Pages

உயிரே கடவுள் – மெய்ஞான மாத இதழ் 1995-1997








(பிப்ரவரி 1995)
ஞானிகளின் செப்பு மொழிகள், காலத்தால் அழியாப் பொக்கிஷங்கள். அவைகளை அறிய நேரும்பொழுது, உங்கள் ஞானக் கதவை திறந்து வையுங்கள். அது உங்களை உயர்ந்த நிலைக்கு அழைத்துச் செல்லும்.


நாளையும் கோளையும் பார்த்து செயல் புரிபவர்கள், தன்னை அறியாதவரே. “எதனையும் மாற்றி அமைக்கும் திறன் மனிதருக்கு உண்டு” என்று அறிந்து, தன் உணர்வின் ஆற்றலை வளர்ப்பவரை, நாளும், கோளும் என்ன செய்துவிடும்.


மெய்ஞானிகள், தமது மனித வாழ்க்கைக் காலத்தில், பேரண்டத்தினுடைய, சூட்சம இயக்கங்களை அறிந்துணரும் நிலைகளையும், மனித வாழ்க்கையில் வரும் தீமையான நிலைகளிலிருந்து, தம்மைக் காத்து, உயிருடன் ஒன்றிய உணர்வினை, ஒளி பெறச் செய்யும் நிலையினையும் பெற்றனர்.


அந்த மெய்ஞானிகள், பேரண்டத்தின் பெரும் உண்மையினைக் கண்டுணர்ந்து, உணர்வின் ஆற்றலைத் தம்முள் வளர்த்து வெளிப்படுத்தியதின் தன்மைகள், சூரியனின் காந்த சக்தியால் கவரப்பட்டு, இந்த பூமியெங்கும் படர்ந்து பரவியிருக்கின்றன.


மாமகரிஷி ஈஸ்வரப்பட்டாய குருதேவர் அவர்கள், நமக்குக் காண்பித்த அருள் வழிகளை, நாம் பின்பற்றுவதன் மூலம் இந்த பூமியில் படர்ந்துள்ள மெய்ஞானிகளின் உணர்வலைகளை நாம் பெறமுடியும்.


நீங்கள் மெய்ஞானிகளின் அருள் ஆற்றலை பெறவேண்டும் என்பதற்காக, யாம் உயர்ந்த தன்மைகளை உங்களுக்கு உபதேசித்தோம் என்றால், அதனைக் கேட்கும் நீங்கள், அந்தத் தத்துவங்களை, உங்களுடைய அகத்தில் இருத்தி, அதனைத் திரும்பத் திரும்ப எண்ணுவீர்கள் என்றால், உங்களிடத்தில் மகிழ்ச்சியின் தன்மை பெருகுகின்றது.


அதுபோன்றே, நீங்கள் உயர்ந்த செயல்களைச் செய்யும் பொழுது, அதனின் உணர்வுகள் உங்களை உயர்ந்த நிலைக்கு அழைத்துச் செல்கின்றது.


நாம் கடைக்குச் செல்கின்றோம் என்று வைத்துக் கொள்வோம். ஒவ்வொரு பொருளையும், தரம் பார்த்து வாங்குகின்றோம். இருந்தாலும், வீடு வந்து சேர்ந்த பின், அந்தப் பொருள்களை எடுத்துப் பார்க்கும் பொழுது, அவைகளில் ஒன்றிரண்டு உபயோகிக்க முடியாத அளவுக்கு கெட்டுப் போயிருப்பதை பார்த்து, வேதனைப்பட்டுக் கொண்டிருந்தால் நன்றாக இருக்குமா?


கெட்டதைத் தூக்கி எறிந்துவிட்டு, இனி, அடுத்து எதைச் செய்ய வேண்டுமோ, அதைச் செய்ய வேண்டும். ஆகாததைத் தூக்கிப் போட்டுவிட்டு, இனி, அடுத்து ஆக வேண்டியதைப் பார்க்க வேண்டும்.


இந்த மனிதன் முழுமை அடைய வேண்டுமென்றால், “இந்த உடலில் எவ்வளவு குணச் செல்வங்கள் இருந்தாலும், வேதனை என்ற நஞ்சான உணர்வானால், குணச் செல்வம் அழிந்துவிடுகின்றது”. வேதனையைக் கேட்டறியும் நிலையில், அது நம்முள் வளர்ந்து, அது நமது பொருள் செல்வத்தையும் இழக்கச் செய்யும்” என்பதை நாம் அறிய வேண்டும்.


அழியாப் பேரின்பப் பெருவாழ்வு, என்ற அருள்ஞானியின் உணர்வை, நாம் கவர்ந்து கொண்டால், இந்த வாழ்க்கையில் வரும் தீமைகளை நாம் அகற்ற முடியும். பேரின்பப் பெரு வாழ்வை எண்ணி எடுக்கின்ற உணர்வுகளால், நம்முடைய சொல், செயல் புனிதம் பெறும். நம்மைப் பார்ப்பவர் அனைவரும், மகிழ்ச்சி பெறும் நிலை உண்டாகும். அறியாமை என்ற இருள் அகன்று, அனைத்தும் அறியும் ஞானம் உருவாகும்.


சொல்லில் பொருள் இருப்பது போன்று, நமது செயலில் நன்மைகள் இருக்க வேண்டும், நாமும், நமது சமுதாயமும் “ஒரே இனம்” என்ற நிலையில், நமது நலத்தையும், பொது நலத்தையும் ஒன்றிணைப்பதாக, நமது செயல்கள் இருக்க வேண்டும்.


ஏனெனில், பிறர் நன்றாக இருக்க வேண்டும் என்று நீங்கள் எண்ணும் பொழுது, அதனின் உணர்வின் சத்து உங்களிடத்தில் விளைந்து, நன்மையை உங்களிடத்தில் விளையச் செய்யும்.


இவ்வாறு இதனின் உண்மைகளை அறிந்து, அருள் ஞானிகள் வகுத்துக் கொடுத்த அறங்களை கடைப் பிடித்து, அதனின் வழியில் தமது வாழ்க்கையை அமைத்துக் கொண்ட அனைவருக்கும் எமது ஆசிகள்.








(பிப்ரவரி 1995)

பூமியில் உள்ள காற்றுக்குள் பலவித செடிகள், மரங்கள் வெளியிட்ட உணர்வின் அலைகள் பரவியிருக்கின்றன. அவ்வாறு பலவிதமான உணர்வின் அலைகள் பரவி இருந்தாலும், ஒரு வித்து தன் இனத்தின் சத்தை, அதிலிருந்து பிரித்து எடுத்து செடியாக, மரமாக வெளிப்படுகின்றது.




இதைப் போன்றுதான், நமது உடல் பூமிக்குச் சமமானது. உயிரின் இயக்கத்தால், நாம் கவரும் நிலைகள், மற்றும் பகிர்ந்து கொண்ட உணர்வின் தன்மைகளைப் பதிவு செய்து கொண்டபின், பதிந்த நிலைகளை, தன் இனமான உணர்வின் அலைகளைக் காற்றிலிருந்து கவர்ந்து, தன் ஆன்மாவாக மாற்றுகின்றது.




பூமியில் ஒரு விதையினை ஊன்றினால், அந்த வித்தானது தனது உணர்வின் சத்தைக் காற்றிலிருந்து கவரும். அந்தப் பரப்புக்குள் நாம் செல்ல நேர்ந்தால், அதன் வாசனையை நாம் அறியமுடியும். இதைப் போன்றுதான்

நம் உடலான நிலத்திற்குள்,

நாம் எண்ணிய உணர்வின் சத்தைப்

நாம் பதிவு செய்துகொண்டால்,

உணர்வு, அதிலிருந்து கவர்ந்து நமது ஆன்மாவாக மாறுகின்றது.




இருவர் சண்டையிட்டுக் கொண்டிருப்பதை வேடிக்கை பார்க்கும்பொழுது, அந்த உணர்வின் அலைகள் நம்முள் கலந்து, ஊழ்வினையாகின்றது. அந்த உணர்வின் அலைகள், நமக்குள் பெருகி ஆன்மாவாகின்றது.




அவர்களுக்குள், எந்த வெறுப்பின் தன்மை கொண்டு சண்டையிடுகின்றனரோ, அதைப் போன்று சண்டையிடும் உணர்வுகளை, நமக்குள் நுகர்ந்து, நுகர்ந்து, அதையே பதிவாக்குகின்றோம்.




ஆக, பிறருடைய நிலைகளை எண்ணி “இப்படி ஆகிவிட்டதே” என்று அந்தச் சோர்வின் தன்மையை நாம் எடுத்துவிட்டால், அந்தச் சோர்வின் உணர்வுகள் நமக்குள் வித்தாகப் பதிவாகி, சோர்வின் தன்மை கொண்ட உணர்வின் சத்து அதிகரித்துவிடும்.




பின், அதனின் உணர்வுகள் நம் ஆன்மாவாகும் பொழுது, நம்மிடத்தில் தெளிவற்ற நிலைகளாக அமைந்து, நாம் சிந்தித்தாலும், சிந்திக்க இயலாத நிலையை, நம்மிடத்தில் உருவாக்கிவிடுகின்றது.




இந்த ஆன்மாவில் எது பெருகியிருக்கின்றதோ, அதனின் உணர்வுகள்,

நாம், ஒரு சொல் சொல்வதற்குமுன் வெளிப்பட்டு,

“யானை வரும் பின்னே,

மணியோசை வரும் முன்னே”

என்பதைப் போன்று, நாம் பேச இருப்பவரின் உணர்வில் மோதுகின்றது.




நாம் அவரிடம் உதவி கேட்டு சென்றிருப்போம். அவருடைய உதவியைக் கோரி, நாம் பேசும் பொழுது,

நம் ஆன்மாவில் கலந்து பெருகியுள்ள சோர்வடைந்த உணர்வுகள்,

நம் சொல்லைக் கேட்டுக் கொண்டிருப்போரின் சுவாசத்தில் மோதி,

நமக்கு அவர் உதவி செய்ய விரும்பி இருந்தாலும்,

உதவி செய்ய விரும்பும் அவரின் எண்ணத்தை,

இது தடுக்கும். ஆகவே, அவர்கள் தவறு செய்யவில்லை.




ஆனால், உதவி செய்ய விரும்புவரிடத்தில் நமது கஷ்டங்களையும், வேதனைகளையும் எடுத்துச் சொல்லும் பொழுது, இந்த உணர்வின் தன்மை அவரிடத்தில் விளைகின்றது. நாம் எத்தகைய கஷ்டங்களை அனுபவித்தோமோ, அதனின் உணர்வுகளை அவர் நுகர்கின்றார்.




பின்,அவர் தலையை ஆட்டிவிட்டு, “அப்புறம் பார்ப்போம்” என்பார். இங்கே நம்முடைய சொல்லே, நமக்கு எதிரியாகின்றது.அவர்களல்ல, அவர் உதவி செய்ய விரும்பினாலும், அவர்களுடைய உணர்வுகள் இத்தகைய நிலைகளில் விளையும்.




அதே சமயம், நமது தொழில்கள் தடைப்படும்பொழுது வேதனை என்ற நிலை வரும். வேதனை என்பதே நஞ்சு. இந்த நஞ்சின் தன்மை வந்துவிட்டால் இந்த உணர்வின் தன்மை நமக்குள் அதிகமாக வளர்ந்து, கை கால் குடைச்சல், சோர்வு போன்ற நிலைகள் சூழ்ந்துவிடுகின்றது.




பின், நாம் தொழில் செய்ய முடியாத நிலைகளும், நாம் அதன் வழியில் யாருடன் பேச்சின் தொடர்பு வைத்துக் கொண்டாலும், அவைகளைக் கேட்டுணர்வோரின் நிலைகளையும் சோர்வடையச் செய்து, அவர் நம்மைப் பார்க்கும் பொழுது, “இவர் எப்பொழுது பார்த்தாலும் இப்படித்தான்” என்று நம்மைப் பற்றிய ஒரு எண்ணத்தை அவரிடத்தில் உருவாக்கும்.




“இவர் எதையும் செய்ய மாட்டார்” என்ற, உணர்வே அவரிடத்தில் ஓங்கி நிற்கும். இந்த இடத்தில், நம் ஆன்மாவே நமக்கு எதிரியாக வினை புரிகின்றது.




ஆகவே இதைப் போன்று நம் ஆன்மாவில் படரும் தீமையான உணர்வுகளை நீக்குவதற்குத் தான், ஒவ்வொரு நொடியும், நாம் ஆத்ம சுத்தி செய்து, விண்ணில் இருந்து வந்து கொண்டிருக்கும், அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை, நம் புருவ மத்தியில் இயக்கிக் கொண்டிருக்கும், உயிர் வழி நுகர்ந்து, நம் உடலில் உள்ள அனைத்து அணுக்களுக்கும் உணவாகக் கொடுத்து, உள் முகமாக இணைக்கப் பழகிக் கொள்ள வேண்டும்.




இதன் வழி நாம் தொடர்ந்து செய்யும்பொழுது, அந்த துருவ நட்சத்திரத்தின் ஆற்றல் மிக்க சக்தி நமது ஆன்மாவில் பாதுகாப்புக் கவசமாக, பெரும் அருள் வட்டமாகி விடுகின்றது. அது நம்முள் எத்தகைய தீமைகளையும், நம் அருகில் வராதபடி தள்ளிவிடுகின்றது.




நம் ஆன்மா பரிசுத்தமாகி, நாம் மகிழ்ந்து வாழ முடியும். இந்தப் பிறவிக்குப் பின் நம் உயிராத்மா, அந்த சப்தரிஷி மண்டலத்துடன் இணைந்து, நாம் அனைவரும் பிறவி இல்லா நிலை என்ற அழியா ஒளிச் சரீரம் பெற முடியும்.





(எப்ரல் 1995)

உதாரணமாக, பயந்த சுபாவம் உள்ள ஒருவர் சந்தர்ப்பவசத்தால், கண்கூடாக ஒரு விபத்தைக் காண நேரிடுகிறதென்றால், விபத்தைக் கண்கூடாக பார்த்ததின் உணர்வு, அவரிடத்தில் ஜீவ அணுவாக விளைந்துவிடுகின்றது.


அடுத்த முறை, அவர் ஏதேனும் ஒரு விபத்தைப் பற்றி கேள்விப்பட்டால், அஞ்சி ஓடமாட்டார். அது எங்கே என்று, தேடிப் பிடித்து போய்ப் பார்ப்பார். ஆக, பயத்தின் உணர்வை ஒரு முறை நம்மில் பதிவு செய்தாலும், அடுத்த முறை அங்கே செல்லாமல் இருக்கின்றோமோ என்றால், இல்லை.


ஏனெனில், ஏற்கனவே விளைந்த ஜீவ அணுவிற்கு, உணவு தேவை. நாம் சும்மா இருந்தாலும், அது நம்மை அழைத்துச் சென்றுவிடும்.


நாம் எத்தகைய நிலைகளையும், வேடிக்கையாகப் பார்த்தாலும் சரி, பரிவுடன் பார்த்தாலும் சரி, அது நமக்குள் ஜீவ அணுவாக விளைந்து விடுகின்றது.


உதாரணமாக, குழந்தைகளாக இருப்பவர்கள் ஏதாவதொன்றைக் கண்டால், அடுத்த சில மணி நேரத்திற்குள், அந்த விஷயம் அதனின் நினைவில் இருக்காது. ஏதாவதொன்றைக் கண்டு பயந்துவிட்டால், பின் அதனின் நினைவு வரும் பொழுது, அந்த குழந்தைக்கு மனதில் பயம் உருவாகும். திரும்பவும் அந்த இடத்திற்குச் செல்லாது. ஆனால் பெரியவர்களாக இருப்பவர்களுக்குப் பயம் இருந்தாலும், மன வலிமை கொண்டு “என்ன, ஏது” என்று எட்டிப் பார்க்கச் சொல்லும்.




குழந்தைப் பருவத்தில், அணுவின் செல்கள் எளிமையாக இருப்பதனால், அது தனக்குள் கண்டபின் உடனே மறைந்து விடுகின்றது. எண்ண நிலைகளை, மற்ற நிலைகளுக்கு அழைத்துச் செல்கின்றது. அதே சமயத்தில், குழந்தைகளிடத்தில் ஒரு உயர்ந்த கருத்தைச் சொன்னால், அது அதனிடத்தில் ஆழப் பதிந்துவிடுகின்றது. மீண்டும், அதே கருத்தினைச் சொல்லும் நிலை வருகின்றது.




வேதனை போன்ற மற்ற உணர்வுகளை, பெரியவர்களான நாம் வளர்த்துக் கொள்ளும் பொழுது, பிறர் சொல்லும் நல்ல உயர்ந்த குணங்கள், நம்மிடத்தில் பதிவதில்லை, தீய வேதனையான குணத்தின் உணர்வே, நமக்குள் நினைவில் வரும்.




குழந்தைகளிடத்தில் உயர்ந்த கருத்தினைச் சொன்னால் அது அவர்களிடத்தில் எளிதில் பதிவாகும். அதே சமயத்தில், தீமையான உணர்வுகள் அவர்களிடத்தில் பதிவாகி விட்டால், தீமையின் உணர்வே அதிகமாக வரும். அதுவே முன்னனியில் நிற்கும். குழந்தைகள் நல்லதையும் பதிவு செய்து கொள்ளும். தீயதையும் பதிவு செய்து கொள்ளும். வளரும் பருவம் கொண்ட சரீரங்களில், இந்த நிலை.




மனித உணர்வுகளின் தன்மையை அறிந்து, மகரிஷிகள் காண்பித்த அருள் வழியை நாம் ஒரு முறை பதிவு செய்து கொண்டு, அடுத்தடுத்து, அந்த மகரிஷிகளின் அருள் சக்தியைப் பெற வேண்டுமென்று இந்த உணர்வைக் கட்டாயப்படுத்திச் செலுத்துவோம் என்றால், அந்தச் சக்தி நமக்குள் வரும்.




நமக்கு நோய் என்று ஒன்று வந்துவிட்டால், அதற்கு, மிகவும் கசப்பான மருந்தைக் கட்டாயப்படுத்தி உள்ளே செலுத்தும் பொழுதுதான், அந்த நோயே, நம்மை விட்டு அகன்று ஓடுகின்றது.




ஞானிகளின் உயர்ந்த கருத்துக்களை, தத்துவங்களை கேட்க நேரும் பொழுது, நமது கவலைகள், வேதனைகள் இவைகளை ஒதுக்கி வைத்துவிட்டு ஆர்வமுடன் கேட்க வேண்டும். அப்பொழுதுதான் அதனின் ஞானம் நம்மிடத்தில் பதியும்.




வேதனைகளை மனதில் நிறைத்துக் கொண்டு உள்ளவர் இடத்தில், நல் உணர்வுகள் எதுவும் பதியாது.




இந்த உடல், என்றும் நம்முடன் வரப் போவதில்லை. ஆனால், இந்த உடலில் இருந்து, விளைய வைத்த உணர்வின் சத்துதான், நம்முடன் என்றும் நிலைத்திருக்கும்.




ஆகவே, நமது வாழ்க்கையில், நாம் அனைவரும் துருவ தியானம் மற்றும் கூட்டு தியானங்களை வலுப்படுத்துவதன் மூலமாக, ஒவ்வொரு நிமிடமும், ஆத்ம சுத்தி செய்யும் ஆற்றலைப் பெருக்கி, அந்த துருவ நட்சத்திரத்தில் இருந்து வரும் ஒளியான சக்திகளை, நமது உடலில் உள்ள அனைத்து அணுக்களுக்கும், சத்தாகச் சேர்ப்போம்.




நாம் அனைவரும், வாழ்வில் எல்லா நலமும் வளமும் பெறுவோம், செல்வம் செல்வாக்கு பெற்று, தொழில் வளம் பெற்று, உடல் நலம் பெற்று, மன பலம் பெற்று மகரிஷிகளின் அருள் வட்டத்தில் என்றென்றும் இணைந்து, மகிழ்ந்து மகிழ்ந்து வாழ்வோம்.