Pages

36. தீமைகளைச் செயல்பட விடாது அடக்கி, அதை அரவணைத்து ஒளியாக மாற்றும் மகரிஷிகளின் செயல்


அனைவரையும் மகிழ்ந்திடும் நிலை பெறச் செய்து, அந்த மகிழ்ச்சியின் தன்மையில், நமது மகிழ்ச்சியின் தன்மையை, நம்மில் வளர்த்திடும் நிலை பெற வேண்டும்.


இராமாயணத்தில் “கல்யாணராமா”... என்று பாடினார்கள். கல்யாணராமனாக எப்பொழுது ஆகின்றான் என்றால், சீதையை மணக்க வேண்டுமென்றால், அரசன் வைத்திருக்கும் வில்லைத் தூக்கி நிறுத்தி, வளைத்து முறிக்க வேண்டும். அவ்வாறு வில்லை வளைத்து முறிப்பவர் எவரோ, அவரே சீதையை மணக்கும் தகுதியுடைவர் என்கிற நிலையைக் காண்பித்தனர்.


ஏனெனில், காண்டீபத்தில் பொருத்தி எய்யப்படும் அம்பு, பிறரைத் துன்புறுத்தும் தன்மை கொண்டது. ஆகவே, துன்புறுத்தும் உணர்வினை வென்றவர் எவரோ, அவரே சீதையைத் திருமணம் செய்து கொள்ளும் தகுதியுடையவர், என்னும் நிலையைக் காண்பித்தனர்.


வீர தீரம் காட்டிய பலரும், வில்லின் வலிமையைத்தான் உணர்ந்தனரே தவிர, வில்லைத் தூக்கக் கூட அவர்களால் முடியவில்லை. ஆனால் இராமனோ, தீமை விளைவிக்கும் நிலைகளில் இருந்து, தீமையில்லாத நிலையை விளைவிக்கின்றான், என்பதை உணர்த்தும் பொருட்டு, இராமன் வில்லை தூக்கி நிறுத்தி, வளைத்து, முறித்து விடுகின்றான்.


அதன்பின், சீதையை இராமன் மணந்து கொள்கின்றான் எனக் காண்பித்து, தீமையை அடக்கும் சக்தியைத் தன்னுடன் இணைத்துக் கொண்ட நிலையைத் தான் “கல்யாணராமன்” என்று எடுத்துரைத்தனர். இவ்வாறு வளர்ந்தவர்கள்தான் மகரிஷிகள்.


அந்த மகரிஷிகள், இந்த மனித வாழ்க்கையில் தீமையை அகற்றி, தீமையைச் செயல்படவிடாது தம்முடன் அரவணைத்து, ஒளியின் சுடராக மாற்றிக் கொண்டவர்கள். துருவ மகரிஷியை பின்பற்றிச் சென்றவர்கள், சப்தரிஷிகள் எனும் நிலையைக் காண்பித்தார்கள்.


காரம், எரிச்சலைத் தருவது என்றும், புளி கூசச் செய்வது என்றும், உப்பு உமட்டலைத் தருவது என்றும் நாம் அறிந்திருக்கின்றோம். ஆனாலும், நாம் ஒரு கருணைக் கிழங்கை எடுத்து வேக வைத்து, கிழங்கில் உள்ள விஷத் தன்மையை நீக்கி, அதனுடன் காரம், புளி, உப்பு இவைகளை அளவாக இணைத்துக் குழம்பு வைத்து, சுவை மிக்கதாகச் செய்து சாப்பிட்டு, மகிழ்ச்சி அடைகின்றோம். இதைத்தான், நாம் “கல்யாணராமன்” என்று உணர வேண்டும்.


பல கோடித் தீமைகளைக் கேட்டு, பார்த்து உணர்ந்தாலும், அதனை, மகரிஷிகள் தமது அரவணைப்பாக, தமக்குள் சுவைமிக்க ஒளியாக, மாற்றிக் கொண்டவர்கள்.


துருவ மகரிஷியும், சப்தரிஷிகளும் தங்களுடைய உயர்ந்த எண்ணங்களின் துணை கொண்டு, மற்றவர்களுடைய எண்ணங்களைத் தம்முள் வளர்த்திடாது, ஒளி பெறும் உணர்வினைத் தம்முடன் இணைத்து, ஒளியின் சரீரமாக மாற்றியவர்கள். இதுதான் கல்யாணராமா என்பது.