டு அடக்கினான், என்று நமது காவியத் தொகுப்புகளில் காண்பித்திருப்பார்கள்.

அதாவது, அருள்ஞானியின் உணர்வுகளை, மனிதனில் தீமைகளை வென்ற, அந்த வலிமையான சக்தியை நாம் எடுப்பதற்கு வேண்டித்தான், சப்தரிஷி மண்டலங்களிலிருந்தும், துருவ நட்சத்திரத்திலிருந்தும் வரக்கூடிய உணர்வை நாம் நுகர்ந்து, இந்த வலிமைமிக்க விஷத்தை, வாலியை அடக்குதல் வேண்டும்.


சப்தரிஷி மண்டலங்களிலிருந்தும், துருவ நட்சத்திரத்திலிருந்தும் வரக்கூடிய உணர்வை, சூரியனின் காந்த சக்தி கவர்ந்து வருவதை, நாம் எண்ணத்தால் நுகர்ந்தால், சுக்ரீவன்.


அவன் உணர்வின் தன்மை கொண்டு, அந்த உணர்ச்சிகள் நமக்குள் ஊடுருவி, நஞ்சு கொண்ட உணர்வை நமக்குள் அடக்குகின்றது. இதைத்தான், சுக்ரீவன் துணைகொண்டு, வாலியை இராமன் அடக்கினான் என்பார்கள்.


இதில் வாலி அண்ணன், சுக்ரீவன் தம்பி. (ஆதியில்) விஷத்தின் இயக்கத்தால், தொடர்ந்து வந்தவன் தான் அண்ணன், வாலி.


மனிதனாக ஆனபின், உணர்வின் தன்மையை ஒளியாக்கும் நிலை, சுக்ரீவன். ஆக, பின்னால் பிறந்ததுதான் ஒளி, இவ்வளவு தெளிவாகக் காட்டுகின்றார்கள்.


இதனால், வாலி, சுக்ரீவன் என்று காரணப் பெயர்களை வைத்து, சகோதரர்கள் என்றும், ஆகவே, சுக்ரீவனின் துணை கொண்டு, வாலியை அடக்கப்படும் பொழுது, இது இணைந்து, நமக்குள் நன்மை செய்யும் சக்தியாக மாற்றுகின்றது, என்பதையே நமது காவியத் தொகுப்புகள் நமக்கு உணர்த்துகின்றன.


மெய்ஞானிகள், தம்முள் கண்டுணர்ந்த இயற்கையின் செயலாக்கங்கள் அனைத்திற்கும், காரணப் பெயர்களைச் சூட்டி, தம் இன மக்கள் அனைவரும், விண்ணின் ஆற்றலை தம்முள் பெற்று, உணர்வினை ஒளிபெறும் உணர்வாக வளர்க்கும் நிலைக்காக, தாம் கண்டறிந்த பேருண்மையின் தன்மைகளை வெளிப்படுத்தினர்.


நாமும், மெய்ஞானிகள் வெளிப்படுத்திய, உணர்வின் ஆற்றலைக் கவர்ந்து, நம்முள் நஞ்சான உணர்வுகளை ஒடுக்கி, மெய்ப் பொருளை பெறும் நிலையாக, நமது உணர்வினை வளர்ப்போம் என்று, மெய்ஞானிகள் காண்பித்த வழியினைக் கடைப்பிடிப்போர் அனைவரும், என்றும் பேரானந்த பெருநிலையைப் பெறுவதற்கு, எமது அருள் ஆசிகள்.


3 குரு உணர்த்திய அருள்வழி

குருதேவர், ஒருமுறை எம்மை ஆனைமலைக் காட்டுப் பகுதிக்குள் அழைத்துச் சென்று, இத்தனாவது மைலில், இன்ன மரத்தில் இது போன்று இருக்கும் மச்சத்தை, (ஒரு அடையாளம்) எடுத்து வா என்று சொல்கிறார். அவர் சொன்ன நேரம், மாலை ஆறு மணி இருக்கும். அந்த நேரங்களில், காட்டு மிருகங்களின் நடமாட்டம் அதிகமாக இருக்கும். ஆகவே, குருதேவர் சொன்னை இடத்திற்கு, எவ்வாறு செல்வது என்று பயந்தோம்.


நான் எது சொன்னாலும் செய்வேன் என்று சொன்னாயே, இபொழுது, “முடியாது” என்று சொல்கிறாயே, “மறுக்காதே, சென்று வா” என்று கூறினார். யாமும் பயந்தபடி, சிறிது தூரம் நடந்தோம். பிறகு “இங்கே வா” என்று எம்மை அழைத்தார்.


அழைத்தவர் எம்மை அருகில் நிறுத்தி, சில ஆற்றல்களை யாம் பெறும் வண்ணம் உபதேசங்களைக் கொடுத்து, “இப்பொழுது நான் சொல்லிக் கொடுத்தவைகளை உபயோகப்படுத்து. எதிரே தெரியும் மரம் கீழே சாயும்” என்றார்.


அவ்வாறே, அவர் சொல்லிக் கொடுத்தவைகளை எதிரே தெரியும் மரத்தின் முன் செய்ய, அந்த மரம் கீழே சாய்ந்தது. பிறகு குருதேவர், “இப்பொழுது காட்டினுள் செல், நான் சொன்னதை எடுத்து வா” என்றார். எமக்கு, இப்பொழுது தைரியம் பிறந்தது, துணிவுடன் காட்டினுள் நடந்தோம்.


ஏற்கனவே, வேட்டைக்காக காடுகளுக்குள் சென்ற அனுபவம், எமக்கு உண்டு. யானைகள் அருகே நடமாடும் பொழுது, கீழே காற்று வராது, மரக்கிளைகள் அசையும் ஒலி கேட்கும். அந்த அறிகுறிகளை வைத்து, யானைகளின் நடமாட்டத்தின் தூரத்தைக் கணிப்போம். இதனை அடிப்படையாகக் கொண்டு, யாம் நாலாபுறமும் கவனித்தவாறே சென்று கொண்டிருந்தோம்.


உற்றுக் கவனிக்கும் பொழுது, தூரத்தில், யானைகள் காதை ஆட்டாமல், அசைவில்லாமல் நின்று கொண்டிருந்ததைக் கவனிக்க நேர்ந்தது. இருந்தாலும், எமக்கு நிறைய தைரியம் இருந்தது. ஏனென்றால், யாம் விரலை அசைத்தால் போதும், எதனையும் கீழே சாய்க்கும் வலிமை உள்ளதே என்ற நம்பிக்கை. இந்த நம்பிக்கையுடன் யாம் முன்னேறிச் சென்று கொண்டிருந்தபோது, குருதேவர், “ஏய் தெலுங்கு ராஜ்ஜியம்” என்று கூவி அழைத்தார்.


குருதேவர் எம்மைத் திட்டவேண்டும் என்று கருதினால் “தெலுங்கு ராஜ்ஜியம்” என்றுதான் திட்டுவார். இப்பொழுதும் “தெலுங்கு ராஜ்ஜியம்” எங்கே போகிறாய்? என்று கேட்டார்.


“நீங்கள் சொன்ன மச்சத்தை எடுக்கச் செல்கிறோம் என்றோம்” யாம்.


“இப்பொழுது நீ என்ன நினைத்தாய்?” என்று கேட்டார்.


அதற்கு யாம், “நீங்கள் கொடுத்த ஆற்றலைக் கொண்டு, யானைகளைச் சாய்க்கப் போகிறேன்” என்று பதில் கூறினோம்.


அதற்கு குருதேவர், “நீ இப்பொழுது யார் வீட்டிற்குள் செல்கின்றாய் என்று தெரிகின்றதா?, நீ வாழும் வீட்டில், அந்நியன் ஒருவன் நுழைந்து விட்டால், உனக்குக் கோபம் வருமல்லவா, அதைப் போன்றுதான் யானைகளுக்கும், அது வாழும் காடுதான் அதற்கு வீடு.. அவ்வாறு இருக்கையில் அதனுடைய வீட்டிற்குள் சென்றால், அதற்குக் கோபம் வருமல்லவா?.


நீ உன்னுடைய காரியமாகச் செல்கின்றாய், உனக்குள் வலிமை இருக்கின்றது என்ற காரணத்தினால், பிறிதொன்றை வீழ்த்திவிடும், அழித்துவிடும் எண்ணம் கொள்வாயானால், அந்த எண்ணம் உனது உயிரான ஈசனால் இயக்கப்பட்டு, அந்த உணர்வின் சக்தி, உன் உடல் முழுவதும் படருகின்றது. இதனால், உனக்குள் உள்ள நல்ல சக்தியை இழக்கின்றாய்”.


“நீ யானையிடம் இருந்து தப்பித்தாலும், அதைக் கொன்று விடவேண்டும் என்று, அதன்மீது ஆற்றலை உபயோகப்படுத்திய உணர்வின் சத்து, உனக்குள் சென்று, உன்னுள் உள்ள நல்ல உணர்வுகளை, மாய்க்கும் விதத்தை அறிந்துகொள்” என்று அங்கே உணர்த்துகிறார்.


எமக்கு ஒன்றும் புரியவில்லை. வலிமை இருக்கிறது என்று, மற்றொன்றைக் கொல்ல முற்படக்கூடாது. ஆனால், வருகின்ற ஆபத்திலிருந்து எப்படித் தப்பிப்பது? என்று குழம்பினோம்.


அதற்கு குருதேவர், “இவ்வளவு பெரிய ஆற்றல், உனக்குக் கொடுக்கப்பட்டு இருக்கின்றது. அதனை, நீ, மற்றொன்றை மாய்த்திடும் நிலைக்கு பயன்படுத்துவேயானால், உன் உணர்வுகள் எங்கே போகும்?


எவ்வாறு, நீ உனக்கு உணர்த்திய உணர்வின் ஆற்றல்களை பெறப் போகின்றாய்?“ என்று அவர் கேட்கிறபொழுதுதான், என்ன செய்வது என்று தெரியாமல், குருவை மறந்துவிட்டது நினைவுக்கு வருகின்றது.


குரு அருளின் துணைகொண்டு, செயல்பட வேண்டிய நாம், குரு நமக்குப் பெரும் ஆற்றல் கொடுத்திருக்கிறார் என்று, அதைப் பெரிதாக எண்ணி, குருவை மறந்து, பிறிதொன்றை வீழ்த்திடும் அசுர உணர்வைத்தான் எண்ண முடிந்ததே தவிர, என்னால் நல்ல உணர்வை, அங்கே எண்ண முடியவில்லை, என்பதை நிதர்சனமாகவே காட்டுகின்றார்.


யானையிடமிருந்து எப்படித் தப்பிக்க வேண்டும்? என்று எண்ணி கண்ணை மூடி தியானிக்கும் பொழுது, அதனின் உணர்வலைகளை அறிய நேரிடுகின்றது.


அதாவது, “யானையின் மணத்தை நுகர், அதனின் உணர்வின் சக்தி உனக்குள் சேரும். யானைக்கும், உணர்வின் ஆற்றலை உணரும் சக்தி உண்டு. அப்பொழுது, அதனின் மணத்தை நீ நுகரும்பொழுது, அதனின் சம எடையாக, வருகின்றாய். அதனால், யானை உன்னை ஒன்றும் செய்யாது” என்று கூறுகிறார். பிறகு யானையின் மணத்தை, என்மீது பரவச் செய்கின்றார்.


யானைகள் காதை விடைத்துத் தூக்கி விட்டால், அது கோபத்தில் இருக்கிறது, ஆளைப் பிடித்துக் கொன்றுவிடும் என்பது பொருள். யாம், அதே சிந்தனையில் இருந்து கொண்டிருக்கின்ற பொழுது, எம்மை உரசியவாறே, சுமார் 13 யானைகள் எம்மைக் கடந்து செல்கின்றன.


அப்பொழுது குருதேவர் சொல்லுகின்றார், நீ எதை, எதனுடைய நிலைகளில் வலுப்பெறச் செய்ய வேண்டும்? குரு காட்டிய வழி எது?


குருவினுடைய சக்தியை உணர்ந்து கொண்டாய் என்றால், அந்தக் குருவின் துணை கொண்டு, எப்படி இயங்க வேண்டும்? என்பதையெல்லாம் உணர்த்தி, குருவின் துணையுடன் நீ செயல்படும் பொழுது, அனைத்தையும் பெறும் தகுதி பெறுகின்றாய்.


ஆகவே, நீ இவைகளைப் பெற விரும்புகின்றாயா? அல்லது மற்றொன்றை வீழ்த்திவிட்டு, அதனால் உனக்குப் புகழ் தேடும் நிலையும், ஆணவம் பெறும் நிலையும் பெற விரும்புகின்றாயா? என்று கேட்டு, எதைப் பெற வேண்டும் என்று, உணர்த்தி அருளினார்.

பிறகு, குருதேவரிடம் அனுமதி வாங்கிக்கொண்டு, மச்சத்தை எடுத்து வர நடந்தோம். அவர் சொன்ன விதமே, இருந்த மச்சத்தை எடுத்துக் கொண்டு திரும்பி வருகின்ற பொழுது, எமக்கு எதிரே, மலைப்பம்பு ஒன்று ஊர்ந்து வரக் கண்டோம்.

அது சீறி வரும் நிலையைக் கண்டு, எமக்குள் இருந்த தைரியம் குறைவதை அறிகின்றோம். யானைக்கு ஒரு விதமாகத் தப்பித்தோம், இந்தப் பாம்பிடம் இருந்து, எவ்வாறு தப்பிப்பது என்று சிந்தித்தோம்.

இதையும், குருவின் பலம் கொண்டுதான் சமாளிக்கவேண்டும் என்று எண்ணுகையில், குரு எமக்குள், “அந்த பாம்பைக் கண் கொண்டு பார்த்து, நீ, எந்த உணர்வை அதன் மேல் செலுத்துகின்றாயோ, அந்த உணர்வின் அலைகள், அதன் பாதையைத் திசை மாறச் செய்யும்..

அப்பொழுது, அதன்மீது பரிவின் எண்ணம் கொண்டு, அது நகர்ந்து செல்ல வேண்டும் என்ற எண்ணத்தைப் பாய்ச்சு” என்று உணர்த்துகிறார்.

அவ்வாறே, அதைக் கண் கொண்டு பார்த்து, உணர்வின் தன்மையை குருவழி கொண்டு, அதன்மீது செலுத்துகின்ற பொழுது, அப்பாம்பானது விலகிச் செல்கின்றது. மச்சத்தை, இறுகப் பிடித்தவாறே வருகின்றோம்.

இவைகளெல்லாம் நம் குருதேவர் நம் அனுபவத்திற்குக் கொடுத்து, மனிதருடைய எண்ணத்திற்கு உள்ள வலிமையையும், மனிதர் தாம் எடுத்துக் கொண்ட உணர்வை, உயிர் இயக்கும் விதங்களையும், உணர்வின் தன்மை, நமக்குள் உணர்வின் வித்தாக விளைந்து. அதை எண்ணத்தால் எண்ணப்படும் பொழுது, அது நம்முடைய செயலாக ஆக்கம் பெறுகின்றது என்பதை எமக்குத் தெளிவுபடுத்தவே, எம்மைக் காட்டுக்குள் அழைத்துச் சென்றார்.