Pages

30. கணவன் மனைவி தியானத்தால், குடும்பத்திற்குள் இருள் நீங்கி, ஒளி படரும் நிலை

ரோட்டிலே ஒருவன், யாரையோ கோபமாகப் பேசுகின்றான். “நடுரோட்டில், இந்த மாதிரிப் பேசுகின்றானே” என்ற உணர்வு வந்தவுடனே, உயிரில் பட்டவுடனே, நமக்கும் அந்த உணர்ச்சியைத் தூண்டுகிறது.


அவன் உணர்வு, நம்மை இயக்குகின்றது. அப்பொழுது நாம் என்ன செய்ய வேண்டும்? “ஈஸ்வரா” என்று கண்ணின் நினைவை உயிருக்கு, புருவமத்தியில் கொண்டு போகவேண்டும்.


துருவ நட்சத்திரத்தின் பேரருளும், பேரொளியும் நாங்கள் பெற வேண்டும், எங்கள் உடலில் படரவேண்டும், எங்கள் ஜீவாத்மா பெறவேண்டும் என்று, உள்ளுக்குள் செலுத்த வேண்டும். இந்த வலுவான நிலைகள் இங்கே வந்தவுடனே, இதைத் தள்ளிவிட்டு விடுகிறது. இங்கே அடைத்து வலுக்கூட்டி, ஆன்மாவைச் சுத்தப்படுத்துகின்றோம்.


துணியில் அழுக்குப் பட்டவுடன், சோப்பு போட்டவுடன், நுரை உள்ளுக்குள் போய், அழுக்கை வெளியே தள்ளிவிட்டு விடுகிறது. சோப்புப் போடாமல், என்னதான் துவைத்தாலும், இருட்டடித்த மாதிரிதான் இருக்கும். வெள்ளையாக வருவதில்லை.


அதுபோல, நம் ஆன்மாவைத் தூய்மை செய்ய வேண்டும். இவ்வாறு ஆன்மாவைத் தூய்மைப்படுத்துவதற்கு, நம் எண்ணத்துக்கு வலு கொடுப்பதற்கு, ஜீவன் ஊட்டுவதற்கு என்ன செய்ய வேண்டும்?


காலையில் எழுந்தவுடனே, அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும், பேரொளியும் பெறனும், எங்கள் உடல் முழுவதும் படரனும், எங்கள் இரத்த நாளங்களில் கலக்கனும், என் ஜீவான்மா, ஜீவனுக்கள் அனைத்தும் பெறனும் என்று நினைத்து, தன் கணவருக்கு அந்தச் சக்தி பெற வேண்டும் என்ற எண்ணி, அவர் உடல் முழுவதும் படரனும், அவர் ஜீவாத்மா பெறனும் என்று எண்ண வேண்டும். அதேபோல, ஆண்களும், தன் மனைவிம் பெற வேண்டும் என்றும் எண்ண வேண்டும்.


இரண்டு பேர் சண்டை போட்டார்கள் என்றால், அமெரிக்காவில் இருந்தாலும் புரையோடுகின்றது. நன்மை செய்தான் என்று எண்ணினால், விக்கலாகின்றது. இங்கே, குடும்பத்தில் பாசத்துடன் இருந்து, “குழந்தைக்கு இந்த மாதிரி ஆகிப்போய்விட்டது” என்று எண்ணிப் பாருங்கள், அங்கே தொல்லை கொடுக்கும்.


கணவர், ரொம்ப உழைத்துக் கொண்டேயிருக்கிறார். இருக்கிறவன் எல்லாம் இப்படி பேசுகிறார்களே என்று மனைவி எண்ணினால், ஆண்கள் எவ்வளவு திறமைசாலியாக இருந்தாலும் செயலற்றதாக ஆக்கிவிடும். அப்பொழுது நாம் என்ன செய்ய வேண்டும்?


அந்த அருள் ஒளி பெற வேண்டும். என் கணவர் ஜீவான்மா பெற வேண்டும். நாங்கள் இருமனமும் ஒன்றி, இரு உயிரும் ஒன்றவேண்டும். வாழ்க்கையில் இருளை அகற்றும், அந்த அருள்சக்தி பெற வேண்டும் என்று, இரண்டு பேரும் அதிக நேரம் இல்லையென்றாலும், கொஞ்ச நேரம் எண்ண வேண்டும். ராத்திரியிலே விழிப்பு வரும்பொழுது, இந்த மாதிரி செய்து பழக வேண்டும்.


தியானத்திலே இருக்கிறவர்களுக்கு, காலை 4 மணியில் இருந்து 6 மணி வரை, இந்த உணர்வுகள் தட்டி எழுப்புவதை நீங்கள் பார்க்கலாம். உங்களையறியாமலேயே விழிப்பு வரும். அந்த நேரத்திலே, அந்த அருள்சக்திகளை நுகருங்கள்.


அப்பொழுது பெண்கள், தன் கணவனுக்குக் கிடைக்க வேண்டும், ஆண்கள், தன் மனைவிக்குக் கிடைக்க வேண்டும் என்று எண்ண வேண்டும். எண்ணியபின், அந்த குரு அருளைப் பெற வேண்டும். என் கணவர் பார்வையில், தீமைகள் அகற்றும் அந்த சக்தி பெற எண்ண வேண்டும். அவர் செயலிலே புனிதம் பெற வேண்டும், அவரைப் பார்ப்போரெல்லாம், அந்தப் புனிதநிலை பெற வேண்டும் என்று, எண்ண வேண்டும்.


அதே மாதிரி, கணவன், மனைவியை ஓர் 5 நிமிடம் எண்ணிப் பழக வேண்டும். இப்படி நீங்கள் எண்ணினால், காலையில் 6 மணிக்கு விழித்தெழும் பொழுது, ஓர் ஆனந்தமான நிலை வரும்.


இந்த மாதிரி எண்ணுபொழுது பார்த்தால், உங்கள் உடலில் “பளீர், பளீரென்று” வெளிச்சம் வரும். ஏனெனில், அது நுகரப்படும் பொழுது, இது பட்டவுடன் மோதி, அந்த இருள் நீக்கி, வீட்டிற்குள் ஒரு வெளிச்சம் வருவதைப் பார்க்கலாம்.


சூரியன், தன் உடலில் எடுத்துக் கொண்ட பாதரசத்தால், தன் அருகில் வந்தவுடன் மோதி, பளீரென்று உலகம் முழுவதும் ஓர் வெளிச்சத்தை கொடுக்கிறது. அதே மாதிரி, நம் மூச்சலைகள் பட்டவுடன், நமது வீட்டிற்குள் இவ்வாறு எண்ணும் பொழுது, நம் உடலில் எடுத்து கொண்ட சக்தி, தீமை என்ற நிலையில் மோதியவுடனே, அது விலகிப் போகும். உடலில், ஒரு விதமான வெளிச்சம் வரும். உடலில் மகிழ்ச்சி ஏற்படும்.


இதை நீங்கள், ஒவ்வொரு நாளும் காலையில் 4 மணிக்கெல்லாம் செய்து பழக வேண்டும். அப்படிச் செய்தால், யாம் பதிவு செய்கின்ற ஞானவித்திற்கு, அப்பொழுது “நீங்கள் சக்தி ஊட்டுகிறீர்கள்” என்று அர்த்தம்.