Pages

2. ஞானகுருவின் மகிழ்ச்சி

நீங்களெல்லாம் நன்றாக மகிழ்ச்சியாக இருப்பதுதான், எமது குறிக்கோளே தவிர, பிறர் மாதிரி, என்னை நீங்கள் கௌரவமாக மதித்துப் போற்ற வேண்டுமென்பதல்ல.

எப்பொழுது நீங்கள் சந்தோஷமாகச் சொல்கிறீர்களோ, அதுதான் எமக்கு மகிழ்ச்சி. எம்மைக் கண்டவுடன், “அப்படி இருக்கிறது, இப்படி இருக்கிறது” என்று பெருமை பேசுவதற்கு அல்ல.

நாளை அதே நிலையை எதிர்ப்பார்த்து இருந்து,

அது இல்லையென்று சொன்னால்,

பெருமை ஒரு நொடிக்குள் போய்விடும்.


எமக்குள் இருக்கக்கூடிய பெருமை, எப்பொழுதுமே நீங்கள் எல்லாம் மகிழ்ந்து,

“நாங்கள் சந்தோஷமாக இருக்கிறோம்.

மகிழ்ச்சியான நிலையில் தொழில் செய்கிறோம்,

மகிழ்ச்சியான நிலைகளில் இருக்கிறோம்”

என்று சொல்வதுதான் அது ஒரு பெருமை.

அந்தப் பெருமையைத்தான் நான் எதிர்ப்பார்க்கிறேனே தவிர, எம்மைப் போற்ற வேண்டுமென்பதற்காக வேண்டி அல்ல. உங்களில் தவறிருந்தால், அதை நிவர்த்திக்க வேண்டி ஏதாவது செய்துதான் ஆக வேண்டும்.

அதற்காக வேண்டி, தவறை வளர்க்கச் சென்றால், அப்பொழுது நான் புகழுக்கு எதிர்ப்பார்க்கிறேன் என்றுதான் அர்த்தம். எப்படி இருந்தால் என்ன? நீங்கள் எம்மை மதித்தால் போதும், என்ற இந்த மதிப்பு அல்ல.

நீங்கள், எப்பொழுதுமே மகிழ்ச்சியான நிலைகளில் இருக்கிறீர்கள் என்றால், அதுதான் எமக்கு பெருமையும், புகழுமே தவிர வேறொன்றுமில்லை. இதை ஒவ்வொருவரும் மனதில் வைத்துக் கொள்ளுங்கள்.


எல்லோரையும் போல, உங்களிடம் மகிழ்ச்சியை எதிர்ப்பார்க்கிறோம். “சாமி” உங்களிடம் இப்படி இருக்கிறார், அப்படி இருக்கிறார் என்று புகழ்ந்து பேசி, அந்தப் புகழ்ச்சியினுடைய மறைவில், அது ஒரு நிமிடம் கூட நிற்காது. அதை யாம் எதிர்ப்பார்க்கவே இல்லை.

ஆக எமது குருநாதர் காட்டியபடி, அவர் ஏழ்மையாக இருந்து, ஒரு பைத்தியக்காரத்தனமாக இருந்து, எல்லா நிலைகளையும் சுட்டிக்காட்டி, உலகம் இப்படி இருக்கிறது, குப்பையிலிருந்துதான் மரம் சத்து எடுக்கிறது,
அதைப் போல, குப்பையான இந்தச் சரீரத்திலிருந்து, சத்தான எண்ணங்களைக் கூட்டுவோம். நீ சரீரத்தைக் குப்பையாக எண்ணினாலும், உனக்குள் இருக்கக் கூடிய அந்த நல்ல எண்ணத்தை, அந்த வைரத்தை, குப்பையான சரீரத்திலிருந்து விளையச் செய், அதுதான் சொந்தம் என்றார் குருநாதர்.


ஆக ஒவ்வொரு மனிதனுடைய உடலிலும் எத்தனையோ துன்பங்கள் இருக்கிறது. அந்தத் துன்பங்களை விளைவிக்கக் கூடிய எண்ணங்கள் இருக்கிறது. அந்தத் துன்பத்தை விளைவிக்கக் கூடிய எண்ணங்களிலிருந்து அவர்களை மீட்க வேண்டும்.

ஆகவே, “அவர்களிடமிருந்து நீ மகிழ்ச்சியை எதிர்பார். அந்த மகிழ்ச்சியே உனக்குச் சொர்க்கம்” என்ற நிலைகளை நமது குருநாதர் எமக்குச் சொன்னதினாலே, நீங்கள் மகிழ்ந்து, என்றைக்கு எம்மிடத்தில் சந்திக்கின்றீர்களோ, அதில்தான் யாம் சொர்க்கத்தைக் காண்கிறோம்.

ஆகையினாலேதான் சிலருடைய நிலைகளில் திடீரென்று சொன்னவுடன், நாம் யாரையுமே முதலில் பழித்துப் பேசிவிடக்கூடாது.

ஆக, அந்தக் குறைபாடுகள் இருந்தாலும், நாம் அணுகி, நிவர்த்தி பண்ணுவதற்கு என்ன வழியோ, அதற்கு நாம் பிரார்த்தனை செய்ய வேண்டும்.

சொல்லிப் பார்ப்போம்,

முடியவில்லை என்கிற பொழுது,

அது அவருடைய சந்தர்ப்பம்.

அதற்காக வேண்டி, முடியவில்லையே,

அவர் தவறு செய்கிறார் என்ற உணர்வை,

நமக்குள் எடுத்துக் கொள்வதற்கல்ல.




ஆனால், தவறின் நிலையில் அவர்கள் இப்படிச் செய்கிறார்களே என்று நாம் எண்ணினோமானால், அவர்களுடைய உணர்வை நமக்குள் வளர்த்துக் கொள்கிறோம்.




நாம் செய்ய வேண்டியது என்ன? யார் எதைப் பேசினாலும், குறைத்துப் பேசினாலும்,

அவர்கள் வாழ்க்கையிலே அவர்கள் உயர வேண்டும்,

அவர்களை அறியாமல், அவர்களுக்குள் துன்பத்தைத் தோற்றுவிக்கும்

அந்த உணர்வுகளிலிருந்து மீள வேண்டும் “ஈஸ்வரா”

என்று உங்களுக்குள் நின்று,

உயிரான நிலைகளில் நேசிக்கும்,

நம் உயிரை எண்ணி நாம் சுவாசிக்கும் பொழுது,

இந்த உணர்வு நமக்குள் விளைகின்றது.


அந்த நிலைகளில், நாம் அடிக்கடி செய்தோமானால், அவர்களை அடிக்கடி எண்ணத் தொடங்கினோமேயானால், அவர்களுக்குள் நல்லது உண்டாகும். இதைத்தான் யாம் உங்களிடம் எதிர்பார்ப்பது.